(இன்று நான் கண்ணுற்ற ஒரு காணொளி ஒன்று என்னை வற்புறுத்தி இதனை எழுத வைத்து விட்டது. இருந்தாலும் இதில் உள்ளவை யாவும் பல காலமாக என் மனதில் கிடந்தது உழன்று தொண்டைக்குள் சிக்கித்தவித்த வேதனை மிக்க விடயங்களே.)
ஈழப் போராட்டம் என்ற ஒரு சொற் பதத்தினை வைத்து இன்று உலகெங்கும் எத்தனையோ வியாபாரங்கள் நடைபெறுகின்றன. அது தமிழ்நாடாக இருந்தாலும் சரி புலம்பெயர் தேசமாக இருந்தாலும் சரி இன்று அந்த பதம் ஒரு வியாபாரப்பதமாக மாற்றம் பெற்றிருப்பது யாவரும் அறிந்த உண்மை.
அரசியலுக்கு அது இன்று நன்றாகவே நல்ல ஒரு தரமான உரமாக பயன்படுத்தப்படுகின்றது. விளைகின்ற விளைச்சலை அறுவடை செய்கின்றவர்கள் வளமாக வாழும்போது அந்த ஈழப்போராட்டத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட உறவுகள் இன்று என்ன நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரிந்த உண்மை?
ஆம்..!
ஈழத்தில் 2009 இன் போரிற்கு பின்னான காலப்பகுதியில் நிர்க்கதியாக்கப்பட்ட எத்தனையோ போராளிப்பெருமக்கள், எங்கே என்று அறியாத போராளிகளின் உறவுகள் தற்போது விடுதலையாகி செய்வதறியாது தவிக்கும் பெண் போராளிகள் மற்றும் ஆண் போராளிகள் என தமது வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பினையும் தொலைத்து ஒரு வித மன உளைச்சலில் தம்மை நகர்த்திச்செல்லும் இவர்களுக்கு ஏன் யாரால் இந்த அவல நிலை?
தலைவர் இருக்கின்றார் என்றும் போராட்டம் முன்னெடுக்கப்படும், தமிழீழம் மலரும் என்றும் கோசமிடும் அமைப்புக்களே..! முதலில் தமிழினத்திற்காக போராடி நடுத்தெருவில் நிற்கும் இந்த உறவுகளுக்கு வாழ்வதற்கு ஒரு வழிவகை செய்யுங்கள். புலம்பெயர் தேசத்தில் உள்ள பலர் அவர்களில் சிலருக்கு உதவுகின்றனர் தான் மறுப்பதற்கில்லை. ஆனால் தவிக்கின்ற யாவருக்கும் உதவி கிடைக்கவில்லையே. தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக சிலருக்கு உதவிகள் கிடைத்தாலும் அவை நிரந்தரமானவை என்று கூறிவிட இயலாது.
தமிழீழ நாடு கடந்த அரசு என்கின்ற ஒரு அரசு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்றது என்பது ஈழத்தில் உள்ள எத்தனை உறவுகள் அறிவர்? அறிக்கைகள் விட்டு தமக்கு தாமே ஒன்று கூடல் நிகழ்த்தி விருந்துண்டால் அங்கிருக்கும் உறவுகளுக்கு தெரியுமா? உண்மையில் இந்த அரசு பொறுப்பேற்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும்? ஈழத்தில் உள்ள அத்தனை போராளிகளையும் திரட்டி அவர்களுக்கு உரிய எதிர்கால நலத்திட்டத்தினை உருவாக்கியிருக்க வேண்டுமல்லவா? சும்மா உதவி என்று மாதம் பத்தாயிரம் இருபதாயிரம் என்று பிச்சை போடாமல் அவர்களுக்கு என்று ஒரு தொழிலினை அல்லது ஒரு நிரந்தர வேலையினை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கியிருக்க வேண்டும்.
