உண்டெனக்கொஞ்சம் அதிகமாய் நீராடினால்
உயருகின்ற நீர்ப்பட்டியல் கண்டு புழுங்கும் மனது...
வற்றியும் வற்றாமலும்
வறண்டு கிடக்கின்ற ஊரின் தோட்டக் கேணியில்
தென்னோலையும் பாளையும் ஊதிப்போயிருக்க
குடித்தனம் நடத்துகின்ற நுளம்புகள் மீது கோபதாபம் தான்...
வெட்ட வெளியில் சுதந்திரமாய்
கொசுவை வால் கொண்டு விரட்டி
பிரட்டி அசை போடும் பசுக்களின் மேலும்
கொஞ்சம் கோப தாபம் தான்...
அத்திவாரம் கொத்திய தரையாகி
சுடுகாடாகி போன வளவு கண்டு
கொஞ்ச நஞ்சமல்ல கோபதாபம்...!
அடையாளத்தை தொலைத்து நிற்கும்
அழகான முற்றமே...
உன்னை தினம் எண்ணாத நாளில்லையே..
நான்கு சுவரின் ஆதிக்கத்தில் பொசுங்கும் நெஞ்சம்..
நாளும் பொழுதும் அள்ளி எறிந்த மணல்
நாட்டில் தொலைந்து போகும் அபாயம்...!
முள் முருங்கையும் கிளிசறியாவும் நிமிர்ந்து
நின்ற வீரம் விழுத்தி முள்கம்பிகளின் ஆதிக்கம்...!
யாரோடு கோபம் கொள்வது - எல்லை
வரிந்து கட்டும் சிப்பாய்களோடா அன்றி எம்மினம்
சரிந்து போக வழி வகுத்த அய்யா மாரோடா?
புரிந்து கொண்டும் வாளாவிருக்கும் மூத்தவர்களோடா?
வீரம் பேசும் உணர்வாளர்களுக்கு நாவில் மட்டுமே வீரம்..!
தூரம் நின்று கருத்துக்களும் விழாக்களும் நன்றே தொடருகின்றன
பாரம் கொண்ட எங்கள் உள்ளங்கள் கோபம் கொண்டு பலனேது?
அகதியாகியதால் அள்ளி விளையாடிய மண் ஆக்கிரமிப்பில் - குருதியில்
சகதியாகிய நிலம் அரசின் சுவீகரிப்பில்....!
வாரிக்கொடுக்க காத்திருக்கும் எம்மவர்கள் மீது கோபதாபம் இல்லை
அடக்கியாளும் அவர்கள் மீதும் கோபதாபம் இல்லை...!
எம்மை தமிழனாய் படைத்தவன் எவனோ
எம்மை அகதியாக்கி அழகு பார்ப்பவன் எவனோ
எங்கு கிடைத்தாலும் சொல்லி சொல்லி அடிப்பேன்
கோபதாபம் என்பதை நன்கு உணர்த்தியடிப்பேன்...!
அரசி நிலவன்
No comments:
Post a Comment