உயர்வுகள் யாவும் இடப்
பெயர்வுகள் ஆகின...
தாழ்வுகளே எனக்கு
வாழ்வுகள் ஆகியதால்
கள்ளியின் உலர் வாழ்வினை
அள்ளி வழங்கிய தாழ்வினை
எள்ளி நகையாடியவர்களை எண்ணி
பள்ளி கொள்ள முயன்றும்
தள்ளி போகும் தூக்கம் - விடி
வெள்ளி நம் வானத்தில் தோன்றாதா ?
முள்ளி செடியில் சிக்கிய சேலையாய் - மனம்
கிள்ளிப்போகும் வேதனைகள்
உணர்த்திடும் போது தான் தாழ்வு என்பதும்
உணரப்படுகின்றது....!!!
கல்வியின் உயர்வும்
கடமையில் உயர்வும்
உணர்த்திடவில்லையே..!
உயர்வின் உயர்வினை.....
உயரத்தில் சஞ்சரித்த போது
உலகமும் என்னோடு தான்....!!!
உணர்வுகள் என்றும் தாழவில்லை...!
உண்மையின் நிழல்களும் கூட
உருமாறித்தாழ்ந்திடவில்லையே...!
உருவங்களும் தாழவில்லை..
உயிர்கள் மட்டும் ஏன்
உடனுக்குடன் தாழ்வாகின்றதோ?
உருமாறிப்போகும் உறவுகள்
உணர்வுகளை களைந்து - என்
உயிரை எட்டி உதைப்பதேனோ??
உண்டி சுருங்கினாலும் இன்னும்
உயிர் வாழ்கின்றேன்...!!
உறவுகளின் ஏற்றத்தாழ்வினால்
உருக்குலைந்து போகின்றேன்...
உயிருடன் தினம் மரணித்துப்போகின்றேன்...!
உயர்வின்றி தாழ்ந்து போனால்
உண்மையும் தூரமாய் பயணித்து
உறவாட மறுக்கின்றதும்
உண்மையே...!
உயர்ந்த போது சமனாய் தெரிந்த
உலகம் - உணர்வாலே
உயர்திரு உலகமே..!
உள்ளபடிதான் இருக்கின்றேன் யான்...
உரு மாறி இடம் மாறுவது நீ தான்....!
உடமை தான் இழந்து விட்டேன்
உறைவிடமும் தொலைத்து விட்டேன்...
உயிர் தன்னும் நீங்கிடுவேன் ஆனால்
உன்னைப்போல்
உருமாறி போகமாட்டேன் - மனிதாபிமான
உணர்வுடன் நிலையாக
உயர்ந்து நிலைத்து நிற்கின்றேன்...
உலகமே உன்னைப்போல் தாழ்ந்தல்ல..
உலகமே உன்னைப்போல உயிரற்றல்ல..
உலகமே உன்னைப்போல் உணர்வற்றல்ல
உண்மையுடன் யான் என்றென்றும்
உயர்வுடன் தான்...!!!
உயர்வுடன் தான்...!!!
அரசி நிலவன்
உலகமே உன்னைப்போல உயிரற்றல்ல..
ReplyDeleteஉலகமே உன்னைப்போல் உணர்வற்றல்ல
உண்மையுடன் யான் என்றென்றும்
உயர்வுடன் தான்...!!!
அழகான கவிதை... வாழ்த்துக்கள்...
தாழ்வுகள் தான் முன்னேற வழிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உயர்வும் தாழ்வும்..
ReplyDeleteமிகவும் அருமையான தலைப்பினில்
அழகான கவிதை ஒன்றை படைத்திருக்கிறீர்கள்..
அருமை.
அவனியில் பவனிவரும்
அத்தனை உணர்வுகளுக்கும்
ஏற்றமும் உண்டு இறக்கமும் உண்டு..
இரவென்றால் பகலுமுண்டு
இனிப்பென்றால் கசப்புமுண்டு..
==
உங்களால் எடுத்தாளப்பட்ட வரிகளில்
எனக்குப் பிடித்தமானவை..
///உருமாறிப்போகும் உறவுகள்
உணர்வுகளை களைந்து - என்
உயிரை எட்டி உதைப்பதேனோ??///
உணர்வுகளைக் களைந்து உயிரை உதைப்பதேனோ??
நிதர்சனமான கேள்வியுடன் ஆளுமைப் படுத்தப்பட்ட வாக்கியம்..
உயர்வாய்க் கருதும் உறவுகள்
உயிர்மை இழந்து தனை தாழ்த்திக்கொள்ளும்
தருணங்கள் கண்முன்னே ஓடுகிறது..
அருமை அருமை ..
தொடருங்கள்..