தேசியத்தலைவர் இருந்தால் அந்த உன்னதமான போராளிகளை இவ்வாறு நடு வழியில் தவிக்க விடுவாரா? அன்றி மற்றவர்களிடம் கையேந்தி நிற்க தன்னும் விடுவாரா? அன்றைய கடும் போர்ச்சூழலில் கூட வலுவிழந்தோருக்காக தேசியத்தலைவர் நிதியினை ஒதுக்கி அவர்களை வாழ வைத்துக்கொண்டு இருந்தார் என்பது ஏன் உங்கள் அறிவிற்கு எட்டவில்லை? தலைவர் வருவார் , தமிழீழம் மலரும் என்று எதிர்பார்க்கின்ற உறவுகளே. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாளில் இந்தப் போராளிகளைப்பற்றி அவருக்கு என்ன பதில் சொல்வீர்கள்? அவர்களுக்காக என்ன செய்தீர்கள் ?
உண்மையிலேயே நீங்கள் அவரின் வரவை எதிர்பார்த்திருந்தால் அல்லது அவர் இருப்பதை நம்புவதாக இருந்தால் முதலில் எங்கள் இனத்துக்காக போராடி, எச்சங்களாகி நிற்கும் உன்னதமான போராளிகளை வளப்படுத்தியிருப்பீர்கள். அவர்களை மதித்து அவர்களின் நலன் காத்திருப்பீர்கள். இவ்வாறு அவர்களைப் புறந்தள்ளி ஏளனமாய் நோக்கி நீங்கள் உதாசீனப்படுத்துவதில் இருந்து நன்கு விளங்குகின்றது. அரசியலுக்காகவும் சுய இலாபத்திற்காகவும் தலைவர் இருக்கின்றார் என்றும் வருவார் என்றும் காலங்கடத்துகின்றீர்கள் என்பது.
நிகழ்காலத்தில் செய்ய முடிந்த செயல்களாக எவ்வளவோ இருக்கும் போது எதிர்கால நம்பிக்கை ஒன்றினை சொல்லிக்கொண்டே எதற்காக காலம் கடத்திக்கொண்டிருக்க வேண்டும். உண்மையில் ஈழ உணர்வு , இன உணர்வு இருந்தால் ஈழத்தில் அல்லலுறும் உறவுகளுக்கு வாழ வழி வகை செய்யுங்கள்.
இந்த காணொளியில் மூன்று உறவுகள் கண் கலங்கி அழுது கையேந்தும் காட்சியினை கண்ணுறும் போது இதயம் கனக்கின்றது. எதற்காக இவர்கள் இவ்வாறு கையேந்த வேண்டும். இருக்க வேண்டியவர் இருந்தால் இவ்வாறு இடம்பெற அனுமதிப்பாரா? இவர்கள் அநாதரவற்று போயிருப்பார்களா? கண்களில் இருந்து சிந்தும் கண்ணீரினை துடைத்து விட கரமின்றி தவிக்கும் இவர்கள் யாருக்காக அவற்றினை இழந்தார்கள்? பொழுது போக்கிற்காக வேலை வெட்டி இல்லாமல் போய் கரங்களை துண்டித்துக் கொண்டார்களா? காட்டிக்கொடுப்புக்களில் வாழ்ந்து கொண்டிருக்கும், துரோகங்களில் ஒன்றிப்போன ,நன்றி கெட்ட இனமான தமிழினத்திற்காக தமது வாழ்வினை தொலைத்துப் போராடியது தான் அவர்கள் புரிந்த ஒரேயொரு குற்றம்.
ஒருவர் இருவர் என்றில்லாமல் அங்கிருக்கும் அத்தனை உறவுகளுக்கும் புனர்வாழ்வு அளிக்க புலம்பெயர் சமூகத்தால் முடியாதா என்ன? பாதுகாப்பு பிரச்சினை என்ற சாக்குப் போக்கு தேவையற்றது. இலங்கை அரசின் கையில் யார் யார் போராளிகள் என்ற முழுக் கணக்கெடுப்பே இருக்கும் போது உதவி செய்ய ஆரம்பித்து அவர்களை காட்டிக்கொடுப்பதாக ஆகி விடுமோ என்று நினைத்து வாளாவிருப்பதே உண்மையான துரோகத்தனம் ஆகும்.
யாருக்காக நடைப்பயணம் செய்கின்றீர்கள்? எதற்காக தமிழீழம் கேட்கின்றீர்கள்? இந்த உன்னத உறவுகள் பசியோடு வலுவிழந்து கிடந்து கண்ணீர் விடும் போது புலம்பெயர் போராட்டங்கள் வலுப்பெறுமா ? குரல் கொடுத்து கேட்கின்ற தமிழீழத்தில் வாழப்போவது யார் ? உயிர் கொடுத்துப் போராடி எம்மினத்தினை உலகிற்கு வெளிக்காட்டியவர்களை புறந்தள்ளி எம்மால் வாழ்ந்திட முடியுமா? ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அது சாபக்கேடாகும்.
