மறந்தும் எட்டிப்பார்த்திடார்...!
மந்தைகளும் காக்காய்களும்
மகிழ்வோடு இளைப்பாறி இரை மீட்டி
மலம் கழித்துப்போகும் கூடம் - துர்
மணம் வீசும் என்னருகே
மறந்தும் மனிதர்கள் எட்டிப்பார்த்திடார்...!
மதிப்பற்று மண்ணாய் போய்
மனம் புண்ணாய் நொந்திருந்தேன்...!!!
மதுரமாய் இனித்தது வாழ்க்கை..!
மங்களகரம் எட்டிப்பார்த்தது வாசலில்...!
மகன்களின் கரிசனை விளங்கி
மதிகொண்ட பெற்றோரின் தெரிவாகி
மதிற்பிற்குரிய இருப்பிடமாகிப்போனேன்..!
அநாதரவற்று போன நானும்
அடைக்கலமற்ற அவர்களுமாய்
ஆனந்தமாய் கழிகின்றது பொழுது...!!!
ஆடுகளும் தங்கித்தான் போகின்றன..!!
தள்ளாடித் தள்ளாடி
தன்னந்தனிமையில்
தவித்து வாழ்வினை வெறுத்து வரும்
தனித்தவர்கள் தயங்காமல்
தங்கி உயிர் நீங்கியும் போவதுண்டு...!!
இல்லங்களை வரிசையாய் கட்டி
இருப்பதற்கு ஒன்று கூட
இல்லாமல் போனதற்கு
இயன்றவரை இதைப்போன்று
இன்னும் பல கட்டியிருந்தால்
இல்லாதோர் இன்பமாய்
இருந்திருப்பார்களே...
இங்கிருந்து முணு முணுக்கின்றனர்
இப்போதைக்கு ஒன்றும் இல்லாதோர்...!
இரத்தத்தால் ஒன்று பட்டு
இரு மனங்களால் வேறுபட்டு
இரண்டகம் புரிந்திடும்
இன்றைய மகன்களும் - அச்சம் மடம் எனும்
இலக்கிய நாற்குணங்களும்
இல்லாமல் போன நவீன மருமக்களும்
இதே வழியில் நாளை என்னை நாடி வரலாம்...!
இன்முகத்துடன் வரவேற்கின்றேன் நான்..
இப்படிக்கு மகிழ்வோடு
இலுப்பையடிச்சந்தி "மடம்"
அரசி நிலவன்
வரிகளில் உள்ள வலிகள் புரிகிறது...
ReplyDeleteநன்றி சகோதரனே...
Deleteமுதலில் என் அன்புப் பூங்கொத்தை பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்..
ReplyDeleteஅழகிய ஆக்கம்..
சொற்செறிவு உங்களிடம் மிகவும் ஆழம்..
வார்த்தைகள் வந்து விழுகின்றன அதுவும் எளிமையாக...
தனியே விடப்பட்ட முதியவர்கள் நிலை அவர்களின் உணர்வு பற்றியும் .கூறி..
இன்றைக்கு வறட்டு நிலமாகிப்போன மகன்கள் மருமக்கள் பற்றியம்
மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..
அருமை அருமை...
ஏற்றுக்கொண்டேன் அன்புப்பூங்கொத்தினை....மிக்க மிக்க நன்றி அண்ணா உங்கள் பாராட்டிற்கும் அன்பிற்கும்...
Delete