Search This Blog

Wednesday, 25 September 2013

ஐம்பொன்....!!!



ஐம்பொன்னின் நாணத்தால்
காத்து கருப்பு அண்டாதாம்..!
விலை கொடுத்து மழலை காலில்
சிலம்பு ஒன்று அணிவித்தாள்
தாய்லாந்து அயல் சிநேகிதி...!
தாய்நாட்டில் மட்டுமில்லை
தாய்லாந்திலும் காத்து கருப்போ....?

தொண்டைக்குள் சிக்கி கொண்டது
தொலைந்து போனவைகள்...!
நினைவில் நிற்பவை....!
கனவாகி போனவை....!
உயிரை உலுக்கி எடுப்பவை...!


எந்த காத்து கருப்பு குடித்து போன
எண்ணிலடங்கா உதிரம் - ஈழ
மண்ணில் சகதியாகி போனது....?

ஐந்தடிக்கொரு ஐம்பொன் சிலைகள்
அடங்கா மண்ணில் இருந்தன அன்று..!
இன்றும் இருக்கத்தான் செய்கின்றன....
கண்ணில் தென்படாத காத்து கருப்பு
மண்ணில் மனிதர்களை
எட்டிச்சோ தொட்டிச்சோ.?
நான் அறியேன்.....



கண்ணுக்கு புலப்பட்ட
சன்னங்களும் எறிகணையும்
ஐம்பொன் சிலைகளையே  நன்கு
எட்டி தொட்டு பதம்பார்த்தன அன்று..!


இன்றும் பச்சை நிற காத்து ஏ கே 47 உடன்
காவல் காக்கின்றது ஐம்பொன் சிலைகளை...
காக்கி கறுப்பும் கூட துணையாக...


ஐம்பொன்னை தள்ளி வைத்து
களிமண் அரசாளுகின்றது...!
இடம் அபகரிப்பதை மிரட்ட
இயலாத ஐம்பொன் சிலைகள்
இல்லாத காத்து கறுப்பை விரட்டுமா??

ஐம்பொன் கொண்டு மனிதர்களுக்கு
காவல் செய்யும் அறிவாளிகளே....!
ஈழத்தை உலுக்கும் காத்து கருப்புக்கு என்ன காவல்
விளக்கமாய் தான் உரத்து சொல்லுங்கோவன்...!



அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஐம்பொன்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

1 comment: