Search This Blog

Tuesday, 26 November 2013

எழுந்து வருக வருகவே...!!!


புதைந்து போகும் நாட்டில் இருந்து
புதுப்பொலிவாய் எழுந்திட வைத்த
புன்னகை போர் வீரனே....!!!

புழுதி படர்ந்து கிடக்கும்
புதைந்து போன ஆயுதங்கள்...
புழுங்கி சாகின்றன....!!

புல்லரித்து போகும்
புயல் வேக வீரத்தினை
புதைத்து - தாமும்
புதைந்து கொண்டிருக்கும்
புலி வீரர்களின் கதை தெரியலையோ...??
புதிதாய் பிறந்திட காலம் - இன்னும்
புலரலையோ...??

புனித மேனியரின்
புகலிடங்கள்
புரட்டிய சேதியும் - இராணுவப்
புலனாய்வு சக்திகள்
புனித மண்ணில் எங்கள் வீரம்
புதைத்து போகும் கொடுமையும்
புரிந்திடவில்லையோ...??


புனிதமாய் வாழ்ந்திடும்
புயல் வீரனே....!!!

புயலாய் செயலாய் எழுந்திட
புது இலக்கணம் எழுதிட
புறப்பட்டு வருகவே....!!!


எனக்கென்ன என்று பாராமல்
எழுந்த வீரம் அல்லவோ...??
எழாமல் போயிருந்தால் - தமிழர்களின்
என்புக்கூடு நூதன சாலைகளில்
என்றோ வாழ்ந்த இனம் என்று
எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்...!
 
எவனுக்கும் இல்லாத துணிச்சல்
எங்கள் தலைவனுக்கு என்று
எழுதி வைக்கப்பட்டது....!!

எதிரியின் சுவடுகள் தொடர்ந்து
எழுந்து நிமிர்ந்து அவனை விழுத்திய
எம்மினத்தின் விடிவெள்ளி...!!!

எங்கே என்று தெரியாமல்
ஏங்கித்தவிக்கின்றோம்....!
எழுந்து நின்ற வீரம் தூரத்தில்
எழுச்சி பெறக்காத்திருக்கின்றது...!!


எய்யாமையால்
எகத்தாளம் புரியும்
எதிரி சூழ் துரோகிகளை
எற்றித்தள்ள
எழுநாவில் எரிந்து
எழத்துடிக்கும்
எம்மினத்து எமரங்கள்
எய்தல் அடைந்திட
எம்மினத்து எல்லி
எங்கள் கரிகாலன் - அகிலமதில்
எழுந்த நன்னாளில்
எவ்வம் நீங்கி வாழ்த்துகின்றோம்
எறுழ் கொண்ட சிகரமே..!
எழுந்து வருக வருகவே...!!!

என்றென்றும் வாழ்க வாழ்க
எட்டுத்திக்கும் பட்டுத்தெறித்து
எதிரொலிக்கும் நாமம் வளர்க வளர்க....



அரசி நிலவன்


அரும்பதங்கள்
***************
எய்யாமை - அறியாமை
எற்றி - உதைத்து
எழுநா - நெருப்பு
எமரங்கள் - எங்களைச்சேர்ந்தவர்கள்
எய்தல் - நெருங்குதல்
எல்லி - சூரியன்
எறுழ் - வலிமை  

1 comment:

  1. எழுந்திடும் எங்கள் இனம்
    விழுந்திடவில்லை விரவிடும் விடியல்
    அழுந்திட விடுவரோ தலைவர்
    கொழுந்துவிட்டெரியுமே ஈழச்சுடர்!..

    ReplyDelete