Search This Blog

Tuesday, 24 September 2013

மலைக்காற்று...!




மலைகளின் மடியினில்
அலையாய் தவழ்ந்து - வெம்மையை
வலை வீசி அள்ளி  ஊதலில்
சிலையாக்கி நகரும் சீதளக்காற்று..!!!

காதில் தேன் மொழி பேசி சிணுங்கி எங்கோ
காதல் சொல்ல விரைகின்றது விரைவாக..



ஊதற்காற்றின்
ஊடல் விளையாட்டுக்கு அஞ்சி
ஊமையாகி நிற்கின்றன மலையின் தளிர்ச்செடிகள்...!


தவழ்ந்து விளையாடும் குளிர்காற்றோடு
தகதிமி ஆட நெருங்கி வரும் வெண் பஞ்சு
முகில்களை முட்டி மோதும் பர்வத உச்சி
தொட்டுச்செல்லும் மலைக்காற்றால்
சொட்ட சொட்ட நனைகின்றது வெட்கத்தால்...!



பட்டும் படாமலும் தொலைவில்
எட்ட நின்று ஓரப்பார்வை பார்க்கும்
வட்ட வெண்ணிலாவும் நாணி
மேகத்திரையில் ஒளிந்து கொள்கின்றதோ..???



கண் சிமிட்டும் விண் மீன்களின்
பண் பாடும் இசை கேட்டுத்தான்
விண்ணுக்கும் விரைகின்றதோ
மண்ணின் மலைக்காற்று....!


ஊதற்காற்றில் ஊஞ்சல் ஆடும்
ஊதாப்பூக்கள் சொரியும் தேனினை
காதலிக்கு அபகரித்துச்செல்கின்றதோ
கார்காலக்கள்ளக்காற்று....!!

ஊரெல்லாம் பரவும் தேனின் கடியால்
ஊதற்காற்றின் திருட்டு அம்பலமாக - நாணி
ஊமையாய் திரும்புகின்றது மலையின் மடிகளுக்கே...

தளிர் புற்கள் அள்ளிப்பருக  சொரிகின்றது
குளிர் தேனை பச்சை மலை மீது....
தெளித்து புன்னகைக்கும்  குறும்புக்காற்று
ஒளிந்து கொள்கின்றது ஒன்றுமறியாதது போல...


தற்கொலைக்கு முயலும் மலையருவியினை
தடுக்க விரையும் மலைக்காற்று  சினம் கொண்டு
மலையடிவாரத்தை உதைத்து சாந்தமாகி
மறுபடியும் சிலிர்த்து எழுகின்றது மேலே...


மலைக்காற்றை உதறி விட்டு திமிர் கொண்டு
மலையருவி  பாறையோடு கை கோர்த்து
மகிழ்வோடு  செல்கின்றது ....
மலைக்காற்றை முறைத்தவாறே


மாயமாய் சுழன்ற  சுழல்காற்று
மலையின் உச்சியில் வெண் பஞ்சு முகிலோடு
மந்திரப்புன்னகை புரிந்து வெறுப்பேற்றுகின்றது
மலையருவியினை-தன்
மனம் விரும்பியவாறு....!!!


குளிர் காற்றோடு மனம்  திறந்து பேசி மலை உச்சியின் உச்சந்தலை
குளிர்கின்றது ஊதற் காற்றின் ஊதலை போன்றே.....!!!
மலைக்காற்றின் ஊதற்காதலுக்காக இன்னும் தவம் இருக்கின்றன...
மயக்கும் வெண்ணிலாவும் வண்ண விண்  மீன்களும்....!!!




அரசி  நிலவன்

*********************************************************************************



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மலைக்காற்று" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


No comments:

Post a Comment