Search This Blog

Tuesday, 10 December 2013

தடம் தேடிப் பார்க்கின்றேன்....!


எனக்கென்று ஒரு ஜீவன் துடிக்கின்றது
என்றால் அது நீ மட்டுமே...!

எனக்காய் துடிப்பாய் மூச்சாய் இருப்பாய்..! 
நிழலாய் உயிராய் அன்பாய் தொடர்வாய்..! 
உண்மையின்  உருவமாய் தெய்வமாய் தெரிவாய்..! 

உயிர் தந்தவளே ..!
உதிரம் ஈந்தவளே..! - ஈடு 
இணையில்லா அன்னையே...!
உன்னருகே நான் இருந்தால் 
உலகமும் என் கையில்....!

விலகி போன உன்னால் 
விட்டு விட்டு போகின்றது மூச்சும்...!

தேவதை உன்னைக்காணாது  
தேடுகின்ற விழிகள் தோற்றுப்போய்  
தேம்பி தேம்பி அழுகின்றன...!

பரிவில் மகுடம் சூட்டியவளே  - உன் 
பிரிவில் விழி நீர் முட்டியிவள் 
நெஞ்சம் வெடித்து குமுறுகின்றாள்....!!!

கடிந்து கொண்ட கணங்கள் 
மடிந்து போகாமல் இதயக்கூட்டில் 
உயிர் வாழ்ந்து உதைக்கின்றன உள்ளமதை...

விடிந்திடாத இரவான பொழுதில் 
விழி திறந்து கிடக்கின்றேன்..! 
வழிந்தோடும் கண்ணீரிலும் 
வந்து தாலாட்டிப்போகின்றாய்....!!!

கடல் கடந்து பயணித்து - நீ 
கரை சேர்வதற்கிடையில் 
கடல் மட்டம் உயர்கின்றது - என் 
கண்ணீர் துளிகளால்....!  

தள்ளாடி வந்திங்கு 
தரை மேல் சாய்ந்து விட்டேன்...!
தடக்கி விழும் இடமெல்லாம் 
தாயே உன் விம்பமடி...!
தடவிப்பார்த்து உன் 
தடம் தேடிக்கொள்கின்றேன்....!  

உனக்குள் இன்னமும் மூழ்கி
உறைந்து கிடக்கின்றேன்...!
கருவறை இன்னும் எனக்காய்
கனிந்து நிற்கும் பிறந்த வீடுதான்...!

உருகி நான் ஒளிந்து கொண்டு
உயிர் பெற்று திரும்பிக்கொள்ளும்
உந்தன் அன்பு மடி - இன்று
உலகின் ஒரு மூலையில்
தனித்திருக்க இங்கு நான்
தவித்திருக்கின்றேன்...!

நிழலாடும் உன் 
நினைவுகளை 
நிறுத்தி வைத்து - மீண்டும் 
நினைக்கின்றேன்....!

இணையம் காவி வரும் உன்
இன்ப முகத்தினை காண்பதற்கே
இமை மூடாத விழிகள் தாங்கி
இரவெல்லாம் காத்திருப்பேன்...!

ஆடை போர்த்தி 
ஆனந்தம் கொள்கின்றேன்...!
ஆராரோ பாடி 
ஆற்றுப்படுத்துகின்றது - உன்  
ஆடை கூட.... 
ஆனாலும் 
இழுத்து போகின்றது உன் நினைவுகள் 
இதயம் தடுமாறுகின்றது....
இடம் மாறி போனதாலோ...?

புலம்பெயர்ந்து வந்திங்கு 
புனித அன்னையவளின் அன்பினை இதயத்தினுள் 
புதைத்து நெஞ்சம் ஏங்கித்தவிப்பதிலும்
புதையுண்டு போகலாம் ஈழத்தில்....!




அரசி நிலவன் 

Wednesday, 4 December 2013

வெறுமை....!!!


வெள்ளி ஒடமொன்று வானக்கடலை கடக்க,,,
வெண்மேக கூட்டங்கள் தாய் வீடு செல்ல,,,

இதமான இளங்காற்றுக்கு,,,, 
இளஞ்சிவப்பு ரோஜா செடி.. 
இடுப்பை வளைக்க,, 

கருத்தில்லா கவி நான் பாட...
கண்ணுறங்காமல் நீ கேட்டிருக்க,,,

புதியதோர் உலகத்திற்கு 
புட்பக விமானத்தில் நாம் பறக்க ,,,,,

கடவுள் வந்திருந்தால் கூட,
கவனிக்க முடியாதவர்களாய்..

மிக்க வேலைப்பளு...!!
மிதமான ஒரு செருக்கு...!!!

காதலிலே கரை கண்டதாய்,
காவியத்து நாயகர்களாய்...

அர்த்தமில்லாத நினைப்புகள்,,,
தொடர்பில்லாத கனவுகள்,,,

உணராத பலவற்றை - இன்று 
உணர்த்துகின்றது உன் பிரிவு....! 

