இன்று விழித்தெழுந்து
வாழ்த்தினேன்...!
இதழோரப் புன்னகை புரிந்து
அப்பாவே இல்லை வாழ்த்து எதற்கு
சலித்தாலும் நீ - உலகில்
இல்லாத அவரை உன் இதயத்தில் வைத்து
இருக்கின்றாய் உயிரோடு...!
முப்பத்து மூன்று அகவைகள்
முடிகின்றன இன்றோடு
முழுமதியாய் குங்குமம் இட்டு
முகவரி கொடுத்த நாள் இன்று..!
பாதியிலே விட்டு பதியானவர் பிரிந்து
இருபது அகவைகள் ஓடினாலும்..
பங்குனி இருபத்தேழு பிரிந்து
பறந்து சென்றிடாதன்றோ..?
ஒவ்வொரு வருடமும் ஓடி வரும்
ஒளிந்து கொள்ளாமல் தேடி வரும்...
விழாக் கோலமும் மணக்கோலமும்
உலாக்காணும் உந்தன் மனதில்....!
காட்சிகள் வரை ஆனந்தமாய் விபரிப்பாய்...!
இருபது வருடமாய் என் வாழ்த்தும் - உன் நினைவுகளும்
இடை விடாமல் தொடருகின்றன.
கல்யாணம் என்பது நீண்ட கால பயிர் தான் - ஆனால்
கரம் பிடித்து வாழ்ந்த உந்தன் காலம் குறுகியது
மனமொத்த தம்பதிகள், உதாரண தம்பதிகள்
மற்றவர் பொறாமைப்படும் தம்பதிகளாய்
மகிழ்வோடு வாழ்ந்த அந்த பதின் மூன்றாண்டுகள்
உங்களுக்கு பொக்கிசமே...!
குழந்தைகளாக நாம் உலவிய அந்நாட்களில்
குதூகலம் என்பதை உணர்த்திய பெற்றோர்கள்..!
வறுமையிலும் எம்மை வசதியாக்கிய பெற்றோர்கள்...!
வண்ண மயமான எதிர்கால கனவுகளை சுமந்த பெற்றோர்கள்..!
எங்கும் அறிந்ததில்லை கண்டதில்லை உங்களை போன்றோரை..
எமது துரதிஸ்டம் எந்தையவர் பிரிந்தது...!
இருந்தாலும் நீங்கள் ஒன்றிணைந்த நாள் இது...!
இன்று முப்பத்து மூன்று ஆண்டுகள் கடந்தும்
இருவரும் கண்ட கனவினை நனவாக்க முடியாத
இடத்தில் இதயம் கலங்கி நிற்கின்றேன்...!
எங்களுக்கான ஆலயம் அத்திவாரமிடப்பட்ட
எண்பத்து ஒன்றின் பங்குனி இருபத்தேழு
இன்றைய நாளில் உங்களை மனதார வாழ்த்தி
இதயத்தில் இருத்தி துதிக்கின்றேன் அன்பானவர்களே..!
உங்களின் ஆசீர்வாதம் அடுத்த ஆண்டில் உங்கள் கனவினை
உலகறிய செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்...!
இனிய வாழ்த்துக்கள் அன்னையே...!
No comments:
Post a Comment