பட்டினி என்பது பழகிய ஒன்று தான்
பசி சுட்டுப்பொசிக்கிய குடலும் உடலும்
பல மாதங்களாய் கவனிப்பாரற்று கிடக்கின்றது...!
பழகிப்போன பசியால் இப்போதெல்லாம்
பட்டினி கிடக்கின்றோம் என்பதே தெரிவதில்லை...!
பரந்து விரிந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில்
பதுக்கி வைத்திருக்கும் அகதிகளில் நாமும் ஒன்றாய்..
வருடக்கணக்காய் மனப்பிரமை பிடித்து உள்ளம்
தொலைத்து வாடிக்கிடக்கின்றோம்...!
பசியாற உணவிருந்தாலும் உள்ளம் இல்லை...!
பரிதவித்து சத்தமிட்டு ஓலமிட்ட ஆண்களாக
பட்டினி கிடந்தோம் உள்ளம் அறிந்தே...!
பல நாட்களாகியும் எட்டிப்பார்த்திட யாருமில்லை...!
பட்டினி இங்கே யார் உள்ளத்தையும் கரைக்க முடியாமல்
பறந்தோடி போய்விட்டது...!
உலகம் அறிய அறிக்கை விட்டு
உண்ணா விரதம் இன்று தொடங்குகின்றோம்...!
பட்டினி கிடந்து பழகிய உடல் தான்...!
பட்டினி எம்மை சாகடிக்க போவதில்லை...!
பட்டினியே நீ எம்மை கண்டு
பயந்து மறுபடியும் பறந்தோடி போய்விடாதே...!
பட்டினி என்ற ஒற்றைப் பதத்தில் எங்கள் விடுதலையினை
அடக்கி கையேந்தி யாசிக்கின்றோம்..!
பட்டினிக்கு தீனி போட்டு எங்கள் சிறை
விடுதலையினை நிராகரித்து விடாதீர்கள்...!
பசி மிகுதியாகி நாம் பட்டினி கிடக்கவில்லை -வலியின்
பசியால் உள்ளம் சுருங்கிய பட்டினி இது...!
வீசிய யுத்த சூறாவளியில் அள்ளுப்பட்டு
ஆசிய எல்லையில் அவதிப்பட்டு - இந்தோ
னேசிய கடலில் தத்தளித்து சிறையில் வாடி வதங்கி
வழியின்றி பட்டினி போராட்டம் செய்கின்றோம்...!
உள்ளத்தின் வலிகள் உதிரமாக வடிய - தினம்
உலுப்பி நிற்கின்ற வதைகளும் வலிகளும் தாங்காமல்
உலகை நோக்கி ஒரு யாசகம் இந்த பட்டினி போராட்டம்..!
உலகத்து உறவுகளே...!
மன்றாடுகின்றோம் உங்களை நோக்கி
மரணத்தை தன்னும் யாசகமாய்
கொடுத்து விடுங்கள்...!
எங்களை கருணைக்கொலை தன்னும் செய்து விடுங்கள்...!
எம்மோடு சேர்ந்து மரணிக்கட்டும் எம் துன்பங்களும்...!
இது அரசியல் நாடகமல்ல...!
இறுதி முடிவாக பட்டினி என்றாலும்
மரணத்தை எங்களுக்கு வழங்கட்டும்...!
ஒன்றே ஒன்று கேட்கின்றோம்...!
காரணங்கள் காட்டி எங்கள் பட்டினியை
கலைத்து விடாதீர்கள்...!
எங்களை கொன்று போட்டு விடுங்கள்..!
எங்களை கொன்று போட்டு விடுங்கள்...!
கனவுகளும் ஆசைகளும் இதயம் நீங்கி நாளாயிற்று...!
கண்களில் கண்ணீரும் வற்றிப் போயிற்று...!
கடலும் அலையும் எம்மை காவு கொண்டிருந்தால்
கனவுகளோடு சேர்ந்து நாமும் சென்றிருப்போம் - இன்று
கண்களும் காதுகளும் மெல்ல உணர்விழக்கின்றன...!
கனக்கும் உள்ளத்தின் பாரம் தாங்க முடியாமல்
கால்களும் துவண்டு போகின்றன...!
காயம் கொண்ட அங்கங்கள் காலாவதியாகின்றன...!
காயமற்ற அவயங்கள் செயலிழக்கின்றன..!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!
எம்மை கொன்று போட்டு விடுங்கள்...!
கண் திறந்து பாருங்கள் எங்கள் உறவுகளே..!
கடைசியாய் ஒரு தடவை கண் திறந்து பாருங்கள்...!
லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பட்டினி" என்ற தலைப்பில் இன்று (21.04.2014 )வழங்கிய கவிதை இது.
கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/