Search This Blog

Wednesday, 23 October 2013

இனவாத இரைச்சல்..!!!

வானமே நடு நடுங்கி போகும்....
வானத்தை கிழித்து வரும் பேரிரைச்சல்...!!
வான் நிலவும் மேகத்திரைக்குள் அஞ்சியவாறு மறையும்..!


வானேறி விரைந்து வரும் வல்லூறுகளின் எச்சம்
வாயைப்பிளந்து கொண்டு மண்ணை நோக்கி விரையும்...!
வானம் நோக்கும் கண்கள் இரைச்சல் கேட்டு....
வாசலில் காலாறும் கால்நடையும் எஞ்சியதில்லை...
வாரி இறைக்கும் குருதி
வான் வரைக்கும் தெளிக்கப்படும்...!!!


வாலை ஆட்டியபடி செல்லமாய் வளர்த்த
வாயில்லாச்சீவன் உதிரந்தோய்ந்து
வாஞ்சையுடன் கதறும் காட்சி...!!!
வானத்தில் மறுபடியும் இரைந்திடும் இரைச்சல் கேட்டு
வானத்தை நோக்கி அழுதழுது குலைத்து ஓடித்திரிந்து...
வாசலில் சிதறிப்போன எசமான் காலடியில் கிடக்கும்...!


வாரிச்சுருட்டிக்கொண்டும் உடலங்கள் சிதறிப்போயும்
வாழையடி வாழையாக வாழ்ந்து வந்தோம் இவ்வாறே..
வானவில் ஒன்று மாற்றமாய் எம் வானத்திலும்
வானிலையும் மாறியது போன்ற ஒரு பிரமை...!
வானம் அமைதியாகி செவிகளும் நிம்மதியாய் -ஆனாலும்
வாழ்கின்றோம் வாள் முனையில் ஒரு வாழ்வு - வீடு
வாசல் யாவும் ஒரு கட்டுப்பாட்டுப்பிடியில்...

வானத்து இரைச்சல் வாசலில் நாய் குரைச்சலாய்
வாடிக்கையாகிப்போனது - உயிரை
வாட்டும் நிலையிலும் ஒரு வாழ்வினை
வாழ்ந்தபடியே தான் நாம் - மண்ணின்
வாசத்தில் புத்துயிர் பெற்றாலும்
வாரத்திற்கொரு விசாரணையை
வாசல் வரை உரைக்கும் பச்சை
வாகனத்தின் இரைச்சல்
வாழ்வினை வேரறுக்கும் இரைச்சல்....!!!

இரைச்சல்கள் இடம் மாறினாலும்
இசையால் அவை வேறுபட்டாலும்
இவை யாவும் இயமனாய்
இடர் கொடுக்கும் இரைச்சல்களே..!
இருள் தன்னும் அஞ்சிடும்
இரைச்சல்கள் எம் மண்ணில்...
இன்றியமையாதனவாகி விட்டன..!

இசைவாக்கம் அடைந்திட்ட
இரைச்சல்கள் இவையெனினும்
இதயம் வேகமாய் துடித்து ஓய்கின்றது...!!!

இரைச்சல்களின் பின்னே
இடர் ஒன்றின் வருகையினை உரைக்கும்
இனவாத யானைகளின் மணியோசை - என
இளம் பிஞ்சும் அறியும் இரைச்சல்கள் இவை..!!!

இடியோசைக்கு அஞ்சாத குழந்தை வாழும்
இடர் மிகு ஈழத்தில் இளைஞனும்
இதயம் நொறுங்கி இடிந்து போவான்
இனவாதம் எழுப்பும் - இந்த
இயம  இரைச்சல்களால்....!!



 அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "இரைச்சல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/



2 comments:

  1. நெஞ்சு பதைபதைக்க வைக்கிறது...

    ReplyDelete
  2. வாழ்த்துகள் உறவே,

    நல்ல கவிதை. கவிதை என்பதைவிட எம்மவர்களின் வாழ்க்கை.

    ReplyDelete