Search This Blog

Monday, 21 April 2014

தண்டம்...!!!

அன்னையாய் அரவணைத்து
அமுது ஊட்டி கடமைகள் செய்து 
அரக்க பரக்க விரைகின்றாள்..!
அல்லும் பகலும் உழைக்கின்றாள்..!

இடை நேரம் ஒரு எட்டு எட்டி வந்து பார்த்து 
இமைக்குள் வைத்து என்னைப் பாதுகாக்கின்றாள்...!

இதயம் கனத்துப்போகின்றது - எந்தன் 
இயலாமையினால்... 

கண் கலங்காமல் - அவள் 
கரம் சிவக்காமல் 
கடைசி வரை நான் 
காப்பாற்றுவேன் என்று 
உள்ளம் திறந்து வாக்களித்தேன்..!
உனக்காக வாழுவேன் என்றேன்...!

எனக்காக வாழுகின்றாய் நீ...!
என்னை தூக்கி சுமக்கின்றாய் நீ...!

என்றும் அவளுக்கு  நான் தண்டமாய்...!
எதற்காக இருக்கின்றேனோ??
எந்தன் கால்களை துளைத்துப்போன 
எறிகணை இதயத்தினை துளைக்காமல் 
என்ன தண்டத்திற்கு என்னை விட்டு வைத்ததோ??

அவளின் கண்ணீரையும் உழைத்து சிவக்கும் 
அருமந்த கரங்களையும் காண முடியாதவாறு 
விழிகளையும் பறித்த சிதறல் எதற்காக என்னை
விட்டு வைத்ததோ?

அன்னம் ஊட்டும் அவள் கரங்கள் பற்றி 
தண்டம் போல உனக்கு நான் பாரமாய் 
தவிக்க விடுகின்றேன் என்றால் கண்ணீரை 
அவள் சொரிந்திடுவாள்....!

அதற்காகவே நான் இப்போதெல்லாம் 
அவளிடத்தில் உரைப்பதில்லை தண்டம் என்று 
அவளை வருத்தும் என் இயலாமை என்னை 
அடிக்கடி குறு  குறுக்க வைக்கின்றது....!

அவள் அன்பிற்கு முன்னால் நான் வெறும் தண்டமே..! 
அவளின் எதிர்காலத்திற்கும் நான் ஒரு தண்டமே...!
அன்புள்ளவளுக்கு நான் எதற்கு தண்டமாய்
இறுதி வரை இருக்க வேண்டும்?

இன்று அவளின் கையால் இறுதியாக அமுது உண்டு 
இறுதி முடிவொன்று எடுக்கின்றேன் எனக்கும் - என் 
இதயவளின் தண்டத்திற்குமாக....

No comments:

Post a Comment