முன்பு ஒரு காலத்தில் உலக வரை படத்தில் கூட
முழுமையாக சுட்டிக்காட்டத் தெரியாத தேசம் ஒன்றில்
முடங்கி கிடக்கின்றோம் நாம்...!
முன் பின் தெரியாத மொழியும் மனிதர்களும் கொண்ட தேசத்தின்
முரட்டுப்பிடிக்குள் சிக்கித்தவிக்கின்றோம்...!!!
அங்கம் இழந்தால் என்ன?
அரை உயிர் ஊசல் ஆடினால் என்ன??
அகதியாகி வந்தவனுக்கு
அடிப்படை வசதி இங்கு மறுக்கப்படுவது
அத்தியாவசியமாகி விட்டது...!
யுத்தத்தின் தழும்புகளும் காயங்களும்
உதிரத்தினை வடிக்கின்றன...!
காயப்பட்ட போது வலித்த வலியினை மிஞ்சி
கணப்பொழுதும் ஊடறுக்கும் வலி சொல்லில்
சொல்லி மாளாது...!
இருளும் இடுக்கண்ணும்
இரு கண்களாகி போன நிலையில்
இங்கிருந்து தவிக்கின்றோம்....!
இன்னல் என்ற ஒற்றைப்பதத்தில்
இன்றைய எம் அவல நிலையினை
அடக்கி விட முடியாது...!
சித்தம் கலங்கி நித்தம் வாடும் கொடிய
சிறையில் ஒடுங்கி கிடப்பதிலும்..,
உதிரமும் சீழும் வடியும் அங்கங்கள் தாங்கி
உலகை காணாமல் முடங்கி கிடப்பதிலும்..,
அழுத்தி மூச்சுத்திணறடிக்கும் துன்பங்களுக்குள்
அமிழ்ந்து தினம் தினம் புதைந்து போவதிலும்...,
நெஞ்சம் கிழித்து இதயம் தனை இழுத்து நசுக்கும்
உணர்வை கொடுக்கும் வலியில் துவளுவதிலும்..,
வலிகள் உருகி உதிரமாய் கொட்டும் நிலையாய்
நெருப்பில் நின்று நித்தம் வெந்து துடிப்பதிலும்..,
மடிந்து மண்ணுக்குள் உரமாகிப்போகலாம்...!
மலையான துன்பத்தினை நீங்கிப்போகலாம்..!
மரணத்தை நேசிக்கின்றோம் - நாம்
மரணத்தை நேசிக்கின்றோம்...!
மரணத்தை எங்களுக்கு பிச்சையாக இடுங்கள்
மன்றாடி உங்களை யாசிக்கின்றோம்...!
எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்..!
எண்ணிலடங்கா துன்பங்களும் சேர்ந்து
எம்மோடு மரணிக்கட்டும்..!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!
கனவுகளும் ஆசைகளும் இதயம் நீங்கி நாளாயிற்று...!
கண்களில் கண்ணீரும் வற்றிப் போயிற்று...!
கடலும் அலையும் எம்மை காவு கொண்டிருந்தால்
கனவுகளோடு சேர்ந்து நாமும் சென்றிருப்போம் - இன்று
கண்களும் காதுகளும் மெல்ல உணர்விழக்கின்றன...!
கனக்கும் உள்ளத்தின் பாரம் தாங்க முடியாமல்
கால்களும் துவண்டு போகின்றன...!
காயம் கொண்ட அங்கங்கள் காலாவதியாகின்றன...!
காயமற்ற அவயங்கள் செயலிழக்கின்றன..!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!
கண் திறந்து பாருங்கள் எங்கள் உறவுகளே..!
கடைசியாய் ஒரு தடவை கண் திறந்து பாருங்கள்...!
◆ இந்தோனேசியா கொடுஞ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நமது ஈழத்து உறவுகளின் உண்ணாவிரத விடுதலைப் போராட்டத்திற்காக எழுதப்பட்ட வரிகள்..!
No comments:
Post a Comment