Search This Blog

Tuesday, 21 January 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 2 )



அமைதியாய் விடிந்த அந்த விடிகாலைப்பொழுது என்றும் போல் ஒரே மாதிரியாக இருந்தாலும் நிலாவிற்கு தேசம் விட்டு தேசம்  இடம் மாறி விடிந்திருந்தது. தாய் மண்ணை விட்டு முதன் முதலாய் காலடி எடுத்து வைத்துப் போகும் தாய்லாந்து நாட்டில் புலர்ந்த பொழுது வைகாசி முதல் நாள் 2010.  முதன் முதல் பறந்த விமானப்பயணம் சற்று வித்தியாசமான அனுபவத்துடன் காலடி வைத்த புகுந்த வீடாய் தாய்லாந்து நிலாவின் தாய் மடியினைத்தள்ளி அவளைத்தன் மடியில் மடியில் இருத்திக்கொண்டது. ஏதோ ஒரு புதிய உலகத்தில் மிதப்பதான உணர்வில் நிலா பறந்து கொண்டாள். குட்டி குட்டியாய் பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்த அந்த அழகிய தாய்லாந்தின் மக்களைப்பார்த்தும், அகன்று விரிந்த மிகப்பிரமாண்டமான சுவர்ணபூமி விமான நிலையத்தினையும் கண்ணுற்று வியந்து நின்ற அவள் தனது வாழ்வின் துணையினைத்தேடி தன் விழிகளை தூது விட்டாள். 

அவளின் வருகையினை எதிர்பார்த்து காத்திருந்த மதுரன் மற்றும்  அவனின் நண்பர்கள் உறவுகள் எல்லோரும் சந்தித்து, பயண அனுபவங்களை விசாரித்துக்கொண்டு இருந்த அந்த கணப்பொழுதுகளில் ஒரு வித தயக்கமாய் நெளிந்து கொண்டு இருந்த மதுரன் எப்போது வாகனத்தரிப்பில் நின்று கொண்ட வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான் என்று யாருமே கவனித்துக்கொள்ளவில்லை. எல்லோரும் பின்னர் தான் மதுரனை தேடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பைந்தமிழ்

"மதுரன் வானிலிருந்து நிலாவை சைட் அடிக்கிறாராம்..அதை ஏன் குழப்புறீங்கள்..."

 என்று கடிந்து கொள்ள, அங்கு ஒரு சிரிப்பலை எழுந்து ஓய்வதற்குள் எல்லோரும் வாகனத்தில் ஏறிக்கொண்டனர். 

தாய் லாந்தின் உயர் நெடுஞ்சாலைகளில் துள்ளிக்குதித்து எழும்பிய அந்த வாகனத்தில் இருந்து தாய்லாந்தின் அழகுத்தோற்றத்தினைக் கண்டு இரசித்துக்கொண்டிருந்தவர்கள் இடையிடையே மதுரனையும் நிலாவினையும் கடிச்சொற்களினால் கடித்தும் கொண்டனர். 

ஒருவாறு இருப்பிடம் அடைந்தவர்கள் மதிய உணவின் பின்னர் அடுத்து திருமண பதிவு பற்றிப்  பேசிக்கொண்டனர். தாய்லாந்தின் சட்டப்படி இங்கு அகதிகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சாசனத்தில் தாய்லாந்து உறுப்புரிமை இல்லாத நாடாகும். இக் காரணத்தினால் அகதி அந்தஸ்து கோருபவர்களும், அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களும் சட்ட விரோதமான முறையிலேயே தாய்லாந்தில் தங்கி இருகின்றார்கள். இதில் தாய்லாந்தின் குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள் விதிவிலக்கானவர்கள்.


இங்கு அகதிகள் என அழைக்கப்படுகின்றவர்கள் தாய்லாந்தில் நுழைந்து இங்குள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதி என அங்கீகரிக்கப்பட்டவர்களே. அதன் பின்னர் அவர்கள் மீள் குடியேற்றத்திற்காக அமெரிக்கா, நெதர்லாந்து, பின்லாந்து, நியூசிலாந்து சுவீடன்  மூன்றாம் நாடுகளுக்கு ஐ.நாவால் பரிந்துரை செய்யப்பட்டு  அந்தந்த நாடுகளினால் நேர்முகத்தேர்வு இடம்பெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டால் உரிய நாட்டிற்கு உள்வாங்கப்படுவார்கள். இதுவே இங்குள்ள அகதிகளின் நடைமுறை ஆகும்.

