Search This Blog

Showing posts with label வலி. Show all posts
Showing posts with label வலி. Show all posts

Wednesday, 13 November 2013

பிரவேசம்...!!!


கல்லில் நார் உரிப்பாக
கழிகின்ற பொழுதுகள்...!!!
கடமைக்கு வாழ்க்கை 

ஆரம்பமே இல்லாத வாழ்வு 
அந்தமாகிட வேண்டும் என்ற துடிப்பு...!

வரவினங்கள் இல்லாத செலவினங்களாக 
அலைக்கழிப்புக்களும் அவமானங்களும்
ஏமாற்றங்களும் ஏய்ப்புக்களுமாக 
எஞ்சிப்போன...
வாழ்க்கைக் கணக்கில் 
மேலதிக பற்றுக்களான 
எதிர்பார்ப்புக்களுக்கு இடமேது...?
எந்த நிலையிலும் எதிர்பார்ப்புக்கள் 
பிரவேசம் செய்யாத நிலை...

விரயமாகிப்போன உழைப்புக்கள்..! 
மதிப்பிழந்து போன தியாகங்கள்...! 
பயனற்றுப்போன அர்ப்பணிப்புக்கள்...!
இழக்கப்பட்ட நன்மதிப்புக்கள்....! 

காலாவதியாகிப்போன கல்வி...!
கடந்து கொண்டிருக்கும் பிரிவுகள்..! 
கல்லாய்ப்போன இதயம்..! 

வலிகளும் ரணங்களுமாய் 
கழியும் நான்காண்டு வாழ்வில்... 

அகிலத்தின் துன்பங்கள் யாவற்றையும் ஒரு சேர 
அடைந்திட்ட ஒரு சாதனை...! 
அலைக்கழிக்கப்பட்ட வாழ்வில் - இனி 
அடி என்று விழுவதற்கு ஏதுமில்லை....!

வழங்கப்பட்ட துன்பங்களை கடந்து 
வலிமையாய் நிமிர்ந்து நிற்கும் 
இந்த நிலைக்கு பிரவேசித்தது 
இலவசமாய் தான்...!!!

துணிந்து நிமிர்ந்து நிலைத்து நிற்பதால் தானோ 
துன்ப நிலை நீளுகின்றதோ...!
விடியல் பிரவேசிக்கும் காலம் தொலைவில் போலும்...!
விடிந்திடும் என்று நம்பிக்கைகள் தான் தொடர்ச்சியாய் 
பிரவேசம் செய்கின்றன மனதில்...!! 

பிரவேசிக்கும் விடியலுக்காய்..
சலிக்காது வழி மேல் விழி வைத்து தினம் 
கோலமிட்டு காத்திருக்கும் வாசல் படியாய் மனம்...!!!

கோபங்கொண்டு ஒரு நாள் மனம் வனவாசம் பிரவேசிக்கலாம்...!!
நம்பிக்கைகளும் நட்டாற்றில் விட்டு நீங்கிப்போயிடலாம்...!!
எங்கெங்கோ கற்பனையில் பிரவேசிக்கின்றது இன்றைய மனம்...!!

எவை கைவிட்டாலும் இன்னொன்றின் பிரவேசம் ஒன்று 
என் வாசலை விட்டு நீங்கிப்போயிடாது  அல்லவா...?
எனை விட்டு செல்லும் உயிரை அழைத்து செல்ல 
மரணத்தின் பிரவேசம் ஒருநாள் என் வாசல் வருமன்றோ...?




அரசி நிலவன் 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பிரவேசம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



Saturday, 31 October 2009

இரவுக்கு.., நான் தோழன்..!! எனக்கு.., இரவு தோழன்..!!




காதலிக்கின்றேன், என்பாள் பொய்யே..!! 
காதலனே..! கண்ணாளனே..! என்பாள் பொய்யே..!!

நீயின்றி நானில்லை என்பாள் பொய்யே..!! 

நீர், நிலம், காற்று, சுற்றும் பூமி.. நீதான் என்பாள் பொய்யே..!

இதயத்தில் நீதான் என்பாள் பொய்யே..!! 

இதயத்துடிப்பே,, உனக்காகத்தான் என்பாள் பொய்யே..!!

உன் முகம் பார்க்காமல்,,, உயிர் வாழ மாட்டேன் என்பாள் பொய்யே..!! 

உலகமே எதிர்த்தாலும் உன்னோடு தான் என் வாழ்வென்பாள் பொய்யே..!!

பிரிந்து செல்லாதே.. என்பாள் பொய்யே..!! 

பிரியமான காதலா..! என்பாள் பொய்யே..!!

சிரித்து சிரித்து,, அழுவாள் பொய்யே...!! 

அழுது அழுது,, சிரிப்பாள் பொய்யே..!!

கை பிடித்து நடந்து, வந்ததும் பொய்யே..!! 

கண்ணீரில் என்னை கரைத்ததும் பொய்யே..!!

குதூகலித்து, பேசியதும் பொய்யே..!! 

குறுஞ்செய்தி சேவைகளும் பொய்யே..!!

"வருகின்ற திங்கள் திருமணம்,," என்பாள் உண்மையே..!!

"வரப்போகின்ற கணவன், வெளிநாட்டில்" என்பாள் உண்மையே..!!

"வருந்தாதே நண்பா,, "என்பாள் உண்மையே..!!

"வந்து விடாதே திருமணத்திற்கு,," என்பாள் உண்மையே..!!

இதயம் சுக்கு நூறாகி நிற்பேன் நான் மட்டுமே...!! 

இல்லறத்துணையுடன்,, இனிமை காண்பாள் அவள் மட்டுமே..!!


பொய்யை விலக்கி, உண்மையை தெரிந்தெடுக்க - நான்  

நீரை விலக்கி, பாலை உண்ணும் அன்னப்பறவை இல்லையே...!! 
ஏமாந்து விட்டேன் நான் - அதனால் 
ஏம்பலித்து தினம் துடிக்கின்றேன்..!! 




இருட்டினில் மட்டும் மெல்லக்கசியும் என் கண்ணீர்..!! 
இலவம் பஞ்சு தோற்று விடும் - என் 
இதயத்தின் மென்மையோடு..!! 
இருளோடு நான் மட்டும்  தனியாக !!
இரவுக்கு.., நான் தோழன்..!! எனக்கு.., இரவு தோழன்..!!




" அரசி நிலவன் "




குறிப்பு : விவேகசிந்தாமணியில் உள்ள "வெம்புவாள் விழுவாள் பொய்யே..." என்ற பாடலைத்தழுவி எழுதப்பட்டது ஆகும்.