Search This Blog

Wednesday, 11 September 2013

பர பரப்பு..!!!




செவிகள் மட்டுமல்ல
செக்கச்சிவந்த விடிகாலை வானத்தின்
செவிப்பறையும் கிழிந்து தொங்கும்...
காற்றை கிழித்து விரைந்து வரும்
கிபிர் என்ற அரக்கனின் மூச்சிரைப்பால்....


கண்கள்  ஆகாயம் நோக்க
கரங்கள் குஞ்சுகளை அள்ளி எடுத்திட
கால்கள் தட்டுத்தடுமாறி இடறி
பர பரக்கும் நெஞ்சம் ஒருவாறு
பதுங்கு குழிக்குள் பதுங்கிடும்...!

பருந்திற்கு விருந்தாகா வண்ணம் குஞ்சுகளை
இறகணைக்கும் கோழியினை போன்று
நெஞ்சோடு குழந்தைகளை அணைத்துத்  தன்னை
கவசமாக்கும் ஈழ அன்னையின் பட படக்கும்
நெஞ்சில் முகம் புதைத்து முழி பிதுங்கும்  - எதிர்கால
முளை விருட்சங்களின் பர பரப்பினை - நான்காண்டுகளுக்கு
முந்தி உணரத்தெரியாத சர்வதேசமே...!


அள்ளி அள்ளி பல்குழல் எறிகணைகளை வீசி
அருமந்த உயிர்களை அநியாயமாக துடி துடிக்க வைத்து
அப்பா இது அம்மா அது என்று சதைப்பொட்டலம் கட்டி - கதறி
அழுது துடித்த இளம்பிஞ்சுகளின் அந்த பர பரப்பினை
எள்ளனவேனும் சிந்திக்க தெரியாத சர்வதேசமே...!

எடுப்பார் கைப்பிள்ளைகளாக இறுதிக்கணங்களில்
எறிகணைகளை துணிச்சலோடு எதிர்நோக்கி
உதிரக்கடலில் தோய்ந்து காய்ந்து துப்பாக்கி சன்னங்கள்
பறந்து வரும் திசை அறிந்து விலகி புரண்டு எழுந்து
நிமிர்கையில் அடுத்த எறிகணையின் வெடிப்பினை
நிச்சயப்படுத்தி மாறி மாறி உயிரை கையிலும்
காலிலும் பிடித்து மீறித்தவறி ஓடும் உயிரை இழுத்துப்பிடித்து
மீண்டும் உடலுக்குள் செலுத்திய துணிச்சல்.....
அறிந்தும் கண் மூடி உலவும் சர்வதேசமே....!


பர பரப்பில் செய்வதறியாது நின்று சன்னங்களுக்கு
பலியாகிய சொந்தங்கள்...,
எறிகணைகள் ஏறி வெடித்தும் வெடிக்காமலும்
உருக்குலைந்த உடன்பிறப்புக்களை கண்டும் கடந்தும்
உயிர் இழந்த உடலங்கள் சதைகளோடு
கழித்து வந்த  இரவுகள் பகல்கள்...!

எங்களின் தேசம் செந்நிறமாய் குருதியில்
குளித்து தமிழனின் சதைகளால் நிரம்பி வழிந்த
அந்த கொடூரம் நிறைந்த காட்சி என்றைக்கும்
அழியாமல் இறுதிவரை நெஞ்சத்தில் பர பரப்போடு
பயணிக்கும் நினைவுகளை சுமந்த எத்தனையோ உறவுகள்
பல இறுதிக்கணத்தில் போர்க்குற்ற சாட்சிகளாக
பயந்து பயந்து வழங்கிய சாட்சிகளை ஏறெடுத்தும்
பார்க்காத பக்கச்சார்பு சர்வதேசமே...!


ஒவ்வொரு முறையும் காரணம் கூறி
வருகை தந்து நடைப்பிணங்கள் எங்களை
உயிர்ப்பித்து விட்டு காட்சிப்பொருளாக்கி,
உலகத்தின் வேடிக்கை கதா பாத்திரங்களாக்கி,
எங்கள் நம்பிக்கைகளை அறுத்து எறிந்து
உங்கள் வருகைகளை செய்திகளில்
பர பரபாக்கி எங்கள் இதயங்களை
இறுக்கி பிழிகின்றீர்கள்....!!!


சரணடைந்த கணவன் இருக்கின்றாரோ...?
ஒவ்வொரு குங்குமமும் தாலியும்
ஒரு சந்தேகத்தில் தான் அலங்கரிக்கின்றது அவர்களை....!
எந்நேரத்திலும் அழிக்கப்படலாம் என்று குங்குமங்களும்,
எந்நேரத்திலும் அறுக்கப்படலாம் என்று மஞ்சள் தாலிகளும்,
எம் பெண்களின் நெற்றியோடும் கழுத்தோடும்
பர பரத்து முணு முணுக்கும் ஒலியில்
பதை பதைக்கின்றார்கள் அப்பேதைகள்....!


அப்பா வராமலேயே போயிடுவாரோ...?
புகைப்படத்தை வெறித்துப்பார்க்கும் ஒவ்வொரு
ஈழக் குழந்தையின் இதயமும்
பரபரப்பின் வரைவிலக்கணம் நன்கறியும்...


கொள்ளி போடுவதுக்கும் வர மாட்டானோ...?
தள்ளாடும் வயதிலும் ஏக்கத்தின் உச்சத்தில்
உயிர் துறக்க காத்திருந்தாலும்..,
காணாமல் போன பிள்ளைகளுக்காக
காத்திருக்கும் பெற்றோரின் உள்ளப்பரபரப்பு...!


புனர்வாழ்வு எனும் பெயரில் சிதைக்கப்பட்டு,
புனித போரில் களமாடிய நினைவுகளை சுமந்து - மனம்
புண்பட்டு புதிய சுழலில் வாழத்தடுமாறி,
புலனாய்வு பிரிவு எந்நேரத்திலும்
புலன் விசாரணைக்கு அழைக்க கூடும் என்ற
பர பரப்பில் பகல் இரவாய் துடிக்கும்,
ஈழத்தில் ஒரு காலத்தில் காவலர்களாய்
தலை நிமிர்ந்து நடந்தோரின் குமுறல்கள்..
தனியாக ஒரு காவியம் படைத்திடலாம்....!


இன்னும் இன்னும் ஈழத்தில்.....
இன்று வரை இலை மறை காயாய்
இழைக்கப்படும் அநீதிகள்.....,
இழக்கப்பட்டு கொண்டிருக்கும்...
ஈழத்தமிழனின் நிலங்கள், அதிகாரங்கள், உரிமைகள்...
ஈழத்திலேயே புதைந்து தான் போய்க்கொண்டிருக்கின்றது
நாளை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய கூட
நாதி அற்றுப்போய்  விட்டான் ஈழத்தமிழன்...!!!
நம்பிக்கைகளையும் அவனோடு புதைக்கும் சர்வதேசம்
நன்றாகத்தான் உலவுகின்றது எவ்வித பர பரப்புமின்றி....
பர பரப்பு என்ற பதம் ஈழத்தமிழனுக்கு மட்டுமே உரித்தானதோ...?

பல நாடுகளில் பரந்திருக்கும் ஈழத்தமிழனவனுக்கு
படுத்து உறங்க தன்னும் சொந்தமாய் நாடு இல்லை...!
"படுகொலைகள்" "காணாமல் போதல்" "குருதி" "கண்ணீர்".
பல ஈழத்தமிழர்களின் எழுதப்பட்ட  சொத்துக்கள்....
ஆக....
பர பரப்புக்கு சொந்தக்காரன் ஈழத்தமிழன் மட்டுமே...!!!







லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பர பரப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/




Tuesday, 10 September 2013

திரை...!!!.



உழைப்புகள் சில கண்ணுக்கு விருந்தாக
உலகமே மெய்மறந்து ரசிக்கும் திரையில்
உண்மை உழைப்புக்கள் பல காட்டப்படுவதில்லை..!

திரையிட்டு வெளியிடுகின்றார்கள்..!
திறமையான நடிப்பு என்று கை தட்டி
விருதுகளும் கை மாறுகின்றன.....
காலங்காலமாக...


போலியாக உழைப்பவன் போற்றப்படுகின்றான்
திரை என்னும் மாய உலகில்.....!
உண்மையாய் உழைப்பவன் பார்வைக்கு கூட இல்லை
திரை என்னும் பொழுது போக்கு உலகில்...!

அதையொத்து....

உண்மை உலகில்
சிரிப்புக்களும் கேலிகளும் திரைக்கு முன்  வழங்கப்படுகின்றன..!
அழுகைகளும் வேதனைகளும் பின்னே  மறைக்கப்படுகின்றன..!
இங்கும் ஒரு பெரிய திரை.....!

மனத்திரையின் பின்னே கொட்டிக்கிடக்கும்
மலை மலையான துன்பங்கள் பார்வைக்கு
மறந்தும் விடப்படுவதில்லை - இவற்றை
மறைத்துக்காட்ட  வானாளாவி நிற்கும் - ஒரு
மகத்தான மனத்திரை வேண்டும்...!!!.


அரைகுறையாய் திரை விலகினாலும்
அத்தனை துன்பங்களும் உடனடியாக
அனைவரின் பார்வைக்கும் விருந்தாகிடுமோ...?
அச்சத்தில் என்னென்ன உழைப்புக்கள்...!


சிரித்துக்கதை பேசி சின்னச்சின்னதாய் கிண்டல் செய்து
கடினப்பட்டு காட்டிக்கொள்கின்றோம்...!
மகிழ்ச்சியாய் தான் நாமும் இருக்கின்றோம் என்று
மற்றவர்களைப்போல நடித்துச்சந்தோசிக்கின்றோம்,,.!

