அன்று 2013 இன் ஜனவரி மூன்றாம் நாள்
அடித்துப்பிடித்து பேருந்து ஏறி
அசையாமல் நிற்க இருக்கைக்கம்பிகளை
இறுக்கிப்பற்றிய கரங்களை தட்டி
இடம் கொடுக்கப்பட்டது உட்கார....
நின்று தள்ளாடுவது ஈருயிர்கள் அல்லவோ..?
நிறுத்தம் வரும் போது சுழன்றடித்து தடுப்பு
பிரயோகிப்பதும் மீண்டும் விரையும் போது
பிடித்து இழுத்து விழுத்தும் நிலை வேகமுமாய்...
சடுதியான ஏற்ற இறக்கமாய் என்
வாழ்வைப்போல பாவம் பேருந்தும்
சிக்கித்தவித்தது ஓட்டுனரின் கையில்..
அப்படி என்னதான் அவசரமோ இந்த ஓட்டுனருக்கு...!
இரைச்சலும் தூசியும் புகையும்
இசைவாக்கம் பெற்று விட்டன...!
இதயவன் கம்பிக்குள் அடைபட்டதன் விளைவன்றோ..!
இன்றைய நிலை அவன் அறிந்திட வாய்ப்பில்லை...!
பட படத்து பயணம் செய்து ஒருவாறு
படி இறங்கி கொண்டேன்...!
நிலத்தில் கால் ஊன்ற முன்
நிற்காமல் விரைந்த பேருந்தின் வேகம்
நிற்க விடாமல் என்னை
நிலை குலைய வைத்தது...!
விதி சதி செய்வதல்ல - பதி யவனை பிரிந்து
கதி யற்றுபோனவள் நான்..!
வதி விடம் தாண்டி நிதி இழந்து நாதி அற்று
பாதி ஆகிப்போனவள் பீதி யோடு நடக்கின்றேன்
ஆதியின்றி அந்தம் நோக்கி...
உறுமிக்கொண்டே விரைகின்ற வாகனங்களை
உற்று நோக்கி மூச்சிரைக்க ஏறிக்கடந்தேன் மேம்பாலத்தினை..
எதிரே வீற்றிருக்கும் மகப்பேற்று மனை செல்ல...
என்னைப்போல் பலர்
சுமந்து வந்து நின்றார்கள்...!
பட்டாளமாய் வந்து ஆற்றுப்படுத்தி
பரிதவித்து செல்கின்றார்கள்...!
சுற்றி சுற்றி நிற்கின்றார்கள்...!
எட்டி எட்டிப்பார்கின்றார்கள்..!
பழம் கொடுத்து விடைபெறுகின்றார்கள்...!
திரும்பி திரும்பிப்பார்க்கின்றேன் நான்...
என் நிழல் கூட அருகில் இல்லை...!
கடந்து போன தருணங்களில்
உடைந்து போன உள்ளம்..!
பெண்மை எதிர்பார்த்து ஏங்கும்
பெற்றவளாகும் தருணம்
உற்றவன் அருகிருக்கும்
நற்றவம் கிடைக்காமல்
கடந்து போனவை 2013 இல்
தொலைந்து போன என் அரிய
பொக்கிசத்தருணங்களே..!
அழுது புரண்டாலும்
அவை மீண்டிடப் போவதில்லை...!
தொலைத்த தருணங்களாய்
தொண்டைக்குழியில் இறுதி வரை
தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும்..!
அரசி நிலவன்
இந்த ஆண்டு எல்லாம் நல்லபடியாக நடக்கும்...
ReplyDeleteஇனி வரும் காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
ReplyDelete