வெண்ணிலா இன்று வானக்கடலிலே,,,தத்தளிப்பதாய் 
வெறுமையாய் ஒரு காட்சி... 

என்றும் போல,, 
எல்லாமே ஒன்றாயிருக்க,,

எனக்கு மட்டும் ஏன் வெறுமையாய்,,,
என் இதயம் வெறுமையானதாலா..??? 



அரசி நிலவன் 


" இதயம் வெறுமையானதாலா? " என்ற தலைப்பில் எழுதிய எனது கவிதையின் கன்னிப்பயணத்தில் இடம்பெற்ற ஒரு கன்னிக்கவிதை தான் இது. இக்கவிதைக்கு ஐந்து வயது ஆகும் இவ்வேளையில்...உலக தமிழ் இணைய வானொலியின் கவிதையும் கானமும் நிகழ்ச்சியின் " வெறுமை " தலைப்பிற்காக மீண்டும் இன்று பயணிக்கின்றது.. 

Tuesday, 3 December 2013

அக்கினி வளர்த்து
அருந்ததி பார்த்து
அம்மி மிதித்து
அடி எடுத்து வைக்கும்
வாழ்வது துலங்கிடும்....
அக்கினி சாட்சியாய்
இரு மனம் ஒரு மனம்
ஆகிப்போகும் திருமணம்
ஆயிரம் காலம் வாழும் என்றால்....
ஆனந்த புரத்தில் பற்றி எரிந்த
அக்கினி குண்டுகளால் பொசுங்கி
அருமந்த உயிர்கள் துடி துடிக்க
படுகொலையானதுக்கும்
பதறி துடித்து சாட்சிக்கு வருமா??
அக்கினி...?

அன்றில் எய்தவர்களை
ஆயிரம் காலம் வாழ வைக்குமா..???

தகிக்கும் அக்கினிக்கு
தரம் தெரிவதில்லை.....
எரியும் எரிபொருளாக்கி
எரிந்து தணியும்.....!!!
வேண்டியது வேண்டாதது
நல்லது கேட்டது நடுத்தரமானது
பிரித்து பார்த்து பேதம் காட்டாமல்
எரித்து தள்ளி சாம்பலாக்கி போகும்....!!!

சுட்டெரிக்கும் சடுதியாய்
பட்டெரிந்து சாம்பலாகி
விட்டெரிந்து போகும்
அக்கினிக்கு நிகர் அக்கினியே...!!!


சொத்து...!!!



செத்து மடிந்தும் உலவும்
பித்து பிடித்த வாழ்வதில் - உள்ளம்
குத்துப்பட்டுக் குதறுப்பட்டு தளர்ந்தாலும்
பூங்கொத்து போல் மலர்ந்தது
பெத்து எடுத்த கண்மணிகள்
முத்துக் கொட்ட சிரித்த போதினிலே...

பத்து உடன் பதினைந்தாய் நிலையில்லா
சொத்து யாவும் போயினும் ஒளி வீசும்
முத்துக்கள் ஆகி வந்த என்
வித்துக்கள் என்றும் நிலையான
சொத்துக்கள் எனக்கு...!!!


அலையில்லா கடல் உண்டோ
தலையில்லா மனிதருண்டோ??
துன்பம் இல்லா வாழ்வுண்டோ...??
இன்பம் இல்லா குழந்தையுண்டோ..??
அள்ளி எடுத்து பருகும் அமுதசுரபிகள்
துள்ளி வரும் பாதம் முகர்ந்து என் வலிகளை
தள்ளி வைக்கின்றேன் தொலை தூரத்தில்...

கொஞ்சி பேசும் பிஞ்சு மொழி
விஞ்சி நிற்கின்றது விம்மல்களைதாண்டி....
வலிகள் பிரசவித்த கண்ணீரோடு
வசந்தங்களை கொட்டும் மழலைகளை
வாரி அணைத்திட அரும்பும் ஆனந்த கண்ணீரும்
மாரி மழையாகி சொத்தாகி போனது...!


செந்தாமரையின் மலர்ச்சி கொண்டு
ரோஜா இதழின் மென்மை கொண்டு
நடை பயிலும் மலர்த்தோட்டங்கள்
தடை இன்றி சிரிக்கும் வரை வாட்டம்
காண்பேனோ...??


மாதுளம் முத்து பற்கள் கொண்டு மெல்ல
நறுக்கி பதம் பார்க்கும் இன்ப வலி தந்து
முகம் மூடி ரசிக்கும் கிளியே...!
கண்ணீர் கொண்டால் கண் பொத்தி
விளையாடும் மான் குட்டியே...!
எந்தன் குயில்களின் மழலை இசை இன்றி
சிறப்படைவதில்லை எனக்கான கவிதையும் கானமும்..


