Search This Blog

Friday, 31 May 2013

பொங்கி எழுந்த போராட்டம் பொருளற்று போன போதே....


பொத்தி பொத்தி 
பொக்கிசமாய் பேணி
பொறுமை காத்த காதல்.. 
பொருள் அற்று போனது...!!!


நிலை குலைந்த உள்ளம் 
நின்று தள்ளாடியது, 
நிர்க்கதியான காதலை 
நிலை நிறுத்திட 



உணர்வற்ற மெய்யிற்கு 
நேசமாகிய பசி..!!


கால நேரம் பார்த்திடா
ஆலய பிரவேசம்...!! 

கடவுளோடு மனம் 
பேசிடும் பிரார்த்தனை..!!


நிழலாய்  பின்தொடர்ந்த  
குளமான  கண்ணீர்..!! 

வெட்கமறியா புலம்பல்..!
விரும்பிடும் தனிமை...!


கைபேசியை இமைக்காமல் 
கண்காணிக்கும் கண்கள்...!!



சத்தமின்றி ஓலமிட 
எதிர்பார்த்திடும் இரவு...!!

காதல் கை சேர்ந்திடும்  என்ற 
அசையாத நம்பிக்கை....!


இன்றும் நினைத்தால் 
சின்னதாய் சிரிப்பு,,,

புத்தி பேதலித்து இருந்ததாய் 
நெஞ்சத்தில் ஒரு நினைவு 
தெளிந்தது எப்போது??  


முப்பதாண்டு காலமாய்  
பொங்கி எழுந்த போராட்டம் 
பொருளற்று போன போதே....!!!!





அரசி நிலவன் 

Saturday, 18 May 2013

இறுதி வரை,,,,,,,நடைப்பிணங்களாய்......!!!


முல்லைத்தீவில் இன்பத்துடன் 
முழுச்சமர்களிலும் உயிர் தப்பி 
வாழ்ந்து வந்த அழகிய  குடும்பம்....!!!

வானத்து அரக்கர்களின் குண்டு வீச்சிலும் 
வாழ்வினை தொலைக்காது உயிர் மீண்டவர்கள் 
அன்பான கணவன் ஆசைக்கு ஒரு செல்ல மகள் 
அடி தடிக்கு ஒரு ஆண் மகன் என 
அஞ்சு வருடத்துக்கு முந்தி 
அரவணைப்போடு வாழ்ந்தவள்....!!!
 
ஓடி ஓடி பதுங்கு குழி வெட்டி 
ஒளிந்து ஒளிந்து மண்ணினை நுகர்ந்து
அண்ணாந்து அண்ணாந்து - கல் தடக்கி 
அடி பட்டு விழுந்து  உயிரை 
கையில் பிடித்து ஓடித்திரிந்தது 
கைகளில் என் உயிர்களின் சதைகளை 
அள்ளி எடுத்திடவா...???
கருவினில் நான் சுமந்தவள் 
கருவினை சுமக்க தயாராகி நின்றதை  
கண்ணுற்று பூரித்து நின்ற தருணம்,, 
காதைப்பிழந்த ஒலியோடு புகை மூட்டம் 
கண்களை மறைத்து செல்ல ஈரம் தோய்ந்து 
மெய் சிலிர்த்து நின்ற எனை புகை விட்டு விலகியது 
கைகளில் ஏதோ  நிறைந்த உணர்வை 
கண்கொண்டு பார்த்திட எத்தனித்திட ....
ஐயகோ......
செந்நிற மேனியாய்..,, 
சதையும் தோலுமாய்..,, 
நிற்கின்றேன்.....!
வலிக்கவில்லை உடலம் 
வந்து வெடித்து சிதறியது எறிகணையா???
சதைப்பிண்டமா???
குழம்பி  நின்ற எனக்கு 
கொடூரமான பதில் கிடைத்தது....
சிரித்த முகத்தோடு கொஞ்சம் தள்ளி 
சின்னவன் கடைக்குட்டி நிரந்தரமாய் படுத்தபடி.... 
செல்ல மகளை காணவில்லை....
போன மாத பிறந்த நாளுக்கு ஆசையாய் 
போட்டு விட்ட காப்புடன் கை மட்டும் என் காலடியில்.....
2009 வைகாசி 17