மதுரன் ஈழத்தைச் சேர்ந்தவன்.அவனிடம் கடவுச்சீட்டு கூட இருந்திருக்கவில்லை. ஆனால் அவன் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட மூன்றாம் நாட்டு மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் ஒரு அகதி. எனவே அவனால் பதிவுத்திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே அவசர அவசரமாக கோயிலில் மாலை மாற்றி திருமணம் முடிக்கப்பட்டது. எந்த நேரத்திலும் கப்பலுக்கு செல்லும் அழைப்பு வரலாம் என்ற காரணத்தினால்.

ஆம்..!
கனடா செல்வதற்காக தாய்லாந்தில் இருந்து கப்பலினை கொள்வனவு செய்து அதில் ஈழத்தமிழர்களை ஏற்றி அனுப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு இலங்கையில் இருந்து பெருமளவில் மக்கள் தாய்லாந்தில் குவிந்து கொண்டிருந்த காலப்பகுதி அது. ஆனால் அதற்கு முதலே ஐரோப்பிய நாடுகளுக்கென்று பல ஆட்கடத்தல் காரர்களினால் பணம் ஏமாற்றப்பட்டு நிர்க்கதியாகிப்போன நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாக தாய்லாந்தின் புறநகர்ப்பகுதிகளில் வாழ்ந்து வந்திருந்தனர். அதில் மதுரனும் ஒருவன். உறவுகளால் கை விடப்பட்டு ஐ . நாவின் உதவியில் அவன் ஒரு சிறிய அறையில் தங்கி இருந்த பொழுதில் ஏற்கனவே அவனைப்போன்ற கைவிடப்பட்ட இரு இளைஞர்களுக்கும் அவன் அடைக்கலம் கொடுத்திருந்தான்.

மதுரன் தங்கியிருந்த அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் பல தமிழர்கள் தங்கி இருந்தனர். தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் கண்களுக்கு தென்படாதவாறு அந்த அடுக்கு மாடிக்குடியிருப்பு அமைந்திருந்தது. மிகவும் கடினப்பட்டு பயணிக்கும் தொலை தூரத்தில் அதாவது புறநகரின் பிரதான வீதியில் இருந்து உள்ளே ஒதுக்குப்புறமாய் பல மைல்கள் பயணிக்கும் சபான்மை பெர்ம்சீன் என்னும் இடத்தில் தான் எல்லோரும் தங்கி இருந்தனர். கிட்டத்தட்ட 1500 இலிருந்து 2000 வரையான தாய்லாந்து பாத்திற்கு (இலங்கை ரூபாய் ஆறாயிரத்து ஐந்நூறு இலிருந்து எண்ணாயிரம் ரூபாய் வரை ) அங்கு வாடகைக்கு அறைகள் எடுத்துக்கொள்ள முடியும். ஒரு கூட்டுக்குடும்பத்தினை ஒத்து ஒற்றுமையாய் வாழ்ந்த அந்த தொடர்மாடி குடியிருப்பில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் உட்பட மதுரனும் இருந்து வந்தான்.

அச்சமயத்தில் தான் அங்கு தங்கி இருந்த சசி என்ற ஒருவர் தான் கனடாவிற்கு கப்பல் செல்லும் விடயத்தை கூறி பணம் வசூலித்து கொண்டிருந்த போது மதுரனும் அவரின் வலையில் விழுந்தான். மதுரனிடம் பணப்  பின்புலம் இல்லாத காரணத்தினால் சசியிடம் கனடா  சென்றதும் பணம் கொடுப்பதாய் கூற சசியோ அதை ஏற்றுக்கொள்ளாது மதுரனிடம் அவனுக்கு  தெரிந்த இங்கிருக்கும் ஆட்களை தனக்கு  அறிமுகப்படுத்தி உதவி செய்தால் அவனை கனடாவுக்கு ஏற்றி அனுப்புவதாக நம்பிக்கை வளர்த்தான். உதவும் மனப்பாங்கு கொண்ட மதுரன் தனக்கு தெரிந்த தாய்லாந்து வாழ் நண்பர்களிடம் இதனை தெரிவித்து சசியுடன் இணைத்து விட்டான். அதன் பின் சசி மதுரனை தனக்கு உதவியாக வைத்துக்கொண்டான். எனவே  தான் திருமணம் செய்யவிருக்கும் நிலாவினை அழைத்துச் செல்ல முடிவு பண்ணி மிக அவசர அவசரமாக அவளை தாய்லாந்திற்கு அழைத்துக்கொண்ட மதுரன் நிலாவின் உறவுகளையும் ஓரிரு நாட்களில் திருப்பி அனுப்பி வைத்ததுடன் நிலாவின் சகோதரனை அனுப்ப  சசியிடம் பணமும்  கொடுத்தான்.

