எதிர்பார்ப்புக்களுடன் விடிகின்ற பொழுதுகளாக தொடர்ந்து விடிகின்ற அந்த விடியல்கள் அன்றும் அப்படியே விடிந்தது. அவ்வாறு நிலாவும் மதுரனும் எண்ணி புலர்ந்த காலையின் புத்துணர்ச்சியினைப்போன்றே புதுப்பொலிவுடன் தம் அன்றாட வேலைகளில் மூழ்கிப்போயினர். அனால் உள்ளங்களோ ஒரு தொலை பேசி அழைப்பிற்காக ஏங்கித்தவித்தது. அந்த நெடுநாள் எதிர்பார்ப்பு தொலைபேசி அழைப்பு அன்று வந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த செய்திக்கு எதிர்மாறான தகவலோடு அன்று மதியம் இடியென இறங்கிய ஒரு செய்தியால் இதயம் உடைந்து போயினர் நிலாவும் மதுரனும். ஆம் தொடர்புகள் அற்றுப்போன அவர்களின் எதிர்கால கனவு , வாழ்க்கை யாவற்றையும் தாங்கிய கடற்சூரியன்(MV Sun sea) எல்லை தாண்டி இவர்களைத் தவிக்க விட்டுச் சென்று கொண்டிருப்பதாக வந்த அந்தச் செய்தி கேட்டு நிலைகுலைந்த உள்ளங்கள் கிட்டத்தட்ட மணிக்கணக்கில் அமைதியினை பேணிக்கொண்டு இருந்தன.
ஆனி மாதம் 2010 இற்குப்பின் எதுவும் அறியாமல் தொடர்புகள் அற்றுப்போன நிலையில் ஏறத்தாழ இருபது நாட்களாக துடித்து பதைத்து ஒவ்வொரு விடியலையும் இன்று அழைப்பு வராதா ? வராதா? என்ற ஏக்கங்களுடன் நம்பிக்கையில் ஊசலாடிக்கொண்டு இருந்தவர்களுக்கு கப்பல் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்ற செய்தி எந்த வகையான தாக்கத்தினை உண்டு பண்ணியிருக்கும் என்பதனை அனுபவித்து பார்த்தால் அன்றி வெறும் எழுத்துக்களால் எழுதி விட முடியாது.
கப்பல் புறப்பட முன்னரே மூன்று மாதங்களுக்கு மேலாக பசுபிக் பிராந்திய கடற்பரப்பில் தரித்து நின்ற சமயங்களில், அது பல நாடுகளின் கண்ணில் பட்டு, ஒரு மாத காலமாய் செய்திகளாய் இணையத்தினையும் பத்திரிகைகளையும் ஆட்கொண்டு இருந்தது. ஆனால் அது ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாக எச்சரிக்கைச்செய்தி அடிக்கடி இணையத்தில் வெளியாகிய வண்ணம் இருந்தது. அந்தச் செய்திகளை கண்ணுறும் போதெல்லாம் நிலாவும் மதுரனும் நெஞ்சம் பதைத்துப்போவதுண்டு. எங்கே நாம் போக முடியாமல் போய் விடுமோ? என்ன செய்வது ? என்றெல்லாம் பல இரவுகள் புலம்பியதுண்டு. அவ்வாறு புலம்பியவர்கள் கப்பல் தம்மை விட்டுச் செல்வதை அறிந்ததும் எவ்வாறு இதயம் நொறுங்கிப் போயிருப்பார்கள் என்பது அவர்களுக்கே மட்டும் தெரிந்த வலியாகும். .
இன்றோ நாளையோ என்று அந்த விடுதியில் தங்கியிருந்த அவர்கள் ஒவ்வொரு நாளும் செலுத்த வேண்டிய வாடகையினையே பெரும் சிரமத்தில் கடினப்பட்டு செலுத்தி நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தவர்களுக்கு அடுத்து என்ன செய்வது என்பது முற்றிலும் சூனியமாகவே தென்பட்டது. கையில் பணம் இல்லை அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விக்கித்து நின்ற அவர்கள் தம்மை விட தம்மோடு அடைக்கலம் அடைந்திருந்த அந்த சிறுவர்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டது மட்டுமன்றி கரையோரத்தில் தனித்து விடப்பட்ட நிலாவின் சகோதரனை நினைத்து தேம்பி தேம்பி அழுதனர்.