கோடி என்ன கொட்டி கொடுத்தாலும்
கொஞ்சிப்பேசும் வண்ண குஞ்சுகளுக்கு ஈடாகுமோ???
சொத்தான என் முத்துக்களை விட
சொத்து என்று உளதோ இவ்வுலகில்...???



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சொத்து " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/





Monday, 2 December 2013

பூவிதழ்...!!!


தேன் கொண்ட மலர் ஒன்றின்
தேவாமிர்தம் சுவைக்க நாடி வந்த
தேனீயின் தொடுகையால் வாடி விழுந்த
தேனிதழின் மென்மையிலும் மென்மையாம்
தேடி வந்த தேவதையின் செவ்விதழ்...!!


பூவின் வாசம் நுகர்ந்த செவ்விதழ்
பூவிதழின் வன்மையால் வாடிப்போனது...!
பூவிதழ் புதியதாய் நாணி நின்றது....!

மென்மையின் தன்மையில் வன்மை பெற்ற
மெல்லிய பூவிதழ், மெல்லிடையாளின்
மென்மையில் தொன்மை இழந்தது...!


சின்னத்தேனீகளும் ரீங்காரித்து இகழ்ந்தன....!
சின்னப்பூவின் இதழ்கள் கண்ணீரில் குளித்தன..!
திமிர்கொண்டு நிமிர்ந்த இதழ்கள் தலை குனிந்தன..!
திண்மை பெற்ற மென்மையினை பெண்மையிடம்
தொலைத்து விட்ட பூவிதழ்கள் துவண்டு உதிர்ந்தன...!
தொன்மை இழந்து விட்ட சோகத்தில் மண்ணிலும் புரண்டன...!
தொட்டுச்செல்லும் எறும்புகளிடம் சொல்லிச்சொல்லி அழுதன...!



அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பூவிதழ் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Thursday, 28 November 2013

எழுதல்...!!!


எழுதல் தாமதமாகி போன

விழுதல் காரணமாய் விதைகள்
உழுதல் பெற்று தினம்
அழுதல் நிரந்தரமாகி
வாழுதல் வழக்கமாகிப்போனதன்றோ..?

சூழுதல் பெற்ற அதிகாரத்தால் - கை

நழுவுதல் ஆகிய தாய் மண்ணும்
பழுது பெற்ற போராட்டமுமாய்
புழுவாகிப்போன உயிர் மறவர்கள்..!!
பொழுது பிறக்கும் என்ற நம்பிக்கையிலேயே...
மழுப்பிப்போகும் பொழுதுகள்...!!

முழுதும் இருள் சூழ்ந்து - உதிரம் கொண்டு

மெழுகுதல் பெற்ற மண்ணில் வழுக்கி
வழுவுதல்ஆகிப்போன எம்மினத்து வாழ்வு..
எழுந்து கொள்ளட்டும்...!!!
தழுவிப்போன மறவர்களின் மூச்சுக்காற்றினை
நுகர்ந்து.....

கழுவிப்போன உதிரங்களை உரமாக்கி

உழுதிடுவோம் எதிரிகளின் நம்பிக்கையினை
எழுந்து விழுந்த நாம் பழுதாகிடாமல்
விழுந்து மீண்டு எழுந்திடுவோம்...!!!



அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எழுதல் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Wednesday, 27 November 2013

வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும் வீர மறவர்களே..!!! 






தமிழீழத்துக்காக,

தமிழினத்துக்காக,
துடித்து களம் மீதேறி
தியாக வேள்வியிலே
நீறான திரவியங்களே..!!

பஞ்சணையை தூக்கி எறிந்து

ஏவுகணையை தோள் மீதேற்றி
உயிரை விலை கொடுத்த
உத்தம புத்திரர்களே..!!!



படி தாண்டா கண்மணிகள்

வெடி தாங்கி போயினரோ ..!!


காசினியில் இறைகளாய் 
கார்த்திகையில் திருவிழா காணும் 
காஞ்சனத்து முத்துக்களே....!!!

காங்கையாகிப்போகும் உடல்
காவியத்து நாயகர்களை எண்ணி 
காந்தலித்து போகும் நெஞ்சம்...
காந்தளின் காத்திருப்பை கண்ணுற்று 

உதிரங்களால் காவியம் எழுதிப்போனவரே...!!
உயிரோவியமாய் உயர்ந்தவரே...!!
உயிர் கொடுத்து எங்கள் இனப்பயிருக்கு 
உரமாகி உதிரம் பாய்ச்சி நீராகி தியாகமானவரே...!!

கந்தக நெடி வாசனையோடு..