அதற்கிடையில் ஐ. நாவில் அகதியாய் பதிந்து கொண்ட நிலா தாய்லாந்தில் தன் தனிமையினையும் தாயின் பிரிவினையும் எண்ணி தினம் கலங்கினாள். மதுரன் அல்லும் பகலும் தன் சுயநலம் நோக்காது உறவுகளுக்காக உணவு வழங்கல் இருப்பிட வசதிகள் ஏற்பாடு செய்தல் என்று ஓடித்திரிந்தான். கனடாவை அடைந்து நிம்மதியாய் தானும் நிலாவும் தம் வாழ்வினை இன்பமாய் ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கையிலும் எதிர்பார்ப்பிலும் தூக்கத்தை தொலைத்து ஓடிக்கொண்டே இருந்தான். கூடவே அவனின் மைத்துனனும் விசா இல்லாத தாய்லாந்தில் தங்கியிருந்த  பல உறவுகளை தாய்லாந்து  குடிவரவு அதிகாரிகளின் கண்ணுக்கு புலப்படாத வகையில் காப்பாற்றி பூங்கா ,கடை என்று அழைத்துச் செல்வதும் குறிப்பிட்ட நேரத்தில் எங்கெங்கு அதிகாரிகளின் வரவு உள்ளதென்று அறிந்து செயற்படுவதுமாய் தம் நிலை மறந்து செயற்பட்டு கொண்டிருப்பார்கள். இந்த துன்பங்கள் யாவும் அந்த உறவுகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மைகள் ஆகும். தாய்லாந்தில் இருந்த ஏனைய உறவுகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனையோ தடவை நிலாவின் சகோதரனுக்கு கப்பலுக்குச் செல்லும் பயணிகளோடு செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தும் அதை புறந்தள்ளி இறுதியாக செல்ல முடிவு பண்ணி இருந்த அந்த நல்ல எண்ணத்தின் துயரம் இன்று வரை தொடருகின்றது.

நடுக்கடலில் அதாவது சர்வதேச கடற்பரப்பில் தரித்து நின்றிருந்த  "கடற்சூரியன்" என்ற கப்பலின் உள்ளே ஏறுவதற்கு  தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து மணித்தியால பேருந்து பயணம் மேற்கொண்டு கரையோரத்தினை அடைந்து அங்கிருந்து சிறு ட்ரோலர் மூலம் கப்பலினை அடைய வேண்டும். சொங்கோலா என்னும் தாய்லாந்தின் கரையோரத்திற்கே பயணிகள் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கும் கடற்சூரியன் கப்பலுக்கு ட்ரோலர்கள் மூலமாக ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.


சொங்கோலா என்னும் இடம் மலேசியாவிற்கு அருகாமையில் உள்ள கரையோரப்பகுதியாகும். எனவே தலைநகர் பாங்காக்கில் இருந்தே தங்கியிருக்கும் பயணிகள் பெரிய சொகுசுப் பேருந்து மூலமாக வாரத்திற்கொரு தடவை அல்லது இரு தடவை என்று நகர்த்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு ஒருநாள் கப்பலுக்காக பாங்காக்கில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்து ஒரு சிலருக்காக வீதியில் தரித்து நின்ற சமயம் குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக்கொண்டது. அவர்களிடம் விசாரணை இடம்பெற்று கொண்டிருந்த சமயம் பயணிகள் வழங்கும் தகவல்களால் காத்திருக்கும் ஏனைய பயணிகளுக்கும் ஆபத்து வரும் என்பதைக்கேள்விப்பட்டு அவசரமாக தன் பாதுகாப்பினையும் பொருட்படுத்தாது   மதுரன் அந்த நடு நிசி வேளையிலும் அதாவது இரவு பன்னிரண்டு மணியிலும், பயணிகளையும் அவர்களது உடமைகளையும் காப்பாற்றி பூங்காவில் தங்க வைத்து அடுத்த நாள் வரை தனது மைத்துனனுடன் அங்கு கண் விழித்து காவல் காத்தான். அந்த முப்பது தொடக்கம் நாற்பது வரையான பயணிகளில் முக்கால் வாசி நபர்களை அவனுக்கு முன்பின் தெரியாது. யாவரும் ஈழத்திற்காகப்போராடிய உன்னதமான போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அநாதரவாய் அங்கிருந்து போரினால் துரத்தி எறியப்பட்டவர்கள். சரியாக நடக்க முடியாத ஒரு பெண் போராளியும் கரம் இழந்தவர்கள் என போரின் வடுக்களாகி நின்ற ஈழத்து உறவுகளே . எதற்காக காப்பாற்ற வேண்டும் என்று இதனை எழுதும் என்னால்  எல்லோரும் ஒரு நல்ல வாழ்வினை அடைந்திட வேண்டும் என்று தன்னை உருக்கிய அந்த ஜீவனின் உள்ளம் புரிந்து கொள்ள முடிகின்றது. இருந்தும் ஏன் இன்னும் அனாதரவாய் சிறையில் வாடுகின்றது என்பது தான்  என் அறிவிற்கு  இன்னும் புலப்படவில்லை.

 ஒரே தடவையில் ஐம்பது பயணிகள்  செல்லும் பயணத்தில் கரையோர அலுவல்கள் சரியாகும் போது இங்கு பெரிய ஏற்பாட்டாளர்கள் தகவல் அறிவிக்கப்பட  குறிப்பிட்ட பயணிகள் செல்லுவார்கள். கப்பல் ஏற்பாட்டாளர் ஒருவர் தன் மனைவி சுற்றங்களுடன் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டு தனக்கு விரும்பிய தனது பயணிகளை முதலில் அழைத்துக்கொண்டார். இதனால் பல பயணிகள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். மதுரனும் நிலாவும் கூட அவ்வாறே பின்னுக்கு தள்ளப்பட்டனர். வேறு யாராவதாக இருந்திருந்தால் நச்சரிப்பு கொடுத்தே ஏறி போய் இருந்திருப்பார்கள். எல்லோரும் ஏறட்டும் இறுதியாய் ஏறுவோம் என்று காத்திருந்த மதுரன் இன்று வரை காத்திருக்கின்றான் தாய்லாந்தில்....!

அதற்குக்காரணம் "காட்டிக்கொடுப்பு"

ஆம்..! கப்பல் ஏற்பாட்டளர்களான தாய்லாந்தில் கப்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிலரை   ஏற்கனவே கப்பலில் ஏறி அமர்ந்து கொண்ட அந்த "ஒருவர்" செய்மதி (சற்றலைற்) தொடர்பாடல் மூலம் தாய்லாந்தின் காவல்துறை பிரிவுகளுக்கு காட்டிக்கொடுத்து விட்டார். அவர்களை சிறையில் தள்ளி விட்டு தான் தப்பித்துக்கொள்ள அதாவது பணத்தினைச் சுருட்டத் தீட்டிய திட்டம் அது. தாய்லாந்து காவல் துறையிடம் அகப்பட்ட ஏற்பாட்டாளர்கள் கப்பலுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் ஒரு தொகை உணவுப்பொதிகளுடனுமே சிக்கினர்.

அன்றைய இரவில் மதுரனும் நிலாவும் கண்ணீரோடு தாய்லாந்தின் தக்சின் வீதி எங்கும் உலவிக்கொண்டே இருந்தனர். எங்கே கப்பல் பிடிபட்டு நாம் போக முடியாமல் போய் விடுவோமா...??  என்று தெய்வங்களின் நாமங்களை உச்சரித்து நா வறண்டு விடிந்தது கூட தெரியாமல் அலைந்தனர். அந்த வீதியினை எப்போது கண்ணுற்றாலும் மதுரனும் நிலாவும் சலனமற்றுப் போய்விடுவார்கள். .இரு நாட்களின் பின் அந்த ஏற்பாட்டாளர்கள் பிணையில் வெளியே வந்தனர். அதற்கிடையில் அடுத்த தவணைக்கிடையில் அவர்கள் தாய்லாந்து  நாட்டினை விட்டு வெளியேறியாக வேண்டும் கப்பலும் புறப்பட வேண்டும். திடு திடுப்பென நடந்து முடிந்த ஏற்பாடுகளால் ஏற்பாட்டாளர்கள் வெளியேறி விட கிட்டத்தட்ட அறுபது எழுபது பயணிகள் அதாவது இலங்கையிலிருந்து வந்தவர்கள் தவற விடப்பட்டுப்போனார்கள். இதில் பல போராளிகளும் அடங்கினர்.

