எனக்கென்ன உனக்கென்ன
என்ற உலகமதில் எனக்காக
என்னோடு பயணிக்கும் உன்னதம்..!
கருவறையில் தொடங்கி உன் நிழலில்
பயணித்தேன் இன்னும் பயணிக்கின்றேன்...!
இறுதி வரை இவ்வாறே பயணிக்க வேண்டும்...!
நலம் நாடுபவள் அன்னை என்றால் கணமும் - என்னை
வலம் வரும் உன்னை என்னவென்பேன்..?
குலம் காக்கும் தெய்வமானவளோ - என்
பலம் கொண்ட நம்பிக்கையானவளோ...?
வியந்து நோக்கும் அற்புதம் அம்மா நீ...!
பயந்து நீ ஒதுங்கிய உறவுகள் முன்னால்
உயர்ந்து நிற்க வைக்கவேன்றே சத்தியம் பூண்டேன்
அயர்ந்து போகாமல் சத்தியம் காக்க துணை நிற்பவளே...!
உலகில் உன்னைப்போன்று அன்னையில்லை...
உருவம் கொண்ட இறைவனாய் காண்கின்றேன்...!
சித்தம் குழம்பி தன்னிலை மறந்து
நித்தம் சத்தம் இட்டு சச்சரவிடும் என்னை
உத்தம மாய் மன்னித்து கொள்ளும் மேன்மையானவள்...!
அன்னை என்றால் அகிலமும் போற்றும்
உன்னை அன்னைக்கு மேலாய் தேவதையாய்
விண்ணைத் தாண்டி நேசிக்கின்றேன்...!
கோபமும் தாபமுமாய் பாசமும் நேசமுமாய்
அகன்று நீளமாய் நீடித்து போகின்ற பந்தமன்றோ..?
என் வாழ்வின் வழியோரம் எங்கும் பாசத்தின் தூறல்களை
அள்ளித்தெளித்து என் விழியோர கண்ணீர் துடைப்பவளே...!
நீயில்லாத தருணங்களில் உன் நினைவோரம் சாய்ந்தால்
தாலாட்டி என்னை மெல்ல தூங்க வைக்கும் மென்மையானவளே...!
உன் அன்பின் சாரல் மழையில் நனைந்து புதுப்பொலிவு பெறுகின்றேன்..!
மரணித்துப்போனாலும் மீண்டும் உயிர் பெற வைக்கும் - உந்தன் அன்பும்
நீயும்
என்னோடு பயணிக்கும் வரை எந்தன் மரணமும் சற்றுத் தள்ளியே பயணிக்கும்...!
சிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...