கல்லும் முள்ளும் கடந்து..
நீவிர் மீட்டெடுத்த - அங்குல
நிலம்  கூட இன்று எம்மிடமில்லை - எம்
நிம்மதிக்காக,,
நித்திரை தொலைத்து..,
நீங்கள் சிந்திய குருதி...,
உங்கள் வித்துடல்களை,,  தானும்
பொத்தி வைக்க முடியா பாவிகள் நாம்
பொல்லாத சிங்களத்தோடு போராடாது
கார்த்திகை மாதத்தில் மட்டும் குரல் கொடுக்கும்
கோழைகள் எம்மை பார்த்து  ஏளனமாய் சிரிக்காதீர்..!!!
வெட்கி தலை குனிந்து அஞ்சலிக்கின்றோம்....!!!



வீறு கொண்டெழுந்து,,

வீர மரணத்தில் வீழ்ந்து,,
வித்தாகி,,
விருட்சமாகி ,,
வீரத்தோடு நிமிர்ந்து நிற்கும்
வீர மறவர்களே..
வீர வணக்கங்கள் உங்களுக்கு...!!!


அரசி நிலவன்



அரும்பதங்கள்

++++++++++++

காசினி - அகிலம்

காஞ்சனம் - தங்கம்
காங்கை - வெம்மை
காந்தல் - எரிந்து
காந்தள் - கார்த்திகை மலர் 

மலரும் தமிழீழமதில்,, மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!




கருவறையில் - தமிழீழ
கனவோடு
கருத்தரித்து,,
களமாடி,,
கல்லறையில் துயில் கொள்ளும்
கண்மணிகளே....!!!



புயலாய் புறப்பட்ட - வெஞ்சின

புலி மறவர்களே...!!!

மன்னவன் "கரிகாலன்" பாதையில்,

மனவுறுதியுடன் ஏகி,,
மண்ணுக்காய் வித்தாகி
மண்ணோடு சங்கமமாகி,,
மனக்கனவோடு உறங்கும்..
மரகதங்களே...!!!

சிந்திய குருதி காய்ந்தாலும்,,

சீறிய சன்னங்களின் ஒலி மறைந்தாலும்,,
உம் கல்லறைகள் விறாண்டப்பட்டாலும்,,
கல்லான எம் கடவுள் உயிராவான் -எம்
கனவு நனவாகும்...!!!



கல்லறை பூக்களே - நீவிர்

துயில் நீங்கி எழும் காலம்
வெகு தூரமதில் இல்லை...!!
தங்கப்பதுமைகளே கண்திறந்து பாரீர்...!!
தமிழீழ வேட்கையோடு - உங்கள்
தமிழீழ மக்கள் நாம் என்றும் களத்தில்..
மலரும் தமிழீழமதில்
மலர்ந்திடுவீர் கார்த்திகை பூக்களாய்.....!!!

 - அரசி நிலவன் -


Tuesday, 26 November 2013

கார்த்திகை தீபங்களே...!!!

தலைவன் சொல்லை செயலில் நிறுத்தி,
தரணி போற்ற, மாவீரரான கண்மணிகளே...!

சொப்பனத்திலும் தமிழீழம் காணும்,

சொல்லின் வேந்தர்களே...!

களமாடி கனிந்து சென்றிட்ட

கல்லறை தெய்வங்களே...!

சாவின் பின்னும் வாழ்வினை தொடருகின்ற 

சாகா வரம் பெற்ற சரித்திர நாயகர்களே...!



இருண்ட எம் தேசத்தின் மேல், 
விளக்கேற்றி சென்ற கார்த்திகை தீபங்களே - எங்கள்
இதயங்களில் கிளை பரப்பி நிற்கும் பெரு விருட்சங்களே..! 
மண்ணில் விழுந்த வித்துக்களே..!
வரலாறு செப்பிடும் இலட்சிய புருஷர்களே....!


கனவுகள் மெய்ப்பட..காற்றோடு கலந்து விட்ட 
காவிய நாயகர்களே...!
கார்த்திகை நாளில் ஒரு சத்தியம் பூணுகின்றோம்... 
உங்கள் சுவடுகளை தொடர்ந்தபடி,
உங்கள் இலட்சிய நெருப்பாய் நாமும் கொழுந்து விட்டு எரிவோம்....!!!

எழுந்து வருக வருகவே...!!!


புதைந்து போகும் நாட்டில் இருந்து
புதுப்பொலிவாய் எழுந்திட வைத்த
புன்னகை போர் வீரனே....!!!

புழுதி படர்ந்து கிடக்கும்
புதைந்து போன ஆயுதங்கள்...
புழுங்கி சாகின்றன....!!

புல்லரித்து போகும்
புயல் வேக வீரத்தினை
புதைத்து - தாமும்
புதைந்து கொண்டிருக்கும்
புலி வீரர்களின் கதை தெரியலையோ...??
புதிதாய் பிறந்திட காலம் - இன்னும்
புலரலையோ...??

புனித மேனியரின்
புகலிடங்கள்
புரட்டிய சேதியும் - இராணுவப்
புலனாய்வு சக்திகள்
புனித மண்ணில் எங்கள் வீரம்
புதைத்து போகும் கொடுமையும்
புரிந்திடவில்லையோ...??