இல்லை என்பதை இல்லை என்று உரைத்தால்
இல்லாதவர்கள் என்று இகழ்ந்திடுவார்களோ..?
'இயலாமைகள்' 'இழப்புக்கள்' 'இல்லாதவைகள்'
இழுக்கப்படும் வலிமையான மனத்திரைகளால்
இயன்றளவு  மறைக்கப்படுகின்றன..!
இல்லை இல்லை புதைக்கப்படுகின்றன - எங்கள்
இதயங்களுக்குள் நிரை நிரையாக....

மனிதர்களின் உண்மைத்திரையில்
மகத்துவமான நடிப்பை வெளிப்படுத்தி
மற்றவர்களை நம்ப வைக்கின்றோம்....!
மனத்திரையின் பின்னால் இதற்கு
மனம் வருந்தாமல் ஒத்திகையும் பார்க்கின்றோம்...
மறு நாள் எப்படி நடிக்கலாம் என்று....

அடுத்தவர்களின் ஏளனங்கள்
அறியத்துடிக்கும் ஆவல்கள்
அனுபவிக்கும் துன்பத்தை விட
அதிக வலி  மிகுந்தது என்பதால்

திரை என்பது எமக்கு அத்தியாவசிய ஒன்றாயிற்று-மனதில்
திரையிட்டு எம் வாழ்வினை வாழப்பழகி நாளாயிற்று
திரை நீங்கும் காலம் கை கூடினாலும் எம்மால் - மனத்
திரை இன்றி வாழ முடியுமோ என்பது சந்தேகமே....!



நிலவரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "திரை" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/




Monday, 9 September 2013

மெட்டி...!!! (இறுதிக்கணம் வரை... இசைத்துப் பயணிக்கட்டும்....!)



அம்மி ஏற்றி அன்பாய் அணிவித்தவன் காதல்
அலாரம் போன்று.... அடிக்கடி ஒலித்துக்  
கொண்டேயிருக்கின்றது....! இந்த சின்ன ஒலியின்
இதய நாதம் எனக்குள் - அவனின்
இதயத் துடிப்பாக துடித்து...,
இரும்பின் பிணைப்பாக அவனோடு
இணைத்து ஒலிக்கின்றது
இன்று வரை...!

இதயத்தை கழற்றி எனக்குள்
இடம் மாற்றி வைத்து - என்
இதயமதை கொண்டு சென்றவன்
இந்த ஒலியை மட்டும் தன்
இதயத்துடிப்பாக விட்டு சென்றான்...!

இதய நாதமாய் உன்னோடு - உன் 
இறுதிக்கணம் வரை... 
இசைத்துப் பயணிக்கட்டும்....! 
இழந்திடாதே எவ்விடர் வந்திடினும்
இறுக்கி கரம் பற்றி என்னவன்
இறுதியாய் உதிர்த்த வார்த்தைகள்.....!








இறுதிக்கிரியையில் - என்னவனின்
இதய நாதமதை துறக்க மறுத்த என்னை
இன்று வரை முச்சந்திகளிலும் தெருக்களிலும்
இகழ்ந்து பேச பின்னிற்போர் அரிதே....!





கடவுளை கல்லாய் பார்க்கும் மனிதர்களை போன்று
வெறும் கண் கொண்டு நோக்குவோருக்கு
வெள்ளி மெட்டியாய் காட்சி கொடுக்கும் - இந்த
வெள்ளி ஒவ்வொரு முறையும் ஒலிக்கும் போது
அள்ளி செல்லும் என் மனதை என்னவனை நோக்கி...

தரையைத்தொட்டுச்செல்லும் உராய்வால் என்னை
வருடிச்செல்வான் அவன் தன் நினைவுகளால் என்பதை
முச்சந்தி முக்கியஸ்தவர்கள் அறிந்திட நியாயமில்லை...!
முதுகெலும்பு அற்றோரின் கேலிக்குப் பலியாகி - என்னவனின்  
மூச்சினை நிறுத்திட போவதுமில்லை....! 
முத்தான என் மெட்டியினை துறந்திட போவதுமில்லை...!

நடை பயில்கின்றேன் அதிகமாக...
நன்றாக ஒலிக்கட்டும் என்னவனின் இதயம்...!
நகைப்புக்களின் ஒலியை அடக்கிட
நன்றாக ஒலிக்கட்டும் என் மெட்டியில் அடங்கிய
என் இதயவனின் மூச்சொலி.....!!!

எட்டி எட்டி போகின்றேன் விரைவாக
தட்டி தட்டி அழைத்து - என்னவன்
முட்டி முட்டி உதைக்கின்றான்
முச்சந்தி வாய்களை அவன்
மூச்சொலியால்......!!!

வெட்டி வெட்டி சாய்க்கின்றான்
வெட்டி பேச்சு மனிதர்களை
மெட்டி ஒலியால்...!!!



மெட்டியல்ல மெட்டியல்ல இது எனக்குள்
பூட்டி பூட்டி வைத்திருக்கும் என்னவனின் 
புனிதமான உயிர் மூச்சு..!!!

அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மெட்டி" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/






Thursday, 5 September 2013

நடிப்பு....!!!