கனடாவில் திருமணம் செய்து கொண்டு வாழும் கனவில் இருந்த மதுரனை நிலா ஆறுதல் படுத்த முடியாமல் திணறினாள். ஐ.நாவின் துணையினால் எங்காவது செல்வோம் என்று அன்றிலிருந்து நம்பி நம்பி அந்த நம்பிக்கைக்கு தீனி போட்டபடி இன்றும் ஐ நாவின் கால்களைப் பிடித்தபடியே தொங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆம், அந்த செய்தி கப்பல் தனது பயணத்தை ஆரம்பித்த 2010 ஆடி 5 இலிருந்து பத்து நாட்கள் கழித்து, அதாவது 2010 ஆடி 15 அளவில் அறியப்பட்டது. கூடவே இருந்த இரு சிறுவர்களும் பெண்ணும் செய்தியினை கேட்டு அழுத வண்ணம் இருந்தனர். அந்தச் சிறுவன் ஒருவன் நிலாவினை பார்த்து,
"அன்ரி நாங்கள் ஒரு போட் எடுத்து கலைச்சிட்டு போய் கப்பலில் ஏற முடியாதா? மாமாவும் அத்தையும் என்னை விட்டிட்டு போயிட்டினமா??"
கண்கள் கலங்க கேட்ட அந்த எட்டு வயதுச் சிறுவனை ஆறுதல் படுத்த முடியாமல் திகைத்து நின்ற நிலா,மதுரனின் நிலை எண்ணி மிக்கக் கவலையடைந்தாள். மதுரன் பல மணி நேரமாக அமைதியாக இருப்பதை கண்ணுற்றுக் கலக்கமடைந்தாள். அவனை உலுப்பி
"என்ன ஏதும் கதையுங்கோவன்.. ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்...? "
என்று கலங்கி அழுதவளை நிமிர்ந்து பார்த்த மதுரனின் கண்களில் குளமாய் கண்ணீர்...!
"அவசர அவசரமாய் உன்னை இங்கு வர வைச்சு உன் படிப்பைக்குழப்பி உன் இலட்சியத்தினை குழப்பி கடைசியில் நடுத்தெருவில் விட்டு போட்டனே...நான் "
என்று சொல்லிச் சொல்லி குலுங்கி அழுதவனை நிலா ஆற்றுப்படுத்த பெரும் சிரமப்பட்டாள்.
"இது தான் ஒரு வழியா..? எத்தனையோ வழி இருக்கின்றது . நாங்கள் தான் UNHCR இல் பதிந்து இருக்கின்றோம். எங்களை அவர்கள் ஏதும் நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் தானே..."
என்ற நிலாவினை நோக்கி நிமிர்ந்த மதுரன்
"என்ன நிலா இரண்டு வருசமா நான் அதைத்தானே செய்து கொண்டு இருந்தன். இவ்வளவு நாளும் நடக்காததா இனி நடக்க போகின்றது..? "
என்றவன் மீண்டும் கலங்கத் தொடங்கினான். ஒருவாறு பல நம்பிக்கைகளை வளர்த்து அவனை நிலா தேற்றினாள். அடுத்த நாள் வரை எல்லோருமே குழம்பிப் புலம்பிக்கொண்டே இருந்தனர்.
ஏற்கனவே முதல் தொடரில் கூறிய நிலாவின் சகோதரன் கரையோரத்தில் நின்றிருந்தான். அவனும் பணம் கொடுத்தபடி பயணிகளில் ஒருவனாக நின்று கொண்டு உடன் பிறப்பிற்காக காத்திருந்து கடைசியில் கப்பலினைக் கை விட்டவனாக அங்கிருந்து இருப்பிடம் திரும்பி இருந்தான். அவன் தனது உள்ளத்தில் கவலைகளையும் கண்களில் கண்ணீரினையும் அடக்கி வைத்திருந்தாலும் அவனது வேதனைகளை நன்கே அறிந்தாள் நிலா. தொலைத்தொடர்பு கற்கை நெறி கற்றுக்கொண்டிருந்தவனை இடை நடுவில் குழப்பி இங்கு கொண்டு வந்து விட்டோமே என்று உள்ளம் குறு குறுத்துக்கொண்டிருந்தது.
இவர்கள் மட்டுமன்றி பாங்காக்கில் கிட்டத்தட்ட நூறு பேர் வரை இவ்வாறு கப்பலினைத் தவற விட்டு கண்ணீரோடு செய்வதறியாது நின்று புலம்பினர். அதில் இறுதி யுத்த களத்தில் மண்ணுக்காய் வித்தான தளபதி ஒருவரின் மனைவியும் இரு பச்சிளம் பாலகர்களும் அடங்கினர். போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் இலவசமாக உள் வாங்கிய கப்பலுக்குச் செல்லுவதற்காக அழைப்புக்கள் வந்த போது இறுதி யுத்த களத்தில் நேரடியாகப்பதிக்கப்பட்ட அந்த தளபதியின் மனைவி நச்சு வாயுத்துகள்களின் சுற்றோட்டத்தால் மூச்சு விட சிரமப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சகோதரி மீண்டு வந்த சமயம் கப்பல் தனது பயணத்தினை ஆரம்பித்து இருந்தது. அதன் பின் உதவி புரிந்த மதுரனால் தொடர்ந்து உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அந்த உன்னதமான மாவீரனின் மனைவி தவற விடப்பட்ட அந்த சந்தர்ப்பத்தால் இன்று உடலில் இதயத்திற்கு அருகாமையில் அடிக்கடி வந்து முட்டிச்செல்லும் எறிகணைச்சிதறல் மற்றும் முகத்தில் நரம்புகளில் படிந்த நச்சு வாயு துகள்களினால் தினம் வலியோடு போராடுவது மட்டுமன்றி தன் குழந்தைகளுக்காக தையல் இயந்திரம் மிதித்து அன்றாட சீவனத்துக்கும் போராடுகின்றார். (தினம் தினம் மாவீரர்களின் புகைப்படங்களை முகப்புத்தகத்தில் பகிர்ந்து மெய் சிலிர்க்கும் புலத்து உறவுகள், ஈழத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அந்த மாவீரர்களின் வேர்கள் கிளைகளான குடும்பத்தினரின் நிலையினை பகிர்ந்து கொண்டதுண்டா அன்றி நினைத்துப்பார்த்த்துண்டா..?)
இப்போதோ அப்போதோ என்று பயணம் இடம்பெறும் என்பதால் தங்கி இருக்க நிரந்தரமாய் அவர்கள் ஏற்பாடு செய்யாமல் தற்காலிக தங்குமிடத்தில் தங்கி இருந்ததால் இருந்த பணமெல்லாம் செலவாகி இருந்தது. ஒரு கட்டத்தில் தங்குமிடத்திற்கு பணம் செலுத்த முடியாமல் இரவிரவாய் வீதி எங்கும் அலைந்து திரிந்தார்கள். இரவிரவாக அங்காடிகளிலும் இணையக் கடைகளிலும் பொழுதைப்போக்கி கொண்டு இருந்தார்கள். அதை விட தாய்லாந்து காவல் துறையின் கண்களில் படாதவாறு ஓடி ஒளிந்து திரிவதே பெரிய சவாலாக இருந்தது. எந்த நேரமும் வீதிகளில் உலா வரும் காவல்துறை மற்றும் குடிவரவு துறையினரின் வாகனங்களை கண்ணுற்றால் எவ்வாறு மின்னல் வேகத்தில் மறைந்து கொள்கின்றார்கள் என்றே அறிய முடியாது. ஏதாவது பொருள் கொள்வனவு செய்யும் போது இது நேர்ந்தால் மீதிப்பணம் பெற்றுக்கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொள்ளும் சூழ்நிலைகள் நிறைந்த கால கட்டம் ஆகும்.
சசி என்பவர் காணாமல் போய் இருந்தார். இது இலங்கை போல் அல்ல. சுயமாகவே காணாமல் போய் இருந்தார். அதாவது தாய்லாந்தினை விட்டு தப்பித்து சென்று விட்டார். ஏனென்றால் பணம் பெற்று கைவிடப்பட்ட பலர் அவரைத்தேடி அலைந்து கொண்டிருந்தனர். சசியினை கோபித்து என்ன செய்வது எமது தலை எழுத்து இப்படி என்று தம்மை தாமே சமாதானப்படுத்திக்கொண்ட மதுரன் நிலா இருவரும் அடுத்து நிலாவின் சகோதரன் மூலம் பணம் ஒழுங்கு படுத்தி இருப்பிட வசதி செய்து கொண்டார்கள்.
இதற்கிடையில் ஈழத்தில் உள்ள நிலாவின் உறவுகள் அறிந்து மிக்க கோபமும் கவலையும் அடைந்தனர். நிலாவும் மதுரனும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஓரளவு விளங்கி கொண்டதால் அதாவது என்ன காரணத்திற்காய் தாம் கப்பலினை தவற விட்டோம் என்பதனையும் எந்த சூழ்நிலையில் இங்குள்ளவர்களை தவிக்க விட்டு கப்பல் பயணத்தினை ஆரம்பித்திருக்கும் என்பதனை ஊகித்துக்கொண்டதால் சராசரி மனிதர்களை போன்று கோபத்தில் சம்பந்தப்பட்டவர்களை திட்டியோ பேசியோ காலத்தினை வீண் அடிக்காது அடுத்த கட்டமாக தம் கூட உள்ளவர்களை எப்படியாவது அவர்களின் உறவுகளிடம் ஒப்படைக்க போராடினார்கள்.