எமது தற்கால போராட்டங்களை குறை குறைவில்லை. ஆனால் அதற்கு முன் ஆற்ற வேண்டிய பல செயல்களை நிறைவேற்றிக்கொண்டு போராடுவோம். ஐந்தாண்டு காலமாக ஜெனிவாவிற்கு செல்லாத கால்கள் இல்லை உயர்த்தாத கைகள் இல்லை. என்ன பயன்? இருக்கின்ற எமது போராளிப் பெரும்மக்கள் உயிரை இழப்பதும் வாழ்வை இழப்பதும் அதிகமாகி செல்கின்றது அன்றோ?
வாழ வழியற்று மன விரக்தியில் தற்கொலை செய்யும் நிலைக்கு ஒரு போராளி செல்கின்றார் என்றால் இத்தனை லட்சம் புலம்பெயர் உறவுகள் இருந்து என்ன பயன்? கேட்கவே வெட்கமாக இல்லையா? ஒரு போராளியினை வாழ வைக்க முடியாதவர்கள் ஒரு அரசிடம் நியாயம் எதிர்பார்க்க முடியுமா? போர்க்குற்ற விசாரணை வேண்டும் தான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதற்காக அலைந்து இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களையும் இழக்க முடியுமா?
சரணடைந்த போராளிகள் சுடப்பட்டார்கள், வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் ,உயிரோடு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்றெல்லாம் ஆதாரங்கள் வெளியாகி அதை வைத்து போராடுகின்ற நீங்கள் அதே போன்ற போராளிகள் இன்னும் ஈழத்தில் இருப்பதை மறந்து விட்டீர்களா? அல்லது அவர்கள் போராளிகள் இல்லையா ? யாருக்காக நீங்கள் நியாயம் தேடுகின்றீர்கள்? உயிர் துறந்த போராளிகள் விசாரணைகளால் எழுந்து வரப்போவதில்லை. அவர்களைப்போன்றவர்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றவர்களை காப்பாற்ற என்ன போராட்டம் செய்கின்றீர்கள்.? உண்மையில் போராளிகள் மேல் கொண்ட அக்கறையால் நீங்கள் போராடுகின்றீர்களா? அல்லது வெறுமனே இலங்கை அரசினை எதிர்க்க கிடைத்த ஆயுதமா இந்த போர்க்குற்ற விசாரணை? ஏனெனில் உயிருடன் இருக்கின்றவர்கள் கவனிப்பாரற்று அல்லவா இருக்கின்றார்கள். அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்கின்றதோ இல்லையோ முதலில் அவர்களின் உணவுக்கு உத்தரவாதம் இல்லையே.
புலம்பெயர் தேசத்தில் இருந்து ஈழத்துக்குச்செல்லும் தமிழ் உணர்வாளர்கள் எனத்தம்மை காட்டிக்கொள்ளும் சிலர் அங்குள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி தமது தேவைகளை நிறைவேற்றியபின் ஏமாற்றி விட்டு புலத்திற்கு திரும்பி விடுகின்றார்கள் என்று கடந்த வாரம் ஒரு செய்தி வானொலி ஒன்றில் கேட்க நேர்ந்தது. ஆக சிங்களவர்கள் தேவையில்லை எமது இனத்தை கருவறுக்க என்பது நன்றாகவே விளங்குகின்றது. ஈழப்போராட்டம் , பாதிக்கப்பட்ட மக்கள் என்பன தற்போது அரசியல் பேசுவதற்கும் ஏமாற்றுவதற்கும் நல்ல கருவிகள் ஆகிவிட்டன.
தட்டிக்கேட்க எவருமில்லை. இருந்தால் இந்த அநியாயங்கள் , அசிங்கங்கள் அரங்கேறுமா? தமிழ்நாட்டில் பலர் தேசியத் தலைவரின் புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதும், ஈழத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதும் என்று நன்றாகவே பிழைப்பு நடத்துகின்றார்கள். எங்கே அவர்கள் எமது போராளிகளுக்கு உதவட்டும் பார்ப்போம். நிச்சயமாக அதெல்லாம் பேச்சோடு சரி. யாருமே முன்வரப்போவதில்லை.
