Search This Blog

Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Tuesday, 12 November 2013

பணத்தின் குணம்...!!!


பணமது கனமாக பைகளில்
பரவிக்கிடந்த காலங்களில்....
பணமதின் குணம் அறியவில்லை...

கடதாசியோடு ஒரு கடதாசியாக....
பண்டத்தொடு ஒரு பண்டமாக..
உணர்ந்து கொண்டேன்....

பலர் என் பின்னால்...
பக்குவமாய் பேசி காரியம் சாதித்தோர்..
பறந்து சுற்றி நின்ற சுற்றங்கள்...
கரிசனையும் அன்பும்
கணக்கில்லாமல் கொட்டிக்கிடந்தது....

பைகள் வெறுமையாகிப்போன
நிகழ் காலமதில்......
பணத்தின் குணம் அறியப்பட்டது..
பண்டமல்ல...
பரிணாம வளர்ச்சியில்
பணமும் ஒன்றாகிப்போனது...!
மனிதனையே மதிப்பிடும்
மகத்தான உயிர்ப்பொருளாய் ஆனது
மரத்துப்போன மூளைக்கு புலப்படுகின்றது
இப்போது....

வேண்டாத போது கொட்டிய கரிசனைகள்
வேண்டும் நிலையில் கொடுக்கப்படும்
நிலையில் இல்லாமல் போவதற்கு
நிலையற்ற பணம் சிபாரிசு செய்கின்றதா...??

பரிதாபப்படும் நிலையில்
உள்ளது பணமா...??
மனிதமா...??

மனிதர்கள் குணம் மாறிப்போனதற்கு...
                         பணம் காரணமா...??
                         பணம்
                         குணம்  பெற்று போனதற்கு
மனிதர்கள் காரணமா....??


குணங்கள் மரணித்துப்போன
கணங்களின் மத்தியில்....
பணமின்றி வாழ்வதை விட
பிணங்களோடு
மணத்தோடு  வாழ்வதே மேல்....!!!



அரசி நிலவன்


Tuesday, 15 October 2013

அடிமைகள் என்பதை அறியாமலேயே...

ஆடம்பர வாழ்க்கைக்கு
ஆங்காங்கே உலகம் எங்கும்
கை ஏந்தி கடன் சுமைகளை
குடி மக்களின் தலைகளில்
பொறித்து வைக்கும் அரசு....!!!

தான் பெற்ற இன்பம் வையகமும் பெற
தாரை வார்த்து கொடுக்கின்றது அடிமைகளாக
மத்திய கிழக்கின் பண முதலைகளுக்கு....
தரகோடு அந்நிய செலாவணியும்
தங்கு தடையின்றி அள்ளப்படுகின்றது...!

உழைப்புக்கள் கொட்டப்படுகின்றனஅங்கே..!
உதிரங்கள் சிந்தப்படுகின்றன அங்கே..!
உறவுகள் நாதியற்று இங்கே
உலை வைக்கவும் சக்தியற்று
உயிரை வெறுத்து காத்திருப்பு...!

ஊதியம் மருந்திற்கும் இல்லை...
ஊமையாய் போன பெண்மைகள்
ஊர் திரும்புகின்றன வெற்று உடலங்களாக
ஊர் திரும்பாமலே போன றிஷானா நபீக்குகளும் பல
ஊனமாய் போன புத்தியுடன் தம் நிலை மறந்தோரும் என
ஊர் சொல்லும் பலரின் கண்ணீர் கதைகள்...!

இராணுவத்திற்கு சலித்து விட்டதென்று
இங்கிருந்து நாடு கடத்தி சித்திரவதை....!!!
அடிமைகளை விற்று பெற்றோல் கொள்வனவு
"அறியாமை" அரசிற்கு மூலதனமாகின்றது
அருமந்த உயிர்கள் நட்டமடைகின்றன.....

அடிமை வாழ்வு நிரந்தரமாகி அங்கே
அல்லாடும் அபலைகள் சிதைக்கப்படும் கொடுமையா?
அடிமை என்ற மூன்று எழுத்தில் - அவை
அடங்கி போவது கொடுமையா?

அதிகாரம் அகத்தே இருந்தும்
அசமந்த போக்கு அரசின்
அறியாத சங்கதிகள் அதிகம்..!

அடிமைச்சாசனம் எழுதி கைச்சாத்திட்டு
அரங்கேற்றும் நாடகம் புரியாது -இன்றும்
அங்கே ஏற்றுமதி ஆகின்றன
அறியாமைப்பெண்மைகள் - தாம்
அடிமைகள் என்பதை அறியாமலேயே...

அறிவுறுத்த யார் வருவார்??
அறியாத அரசியலை மேடை போட்டு
அளக்கும் அய்யா மாரே....
அறியாமல் அடிமையாகும் கொடுமையினை
அநியாயமாகிப்போகும் வாழ்வினை விழிப்புணர்த்த
அய்யாமாரே மாதம் ஒரு மேடை ஏற மாட்டிரோ?? - ஒ
அயர்த்து போய் விட்டேன் நீவிரும்
அரசிற்கு அடிமை என்பதனை....


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அடிமை " என்ற தலைப்பில் 15.10.2013 வழங்கிய கவிதை இது.

Tuesday, 8 October 2013

தகுதி...!!!

தகுதி என்ற கவிதைத்
தலைப்பை உள்வாங்கி
தமிழ் தேடலில் தவழ விட்டேன்...!
தட்டுத்தடுமாறி தடக்கி
"தகுதி" விழுந்து எழுந்தது...!

தகுதி பெற்று எவரும் பிறப்பதில்லை...!
பகுதி பகுதியாக வாழ்வில் சேர்த்து
மிகுதி பெற்று தினம் திமிர் கொண்டு
தொகுதியாக சொத்துக்கள் பணம் என
தகுதியாகி உயர்ந்து நிற்கின்ற உலகமிது...!!!


அழகும் அறிவும் பேச்சும் தகுதியாகி
பழகிப்போன பாழாய்ப்போன உலகமிது...!

கற்றவையும் கற்பவையும் கூட
பணத்திற்கு பலியாகிடும் உலகமிது...!


பணம் விரும்பிடா குணம் கொண்டு..
கள்ளம் இல்லா உள்ளம் நிறைந்து...
நெகிழ்ந்திடும் பண்பான கனிவுப்பேச்சோடு..,
மகிழ்ந்திடும் தென்பான புன்முறுவல் பூத்து
திகழ்ந்திடும் மனித வைரத்தினைப்
புகழ்ந்திடும் தகுதி  செந்தமிழிற்கு உண்டோ??
அகழ்ந்திடும் வைரம் தன்னும் ஈடாகிடுமா?
உயர்ந்து நிற்கும் உள்ளத்தின் விலையேது?


உன்னத உள்ளத்தின் தொட்டிட முடியா
உயரத்தை நெருங்கிடத்தான்  முடியுமா??
உருளும் உலகத்தின் அயராத
உழைப்புக்களைக்கொண்டு...??

அளக்க முடியுமா கல்விப்படிகளால்...?
எட்ட முடியுமா அழகின் வசீகரத்தால்...?
விலை பேசிட இயலுமா பணப்படிகளால்...?

விலை மதிப்பற்ற உன்னத உயிரும் நெருங்கிட சக்தியற்று
மலைத்து நின்று அண்ணாந்து நோக்கும்
தொலை உயரத்தில் என்றுமே உயர்ந்த உள்ளம்...!!!
நிலைத்து நின்று அரசாளும்....!!






அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "தகுதி" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/