அந்த நேரத்தில், கப்பல் ஏற்பாட்டாளர்கள் சிலர் மீண்டும் பணம் சேகரித்து வேறு வழியில் கப்பலில் அனுப்பலாம் என்று சில நம்பிக்கை உறுதிகளை கொடுத்து மீண்டும் ஏற்பாட்டினை ஆரம்பித்தனர். அந்த வகையில் முதற்போன்றே பல பயணிகள் இலங்கையில் இருந்து உள்வாங்கப்பட்டனர். இருந்தாலும் நிலாவும் மதுரனும் இதில் முழு நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்கள் ஐ நாவினை முற்றிலுமாக நம்பியிருந்தார்கள்.ஆனால் முதற்போன்று உதவிகள் செய்து நின்றிருந்த பயணிகளுக்கு இருப்பிட வசதிகள் உணவு வழங்கல்களை ஏற்பாட்டாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க செய்து கொடுத்தார்கள். காரணம், கூடவே இருந்த அந்த இரு சிறுவர்களையும் பெண்ணினையும் அனுப்பி வைக்கலாம் என்பதாலாகும். இருந்தாலும் அவர்களையும் ஐ.நாவின் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தில் தஞ்சம் கோரியவர்களாக விண்ணப்பித்தனர். இந்நிலையில் தவற விடப்பட்ட பல பயணிகள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியும் இருந்தனர்.
ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் நிலாவிற்கான நேர்முகத்தேர்வினை விரைவாக நடாத்தி இருந்ததுடன் கர்ப்பமான அவளின் மருத்துவமனை செலவினையும் பொறுப்பேற்றுக்கொண்டது. மிகவும் மனிதாபிமான முறையில் கரிசனமாக அந்த காலப்பகுதியில் ஐ நா தமிழர்களுக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த வேளையில் ஆவணி 13 அன்று (13/08/2010) கடற்சூரியன் கனடாவின் கரையினைத்தட்டியது. இணையத்தில் இச்செய்தியினைக் கண்ணுற்றதும் கலங்கி நின்றன உள்ளங்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரியாமல் விம்மிய காட்சி இன்றும் நெஞ்சினைத்துளைத்து நெருஞ்சி முள்ளாய் குத்துகின்றது. அது வரை கப்பல் தம்மை கை விட்டுச் சென்றது தான் பெரிய துன்பம் என்று நினைத்திருந்த அவர்களுக்கு அதற்குப்பின் அவர்கள் வாழ்வில் விழுந்த அடிகளும் பிரச்சினைகளும் கப்பலைக் கை நழுவ விட்ட கவலையினைக் கடுகு போல் ஆக்கி மலையாய் இன்றும் சூழ்ந்த வண்ணம் இருக்கும் என்று அவர்கள் அன்று நினைத்திருக்க வில்லை.
ஆம்...! கரையினைத்தொட்ட கப்பலில் இருந்தவர்கள் கரையில் இறங்குவதற்குள் , கனேடியப்படைகள் தாய்லாந்தினை முற்றுகை இட்டுக்கொண்டன. தாய்லாந்தில் இருந்து கப்பல் வந்தது என்ற காரணம் மட்டுமல்ல. கப்பலில் பயணித்த, அதாவது தாய்லாந்தில் வாழ்ந்து , தாய்லாந்து வாழ்வினை நன்கு அறிந்து கொண்ட சில நல்ல உள்ளங்கள் வாரி வழங்கிய தகவல்களை நம்பி இங்கு இன்றும் அலைந்து திரியும் கனேடியப்படைகளால் வாழ்வினைத் தொலைத்துப்போனவர்கள் ஏராளம்.
தமிழர்களுக்கேயான ஒரு சாபக்கேடே " காட்டிக்கொடுப்பு " என்பதாகும். வரலாறுகளும் நடைமுறைகளும் இவற்றை நன்கு எமக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வந்திருக்கின்றன. காட்டிக்கொடுப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கடற்சூரியன் காவிய காவிகள் (இந்த அடைபதம் தாய்லாந்தில் வீதி வீதியாக அலைந்து பட்டினி கிடந்து அதிஸ்டவசமாக இலவசமாக கப்பலேறியவர்களுக்கு உரித்தானது) செய்த அநியாயத்தினை அடக்கி விட முடியாது. காரணம் உண்மையினை காட்டிக்கொடுத்தால் தான் அது காட்டிக்கொடுப்பு. ஆகும்.ஆனால் இவர்கள் அரங்கேற்றிய "இதனை" எந்தப்பதத்தில் அடக்குவது என்று அகராதியிலும் தேடிக்களைத்து பொருள் அற்ற பதத்தில் இணைக்கின்றேன்.