உலகம் மனதால்
ஊனமாகி நாளாகிவிட்டது
உயிர்களின் உணர்வுகளும் உயிர்த்துடிப்புகளும்
உண்மையற்று நடிப்பாகி நாளாகி விட்டது.

நடிப்பதற்காக  கண்ணீர் சிந்தி சிந்தி
உண்மை கண்ணீரும் இன்று
நடிப்பாகி அர்த்தமற்று காலாவதியாகி விட்டது.


அன்பும் பரிவும் நகைப்பிற்கும்
அழுகையும் சிரிப்பும் ஏளனத்திற்கும்
பலிக்கடாவாக்கி பலகாலமாகி விட்டது...

உணர்வுகள் செத்துப்போய் மனிதன்
உயிரோடு உலவுகின்றான் உலகில்
உண்மைகள் சாகடிக்கப்பட்டு
கிரியைகளும் செய்து திதிகள் பல  கடந்தாயிற்று..

உயிராய் நேசிக்கும் உறவுகளும்
புரிந்துணர்வின்றி உண்மை  அன்பினையும்  ஒற்றைச்சொல்லில்
புதை குழி தோண்டி புதைக்கின்றார்கள் "நடிப்பு" என்று

நடிப்பு என்பதை அறியும் வரை
நடிப்பவன் நடித்து கொண்டிருக்க
நடிப்பை நம்புவோன் (நம்ப)நடிக்க வைக்கப்படுவான்..

உணர்வுகளும் வேதனைகளும் நளினங்களாக நயம் பிடிக்கப்படும்....
பாசாங்குகளும் பொய்களும் ஒப்பனைகளாக அலங்கரிக்கப்படும்...
காலங்காலமாய் அரங்கேறி வருகின்றது-இந்த
நடிப்பு நாடகம்(ஏமாற்று வேலைகள்)
நாடக(உலக)அரங்கில்...!

நாடகத்தின் ஆட்டம் தாங்காது
நாடக அரங்கம் ஆட்டம் காணும் வரை...
நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும்...
நாடக அரங்கம் ஒன்று ஒத்திகையும்
பார்க்கப்படுகின்றதாம் விண்வெளியில்



ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க கூடிய அரங்கமா - என்று
ஆராய்ச்சியும்  தொடர்ந்து கொண்டிருக்கின்றதாம்....
அரங்கம் ஒன்றின் மீது  போடும் ஆட்டமே
அரள வைத்து அல்லாட வைப்பது போதாதோ...?

அளவுக்கதிக நடிப்பினை தாங்க முடியாத அரங்கம்
அவ்வப்போது தற்கொலைக்கு எத்தனிக்கின்றது...
அடிக்கடி செப்பனிடப்பட்டு அரங்கம் தள்ளாடி
அரை உயிரில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாகி
அழகாய் தான் காட்சி கொடுக்கின்றது-ஒரு வேளை
அரங்கமும் நடிக்கின்றதோ???



அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "நடிப்பு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/


Thursday, 29 August 2013

எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....???




அவலங்கள் நடந்தேறுவதை கண்டும் 
அவலம் ஒன்று இடம்பெறபோவதை 
அறிந்தும் அங்கிருந்து தலைதெறிக்க 
அவசர அவசரமாய் தப்பி ஓடுவதும் - பின் 
"விசாரணை" "போர்க்குற்றம்" 
"மனித உரிமை மீறல் " என்று
உலக நாடுகள் முன் நற்பெயருக்கு முனைவதும்
உண்மை நிலைகளை கண்டறியும்
"உத்தியோக பூர்வ விஜயம்" என்று
கொலைக்களம் ஏகி இரண்டும் கெட்டான்
அறிக்கைகளை கடமைக்கு சமர்ப்பித்து
அல்லல் படும் உறவுகளின் நம்பிக்கையில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் ஐ. நாவே...!!!

இலங்கையின் இனவாத வெறிக்கு
இரையாக போகின்றவர்கள் என்றும்
இவர்கள் நாளை அங்கு காணாமல் போக
இருப்பவர்கள் என்றும் கத்தி கத்தி
உன் செவிகளுக்குள் விழுந்து விழுந்து
உரத்து சொல்லியாயிற்று....

ஈழத்தமிழர்கள் என்று தானே
ஈற்றில் அகதி என்றாய்....!!!
ஈரைந்து திங்கள் எம் கண்ணீர்
ஈன வாழ்வினை கண்டிருந்தும்
ஈழத்தமிழர் என்று காரணங்காட்டி
ஈவிரக்கமின்றி துரத்துகின்றாயே...!



இன்று நீ எம்மை துரத்தி விட்டு
நாளை அங்கு நல்லபிள்ளைக்கு வருவாய்
எம் பிள்ளைகள் கையில் எம் படங்களுடன்
காணாமல் போனோர் உறவுகளாய் உன் முன்னால்
காரணமே நீ என்று அறியாமல் பத்திரிகைகளும்
கலர் கலராய் படம் பிடிக்கும்...!!!
வரலாறுகள் சொல்லி வரும் கதை இது....
வந்தார்கள் சென்றார்கள் என்று நீங்களும்
உயிரோடு சாகடிக்கப்பட்டும்
உலகத்துக்கு தெரியாமல்
உறவுகளுக்கும் தெரியாமல்
காணாமல் போனவர்களாய் நாமும்....
தொடர்கின்ற கதை இது.....