புனிதமாய் வாழ்ந்திடும்
புயல் வீரனே....!!!

புயலாய் செயலாய் எழுந்திட
புது இலக்கணம் எழுதிட
புறப்பட்டு வருகவே....!!!


எனக்கென்ன என்று பாராமல்
எழுந்த வீரம் அல்லவோ...??
எழாமல் போயிருந்தால் - தமிழர்களின்
என்புக்கூடு நூதன சாலைகளில்
என்றோ வாழ்ந்த இனம் என்று
எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்...!
 
எவனுக்கும் இல்லாத துணிச்சல்
எங்கள் தலைவனுக்கு என்று
எழுதி வைக்கப்பட்டது....!!

எதிரியின் சுவடுகள் தொடர்ந்து
எழுந்து நிமிர்ந்து அவனை விழுத்திய
எம்மினத்தின் விடிவெள்ளி...!!!

எங்கே என்று தெரியாமல்
ஏங்கித்தவிக்கின்றோம்....!
எழுந்து நின்ற வீரம் தூரத்தில்
எழுச்சி பெறக்காத்திருக்கின்றது...!!


எய்யாமையால்
எகத்தாளம் புரியும்
எதிரி சூழ் துரோகிகளை
எற்றித்தள்ள
எழுநாவில் எரிந்து
எழத்துடிக்கும்
எம்மினத்து எமரங்கள்
எய்தல் அடைந்திட
எம்மினத்து எல்லி
எங்கள் கரிகாலன் - அகிலமதில்
எழுந்த நன்னாளில்
எவ்வம் நீங்கி வாழ்த்துகின்றோம்
எறுழ் கொண்ட சிகரமே..!
எழுந்து வருக வருகவே...!!!

என்றென்றும் வாழ்க வாழ்க
எட்டுத்திக்கும் பட்டுத்தெறித்து
எதிரொலிக்கும் நாமம் வளர்க வளர்க....



அரசி நிலவன்


அரும்பதங்கள்
***************
எய்யாமை - அறியாமை
எற்றி - உதைத்து
எழுநா - நெருப்பு
எமரங்கள் - எங்களைச்சேர்ந்தவர்கள்
எய்தல் - நெருங்குதல்
எல்லி - சூரியன்
எறுழ் - வலிமை  

Monday, 25 November 2013

உணர்வு....!!!




உடைக்கப்பட்ட உறைவிடங்கள்,
உலுப்பப்பட்ட உறவுகள் தாண்டி 
உயிர் பெற்று விருட்சமாகிய விதைகளாய் 
உணர்வுகள் எங்கும் வானாளாவி பரந்தபடி... 

பலாத்காரத்தினால் யாரும் இங்கே 
படைக்கவில்லை உணர்வுகளை எழுத்துக்களாக....
மிரட்டி யாரும் அஞ்சலிக்கவில்லை...! 
மின்காந்த அலைகளாய் ஊடுருவிப்பாயும் 
உணர்வலைகளால் உதிரம் கொதித்து 
உடல் சிலிர்க்கும்.. கண்ணீர் பெருக்கெடுக்கும்..! 

பல்கலைக்கழகம் விடுதலையில் மூடினால்  
உணர்வுகளும் விடுதலை பெற்றிடுமா...?
சுவரொட்டிகள் ஓட்டினால் தான் 
சுடராகி போனவர்களை நினைக்க முடியுமா??

முகப்புத்தகம் எங்கும் மாவீரர்களின் 
முகங்கள் அலங்கரிக்கும்..!
மூலை முடுக்கெல்லாம் அவர்கள் நாமம் 
மூச்சு விட்டு உயிர் வாழ்கின்றது....!!! 


துயிலும் இல்லங்கள் ஆயிரக்கணக்கில்..... 
துளிர் விடுகின்றன ஒவ்வொரு உள்ளங்களிலும்..! 
புல்டோசர்கள் ஏறி வருபவர்கள் கல்லறைகளை 
புரட்டி போட முடியாமல் விழிக்கின்றார்கள்....!!!

இதயங்கள் மெளனித்து அஞ்சலிப்பதையும் 
இணையற்ற எம் தியாக செம்மல்களின் அசைவினை 
உள்ளத்தால் உணர்ந்து பெருகிடும் கண்ணீர் பொழிந்து 
உணர்வாலே உருகி உருகி செலுத்தும் அஞ்சலிகளை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??

உழுது போய் எஞ்சியது கல் மட்டுமே....
உள்ளத்தில் நிலைத்து நிற்கும் உயிர்களை 
உழுது மண்ணோடு கலந்திடத்தான் முடியுமா...??