எங்கேயோ இருக்கும் அவர்களுக்கு உதவி செய்வதால் இவர்களுக்கு அவர்களின் வாக்கு விழப்போவதில்லையே. அவர்கள் எக்கேடு கெட்டால் என்ன? ஆக போராளிகளுக்கு இலங்கை அரசினை தவிர வேறு எவராலும் உதவிட முடியாது போலும். தேர்தலுக்காக இலங்கை அரசு அவர்களுக்கு உதவி புரிந்து வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது தமிழர்களின் வாக்கினைப் பெற்றுக்கொள்ளவோ போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க முன்வரும். இலங்கை அரசின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை பார்த்து புலம்பெயர் தேசத்தில் இருந்து நக்கல் நையாண்டி பண்ண மட்டும் அங்குள்ள ஊடகங்கள் முண்டியடிக்கும். "முன்னாள்" போராளிகள் என்று ஒரு அடைமொழியுடன் அவர்களின் மனதினை நார் நாராக கிழிக்கத்தெரிந்த அந்த ஊடக மக்கள் தாம் ஏதாவது செய்ய வேண்டும் உதவ வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லாமல் இவ்வாறு எதற்கு அவர்களை கொச்சைப்படுத்த வேண்டும்.
அவர்கள் மட்டுமா? ஈழத்தில் அரசின் புனர்வாழ்வு பெற்று இல்லம் திரும்புகின்ற போராளிகளில் எத்தனையோ பேர் மன உளைச்சலில் இருந்து இன்னும் திரும்பாமல் இருக்கின்றனர்? இராணுவ சித்திரவதைகள் மிரட்டல்கள் என்பன ஒரு புறமிருக்க சமூகத்தில் அவர்களை நோக்குகின்ற பார்வைகள் காரணமாக இன்னும் இன்னும் விரக்தி நிலைக்கு தள்ளப்படும் அவர்கள் என்ன குற்றம் இழைத்தார்கள்? கேடு கெட்ட எமது தமிழினம் பச்சோந்திகள் போன்று காலத்திற்கு காலம் குணம் மாறும் இயல்பு கொண்டவர்கள் என்பது தெரிந்தாலும் இவ்வாறு எமக்காக தம் வாழ்வை தொலைத்துத் தனித்து வந்தவர்களை கரம் நீட்டி அணைக்கத் தெரியாத கல் நெஞ்சம் கொண்டவர்கள் என்பது போரிற்கு பின்னான காலம் நன்கே உணர்த்தி நிற்கின்றது.
வசைப்பேச்சுக்களும் , கதை கட்டும் வதந்திகளும் , முகத்திற்கு நேராகவே காறி உமிழ்ந்து வதைக்கின்ற சொந்த இனத்து மக்கள் , அண்டை அயலார் என்று அவர்களை வெந்தணலில் இட்டுச்சுட்டுக்கொல்லும் கொடுமை இன்னமும் அரங்கேறிக்கொண்டிருக்க யாருக்காக நாம் போர்க்குற்ற விசாரணை நாடாத்தப் போராட்டம் நடாத்துகின்றோம்?
போரில் காணாமல் போனவர்களை தேடியலையும் நாம் அவர்களை கண்டு பிடித்துக் கொள்ள முடியாமல் போனாலும், இருக்கின்ற இவர்களை காணாமல் போகாமலிருக்கவாவது ஆவன செய்வோம். இலங்கை அரசின் புனர்வாழ்வில் இருந்து மீண்டு வருபவர்களை மீண்டும் இலங்கை அரசு கைது செய்யாமல் இருக்க வேண்டும் எனில் புலம்பெயர் தேசத்தில் இருந்து கொண்டு அவர்களை வைத்து எழுச்சிகரமான பதிவுகளும், அவர்களின் பழைய தோற்றத்து புகைப்படங்களையும் தற்போதைய படங்களையும் இணைத்து ஒப்பிட்டு க்கட்டுரைகளும் எழுதி கடினப்பட்டு வெளியேறிய அவர்களை மீண்டும் சிறைக்குள் தள்ள முயற்சிக்காதீர்கள் அல்லது காணாமல் போக வைக்காதீர்கள் இல்லை தற்கொலைக்கு தூண்டாதீர்கள். புலத்தில் பாதுகாப்புடன் இருந்து கொண்டு எதுவும் பேச முடியும். முள்ளுக்கம்பிக்குள் முதுகை வளைத்துக்கொண்டு இருப்பவர்கள் வளைந்து நெளிந்து தான் இருக்க வேண்டும் அதுதான் காலத்தின் கட்டாயமும் ஆகும்.