எம்மை காப்பாற்ற தயக்கம் காட்டும் உன் சபையில்
எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....?
அகதி என்ற பதத்திற்கு உன் அகராதியில் - நீ
அளித்த வரைவிலக்கணம் தான் என்ன ??

எங்களுக்காக என்ன குரல் கொடுத்தீர்கள்??
எங்களுக்காக என்ன தட்டி கேட்டீர்கள்??
உங்கள் சாசனத்தை மாற்றி எழுதுங்கள்...
ஈழத்தமிழனுக்கு ஐ.நா வில் அகதியாக கூட
உரிமை இல்லாதொழிக்கப்படுகின்றது என்று..







நிலவரசி நிலவன் 



துபாயில் இறுதிக்கணங்களில் உயிர் ஊசலாட எந்த நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கண்ணீரோடு தவிக்கும் பன்னிரு ஈழத்தமிழ் உறவுகளுக்காக அவர் தம் எண்ணங்களை பிரதிபலிப்பாக.....எழுதியது.... 

Saturday, 3 August 2013

அடங்கா மண் கற்றுத்தந்த வீரம் அடக்கமான உதிரத்தில்.... அமைதியாய் உறங்குகின்றது....!!!


வெடியின் நெடிகள் நிறைந்த
வெஞ்சமர்களை நெஞ்சு நிமிர்த்தி 
களமாடி சிங்களத்தின் பிடரி   
கதிகலங்க வைத்து....


நெஞ்சிலே நஞ்சு மாலையினை  ஏந்தி 
நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கும் 
தமிழீழ  வேட்கையின் சுவடுகளை...
தலைவன் பின்னால் தடம் பதித்து.....,,
தலை நிமிர்ந்து  திமிருடன் 
தலை வணங்காது  நாம் நடந்த 
தரை எங்கும்  இன்று நாணி
தலை குனிந்து செல்லுகின்றேன்...!!!



அடங்கா மண் கற்றுத்தந்த வீரம்  
அடக்கமான உதிரத்தில்....
அமைதியாய்  உறங்குகின்றது....!!!

யாசிக்கும் யாசகனுக்கு புன்னகை சிந்தும்  
யாரும் எம்மை நோக்குவது அரிதே...!
புறம் பேசிடும் உள்ளங்களும்  
புது உறவுகள் அல்ல - ஈழ
அன்னையை  நேசித்து, 
அண்ணனை துதித்து, 
புனிதமாய் எம்மை நினைத்த 
எம்மினமே....!!!
எள்ளி நகையாடுவதும்  
எம்மினமே...!!!

சொல்லாட 
சொந்தங்களே  பின்நிற்கின்ற
சோகமும்,,,  

எல்லையிலே - அன்று 
எட்டி உதை பட்ட  காடையர்  
எட்டப்பர் கூட்டத்தின் முன்னால் 
முதுகெலும்பு அற்ற வாழ்வும்,,

புனர்வாழ்வு என்ற பெயரில் எம் உள்ளத்தை 
புண்ணாக்கி எம்மை நோக்கும் அசிங்க கண்களும்,, 

" முன்னாள் போராளிகள்" என்ற அடைமொழி கொண்டு 
முகத்திற்கு நேரே விழிக்கும் செய்தியாளர்களின் 
வில்லங்கமான வினாக்களும் விளக்கங்களும்,,  


இரண்டடி தூரத்தில் பேசிடும் வசைமொழிகளும்,, 
இரவுக்கு மட்டும் தெரிந்திடும் கண்ணீரும்,,
எந்த நொடியும் வாசலுக்கு வரலாம் என 
எதிர்பார்த்து கலங்கிடும் விசாரணை அழைப்பும்,,
எம் இதயத்தில் எரியும் தீயினை அணைத்திடுமா???
எம் நெஞ்சில் நீறு பூத்த நெருப்பாய் தகிக்கும் நினைவுகளை அழித்திடுமா???


முடிந்து விட்டது என்று முட்டாள்தனமாய் எண்ணுகின்ற 
முடிவில்லா போராட்டம் முடிந்து தான் போய்  விடுமா?? 
முடங்கி தான் உள்ளதேயன்றி முகவரி அற்றுப் போய் விடவில்லை ...!!!


வரியணிந்த வேங்கைகள்...
கொடூர சிங்க கோரப்பற்களால் கிழிக்கப்படுவதும், 
நரிகள் கூட்டத்தால் எள்ளி நகையாடப்படுவதும்,
வீழ்ந்த விழுப்புண் ஆறும் வரையே............................... 



Wednesday, 31 July 2013

இணையத்தில் வந்து எந்தன் இதயத்தில் பதிவான என் உயிர்த் தங்கையே..!