உணர்வுகளால் சிகரமாய்.. 
உருவங்களில் தெய்வங்களாய்... 
உயர்ந்து நிற்கும் உன்னத மனிதர்கள் 
உருக்குலைந்து போவதில்லை.....!
உணர்வாலே உதிரம் சிந்தி 
உயிர் ஈந்த  உத்தமர்களே.....!
உம்மை நெருங்கிட யாரால் முடியும்...???

உணர்வின் தீயில் எரிந்தபடி.....
உமது சுவடுகளின் திசை தேடி...
உழன்றபடி உணர்வுத்தமிழ் நெஞ்சங்கள்...!


அரசி நிலவன் 




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உணர்வு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Thursday, 21 November 2013

அக்கினி குஞ்சுகள்.!!!



புனலிலும் அனலாய் கனன்றிடும்

புனித மேனியர்...!!!
புயலாய் காற்றிலும் சுழன்றிடும்
புதுக்காவிய நாயகர்கள்...!!! 

தேகம் மீதிலே வெடிகளைச்சுமந்து - தமிழீழ

தேசத்திற்காய் வெடித்துப்போகின்ற தேசப்புயல்கள்....!!!



வெஞ்சின கரு வேங்கைகளே...!!!

வெற்றியோடு திரும்பும் உங்கள் நாமம் மட்டுமே...

வீழ்ச்சி கண்ட எம் தமிழின மானத்தை

எழுச்சி கொள்ள வைத்திட…
வீரத்தலைவனின் வழிகாட்டலில் - நெருப்பாய்
எழுந்திட்ட எம் உயிர் அம்புகள்...!!!



காலம் வைத்து விட்டு சென்ற பணியினைத்தொடர

காலனுக்கே சவால் விட்டு – தம் மரணத்திற்கு தாமே
கால நேர இடம் குறித்து,,,
காவியம் படைக்கும் சரித்திர நாயகர்கள்...!!!

அழுத்த மனதுடனும்,,

அமுக்க உடலோடும்,,
அன்பாய் கதை பேசி
அரவணைத்து - எம்மை
அழ வைத்து அலை அலையாய்
அணி திரண்டு செல்லும் கரு முத்துக்கள்...!!!


புன்னகைத்து கையசைத்து சாவினைத்தேடிப்போகும்
புதிய இலக்கண வீர மறவர்கள்…!!!

நெருப்பின் வயிற்றிலே கருத்தரித்து,,

நெருப்பாகி ,காற்றோடு கலந்திடும் அக்கினி குஞ்சுகள்..!!!

காவிய நாயகர்களே....!!!

காற்றிலே உயிராய் கலந்திருக்கும் உங்கள் மூச்சுக்கள் மீதும்
காலம் மீதும் சத்தியம் - நாம் ””வெற்றி ””
காண்போம் உறுதி....!!!

வீரவணக்கங்களுடன்

 “அரசி நிலவன்”





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அக்கினி " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Wednesday, 20 November 2013

சிகரம்...!!!


அனல் பொறிகளால் செய்த தேகம் கொண்டு
கனல் பறக்கும் விழிகள் தாங்கி, செந்தணலாய்
சமர் புரிந்து சிந்திய ஒவ்வொரு துளி குருதியும்
பல்லாயிரம் சுதந்திர தாக வேட்கையுடன் மண்ணோடு
திரண்டு தாயக உறுதி பூண்டு இன்னும் காத்திருக்கின்றது....!!!

சிலிர்த்து பூத்துக்குலுங்கும் செங்காந்தள்
சிணுங்கலுடன் உங்கள் வழி நோக்கி
காத்திருக்கின்றது கண்ணீருடன்...
காவிய நாயகர்களின் மூச்சு காற்றைச்சுவாசித்து
காலத்தின் வரலாற்றில் தாமும் இடம் பிடிப்பதற்காய்.....


கண் திறந்து பாரீர்
கனன்று விம்மும் இதயங்கள்
அமைதியாய் உங்கள் நாமத்தினை உச்சரித்து
அழைக்கும் ஒலி கேட்கலையோ....??
ஆரவாரமின்றி நெஞ்சறையில் பூட்டி
ஆர்ப்பரிக்கும் துன்பலைகளை அடக்கி
இதயங்களில் உயர்ந்த  சிகரங்களாய் கட்டி வைத்து
இரத்த நாளங்கள் புடைக்க அர்ச்சிக்கும் மெளனத்தின்
ஒலி உணரலையோ....???

செங்குருதியால் சிவந்த மேனிகள் உங்களின்
செஞ்சோற்றுக்கடன் தீர்ப்போமா...???


தீயும் நெருங்கிட தயங்கும்
தீராத சுதந்திர தாகம் கொண்ட
தீரர்கள் உங்களின்
தீச்சுவாலை விழிகளை
காணத்தவமாய் தவம் புரிகின்றோம்...!!!
கார்த்திகையில் கோலம் இட்டு
காந்தளை கைகளில் ஏந்திக்
காத்திருக்கின்றோம்.....!!!


