Search This Blog

Showing posts with label உணர்வு. Show all posts
Showing posts with label உணர்வு. Show all posts

Monday, 25 November 2013

உணர்வு....!!!




உடைக்கப்பட்ட உறைவிடங்கள்,
உலுப்பப்பட்ட உறவுகள் தாண்டி 
உயிர் பெற்று விருட்சமாகிய விதைகளாய் 
உணர்வுகள் எங்கும் வானாளாவி பரந்தபடி... 

பலாத்காரத்தினால் யாரும் இங்கே 
படைக்கவில்லை உணர்வுகளை எழுத்துக்களாக....
மிரட்டி யாரும் அஞ்சலிக்கவில்லை...! 
மின்காந்த அலைகளாய் ஊடுருவிப்பாயும் 
உணர்வலைகளால் உதிரம் கொதித்து 
உடல் சிலிர்க்கும்.. கண்ணீர் பெருக்கெடுக்கும்..! 

பல்கலைக்கழகம் விடுதலையில் மூடினால்  
உணர்வுகளும் விடுதலை பெற்றிடுமா...?
சுவரொட்டிகள் ஓட்டினால் தான் 
சுடராகி போனவர்களை நினைக்க முடியுமா??

முகப்புத்தகம் எங்கும் மாவீரர்களின் 
முகங்கள் அலங்கரிக்கும்..!
மூலை முடுக்கெல்லாம் அவர்கள் நாமம் 
மூச்சு விட்டு உயிர் வாழ்கின்றது....!!! 


துயிலும் இல்லங்கள் ஆயிரக்கணக்கில்..... 
துளிர் விடுகின்றன ஒவ்வொரு உள்ளங்களிலும்..! 
புல்டோசர்கள் ஏறி வருபவர்கள் கல்லறைகளை 
புரட்டி போட முடியாமல் விழிக்கின்றார்கள்....!!!

இதயங்கள் மெளனித்து அஞ்சலிப்பதையும் 
இணையற்ற எம் தியாக செம்மல்களின் அசைவினை 
உள்ளத்தால் உணர்ந்து பெருகிடும் கண்ணீர் பொழிந்து 
உணர்வாலே உருகி உருகி செலுத்தும் அஞ்சலிகளை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??

உழுது போய் எஞ்சியது கல் மட்டுமே....
உள்ளத்தில் நிலைத்து நிற்கும் உயிர்களை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??


உணர்வுகளால் சிகரமாய்.. 
உருவங்களில் தெய்வங்களாய்... 
உயர்ந்து நிற்கும் உன்னத மனிதர்கள் 
உருக்குலைந்து போவதில்லை.....!
உணர்வாலே உதிரம் சிந்தி 
உயிர் ஈந்த  உத்தமர்களே.....!
உம்மை நெருங்கிட யாரால் முடியும்...???

உணர்வின் தீயில் எரிந்தபடி.....
உமது சுவடுகளின் திசை தேடி...
உழன்றபடி உணர்வுத்தமிழ் நெஞ்சங்கள்...!


அரசி நிலவன் 




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உணர்வு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Tuesday, 22 October 2013

உயர்வும் தாழ்வும்.....!!!


உயர்வுகள் யாவும் இடப்
பெயர்வுகள் ஆகின...
தாழ்வுகளே எனக்கு 
வாழ்வுகள் ஆகியதால்
பாழாகி போகும் காலம்...!!!


கள்ளியின் உலர் வாழ்வினை 
அள்ளி  வழங்கிய தாழ்வினை 
எள்ளி நகையாடியவர்களை  எண்ணி  
பள்ளி கொள்ள முயன்றும்
தள்ளி போகும் தூக்கம் -  விடி 
வெள்ளி நம் வானத்தில் தோன்றாதா ?
முள்ளி செடியில் சிக்கிய சேலையாய் - மனம் 
கிள்ளிப்போகும் வேதனைகள் 
உணர்த்திடும் போது தான் தாழ்வு என்பதும்  
உணரப்படுகின்றது....!!!


கல்வியின் உயர்வும் 
கடமையில் உயர்வும்
உணர்த்திடவில்லையே..!   
உயர்வின் உயர்வினை.....

உயரத்தில் சஞ்சரித்த போது 
உலகமும் என்னோடு தான்....!!!
உணர்வுகள் என்றும் தாழவில்லை...!
உண்மையின் நிழல்களும் கூட 
உருமாறித்தாழ்ந்திடவில்லையே...!  
உருவங்களும் தாழவில்லை..
உயிர்கள் மட்டும் ஏன்
உடனுக்குடன் தாழ்வாகின்றதோ?
உருமாறிப்போகும் உறவுகள் 
உணர்வுகளை களைந்து - என் 
உயிரை எட்டி உதைப்பதேனோ??


உண்டி சுருங்கினாலும் இன்னும் 
உயிர் வாழ்கின்றேன்...!!
உறவுகளின் ஏற்றத்தாழ்வினால்
உருக்குலைந்து போகின்றேன்...
உயிருடன் தினம் மரணித்துப்போகின்றேன்...!

உயர்வின்றி தாழ்ந்து போனால்
உண்மையும் தூரமாய் பயணித்து  
உறவாட மறுக்கின்றதும்  
உண்மையே...!

உயர்ந்த போது சமனாய் தெரிந்த 
உலகம் - உணர்வாலே 
உணர்த்துகின்றது தன்னையும்  தாழ்வாய்...


உயர்திரு உலகமே..! 
உள்ளபடிதான் இருக்கின்றேன் யான்...
உரு மாறி இடம் மாறுவது நீ தான்....!
உடமை தான் இழந்து விட்டேன் 
உறைவிடமும் தொலைத்து விட்டேன்...
உயிர் தன்னும் நீங்கிடுவேன் ஆனால் 
உன்னைப்போல் 
உருமாறி போகமாட்டேன் - மனிதாபிமான 
உணர்வுடன் நிலையாக 
உயர்ந்து நிலைத்து  நிற்கின்றேன்...
உலகமே உன்னைப்போல் தாழ்ந்தல்ல..
உலகமே உன்னைப்போல உயிரற்றல்ல..
உலகமே உன்னைப்போல் உணர்வற்றல்ல 
உண்மையுடன் யான் என்றென்றும்
உயர்வுடன் தான்...!!!



 அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உயர்வும் தாழ்வும்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.




கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/