போதி மரத்தில் கீழ் பெற்ற ஞானத்தை
போதித்து திரிந்த புத்தரின் இலட்சியம்
புதைக்கப்பட்டு புற்களும் முளைத்தாயிற்று...!!
புத்தர் தோற்றுத்தான் போய்விட்டார்..!
புத்த வாரிசுகளுக்கே புரியாமல் போன
புத்த ஞானம் புரிந்திடுமா பாகிஸ்தானியருக்கும்..
புதிய உயிர்ப்பலிக்களம் சிரிய தேசத்திற்கும்....
ஒளியிழந்த ஈழத்தின் மர நிழல்களில்
ஒய்யாரமாய் சயனத்திலும்
புத்த பகவான் தியானத்தில்....!!
புரிகின்றதா புத்தா....??
புது வரலாறு படைக்கின்றார்கள் - உன்
புதல்வர்கள் உன்னை சான்றாக வைத்து..
ஒருவேளை மாண்டு போன உறவுகளின்
ஒருமித்த சாபக்கேட்டினை உன்னை கொண்டு
ஒழித்து கட்டுகின்றார்களோ???
போகும் வழியில் தடக்கி விழும் இடமெல்லாம்
போதி மரத்தைப்போன்று எம் தேசத்தின்
போர்க்குற்றமும் தினம் அதிகரித்தவாறே...
போயா தினத்தில் வெண் கமலம் காவி வரும் உயர்திரு
போர்க்குற்றவாளி வாரிசிடம் மனு ஒன்று கொடுத்திட
போதிமரத்து பேரொளிக்கு தைரியம் உண்டோ??
கண்ணை மூடி தியானிக்கும் புத்தரே...!!
கண் திறந்து வாய் பேசினால் உனக்கும்
அந்தோ தமிழர்களின் நிலை தான்...!!!
அரச மரத்தின் அடியில் புதையுண்டு
காணாமல் போனோர் பட்டியலில்
இணைந்திட்டாலும் உன்னை தேடி வர
மனித உரிமை ஆணையத்திற்கும்
உரிமை இல்லாதொழிக்கப்படும்...!!!
ஆக....
கெளதம புத்தர் அவர்களே....!
உங்கள் ஞானம் தோற்று..,
எங்கள் மானம் பங்கப்பட்டு...,
உயிர்கள் தானம் ஆக்கப்பட்ட
மனிதாபிமானம் அற்றுப்போன
கொலைக்கள தேசத்தில்
கெளரவ புத்தருக்கென்ன வேலை..??
ஞானம் "மானம்" இழந்து
நடு வீதியில் நிர்வாணமாய்
நெடு நாளாய் கிடக்கின்றது...!
மானம் காக்க துணிவில்லை..!
நாணம் கொண்டு உறக்கத்தில்
வானம் நோக்கியபடி புத்தன்...,
நாதி அற்ற இனத்தின் மண்ணின்
போதி மர நிழல்களில் ஒளிந்தபடி....
அரசி நிலவன்
புத்தனின் பெயர்சொல்லி
ReplyDeleteசித்தம் கலங்கி
பித்தர்கள் ஆடும் ஆட்டம்
கொத்தாக ஒழியும் நாள் ...
புத்தனே உன்னை
சிந்தையில் வைப்போம்...