தமிழ் தேசமதின் சிகரங்களாக
தமிழ் நெஞ்சங்களில் வாழும்
தங்கப்பேழைகள் நீங்கள்
தரணியில் உயர்ந்து நின்ற
நினைவாலயங்கள் தகர்க்கப்பட்டாலும்
நிலைத்து நிற்பீர்கள் என்றென்றும்
சிகரங்களாக எம் இதயங்களில்....

சிலிர்த்து வரலாறு சொல்லுவோம்...
சிகரத்தின் உச்சியில் வைத்து பூசிப்போம்..!!



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சிகரம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள்..!!!


நினைவு கூறும் நிலையற்ற மனிதர்களாய்
நினைவாலயங்கள் தேடி அலைகின்றோம்...!!!
நிர்க்கதியாய் போனது நீங்கள் அல்ல....
நிலை பெற்று சென்ற மாணிக்கங்கள் - உங்கள்
நினைவில் மட்டும் தான் நாம்.....!!!

நீவிர் விட்டுச்சென்ற சுவடுகள்
நிலை தடுமாறும் நிலையில்.....
நின்று வேடிக்கை பார்த்து கார்த்திகையில்
நினைவு கூறுகின்றோம்.....!!!
நிலையற்ற மனிதர்களாய்....
நிலமற்று நிர்க்கதியாகி நின்று....


நிலம் கொடுத்தீர் உயிர் தந்து..
நிலமிழந்தோம் உம்
நினைவாலயங்களையும் தொலைத்தோம்..!!
நிற்கின்றோம் ஆரம்ப அத்தியாயங்களில்....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலையில்லா தேசத்திலிருந்து....
நிலம் நீங்கி உங்கள்
நினைவுகளை சுமந்து....

நிலம் மீட்க
நிலை பெற்று சென்ற சிகரங்களே.....!!!
நிம்மதியற்று நீங்கள்
நின்று உறங்கும் காட்சி
நிழலாடுகின்றது....!!!
நினைவு கூறுகின்றோம்....!!!
நிலை கெட்ட எம்
நிலை எண்ணித் தலை குனிந்து
நினைவு கூறுகின்றோம்...!!


அரசி நிலவன்

Sunday, 17 November 2013

தொலைந்த முகவரி தொடர்பில்.....



அன்றைய நட்பின் சுவடுகளை தேடி 
அறிந்த உள்ளம் வானமேறி வந்து 
கண்ணில் வைத்துப்போனது....!!!

நெதர்லாந்து தேசத்தில் இருந்து 
நெருங்கி வந்த நட்பால் 
நெகிழ்ந்து போன நெஞ்சம்...!!!

தொலைக்கப்பட்ட உயிரின் 
தொன்மையான நட்பாய்...
தொடர்கின்ற நிகழ்கால பந்தம்...!!!

நட்பில் பிறந்த பந்தமது 
நன் மதிப்பாலே சொந்தமாகி...
முக நூலினால் மீண்டும் 
முகவரி அறிந்து கொண்டதாம்...!

பண்டைய கதைகள் பேசி
பரிமாறப்பட்ட செய்திகளாய்
பழகிய நினைவுகள் 
உயிர் பெறுகின்றன...!!!

அன்பு வேண்டுகோளினை ஏற்று...
அவசரமான உலகில்
தட்டுப்பாடாய் போன காலத்தினை ஒதுக்கி
தனிவழியே காத்திருந்து சந்தித்து திரும்பிய 
உள்ளம் கொண்டோரினை 
காண்பது அரிதன்றோ...?

பிரியாவிடை பெற்றுச்சென்ற பெற்றவரின் 
பிரியமான நட்பாய்...
பிரிந்து போகாமல் இணைந்து கொண்ட 
தொலை தூரத்து சொந்தமே...!!!
தொலைந்து போகாமல் என்றும் 
தொடர வேண்டும்....!!!

அகிலம் நீங்கிப்போன 
அன்பு ஆத்மா நிம்மதியடையும்...!!!
அருகில்லாத நேரம் 
அரவணைப்பாய் , அன்பாய் ,
ஆலோசனையாய் , ஆதரவாய் 
அடைந்திட்ட சொந்தம் இறுதி வரை 
அன்போடு பயணிக்கட்டும்.....!!!


அரசி நிலவன்
   

Saturday, 16 November 2013

அரவணைப்பு....!!!


என் சிரிப்பின் கன்னக்குழியாய்..
என் கண்ணீரின் விம்பமாய்...
என் வெற்றிகளின் படிகளாய்....
என் தோல்விகளின் எழுதலாய்....
எல்லாமாய் எந்தையாய் தாயாய்...