கடற்சூரியன் கரையினை தொட்ட ஆவணி 2010 இற்கு பின்னர் சடுதியாக சுற்றி வளைக்கப்பட்ட அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எஞ்சிய மனிதர்களாக ஒரு குடும்பம் மட்டும் இருந்தது. அவர்கள் எப்படித் தப்பித்துக்கொண்டார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் அந்த குடும்பத்தினர் தாம் பணம் கொடுத்து தப்பியதாக எல்லோரையும் நம்ப வைத்து நாடகம் ஆடியது. தாய்லாந்து காவல் துறையினர் ஒன்றும் இலங்கைக்காவல் துறை அல்ல. பணத்திற்கு விலை போவதற்கு. பணம் கொடுக்க முற்பட்டால் அதற்கும் ஒரு தண்டனை காத்திருக்கும்.அத்துடன் அவர்கள் தனித்து இயங்கவில்லை. கனேடியப்படைகளின் கண்காணிப்பில் வந்திறங்கி என்ன? ஏது? என்று விசாரிக்காமல் அங்கு தங்கியிருந்த இரு நூறுக்கு மேற்பட்ட அத்தனை தமிழர்களையும் அள்ளி அள்ளி குடிவரவு தடுப்பு மையங்களில் அடைத்துக்கொண்டது.
விசா இருந்தவர்களையும் வாகனங்களில் நாய்களைப் போன்று கொண்டு சென்றார்கள். பெண்களையும் கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் கதறக் கதற வான்களில் மனிதாபிமானமற்ற முறையில் அள்ளிச்சென்றார்கள். பனங்கிழங்கு போன்று அடுக்கப்பட்ட நிரை நிரையாய் ஒரு குறுகிய இடத்தினுள் நெரிசலில் நோய்வாய்ப்பட்டு சீரழிந்தவர்கள் பலர். யாரும் சென்று பார்க்கவும் முடியாது. உதவிடவும் முடியாது. இலங்கை கடவுச்சீட்டிற்கு விசா இருந்தாலும் அங்கு சென்று அகதிகளைப்பார்வையிட அனுமதியும் இல்லை. இலங்கை அகதிகளை வேறு யாரும் சென்று பார்வையிடவும் அந்த நேரத்தில் அனுமதி இல்லை. அந்தளவிற்கு சட்டத்தினை இறுக்கமாக இறுக்கி வைத்திருந்தார்கள்.
இலங்கையில் தன்னும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி நாலாம் மாடியில் அடைத்தாலும் உறவுகள் சென்று பார்வையிட முடியும். இங்கு என்ன குற்றம் செய்தார்கள் என்ற கேள்வியே கேட்க முடியாத நிலை. கேட்பதற்கும் நாதி இல்லை.
நிலா தாய்லாந்தினை அடைந்ததுமே மதுரன் அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றம் பெற்றுச்சென்றிருந்தமையால் மதுரன் அந்த சுற்றி வளைப்பில் கைதாகவில்லை. இருந்தாலும் அந்த ஒட்டு மொத்த உறவுகளுக்காக மனம் வெதும்பினான்.
கனேடிய அரசானது ஒரு சலுகை கொடுத்தது. அதாவது முகவர்கள் பற்றிய தகவல் வழங்கினால் அகதி அந்தஸ்து கொடுக்கப்படும் என்றும் கொடுக்காதவர்களுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கப்பட மாட்டாது என்றும். தமக்கு அங்கு அகதி உரிமை கிடைக்கும் என்ற எலும்புத்துண்டிற்கு ஆசைப்பட்டு இல்லாத உண்மைகளை எடுத்துச் சொல்லி இருந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அகதி அந்தஸ்தும் கொடுக்கப்பட்டு விட்டது. தாய்லாந்தில் இன்னும் ஒரு கப்பல் வர இருக்கின்றது. அதற்காகவே அங்கு தமிழர்கள் காத்திருக்கின்றார்கள் என்று ஐ நாவினை நம்பிக் காத்திருந்த எத்தனையோ உறவுகளின் வயிற்றில் அடித்து அவர்களின் வாழ்வில் உதைத்துக் காட்டிக்கொடுத்த அவர்களால் வாழ்வினைத் தொலைத்து இன்றும் வருடக்கணக்காக குடியேற்றத் தடுப்பு மையத்தில் வாடும் உறவுகளின் நிலை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திடப் போவதில்லை.