  • என் அன்பு அண்ணாவின் இதயம் பேசுகின்றது.....
    இணையத்தில் வந்து எந்தன் இதயத்தில் பதிவான என் உயிர்த் தங்கையே..! உந்தன் உதயத்தில் உருவான கவிவரிகளைக் கண்டு எந்தன் இதயம் அழுகின்றதம்மா... சோகத்தாலான அழுகையில்லையம்மா..! பேரானந்தத்தால் வந்த அழுகையம்மா!

    தங்கை இல்லை என்ற தவிப்பை என் இதயத்தில் இருந்து அழித்து புதுப் பதிப்பை உருவாக்கி என் இதயத்தை உயிர்ப்பாக்கிய என் அன்புத் தங்கையே..!

    எல்லோரையும் "தங்கை" என்றழைக்கின்ற போது என் மனதாலே மகிழ்கின்றேன். உன்னை மட்டும் என் தங்கை என்றழைக்கின்ற போதுதானே ... என் உயிராலே உருகுகின்றேன்.

    "என்னோடு ஒப்பிடும் போது எழுத்தில் நீ பூஜ்ஜியம் என்றாய்..!" - தவறம்மா... உன்னோடு ஒப்பிடும் போது என் எழுத்துக்கு நீதான் ராஜ்ஜியம் அம்மா! நீ ஒரு இலக்கியப் பிறப்பு..! அதனால்தான் உன்னிடம் என்னை இணைய வைத்தது உன் கவி வரிகளின் தனிச் சிறப்பு!

    உன்னை நான் அதிகமாக நேசிக்கின்றேன். என் நேசம் என்பது... காதலை விடப் புனிதமானது! கடலை விட ஆழமானது! புயலை விட வேகமானது! பூக்களை விட மென்மையானது! இது காதலும் அல்ல.. . இது காமமும் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது! எப்படி சொல்வதென்று எனக்குத் தெரியவும் இல்லை!

    உன்னில் நான் கொண்ட பாசத்தைச் சொல்ல எந்தக் கருவிகளும் இல்லை..! எந்த அளவீடுகளும் இல்லை..! நீயே கண்டு பிடித்துச் சொல்லம்மா...??? உன்னால் மட்டுமே முடியும்... என்னை அளப்பதற்கும் ... என்னை அழிப்பதற்கும்!

    உன் கவி வரிகளைப் படித்து தொலைத்து விட்டேன் என் எண்ணங்களை..! அதனால்,- உன்னை வாழ்த்த வார்த்தைகளே இல்லையென்று தவிக்கின்றேன். கோடி வார்த்தைகள் இருந்தாலும்... உன்னை வாழ்த்த... எந்த வார்த்தைகளுக்கும் தகுதியில்லை.! இருந்தும் என் அன்புத் தங்கையை வெறுமென அனுப்ப என் மனதிற்கு சம்மதமும் இல்லை..! உன்னை வாழ்த்த தேடித் தேடித் பார்க்கின்றேன்... இந்தத் தமிழ் மொழிகளில் அப்படியொரு புனிதமான.... அப்படியொரு பசுமையான.... வார்த்தைகளே இல்லை..! உன்னை வாழ்த்தாமல் இருந்தால் என் இதயம்.... இதயமே இல்லை..!

    அதனால் என் நெஞ்சைக் கிழித்து என் இதயத்தை அறுத்து உனக்கு அனுப்பி வைக்கின்றேன்... உன் அண்ணனின் அன்புப் பரிசாக ஏற்றுக்கொள்! என் இதயம் உனக்குள் இருந்து எப்போதும் உன் ஆயுள் வரையும்... உன்னை வளர்த்துக்கொண்டிருக்கும்! உன்னை வாழ்த்திக்கொண்டிருக்கும்!

    உன் உயிரான அண்ணா.
    (வல்வை அகலினியன்)

Friday, 26 July 2013

செயற்கைக்கிரகம்...!!! (நரகசாலை)



மின்விளக்கு சூரியன்...! 
சுற்றிலும் அழுக்கு நிற வானங்கள்..! 



வியர்வை மழைத்துளிகள்...!
சாக்கடையில் நிர்வாண குளியல்..!


ஆறு இஞ்சிக்கு ஒரு குவளைக்கஞ்சி..!
பனங்கிழங்கு உறக்கம்....!!!







விலங்குகளின் ஆதிக்கம்..! 

விஞ்ஞான வளர்ச்சியில் 
குடிநீரின் நிறமும் மாறிவிட்டது... 



இங்கும் வானவில் உண்டு...! 
ஏழு நிறங்களில் அல்ல 
ஏழு கம்பிகளாய்...


பூலோகத்தில் உள்ள அனைத்துவகை 
புழுக்களும் இங்கு உண்டு...! 



என்ன ஆச்சரியம் .......!!!!!
இது என்ன கிரகமா.....???



ஆமாம் கிரகம்..!!
மிருகங்களின் செயற்கைக்கிரகம்..!! 








ஏழறிவின் ஆட்சியில்,,,
ஆறறிவு புழுக்கள் வாழும் நரகம்...!!!
நரகத்திலிருந்து ஒரு படி மேல் இருக்கும் கிரகம்...!!






