கல்லில் நார் உரிப்பாக
கழிகின்ற பொழுதுகள்...!!!
கடமைக்கு வாழ்க்கை
ஆரம்பமே இல்லாத வாழ்வு
அந்தமாகிட வேண்டும் என்ற துடிப்பு...!
வரவினங்கள் இல்லாத செலவினங்களாக
அலைக்கழிப்புக்களும் அவமானங்களும்
ஏமாற்றங்களும் ஏய்ப்புக்களுமாக
எஞ்சிப்போன...
வாழ்க்கைக் கணக்கில்
மேலதிக பற்றுக்களான
எதிர்பார்ப்புக்களுக்கு இடமேது...?
எந்த நிலையிலும் எதிர்பார்ப்புக்கள்
பிரவேசம் செய்யாத நிலை...
விரயமாகிப்போன உழைப்புக்கள்..!
மதிப்பிழந்து போன தியாகங்கள்...!
பயனற்றுப்போன அர்ப்பணிப்புக்கள்...!
இழக்கப்பட்ட நன்மதிப்புக்கள்....!
காலாவதியாகிப்போன கல்வி...!
கடந்து கொண்டிருக்கும் பிரிவுகள்..!
கல்லாய்ப்போன இதயம்..!
வலிகளும் ரணங்களுமாய்
கழியும் நான்காண்டு வாழ்வில்...
அகிலத்தின் துன்பங்கள் யாவற்றையும் ஒரு சேர
அடைந்திட்ட ஒரு சாதனை...!
அலைக்கழிக்கப்பட்ட வாழ்வில் - இனி
அடி என்று விழுவதற்கு ஏதுமில்லை....!
வழங்கப்பட்ட துன்பங்களை கடந்து
வலிமையாய் நிமிர்ந்து நிற்கும்
இந்த நிலைக்கு பிரவேசித்தது
இலவசமாய் தான்...!!!
துணிந்து நிமிர்ந்து நிலைத்து நிற்பதால் தானோ
துன்ப நிலை நீளுகின்றதோ...!
விடியல் பிரவேசிக்கும் காலம் தொலைவில் போலும்...!
விடிந்திடும் என்று நம்பிக்கைகள் தான் தொடர்ச்சியாய்
பிரவேசம் செய்கின்றன மனதில்...!!
பிரவேசிக்கும் விடியலுக்காய்..
சலிக்காது வழி மேல் விழி வைத்து தினம்
கோலமிட்டு காத்திருக்கும் வாசல் படியாய் மனம்...!!!
கோபங்கொண்டு ஒரு நாள் மனம் வனவாசம் பிரவேசிக்கலாம்...!!
நம்பிக்கைகளும் நட்டாற்றில் விட்டு நீங்கிப்போயிடலாம்...!!
எங்கெங்கோ கற்பனையில் பிரவேசிக்கின்றது இன்றைய மனம்...!!
எவை கைவிட்டாலும் இன்னொன்றின் பிரவேசம் ஒன்று
என் வாசலை விட்டு நீங்கிப்போயிடாது அல்லவா...?
எனை விட்டு செல்லும் உயிரை அழைத்து செல்ல
மரணத்தின் பிரவேசம் ஒருநாள் என் வாசல் வருமன்றோ...?
அரசி நிலவன்