அத்தோடு தாய்லாந்தில் இருந்த அவர்களுக்கு தெரிந்தவர்களின் தொலை பேசி இலக்கங்களினைக்கொடுத்து அவர்கள் யாவரும் முகவர்கள் என்றும் அந்த நல்ல மனிதர்கள் கொடுத்த பொய்யான தகவல்களை கொண்டு நிலாவினையும் மதுரனையும். இன்றும் துரத்திக்கொண்டு இருக்கின்றது கனடா அரசாங்கம். அது மட்டும் அன்றி இங்குள்ள சில தமிழர்களை பணத்தால் கொள்வனவு செய்து கொண்ட கனேடிய அரசு, தமக்கு சாதகமான பொய்களை நம்பிக்கொண்டிருக்கின்றதே அன்றி உண்மைகளை ஏற்றுக்கொள்ள அது தயாராக இல்லை.
மதுரனைப்போன்று அல்லாமல் பலர் நேரிடையாகவே பயணிகளிடம் பணம் பெற்று கப்பலுக்கு கொடுத்தவர்களும் பணம் பெற்றுக்கொண்டு கப்பலில் ஏற்றாமல் ஏமாற்றியவர்களும் என்று தாய்லாந்தில் இன்னும் நல்லவர்களாக உலவிக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களை யாரும் காட்டிக்கொடுக்கவும் இல்லை. அவர்களை எவரும் கைதும் செய்யவில்லை. ஏனென்றால் அவர்களே தாமாகவே வலிந்து சென்று தகவல் வழங்குகின்றோம் என்று கனேடிய அரசின் நன்மதிப்பை பெற்று போலியாக உலவிக்கொண்டு இருக்கின்றனர்.
கடலில் ஏற்பட்ட கொந்தளிப்புக்களை எதிர்கொண்டு கனடாவை முத்தமிட்ட கடற்சூரியனால் தரையில் ஏற்பட்ட கொந்தளிப்பு அலைகள் தாய்லாந்தில் இன்னும் அடங்காமல் ஆர்ப்பரித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அலையில் சிக்கிய துரும்பாக அலைக்கழிக்கப்படும் உறவுகள் மூச்சுத்திணறுவது அலைகளால் அடிக்கப்பட்டு மட்டுமல்ல, வசை மொழிகள் , வதந்திகள் போன்ற கழிவு நீர்த்தொட்டிக்குள் விழுந்து எழுவதாலுமே..!
முன்னர் பல வெளிநாட்டு ஆட்கடத்தல் முகவர்களால் பணம் பெறப்பட்டு ஏமாற்றப்பட்ட பல தமிழர்கள் நிர்க்கதியாகி நிற்பதைக் கண்ணுற்று அவர்களை இங்கிருந்த கப்பல் ஏற்பாட்டளர்களிடம் பரிதாப்பட்டு பரிந்துரைத்து இலவசமாய் சிலர் ஏற்றி விட்டார்கள். அவர்கள் கனடா சென்று அங்கு அள்ளிக்கொட்டிய பல தகவல்கள் உண்மையற்றது என்பது அவரவர் மனச்சாட்சிகளுக்குத்தெரியும். ஆனால் மனம் என்ற ஒன்றே இல்லாத போது பிறகு எப்படி அதற்கு ஒரு சாட்சி இருக்க முடியும்.
மதுரன் அடைக்கலம் கொடுத்திருந்த அந்த இரு இளசுகளும் தம்மை ஏற்றி அனுப்பியது மதுரன் என்றும் அவனின் தொலை பேசி இலக்கங்களையும் கனேடிய படைகளுக்கு கொடுத்து அனுப்பியும் வைத்திருக்கின்றார்கள். அது மட்டுமா? நெஞ்சு வலியால் அவஸ்தை பட்ட யுவதியினையும் அவளது குடும்பத்தினையும் இன்னோரன்ன போராளி மாவீரர் குடும்பங்களையும் பணச்செலவின்றி இலவசமாக அனுப்பி வைக்க சசியிடம் பரிந்துரைத்து அனுப்பி உதவிய மதுரனின் அங்க அடையாளங்கள் உட்பட புகைப்படங்களையும் வழங்கி , இன்று வளமாக வாழும் அந்த நல்ல உள்ளங்களுக்கு மதுரனின் இன்றைய நிலை நன்கு தெரியும். நல்ல மனம் படைத்த மதுரனுக்கு ஏன் இந்த நிலை என்று யாரும் எண்ணக் கூடும். நிச்சயமாக அதற்கும் பதில் உண்டு. நன்றி மறந்த துரோகிகளுக்கு உதவியதாலேயே மதுரனுக்கு இந்த தண்டனை.
மாலை மாற்றிக்கொண்ட அந்த நாளில் கூட கோயிலில் இருந்து திரும்பிய தும் மதுரன் அந்த நன்றி கெட்ட மனிதர்களுக்காக ஓடி ஓடித் திரிந்து நிலாவின் உறவுகளிடம் நன்றாக வாங்கிக்கட்டிக் கொண்டவன். நிலாவின் உறவுகள் விமானமேறிய ஒரு நாள் மட்டுமே மதுரனும் நிலாவும் சந்தித்து கொண்ட இரவு. உணர்வுகளும் கலந்து அன்றே பிரிந்தும் கொண்டன. மனித வாழ்வில் நிகழ்கின்ற முக்கிய தருணம் திருமணம். எத்தனையோ பெரிய மனிதர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு என ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட ஓரிரு நாட்களையாவது தமக்காக வாழ்வார்கள். அது போராளியாக அல்லது ஒரு இராணுவ வீரனாகக்கூட இருந்தாலும் வாழ்வில் ஒரு முறை மலரும் அந்த பொன்னான தருணங்களை தவற விடமாட்டார்கள். ஆனால் மதுரனோ முகம் தெரியாத உறவுகளுக்காக தன் வாழ்வின் அத்தனை பொன்னான தருணங்களை இழந்து கொண்டதோடு, இன்னும் இழந்து கொண்டிருக்கின்றான்...!
வருடத்திற்கொரு முறை சேவையில் வந்து போகின்ற கனேடிய அதிகாரிகள் தமது திறமையினை தமது மேல் அதிகாரிகளுக்கு வெளிப்படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு வருடமும் வந்து கைது செய்வதும், பின் புலனாய்வு செய்வதும் பின் விடுவிப்பதுமாக தமது சேவையினை நீடித்துக் கொள்ளும் அதே நேரம் மதுரனின் துன்பியல் வாழ்வினையும் நீடித்துச்செல்கின்றார்கள். சட்ட ரீதியாக கனேடிய அரசிடம் இருந்து ஊதியம் பெறும் தாய்லாந்து அதிகாரிகளும் தம் சேவையினை செவ்வனே செய்து வருகின்றார்கள்.
கடற்சூரியனின் உண்மையான சூத்திரதாரியான மிகப்பெரிய செல்வாக்கு மிகுந்த, பல கால அனுபவம் மிக்க அந்த நபர் நாட்டை விட்டு தப்பி ஓடி தலை மறைவாய் வாழுகின்றார். அவரை வலை வீசிப்பிடித்து கைது செய்யத் துப்பில்லாத கனேடியப்படைகளுக்கு அப்பாவியான ஒரு குடும்பத்தை சிதைக்க மட்டுமே திறமையுள்ளது. அதுவும் இன்னொரு நாட்டில் வாழ வழியற்று தஞ்சமடைந்து இருக்கும் ஏதிலிகளை அந்த நாட்டின் கடுமையான சட்டத்தில் சிக்க வைத்து வதைத்து இன்பமடையும் கனேடியப்படைக்கு துணிச்சலும் இல்லை விவேகமும் இல்லை. விவேகம் இருந்திருந்தால் என்றோ முக்கிய சூத்திர தாரிகளை இனங்கண்டு தண்டனை கொடுத்திருக்க முடியும். ஒருவேளை பண பலம் கொண்ட அந்த மிகப்பெரிய மனிதனின் வலையில் இவர்கள் விலை பெற்று விட்டார்களா? அல்லது இருவருக்குமிடையில் ஏதும் ஒப்பந்தம் செய்யப்பட்டு கண் துடைப்பிற்காக யாரோ ஒருவனை இவர்கள் குற்றவாளியாக்க காட்ட வேண்டும் என்பதற்காக மதுரனை பயன்படுத்துகின்றார்களா?
அப்பாவியை சிறைக்குள் தள்ளியவர்கள் இதே தாய்லாந்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கின்றபோதே இன்னொரு கப்பல் செல்கின்றது என்று பல ஈழத்தமிழர்களிடம் பணத்தைச்சுருட்டிக்கொண்டு அவர்களை மலேசியாவில் நிர்க்கதியாக்கி விட்டு அந்தப் பணத்தில் ஐரோப்பிய நாட்டுக்கு தப்பிச்சென்ற ஒரு கடத்தல்காரனை கோட்டை விட்டு வேடிக்கை பார்த்தது ஏன்..? பணத்தால் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட தமிழ் இனத்துரோகிகள் அந்தத் தகவலையும் வழங்கி இருக்க வேண்டுமன்றோ? பணம் பொய்யினை உண்மையாக்க வல்லது மட்டுமன்றி உண்மையினையும் பொய்யாக்கிட வல்லது என்பது கனேடிய காவல் துறைக்கு எப்படி விளங்காமல் போனது??