நன்றி....!!!
சகோதரன் தீசன் வேலாவின் உள்ளப்பகிர்வு..... 

Tuesday, 23 July 2013

சிவப்பு ஆறு ஓடிய "கறுப்பு ஆடி" யின் 30ம் ஆண்டு நினைவில்.....


     

சிங்கள பேரினவாதிகளின் வெறித்தனத்தால்  தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்பட்ட  கொடூரங்கள், கொடுமைகள் நடந்தேறியது வெளி உலகம் அறிந்திட முடியாத கால கட்டமான எண்பதுகளில் தான். அதாவது 1983 இல் உதிரமே  உறைந்து விடும் அளவுக்கு ஒட்டுமொத்த தமிழினமும் கதி கலங்கி போயிருந்த நாட்கள் உண்மையில் தமிழர்களின் வாழ்வில் கறுப்பு வடுக்களை உண்டாக்கிய மறக்க முடியாத காலப்பகுதியாகும் . கறுப்பு யூலை எனப்படுகின்ற சிவப்பு இரத்த ஆறு ஓடிய ஆடிக்கலவரம் முடிந்து முப்பதாண்டு காலம் முழுமையடைந்து விட்டது. 
இந்த 30 வருட இடைவெளியில் என்ன வேறுபாடு??
திருநெல்வேலியில் வெடித்த தாக்குதலின் எதிரொலி இந்த ஆடிக்கலவரம் என்பது உலகமே அறிந்த உண்மை. அதற்கு பின்னான காலகட்டத்தில் எத்தனையோ தாக்குதல்கள் சிங்கள இனத்திற்கு எதிராக நடாத்தப்பட்டு அன்று திருநெல்வேலியில்  கொல்லப்பட்ட பதின் மூவரை விட நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் சிங்கள இராணுவமோ அல்லது  காவல் துறையோ கொல்லப்பட்ட போது மீண்டும் ஒரு கலவரம் தமிழருக்கு எதிராக அதாவது 1983 ஐ போன்று இடம்பெறாமல் இருந்தமைக்கு தமிழர்களுக்கு கவசமாய் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் தான் காரணம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தமிழர்களை தொட்டு பார்க்கவே சிங்களவன் அஞ்சி நடுங்கும் அளவிற்கு தங்கத்தலைவன் வழிவகுத்து வைத்திருந்த காலமும் இருந்தது என்பதை தலை நிமிர்ந்து  சொல்லிக்கொள்ளும் நேரத்தில் இன்றைய நிலையில் மக்களை விட அதிகமாய் ஊசலாடும் இராணுவ மயமான தமிழர் தாயகத்தில் குறைந்த பட்சம் 5 இராணுவத்தினர் தாக்கப்பட்டால் அதன் எதிரொலி 1983 அதாவது கறுப்பு யூலையினை விட மிகக்கொடுரமாகவே இருக்கும். இல்லை என்று எதிர்வு கூறுவதற்கும் சிங்களவன் பயந்து நடுங்கிடக் கூடும்  என்று எண்ணிக்கொள்ளும் அளவிற்கும் தைரியம் நிச்சயமாக யாருக்கும் இருக்க போவதில்லை.
புத்த விகாரைகள்  தான்  தோன்றித்தனமாய் தமிழர் தாயகம் எங்கும் முளைப்பதையும்  சிங்களக்குடியேற்றங்கள் அதிகாரமாக வந்தேறுவதையும் தடுக்க முடியாத உள்நாட்டு அரசியல் பேர்வழிகள் அல்லது மாயை வலையாகிப்போன சர்வதேசம் என்பனவற்றால்  தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட முடியுமா??
ஆம் என்றால் அது வெறும் முட்டாள்தனமே....
உண்மை...
1983 ஆடிக்கவரம் என்பது உலகத்திற்கு ஒரு சிறு புள்ளியாக அதாவது உலகம் புரிந்திராத காலத்தில் சிங்கள பேரினவாதத்தால் , காடையர்களால் தமிழினத்தை சுத்திகரிக்க ஆடப்பட்ட கோரத்தாண்டவம்.,! அன்று தமிழனுக்கு குரல் கொடுக்க எந்தவொரு அமைப்போ உலக ஆதரவோ இருந்திருக்கவில்லை. இருந்திருந்தாலும் ஒன்றும் மாற்றம் நிகழ்ந்திருக்காது... 
ஏறக்குறைய 25 வருட  ஆடிக்கலவர நினைவுகள் தழுவிச்சென்ற கால கட்டங்களில் உலக அரங்கில் பெரிதும் வெளிக்கொண்டு வரப்பட்ட ஈழப்போராட்டம் முக்கிய கட்டம் பெற்றிருந்த உச்ச காலத்திலேயே...அதாவது 2009 இல் ஒட்டுமொத்த தமிழினமும் கண்ணீர் சிந்த காட்சிகளாக, ஒளிப்படங்களாக சர்வதேசமும் உலக வல்லரசுகளும் பார்க்க பார்க்க சிங்களக் காடையர் படையால் தமிழினம் நவீன முறையில்  கொன்று குவிக்கப்பட்டது. இல்லை உலக நாட்டின் ஆதரவுடன் தமிழனின் இரத்தம்  ஆறாக  ஓடியது முள்ளி வாய்க்காலில்...
 என்ன வேறுபாடு??? அது இனக்கலவரம்...! இது இன  யுத்தம்...! 
பெயர் ஒன்றுதான் வேற்றுமை...
                                         