தாய்லாந்தின் கரையோரத்திலிருந்து கப்பலுக்கு செல்லும் பயணத்திற்கு பல ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவாகும். இறுதிப்பயணத்தில் அதாவது அந்த ட்ரோலர் இரவு ஒன்பது மணிக்கு செல்ல இருக்கின்றது அதில் செல்ல உடனடியாக தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு வருமாறு பகல் ஒரு மணிக்கு அழைப்பு வந்தது. நிலா மதுரன் இருவருமே விமானம் ஏறிச் சென்று இருக்கலாம். கூடவே இருந்த அதாவது விடுபட்டு போன சிறுவர்களை அழைத்து கொண்டு விமான நிலையம் சென்றால் அங்கு விமானச்சீட்டு இரண்டு தான் இருந்தது. அன்று அந்த   சிறுவர்களுக்காக தம் வாழ்வினை தொலைத்துப்போன முட்டாள்களாக மதுரனும் நிலாவும்.....!

அன்றைய ட்ரோலர் புறப்பட்டு போகும் போது ஏற்கனவே பயணிகளில் ஒருவனாக கரையோரத்தில் நின்றிருந்த நிலாவின் சகோதரன் அதில் ஏறிப் புறப்பட்டு போயிருக்கலாம். விதி யாரை விட்டது. அக்கா அத்தான் நாளை வருவார்கள் நான் அவர்களோடு வருகின்றேன் என வாசற் கதவினை தட்டிய வாழ்வினைத்  திருப்பி அனுப்பிய புண்ணியவான் அவன். அதன் பின் ட்ரோலர் செல்லவேயில்லை.

ஆம்..! அந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவனான கப்பலில் ஏறி உட்கார்ந்த அந்த நல்ல மனிதன் ட்ரோலர் பயணத்திற்கு பணம் கொடுக்க மறுத்து விட்டான். அத்தனை பயணிகளிடமும் வசூல் செய்த பணத்தினை கப்பலில் இருந்தவாறே இலங்கையில் முதலீடு செய்தால் பயணத்திற்கு பணம் எப்படிகொடுக்க முடியும்...?? (இங்கு அந்த கப்பல் ஒழுங்கமைப்பாளரின் பெயரைக்குறிப்பிடக் கூறி எனக்கு பலர் வேண்டுகோள் விடுத்தும் நான் இதில் குறிப்பிடவில்லை. )
அந்த மனிதன் 2012 இல் இலங்கையில் விபத்தில் அடிபட்டு இறந்தும் போய் விட்டான். ஒருவன் இறந்த பின்னும் தூற்றப்படுகின்றான் என்றால் அவன் எத்தகையவன் என்பதனை விளக்கிக்கூற வேண்டிய அவசியம் இல்லை. (அவரின் இறப்பிற்கான காரணமும் அதற்கான சூத்திரதாரிகளும் பற்றிய விளக்கம் அடுத்து வரும் பாகங்களில் இடம்பெறும்.)

 இறுதியான ட்ரோலர் பயணம் 22.06.2010 தான் இடம்பெற்றது. அதன் பின் அழைக்கின்றோம் புறப்பட்டு வாருங்கள் என்ற ஏற்பாட்டாளர்கள் பின்னர் அழைக்கவேயில்லை. ஆட்களை விட கப்பலுக்குச் செல்லும் உணவுப்பொதிகள் அதிகமாக அறைகளில் நிரம்பி வழிய  வளி மேல் செவி வைத்து கரையோரத்தொலைபேசி அழைப்பிற்காக மதுரனும் நிலாவும் அந்த சிறுவர்களும் காத்திருந்தார்கள்.

தொடரும்.........

தமிழன் முயற்சியால் அந்த பெரிய கப்பல் கனடாவிற்கு சென்றது என்பதனை விட அதே தமிழனின் ஒரு விசேடமான அம்சமான "காட்டிக்கொடுப்பு " நிகழ்த்திய கொந்தளிப்பு எவ்வித தாக்கத்தை தாய்லாந்தில் ஏற்படுத்தியது என்பது விரைவில் அடுத்த பாகத்தில்  தொடர்கின்றது........!

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து


மூன்றாம் பாகம் பார்க்க
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea-3_23.html

முந்தைய பதிவிற்கு செல்ல...
http://arasikavithaikal.blogspot.com/2014/01/mv-sunsea.html

No comments:

Post a Comment