Search This Blog

Saturday, 9 November 2013

நெருஞ்சி முள்ளாய் இறுதி வரை...


கல்லறை தோண்டி அங்கே
கபாலங்களை முத்தமிடத்துடிக்கும்
காம வெறியர்களின் கைகளில்
கன்னிகள் அகப்பட்டால்.....
கண்ணுறவும் வேண்டுமோ??
கன்னிப்புலிகள்
கடித்துக்குதறப்பட்ட கொடுரம்
தவணை முறையில் காட்சிகளாக....

சதிரம் ஆடி
உதிரம் உறையும்
திகிலாய்...
ஒவ்வொரு மனிதத்தினையும்
பதற வைக்கும்...
இனம் மத மொழி வேறுபாடின்றி...

சரித்திரம் படைத்துச்சென்ற
சமர்க்கள நாயகர்களின் வரலாறு
விளங்க மறுத்தவர்களுக்கு
சரண் அடைந்தவர்களின் வெற்றுடல்
சத்தமின்றி விளக்குகின்றது.....!!!

சயனைட்டுக்களின் தேவை
துலக்கப்படுகின்றது யாவருக்கும் இந்நாளில்....!!

அது நான் இல்லை
ஈனக்குரல் ஈரமாய் ஒலிக்கின்றது...!
ஈழத்தாயின் குலக்கொழுந்தின் குரல்வளையினை
கடித்துக்குதறிய பற்களில்  இரத்தம்...
ஈரமாய் தான் இன்னும்....
ஈரமற்று போன இதயம் கொண்ட
ஈனப்பிறவிகள் வாழும் தேசத்திலா
ஈழத்தமிழர் நாமும்....??


நிதர்சனத்திற்கு ஒலி கொடுத்தவள்
நிர்வாணத்தில் ஒளிப்படங்களாய்..
சிங்கள நிதர்சனம் தெரிந்தவள்..!
சரண் அடைவதை தவிர்த்தவள்..!
சயனைட்டையும் அங்கியினையும்
தொட்டுப்பார்க்கும் இடைவெளியில்
தட்டுப்பட்டு போனவள் குழிக்குள்...!

கட்டியணைத்து சாவினை தழுவ
கங்கணம் கொண்டவள்..!!
கபடமாய் கைதாகிப்போனாளோ....?
கற்பழிப்பின் கொடூரம் தெரிந்தவள்..!!
கயவர்களிடம் சிக்காது சாவினை
நெருங்கிப்போனவளின் விதி தடம் மாறியதோ...?
எங்கள் விதி சதி செய்ததோ???


நெருஞ்சி முள்ளாய் இறுதி வரை
நெஞ்சினை துளைத்தெடுக்கும்...!!!
நெகிழ வைத்த குரலாலும்
நெஞ்சம் தொட வைத்த நடிப்பாலும்
நெருங்கி இருந்தவள் தமிழ் உள்ளங்களோடு...!
ஒலியாகி ஒளியாகி வளியாகி
எங்கும் இசையாகி எங்கள்
மூச்சிலே கலந்தவள்  எப்போதும்
ஒளிவீச்சாய் எங்கள் மன வானில்
ஒளி வீசிக்கொண்டே இருப்பாள்...!


அரசி நிலவன்


3 comments:

  1. ஒலியாகி ஒளியாகி வளியாகி
    எங்கும் இசையாகி எங்கள்
    மூச்சிலே கலந்தவள் எப்போதும்
    ஒளிவீச்சாய் எங்கள் மன வானில்
    ஒளி வீசிக்கொண்டே இருப்பாள்...!

    ஆம் நாம் செல்லவேண்டிய இலக்க்கின்
    வழியைக் காட்டிக் கொண்டும் இருப்பாள்
    தலைப்பு மட்டுமல்ல சொல்லிச் சென்றவிதமும்
    எம்முள் காயமேற்படுத்துக் கொண்டே இருக்கிறது
    ஆழமான உணர்வில் விளைந்த அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்
    கவிதை மிக நன்றாக உள்ளது மனதை ஒருகனம் மௌனமாக்கியது எப்போதும் எம் தமிழர் நெஞ்சங்களில் நிறைந்து இருப்பார்கள் அருமை வாழ்த்துக்கள்
    வாருங்கள் அன்புடன்...புதிய பதிவாக என்னுடைய வலைப்பக்கம்
    உயிரில் பிரிந்த ஓவியமாய்(கவிதையாக)
    http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete