உழைப்புகள் சில கண்ணுக்கு விருந்தாக
உலகமே மெய்மறந்து ரசிக்கும் திரையில்
உண்மை உழைப்புக்கள் பல காட்டப்படுவதில்லை..!
திரையிட்டு வெளியிடுகின்றார்கள்..!
திறமையான நடிப்பு என்று கை தட்டி
விருதுகளும் கை மாறுகின்றன.....
காலங்காலமாக...
போலியாக உழைப்பவன் போற்றப்படுகின்றான்
திரை என்னும் மாய உலகில்.....!
உண்மையாய் உழைப்பவன் பார்வைக்கு கூட இல்லை
திரை என்னும் பொழுது போக்கு உலகில்...!
அதையொத்து....
உண்மை உலகில்
சிரிப்புக்களும் கேலிகளும் திரைக்கு முன் வழங்கப்படுகின்றன..!
அழுகைகளும் வேதனைகளும் பின்னே மறைக்கப்படுகின்றன..!
இங்கும் ஒரு பெரிய திரை.....!
மனத்திரையின் பின்னே கொட்டிக்கிடக்கும்
மலை மலையான துன்பங்கள் பார்வைக்கு
மறந்தும் விடப்படுவதில்லை - இவற்றை
மறைத்துக்காட்ட வானாளாவி நிற்கும் - ஒரு
மகத்தான மனத்திரை வேண்டும்...!!!.
அரைகுறையாய் திரை விலகினாலும்
அத்தனை துன்பங்களும் உடனடியாக
அனைவரின் பார்வைக்கும் விருந்தாகிடுமோ...?
அச்சத்தில் என்னென்ன உழைப்புக்கள்...!
சிரித்துக்கதை பேசி சின்னச்சின்னதாய் கிண்டல் செய்து
கடினப்பட்டு காட்டிக்கொள்கின்றோம்...!
மகிழ்ச்சியாய் தான் நாமும் இருக்கின்றோம் என்று
மற்றவர்களைப்போல நடித்துச்சந்தோசிக்கின்றோம்,,.!
இல்லை என்பதை இல்லை என்று உரைத்தால்
இல்லாதவர்கள் என்று இகழ்ந்திடுவார்களோ..?
'இயலாமைகள்' 'இழப்புக்கள்' 'இல்லாதவைகள்'
இழுக்கப்படும் வலிமையான மனத்திரைகளால்
இயன்றளவு மறைக்கப்படுகின்றன..!
இல்லை இல்லை புதைக்கப்படுகின்றன - எங்கள்
இதயங்களுக்குள் நிரை நிரையாக....
மனிதர்களின் உண்மைத்திரையில்
மகத்துவமான நடிப்பை வெளிப்படுத்தி
மற்றவர்களை நம்ப வைக்கின்றோம்....!
மனத்திரையின் பின்னால் இதற்கு
மனம் வருந்தாமல் ஒத்திகையும் பார்க்கின்றோம்...
மறு நாள் எப்படி நடிக்கலாம் என்று....
அடுத்தவர்களின் ஏளனங்கள்
அறியத்துடிக்கும் ஆவல்கள்
அனுபவிக்கும் துன்பத்தை விட
அதிக வலி மிகுந்தது என்பதால்
திரை என்பது எமக்கு அத்தியாவசிய ஒன்றாயிற்று-மனதில்
திரையிட்டு எம் வாழ்வினை வாழப்பழகி நாளாயிற்று
திரை நீங்கும் காலம் கை கூடினாலும் எம்மால் - மனத்
திரை இன்றி வாழ முடியுமோ என்பது சந்தேகமே....!
நிலவரசி நிலவன்
சாட்டையடி வரிகள் அழுத்தமாக...
ReplyDeleteKavithaikal aththanaiyum apaarm........
ReplyDeleteArasi arankam thodara vaazhththukiren........
ReplyDelete