இறுதிப்போர் என்பதே உலக நாடுகளின் இணைப்பில் அரங்கேறியது என்பதை அறிந்தும் இன்னும் ஏன் அவற்றினை நம்பிக்கொண்டு எம்மை அவர்களுக்கு கோமாளிகளாக சித்தரிக்க வேண்டும்? எமக்கு நீதி வழங்க முன்வருவார்கள் என்றால் அது போர் முடிவுற்ற காலத்திலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகளிலோ வழங்கப்பட்டிருக்கும். தம்மை பெரியவர்களாக காட்டிக்கொண்டு நல்லவர்களாக சித்தரித்துக்கொண்டு பிரேரணைகள் தயாரிக்கும் வல்லரசை மீறி எமக்கு என்ன நீதி கிடைக்க போகின்றது? விசாரணை ஒன்று ஆரம்பித்தாலே அது எங்கு வந்து முடியும்? யார் அதில் மாட்டிக்கொள்வார்கள் என்று அறியாதவர்களா நாம்? குற்றம் இழைத்தவன் தானே கூண்டில் ஏறி நின்று சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கூறுவான் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏதோ ஒரு காரணத்தை வைத்து காலங்கடத்திச்செல்லுகின்ற நிலையில் நிச்சயம் எமக்கான நீதி கிட்டும் என்பது எட்டாக்கனியே.
எமது காலத்தினையும் நோக்கத்தினையும் இவ்வாறு சேதாரப்படுத்தி வலுவிழக்க வைக்கும் இந்த வல்லரசுகள் தாம் நினைப்பதனை நன்றாகவே சாதித்துக்கொள்கின்றன. எம்மினமே திரண்டு வந்து நின்று நடு வீதியில் ஒவ்வொருத்தராய் செத்து மடிந்தாலும் திரும்பி பார்க்க யாருமில்லை. தமக்கு பின்னால் அலைய விட்டு வேடிக்கை பார்த்து இலங்கையோடு நட்போடு கை குலுக்கி கொண்டு விருந்துண்ணவே அவர்கள் பெரிதும் விரும்புவர்.
ஆக...நாம் எமது கடமைகளை செய்ய முற்படுவோம். போர்க்குற்ற விசாரணை எம்மால் தொடங்க முடியாது என்றால் எம்மால் நிறைவேற்ற முடிந்த எத்தனையோ பணிகள் இருக்கின்றனவே. எங்கள் மக்களுக்கு தன்னலமற்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள். போரினால் அவயங்களை இழந்தவர்களும் போராளிகளும் காணாமல் போனவர்களின் உறவுகளும் என்று எண்ணிலடங்காமல் வறுமையில் வாழும் எமது உறவுகளின் கண்ணீரை துடையுங்கள். அவர்கள் நலனுக்காக அமைப்பு ஒன்றினை நிறுவி அவர்களை வளம்படுத்தி அவர்களின் வாழ்வை நிலையாக்குங்கள்.
இலங்கையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் , அமைச்சர்களும் தத்தமது சொந்த வேலைகளை பார்த்து , தமது சுயலாபம் தேடி அலையும் போது அவர்களுக்கு இவர்களின் நினைவு தேர்தல் காலங்களில் மட்டுமே வந்து போகும். எனவே அந்த பெரிய மனிதர்களை விடுத்து , எமது உறவுகளுக்கு நாமே உதவுவோம்.
எமது போராளிப்பெருமக்களின் கண்களில் கண்ணீர் பெருகாமல் பார்த்துக்கொள்வதே எமது முப்பதாண்டு போராட்டத்திற்கும் மதிப்பிற்குரிய எமது தேசியத்தலைவரிற்கும் நாம் ஆற்றும் நன்றியும் மரியாதையும் ஆகும். அநாதரவற்று அவர்கள் நிற்கும் போது யாருக்காக நாம் புலத்தில் போராட வேண்டும்?
.
அரசி நிலவன்