கொல்லப்பட்டதும் கொள்ளையிடப்பட்டதும் தமிழர்களின் உயிரும் உடமைகளும் தான்....! 
தமிழன் உதிரத்தில் உறைந்து போனது தமிழர் தாயகமே...! 
மண்ணோடு மண்ணாகி உரமாகிப்போனது எம்முறவுகளே...!
குருதியில் தோய்ந்த முகங்களையும் உடலங்களையும் கண்ணுற்று மரத்து போயிருப்பது எம் உள்ளங்களே..! 
அச்சம் நீக்கி தமிழர்களை தலை நிமிர வைத்து பாதுகாப்பு   கொடுத்த புலிகளை முடக்கி மெளனிக்க வைத்த சர்வதேசம் ,  இனப்படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றிய சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த அருகதை அற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் , இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்ட சிங்கள அரசை அழுத்தம் கொடுக்க தவறி வரும் அயல் நாடு இந்தியா  என்று பட்டியலிடும் நாடுகளும் அமைப்புக்களும் தமிழனுக்கு இலங்கையில் அரங்கேறும் ஏதேனும் ஒரு கொடூரத்தை தட்டி கேட்க முன்வருவார்களா?? வெறும் கண்துடைப்புக்களும் , பத்திரிகைச்செய்திகளும் , கோஷங்களும் , விளம்பரங்களும் தமிழனை காப்பாற்ற முன் வரப்போவதில்லை. வீறு கொண்டெழுந்த வீர மறவர்களை தவிர வேறெவரும் தட்டிக்கேட்க முன்வரப்போவதுமில்லை...!      

அன்று சிங்கள பேரினவாதம் அரங்கேற்றிய காட்டேறித் தனத்தை 25 வருடங்களாக தட்டிக்கேட்காத அதாவது 2009 வரை ஏன் என்று வினவாத சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசமந்த போக்கு 2009 இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் சர்வதேசத்தின் கண் முன்னால்  சிங்களம் ஆற்ற வித்திட்டது.
                                   

அன்றைய ஆடிக்கலவரத்தை தட்டி கேட்டு தமிழர்களுக்கு ஒரு தீர்வினை  சர்வதேசம் வழங்கியிருக்குமானால் ஈழப்போராட்டத்திற்கும் அவசியம் இருந்திருக்காது. இன்று முள்ளிவாய்க்கால் வரை தமிழன் விரட்டி விரட்டி கொல்லப்பட்டு இருக்க மாட்டான். அத்துடன் மட்டும் நின்று விடாமல்  இன்னும் இன்னும் அடக்கி ஒடுக்கப்படும் தமிழன் என்றோ ஒருநாள் ஒட்டுமொத்தமாக காணாமல் போக போகின்றான். அதுவரைக்கும் பாழாய்ப்போன சர்வதேசம் பார்த்துக்கொண்டே தான் இருக்கும். தமிழனுக்கு எதிரான கொடுமைகளை தட்டி கேட்க தயங்கும் சர்வதேச சமூகமானது  தன்  இனத்துக்கு எதிரான கொடுமைகளை தமிழன் நிமிர்ந்து தட்டி கேட்டால் "பயங்கரவாதம்" என்று முத்திரை குத்தி தடை செய்ய மட்டும் தயங்குவதில்லை,
ஆக... சிங்கள அரசின் நலன் விரும்பியாக சர்வதேசம் இருந்து வருவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழனுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் யாராலும்  தடுத்து நிறுத்த முடியாது. எம்மினத்துக்கான நினைவு  கூரல்கள் மட்டும் நீண்டு செல்கின்றன. அதையும் தடுக்க முடியாது. ஆதங்கங்களையும் வீர வணக்கங்களையும் தெரிவித்து விட்டு அமைதியாக இருக்கும் நாம் "தமிழன்" என்று எம் மனதளவில் மட்டும் பெருமைப்பட்டு கொண்டிருக்க வேண்டியது தானா???
என்றும் தொடரலாம் எமக்கெதிரான வேட்டை.  தற்சமயம் விடுப்பு பெற்று இருக்கின்றது தமிழினப்படுகொலை. சிங்களம் நாளுக்கு  நாள் விதைக்கும் சிங்கள விதை தமிழர் தாயகத்தில் பெரு  விருட்சங்களாக வளர்ந்தோங்கும் போதோ அல்லது விருட்சங்கள் வேரறுக்கப்படும் போதோ தமிழன் உதிரம் மீண்டும் சிந்த தொடங்கும்....!