அன்பிற்கு மட்டுமன்றி
ஆறுதலுக்கும் முகவரி
அன்னையே...!
தந்தையின் பிரிவில்
சிந்தை கலங்கி நின்றோம்..!
எந்தையும் தாயுமாகி
விந்தை அன்பு புரிந்த
தந்தையுமானவளே....!!
கந்தையில்லா துணிகளும்
சந்தையில் வகை வகையாய்
விளையாட்டு பொம்மைகளும்
அள்ளி வந்து குவிப்பாய்....!
அழகழகாய் கல கலக்கும் எமை
அகம் குளிர்ந்து அரவணைத்து
அன்பாய் உச்சி முகர்ந்து
ஆறுதல் கொடுத்து
ஆறுதல் அடைவாய்...!
ஆறுதல் பட உனக்குத்தான்
ஆருமில்லை அந்த தருணங்களில்...
ஆளாகாமல் நின்ற அரும்புகள் எமை
ஆட்படுத்தி அழகு பார்த்தாய்....!
ஆறுதல் ஆறுதலாகக்கூட உன்னை
ஆற்றவில்லை - மாறாய் என்னை
ஆறுதல் படுத்திக்கொண்டும்
ஆறுதலாகவும் ஆற்றுப்படுத்தும்
ஆலயம் அம்மா நீ....!!!
பெண்மையாய் என்னை
மென்மையாய் படைத்து
திண்மையாய் வாழப்பழக்கி
இன்மையிலும் புன்னகைத்திட
தொன்மை தொட்டு உணர்த்தி
உண்மையாய் என்றும் விளங்கிட
தன்மையாய் உரைத்தவள்- என்னுயிர்
பன்மையாகும் போதும்
பரவசம் அடைகின்றாள்
அருகிருந்தே ஆறுதலாக....என்
ஆறுதலுக்காக தன்
ஆற்றாமைகளை
ஆற்றத்திணறி
ஆற்றுப்படுத்துகின்றாள் எனை
ஆறுதல் என்ற உருவமாகி...
வாய் திறந்து தான் பேசிட வேண்டுமா??
அருவமான ஆறுதலை அன்னையின்
உருவத்தில் கண் நோக்குகின்றேன்..!
அகராதி போதாது
அன்னையுன்னை விழிக்க...
ஒற்றைப் பதம் கொண்டு
ஒருமித்து உரைக்கின்றேன்..!!
ஆறுதலின் கணிப்பொறி..!
ஆறுதலின் வரைவிலக்கணம்..!
ஆறுதலின் அகராதி..!
ஆறுதலாக அன்பை கொட்டும்
ஆரவாரமற்ற அன்னை நீயே...!!!
அரசி நிலவன்
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிகள் சகோதரனே....!
Deleteவணக்கம்
ReplyDeleteஅகராதி போதாது
அன்னையுன்னை விழிக்க...
ஒற்றைப் பதம் கொண்டு
ஒருமித்து உரைக்கின்றேன்
அடா...அடா... என்ன வரிகள் கவிதை அருமை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-