உனக்காய் நீ வாழ்ந்ததில்லை...
உயிர் கொடுத்து உதிரம் கொடுத்தவள் அன்னை என
உலகம் போற்றும் அன்னைகளிலிருந்து
உயர்ந்து நிற்கின்றாய் பல படிகளால்....!!!
உயிரான உறவொன்று நீங்கிப்போயினும்
உயிர் கொடுத்து உருக்குலைந்தாய் எமக்காக...


குறை ஒன்று உரைப்பேனா....?
குடிசையிலும் உன் அன்பால்
குன்றின் மேல் தீபமாய் காத்தவளே...!!

எண்ணி எண்ணி தினம் உவகை கொள்வேன்...!
என் தாயவளின் அன்பு கிடைக்க என்ன பேறு பெற்றேனோ??

கலங்கும் விழி கண்டு
கடுகதியில் விரைந்து
அரவணைக்கும் அன்னை உன்னை
அடுத்த பிறவியிலும் அன்னையாக
அடைய வேண்டும் நான்...!!!


அம்மா என்றழைத்து அரவணைக்கும் ஆறுதலில்
அண்டத்தின் அசைவுகள் அறியாமல் போய் விடுவேன்...
அம்மா நீ இல்லா காலமதை நினைத்தும் பார்க்க முடியவில்லை..
அதற்கு முன்னே நான் இல்லாமல் போக வேண்டும்...
அன்னையின் அரவணைப்பில் அமைதியாய்
அவள் மடி கொண்டு உயிர் நீங்கிப்போயிட வேண்டும்....!!!



அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "அரவணைப்பு " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Wednesday, 13 November 2013

பிரவேசம்...!!!


கல்லில் நார் உரிப்பாக
கழிகின்ற பொழுதுகள்...!!!
கடமைக்கு வாழ்க்கை 

ஆரம்பமே இல்லாத வாழ்வு 
அந்தமாகிட வேண்டும் என்ற துடிப்பு...!

வரவினங்கள் இல்லாத செலவினங்களாக 
அலைக்கழிப்புக்களும் அவமானங்களும்
ஏமாற்றங்களும் ஏய்ப்புக்களுமாக 
எஞ்சிப்போன...
வாழ்க்கைக் கணக்கில் 
மேலதிக பற்றுக்களான 
எதிர்பார்ப்புக்களுக்கு இடமேது...?
எந்த நிலையிலும் எதிர்பார்ப்புக்கள் 
பிரவேசம் செய்யாத நிலை...

விரயமாகிப்போன உழைப்புக்கள்..! 
மதிப்பிழந்து போன தியாகங்கள்...! 
பயனற்றுப்போன அர்ப்பணிப்புக்கள்...!
இழக்கப்பட்ட நன்மதிப்புக்கள்....! 

காலாவதியாகிப்போன கல்வி...!
கடந்து கொண்டிருக்கும் பிரிவுகள்..! 
கல்லாய்ப்போன இதயம்..! 

வலிகளும் ரணங்களுமாய் 
கழியும் நான்காண்டு வாழ்வில்... 

அகிலத்தின் துன்பங்கள் யாவற்றையும் ஒரு சேர 
அடைந்திட்ட ஒரு சாதனை...! 
அலைக்கழிக்கப்பட்ட வாழ்வில் - இனி 
அடி என்று விழுவதற்கு ஏதுமில்லை....!

வழங்கப்பட்ட துன்பங்களை கடந்து 
வலிமையாய் நிமிர்ந்து நிற்கும் 
இந்த நிலைக்கு பிரவேசித்தது 
இலவசமாய் தான்...!!!

துணிந்து நிமிர்ந்து நிலைத்து நிற்பதால் தானோ 
துன்ப நிலை நீளுகின்றதோ...!
விடியல் பிரவேசிக்கும் காலம் தொலைவில் போலும்...!
விடிந்திடும் என்று நம்பிக்கைகள் தான் தொடர்ச்சியாய் 
பிரவேசம் செய்கின்றன மனதில்...!! 

பிரவேசிக்கும் விடியலுக்காய்..
சலிக்காது வழி மேல் விழி வைத்து தினம் 
கோலமிட்டு காத்திருக்கும் வாசல் படியாய் மனம்...!!!

கோபங்கொண்டு ஒரு நாள் மனம் வனவாசம் பிரவேசிக்கலாம்...!!
நம்பிக்கைகளும் நட்டாற்றில் விட்டு நீங்கிப்போயிடலாம்...!!
எங்கெங்கோ கற்பனையில் பிரவேசிக்கின்றது இன்றைய மனம்...!!

எவை கைவிட்டாலும் இன்னொன்றின் பிரவேசம் ஒன்று 
என் வாசலை விட்டு நீங்கிப்போயிடாது  அல்லவா...?
எனை விட்டு செல்லும் உயிரை அழைத்து செல்ல 
மரணத்தின் பிரவேசம் ஒருநாள் என் வாசல் வருமன்றோ...?




அரசி நிலவன் 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பிரவேசம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/