Search This Blog

Monday 13 October 2014

கொள்கை....!!!

முற்றாகவே உயிர் ஊசலாடிய காலணிக்கு
முரண்பட்டு உயிரூட்டிக் கொண்டு இருந்தான்

முழங்கையுடன் விடுகை பெற்ற இடது கை
முழு வீச்சோடு செயற்படும் வலது கை
முண்டு கொடுத்த இடது கையின் துணையில்
முழு உயிர் பெற்றது குற்றுயிரான காலணி

சன்னம் பட்ட உடலை போல இவன்
காலடியில் நாலைந்து காலணிகள்
அநாதரவாய் கிடந்தன....!

காலடி என்று என்னத்தை சொல்ல
கால்கள் விடைபெற்று சென்று விட்டன
இடுப்பிற்கு கீழே உருவமற்ற கால்கள்
இழந்தவன் சுறு சுறுப்பாய் இழப்பை
ஈடு செய்தபடி இயங்கி கொண்டே இருந்தான்...

வீதியின் மருங்கில் ஒரு ஓரமாய்
வீற்றிருந்தவனுக்கு எதிரே அம்மா தாயே
இருவர் கைகளில் பேணிகள் சில்லறைகளில்
நிரம்பி வழிந்தது....

நன்கு கைகள் நான்கு கால்கள்
நலமோடு தான் இயங்கி கொண்டிருந்தன.

இல்லாத கால்களை காட்சிப்பொருளாக்கி
இரந்து வாங்கிட முடியும் சில்லறைகளை
இயங்க முடியாதவன் உழைப்பில் வீச்சாக
இயங்கி கொண்டு இருக்கின்றான்....!
         
உழைத்து வாழ வேண்டும் என்ற
உயர்ந்த கொள்கை கொண்டவன்
உயர்  கொள்கை ஒன்றிற்காக அதன்
இறுதி அத்தியாயத்தில் அங்கங்களை
இழந்து போன தியாக வீரன்...!

இறுதி வரை களமாடி இரத்தம் சிந்தி
இன்னல்களை வாங்கி நின்றவனுக்கு
இழந்த அங்கங்கள் விடுதலை பெற்று கொடுத்தது
ஒளி இழந்த வாழ்வின் விடியலுக்காக
ஒற்றை கரம் தாங்கி உழைக்கின்றான்

வீரப்பயணத்தில் கரம் பற்றிய கருவிகள்
வீழ்ந்து போன துக்கம் நெஞ்சின் ஓரமாய் உறங்க
செருப்பாணியும் நூலும் தொட்டு சலனமற்று
செதுக்குகின்றான் வாழ்க்கை என்னும் பயணத்தை
செம்மையான உழைப்பு என்னும் கொள்கை கொண்டு .

கொள்கைகள் பேசி தேசியம் பேசி பிதற்றி
கொள்ளையடிக்கும் கூட்டத்தினரை வென்று
கொள்கை கொண்டு வாழ்ந்து காட்டும்
கொடையாளர்கள் இன்னும் எம்மில் உண்டு





No comments:

Post a Comment