2013 வைகாசி 17
அப்போ நீ மட்டும் ஏன்  இன்னும் உயிருடன்....???
கேள்விகள் பல எழுகின்றன......
இரத்தமும் சதையும் என்னை நனைத்து 
இருள் சூழ திக்கற்று நின்ற என்னை நோக்கி 
கைகளால் தவழ்ந்து வந்த கணவனுக்காக நானும்
எனக்கா கணவனும் 
இறுதி வரை,,,,,,,நடைப்பிணங்களாய்......
அரசி 

Tuesday, 9 April 2013

அப்பனை அறிந்திட நச்சரிப்பேன் என்ற உள்நோக்கமா??


கை கால் உதைத்து மகிழ்ந்தேன் - அன்னை 
கை தொடுகைக்காக காத்திருந்தேன்..! 
கை தொட்டாள்  என் கழுத்தை நெரிக்க
கை  கழுவி  என்னை  ஒற்றையில்  
கை விட்டு போனாள்  வாய்க்காலில்...! 
கை நழுவியது கனவான என் நனவு,,,,!!!
  
அன்னையின் உடற்சூட்டின் கத கதப்பில் 
அரவணைப்போடு அயர  வேண்டிய நான்
அகால வேளையில் விறைக்க விறைக்க  
அனாதையாய் உணர்வற்று கிடக்கின்றேன்...!!!



முலைப்பாலை உறிஞ்ச வேண்டிய நான்
முக்குளித்து மூச்சை உறிஞ்சுகின்றேன் 
முன் பின்  அறியா  சாக்கடையில்...!!!
முந்நூறு நாட்கள் சுமந்தவள்  என்னை 
முதல் நாளே நசுக்கி எறிய தெரியாதவளா - இல்லை 
முழுதாய் வடிவம் கொடுத்து கொல்ல
முடிவு செய்து காத்திருந்தாளா?? 

கால நேரத்துக்கு  ஊன் கொடுத்தும்
காலால் உனை  உதைத்த எனை வையாதும்
காண்பித்தாய் உன் அன்பினை என் முகம் காணாது...
காட்டி விட்டாய் முகம் கண்டு உன் கோர முகத்தினை..

அன்னையே....!
அருமந்த பிஞ்சு என் மேல் என்ன வன்மம் உனக்கு???
அடைக்கலம் கொடுத்து உயிர்ப்பித்தாய் நீயே...!!!
அடித்து நெரித்து கொன்றும்  போட்டாய் நீயே....!!!
அவ்வப்போது எட்டி உதைத்ததிற்கான பழிவாங்கலாஅல்லது 
அப்பனை அறிந்திட நச்சரிப்பேன் என்ற உள்நோக்கமா??

அம்மா என்பதற்கு மறுபக்கமா நீ..??
அன்னையர்களுக்கு ஒரு அசிங்கமா நீ..??
அடிக்கடி உயிர்ப்பையினை நிரப்பி 
அருமை உயிர்களை துடி துடிக்க 
அநியாயமாய் கொன்றிடாதே...!!!
அகற்றிவிடு உன் கர்ப்பப்பையினை 
அது உனக்கு வேண்டாத ஒன்று...!!! 

உன்னைப்போல் உள்ளம் கொண்டோர் உள்ள 
உலகில் என்னை  உயிரோடு விட்டாலும்
உயிரற்று போவேன் உள்ளத்தால் ஒரு நாள் 
உனக்கு நன்றிகள் கோடி இந்த கொடிய 
உலகத்திடம் இருந்து எனை காப்பாற்றியதற்கு....


அன்புடன் 
அம்மா என்று  அழைக்க வேண்டியவளின் கையால் 
அடிபட்டு மரணம் வாங்கி செல்லும் சின்னஞ்சிறு சிசு ஒன்று