Search This Blog

Thursday, 20 March 2014

வெட்ட வெளிச்சம்...!


அண்ணன்களை தேடியவள்
அண்ணம் நெரிக்கப்பட்டாள் -அங்கே
சிறுமியவள் சின்ன பயங்கரவாதி என
சித்தரிக்கப்பட்டாள்...!

நவி பிள்ளையின் வருகையிலும்
நல்லெண்ண தூதுக்குழுக்கள் வருகையிலும்
சிந்திய கண்ணீரும் சிதறிய அவளது
அவலக்குரலும் எடுபடவில்லை...!

அண்ணாக்களை திருப்பி தரத்தான்
அட உங்களுக்கு வக்கில்லை
அருமந்த குஞ்சு அவளை
அடை காத்திடத்தன்னும்
உங்களுக்கு துப்பில்லையா..?

இலங்கை இரும்பு கரம் கொண்டது
இறுகப்பற்றி கழுத்தை நெரிக்கும் என்பது
அறிந்த உண்மை...!

சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுவர் போராளி என்று
கூவுகின்ற ஐ நாவும்

காணாமல் போனவர்களை
காரணம் காட்டி தேர்தலில்
மாலை சூடிய பெருந்தகைகளும்

இன்னும் உலகெங்கும் - ஈழத்தை வைத்து
இ(ர)க்கும் யாவரும்


அவள் கண்ணீர் சிந்தி கதறிய கோலம் கண்டும்
நேரஞ்சல் பதிவஞ்சல் என்று ஒவ்வொரு
ஊடகத்திலும் விதம் விதமாய் கண்ணுற்றும்
ஊமையாய் இருந்தனர் அன்றோ??

இன்று அவள் எங்கோ ஓர் மூலையில்
இருளோடு கரம் பிடித்து கதறும் போது
இறங்கி வந்திடுவாரோ..?

எனக்காய் நானே போராட வேண்டும்..!
எனக்காய் நானே சிறைக்குள்ளும் சாக வேண்டும்...!

யாருக்காக இங்கே அமைப்புக்கள்..?
யாருக்காக அவை உலவுகின்றனவோ?

போனவள் வருவாளோ..?
ஏனவள் போனாளோ..?

கவிதையிலும் கட்டுரையிலும்
கனமாய் எழுகின்றன வினாக்கள்..!

நேரிடையில் வினா எழுப்ப யாருக்கு துணிச்சலோ?
நேர்மையும் கூர்மையும் செத்து நாளாயிற்று...!

வெட்டை வெளிச்சமாகின்றது
வெறுமையாகி போகின்ற எமது வாழ்வு...!

உலகம் எங்கும் சுற்றினாலும்
உண்மை விழிக்காது என்று
உலகமது உறுதிப்படுத்துகின்றது..!

இருளில் மூழ்கிய வாழ்வு நிரந்தரம் என்று
இவர்கள் அமர்வுகள் அமர்த்தி தீர்மானம் நிறைவேற்றி
வெட்டை வெளிச்சம் போட்டு விளக்குகின்றார்கள்..!

பச்சிளம் பாலகி , நிறைமாத கர்ப்பிணி
யாவருக்கும் பயங்கரவாத பட்டம் சூட்ட
சர்வதேசம் சாமரை வீசி ஆமோதிக்கும் கிறுக்குத்தனம்
நன்றே வெளிச்சம் போட்டு காட்டுகின்றது
எமக்கான நீதியினை...



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வெட்ட வெளிச்சம் " என்ற தலைப்பில் இன்று (20.03.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/



No comments:

Post a Comment