Search This Blog

Tuesday, 10 December 2013

தடம் தேடிப் பார்க்கின்றேன்....!


எனக்கென்று ஒரு ஜீவன் துடிக்கின்றது
என்றால் அது நீ மட்டுமே...!

எனக்காய் துடிப்பாய் மூச்சாய் இருப்பாய்..! 
நிழலாய் உயிராய் அன்பாய் தொடர்வாய்..! 
உண்மையின்  உருவமாய் தெய்வமாய் தெரிவாய்..! 

உயிர் தந்தவளே ..!
உதிரம் ஈந்தவளே..! - ஈடு 
இணையில்லா அன்னையே...!
உன்னருகே நான் இருந்தால் 
உலகமும் என் கையில்....!

விலகி போன உன்னால் 
விட்டு விட்டு போகின்றது மூச்சும்...!

தேவதை உன்னைக்காணாது  
தேடுகின்ற விழிகள் தோற்றுப்போய்  
தேம்பி தேம்பி அழுகின்றன...!

பரிவில் மகுடம் சூட்டியவளே  - உன் 
பிரிவில் விழி நீர் முட்டியிவள் 
நெஞ்சம் வெடித்து குமுறுகின்றாள்....!!!

கடிந்து கொண்ட கணங்கள் 
மடிந்து போகாமல் இதயக்கூட்டில் 
உயிர் வாழ்ந்து உதைக்கின்றன உள்ளமதை...

விடிந்திடாத இரவான பொழுதில் 
விழி திறந்து கிடக்கின்றேன்..! 
வழிந்தோடும் கண்ணீரிலும் 
வந்து தாலாட்டிப்போகின்றாய்....!!!

கடல் கடந்து பயணித்து - நீ 
கரை சேர்வதற்கிடையில் 
கடல் மட்டம் உயர்கின்றது - என் 
கண்ணீர் துளிகளால்....!  

தள்ளாடி வந்திங்கு 
தரை மேல் சாய்ந்து விட்டேன்...!
தடக்கி விழும் இடமெல்லாம் 
தாயே உன் விம்பமடி...!
தடவிப்பார்த்து உன் 
தடம் தேடிக்கொள்கின்றேன்....!  

உனக்குள் இன்னமும் மூழ்கி
உறைந்து கிடக்கின்றேன்...!
கருவறை இன்னும் எனக்காய்
கனிந்து நிற்கும் பிறந்த வீடுதான்...!

உருகி நான் ஒளிந்து கொண்டு
உயிர் பெற்று திரும்பிக்கொள்ளும்
உந்தன் அன்பு மடி - இன்று
உலகின் ஒரு மூலையில்
தனித்திருக்க இங்கு நான்
தவித்திருக்கின்றேன்...!

நிழலாடும் உன் 
நினைவுகளை 
நிறுத்தி வைத்து - மீண்டும் 
நினைக்கின்றேன்....!

இணையம் காவி வரும் உன்
இன்ப முகத்தினை காண்பதற்கே
இமை மூடாத விழிகள் தாங்கி
இரவெல்லாம் காத்திருப்பேன்...!

ஆடை போர்த்தி 
ஆனந்தம் கொள்கின்றேன்...!
ஆராரோ பாடி 
ஆற்றுப்படுத்துகின்றது - உன்  
ஆடை கூட.... 
ஆனாலும் 
இழுத்து போகின்றது உன் நினைவுகள் 
இதயம் தடுமாறுகின்றது....
இடம் மாறி போனதாலோ...?

புலம்பெயர்ந்து வந்திங்கு 
புனித அன்னையவளின் அன்பினை இதயத்தினுள் 
புதைத்து நெஞ்சம் ஏங்கித்தவிப்பதிலும்
புதையுண்டு போகலாம் ஈழத்தில்....!




அரசி நிலவன் 

4 comments:

  1. புலம்பெயர்ந்து வந்திங்கு
    புனித அன்னையவளின் அன்பினை இதயத்தினுள்
    புதைத்து நெஞ்சம் ஏங்கித்தவிப்பதிலும்
    புதையுண்டு போகலாம் ஈழத்தில்....!//

    உணர்வுபூர்வமான அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உயிர் தரித்த இடம் விட்டு
    வேறொரு இடத்தில் ஜீவனம்
    செய்திருத்தலின் மோனம்
    கவிதை முழுதும் தெரிகிறது சகோதரி..
    பெற்ற அன்னையின்
    மடிசேரும் காலம் வருமென்று
    எதிர்நோக்குவோம்.

    ReplyDelete
  3. வணக்கம்
    கடல் கடந்து பயணித்து - நீ
    கரை சேர்வதற்கிடையில்
    கடல் மட்டம் உயர்கின்றது - என்
    கண்ணீர் துளிகளால்....!

    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வரிகள் மிகவும் அருமை... முடிவில் கண்கள் கலங்கின...

    ReplyDelete