விந்தி விந்தி வந்தவள் சாலையோரமாய்
ஒதுங்கி நின்றிருந்தாள்...!
ஒன்றிரண்டு வாகனங்கள் புகையினைக்காறி
உமிழ்ந்து வேகமாய் மறைந்து கொண்டிருந்தன...!
இன்னும் வீதிச்சமிக்கை இடத்திற்கு செல்ல முடியாதவளாய்
இழுத்து இழுத்து உடலை அசைத்துக்கொண்டிருந்தாள் அவள்..!
ஒருவாறு அங்கு செல்லவும் பொழுது நன்றாக புலர்ந்து விட்டிருந்தது....!
மெல்ல எழுந்து கைத்தடி பிடித்து நின்றிருந்த வாகனங்களை நோக்கி நடந்தாள்...!
வாகனங்களின் கண்ணாடியில் தெரிந்த தன் வதனம் கண்டு அவள்
வாடிப்போய்விட்டாள்...!
அவளுக்கே அவளை அடையாளம் காண முடியவில்லை..!
"அம்மாளாச்சி தாயே இன்றைக்காவது ஒரு பிடி சோற்றுக்கு வழி கொடு"
மனதிற்குள் வேண்டியபடி முன்னுக்கு நின்றிருந்த வாகனத்தின்
கண்ணாடியினை தட்டினாள்...!
அசையவில்லை கண்ணாடி கதவுகள்...
அடுத்த வாகனத்திற்கு முன்னேறினாள்...!
தட்டிய கைகள் தயங்க கண்கள் செருக
தள்ளாடியபடியே மனம் தளராது மீண்டும் முயற்சியில் அவள்..!
ஏளனப்பார்வைகளும் ஏச்சுக்களும்
ஏய் அங்காலே போ என்ற விரட்டல்களும்
தாண்டி மீண்டும் மீண்டும் சமிக்கைகள் விழுந்து எழும் அந்த
இரு நிமிட இடைவெளிக்குள் தன் அதிகமான முயற்சி கொண்டு
இரண்டு புண்ணியவான்களின் பெருந்தன்மையால் இருபது ரூபாய்
இரந்து பெற்றுக்கொண்டவள் வறண்ட தொண்டை நனைக்க விரைந்தாள்..!
இரண்டடி வைத்திருப்பாள் அந்தோ பாவம்..!
பொத்தென்று பிடரி அடிபட விழுந்து விட்டாள்..!
நடைபாதை குந்தில் அடிபட்ட பிடரி பிளக்க..
பீறிட்ட இரத்தம் கொஞ்சம் வீதியினை நனைத்தது...!
தலை பிளந்து கிடப்பவளை வாய் பிளந்து சிலர் நோக்கினர்...!
தடக்கு பட்டு விழுந்து போச்சு பாவம் என்று சிலரும்
வேகமாக வந்த வாகனம் இடிச்சு தூக்கி எறிஞ்சிட்டுது என்று சிலரும்
அனுதாபங்களை கொட்டி பார்வையாளர்களாக தம்மை அலங்கரித்தனர்....!
பத்து நாளாய் இதே வீதியில் பசிக்குது என்று அலைந்தவள் அவள்..!
பரதேசிகள் இவர்களின் கண்ணுக்கு அது தெரியவில்லை...!
பசி "மயக்கம் " மேலிட்டு மயங்கி விழுந்து பிடரி அடிபட்டதும்
பகல் குருடர்கள் இவர்களுக்கு புரியவில்லை...!
இல்லாத வதந்திகள் பரப்பி கொள்ள நன்றே தெரிகின்றது...!
இருக்கின்ற இவர்களைப் போன்ற சமூக வாதிகளால்
இல்லாத பசியும் பட்டினியும் நன்றே இருக்க வைக்கப்படுகின்றது...!
என்னவொரு கொடுமை.. கலங்க வைத்தது...
ReplyDelete