வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் வீர மறவர்களே..!!!
தமிழீழத்துக்காக,
தமிழினத்துக்காக,
துடித்து களம் மீதேறி
தியாக வேள்வியிலே
நீறான திரவியங்களே..!!
பஞ்சணையை தூக்கி எறிந்து
ஏவுகணையை தோள் மீதேற்றி
உயிரை விலை கொடுத்த
உத்தம புத்திரர்களே..!!!
படி தாண்டா கண்மணிகள்
வெடி தாங்கி போயினரோ ..!!
காசினியில் இறைகளாய்
கார்த்திகையில் திருவிழா காணும்
காஞ்சனத்து முத்துக்களே....!!!
காங்கையாகிப்போகும் உடல்
காவியத்து நாயகர்களை எண்ணி
காந்தலித்து போகும் நெஞ்சம்...
காந்தளின் காத்திருப்பை கண்ணுற்று
உதிரங்களால் காவியம் எழுதிப்போனவரே...!!
உயிரோவியமாய் உயர்ந்தவரே...!!
உயிர் கொடுத்து எங்கள் இனப்பயிருக்கு
உரமாகி உதிரம் பாய்ச்சி நீராகி தியாகமானவரே...!!
கந்தக நெடி வாசனையோடு..
கல்லும் முள்ளும் கடந்து..
நீவிர் மீட்டெடுத்த - அங்குல
நிலம் கூட இன்று எம்மிடமில்லை - எம்
நிம்மதிக்காக,,
நித்திரை தொலைத்து..,
நீங்கள் சிந்திய குருதி...,
உங்கள் வித்துடல்களை,, தானும்
பொத்தி வைக்க முடியா பாவிகள் நாம்
பொல்லாத சிங்களத்தோடு போராடாது
கார்த்திகை மாதத்தில் மட்டும் குரல் கொடுக்கும்
கோழைகள் எம்மை பார்த்து ஏளனமாய் சிரிக்காதீர்..!!!
வெட்கி தலை குனிந்து அஞ்சலிக்கின்றோம்....!!!
வீறு கொண்டெழுந்து,,
வீர மரணத்தில் வீழ்ந்து,,
வித்தாகி,,
விருட்சமாகி ,,
வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும்
வீர மறவர்களே..
வீர வணக்கங்கள் உங்களுக்கு...!!!
அரசி நிலவன்
அரும்பதங்கள்
++++++++++++
காசினி - அகிலம்
காஞ்சனம் - தங்கம்
காங்கை - வெம்மை
காந்தல் - எரிந்து
காந்தள் - கார்த்திகை மலர்