கப்பலோடு நேரடியாக தொடர்பு பட்டது எனக் கைது செய்யப்பட்ட ஆறு குற்றவாளிகளில் ஒருவரைத் தவிர ஏனையோரை பணப்பிணையில் விடுதலை செய்து நடமாட விட்டு வைத்திருக்கும் கனேடிய அரசாங்கம் எதற்காக கப்பலினைத்தவற விட்டு நிர்க்கதியாகி நின்று ஐ நாவில் அகதியாக தஞ்சமடைந்த அப்பாவிகளை விரட்டி அடிக்கின்றது.கனேடியச்சிறையில் வாடும் அந்த ஒருவரும் மதுரனைப்போன்று அவரும் அவரது மனைவியுமாக கப்பலில் எறிச்செல்வதற்காக எரிபொருள் பொறியியலாளராக அந்தக்கப்பலில் பயணம் செய்த ஒரு நிரபராதியே. தனியார் சட்டவாளர் ஒருவரை நியமித்து வழக்காட அவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் கனேடிய அரச சட்டவாளர் ஒருவரை நம்பி வழக்கினை நகர்த்தி செல்வதால அவரது வழக்கு இன்னும் நீண்டு செல்கின்றதே அன்றி பிணையில் விடுவிக்க தன்னும் அனுமதி இல்லை. தாய்லாந்தில் மட்டுமன்றி கனடாவிலும் தொடரும் அலை உயிர் என்னும் கடல் வற்றினாலும் ஓயாது போலும்.
கனடாவினைப்போன்று தாய்லாந்தில் அவ்வாறு ஒரு வழக்கினை பதிவு செய்து கனேடிய அரசிற்கு எதிராக வழக்காட கூட முடியாது. வழக்குத் தொடுத்து நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஒரு காரணம் என்பதோடு சந்தர்ப்ப சூழ்நிலைகள் இவர்களுக்கு சாதகமாக இல்லை. அதாவது என்ன தான் நீதி நியாயங்கள் மதுரன் பக்கம் இருந்தாலும் தாய்லாந்தினை பொறுத்தவரை அவன் ஒரு சட்டவிரோத குடியேற்ற வாசி. தாய்லாந்து நாட்டின் குடிவரவு சட்டத்தின் பிரகாரம் அவர்களின் அனுமதி இன்றி தங்கி இருக்கும் அனைத்து அகதிகளுமே குற்றவாளிகளே. முதலில் அவர்களை தாய்லாந்தில் நடமாடவே அனுமதிக்க மாட்டார்கள். அதற்காகவே அதிக செலவு செய்து குடிவரவு தடுப்பு மையம் இயக்குகின்றார்கள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் இங்கு பல நாட்டு குடியேற்ற வாசிகள் உள்ளனர். ஈழத்தமிழர்கள் வருடக்கணக்கில் வாசம் செய்கின்றார்கள்.
அது கர்ப்பிணியாக இருந்தாலும் சரி பச்சை பாலகனாக இருந்தாலும் சரி சட்டம் எல்லோருக்கும் ஒன்றே. ஆனாலும் பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்களுக்கு அந்த சட்டம் செல்லுபடியற்றது. தாயும் தந்தையும் தடுக்கப்பட்டு இருக்கும் போது குழந்தை அவர்களுடன் தான் இருக்க முடியும். குழந்தை இருக்கின்றது என்பதற்காக அன்னைக்கு சலுகை வழங்க மாட்டார்கள். எத்தனையோ நிறைமாத கர்ப்பிணித்தாய்மார்கள் குழந்தை பெற்று, அந்த கம்பிச்சிறைக்குள் விறகுகள் அடுக்கியது போன்று நெரிசலில் சிக்கித்தவித்து நொந்து நசிந்து போய் இலங்கைக்கு திரும்பி சென்று அங்கு பல பிரச்சினைகளை எதிர்நோக்கி இருந்தார்கள். இந்த கொடுமைகளுக்கு கடற்சூரியன் காவிச்சென்ற முன்னாள் தாய்லாந்து அகதிகள் தான் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும்.
தொடரும்...........
அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து
arasenilavan@gmail.com
அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-4.html
முந்தைய பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/01/2_21.html
அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-4.html
முந்தைய பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/01/2_21.html