Search This Blog

Friday, 21 March 2014

கவிதைகள் எந்தன் கவலை நீக்கிகள்..!!


கனதியான இதயம்
கழற்றி வைக்கவோ
இடமில்லை..!

சனத்திரளில் தொலைந்து
மிதிபடும் பச்சைக்குழந்தை போல
வலிகளில் விழுந்து வதைபடும்
வஞ்சமில்லா இதயம்..!

மழைநீரில் நனைந்த புத்தகமாய்
மள மளவென்று ஊதிப்பருக்கின்றது
கண்ணீரின் ஆதிக்கத்தால்...!

உறவுகளும் நினைவில் கொள்ளாத
உயிரற்ற நிலையில் நான்...!

அஞ்ஞாத வாசம் செய்கின்றேன்
அந்தோ வருடக்கணக்காக...

வெளியேறத்துடித்து போராடி
விம்மி வெடிக்கின்றேன்...!

வெடித்துப் போனாலும்
துடித்துப்போக மாட்டேன்...
வடித்த கண்ணீரும்
நீடித்த துன்பமும்
முடித்து போன இறுதி வெடிப்பாகட்டுமே...!

பணம் இரந்திடுவேன் என்று
பக்கம் வர தயங்கும் உறவுகள்
பச்சோந்திகளை வென்று நிமிடத்திற்கு
பல நிறங்கள் கொள்கின்றன...!

வாயெல்லாம் பற்களாகி ஒருநாள் - என்
வாசல் தேடி வரும் அவர்களை
வதனம் எங்கும் புன்சிரிப்போடு
வரவேற்க காத்திருக்கின்றேன் - அந்த
காத்திருப்பிற்காகவே இன்றைய
காயங்களையும் அவமானங்களையும்
துச்சமாய் கடக்கின்றேன்..!

துணிவை அள்ளி கொடுக்கும் கவிதைகள்
துயரத்தை கிள்ளி போடும் கவலை நீக்கிகள்..!

கனதியான இதயத்தினை கொஞ்சம்
கவிதைகள் மீது இறக்கி வைக்கின்றேன் நான்...!
கனத்தால் தள்ளாடும் கவிதைகள் - என்
கண்ணீரை மொண்டு  சுறு சுறுப்பாகின்றன...!


இருக்காதா பின்னே...
இருக்கின்ற என் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி
இறங்கிய கண்ணீர் அன்றோ..?

கவிதையே உனக்கு - நான்
கடமைப்பட்டுள்ளேன்..!
சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்...!
சிறப்பாய் நீ பயணிக்க வேண்டுகின்றேன்..!




அரசி நிலவன்






1 comment:

  1. பயணம் தொடரட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete