Search This Blog

Thursday, 29 August 2013

எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....???




அவலங்கள் நடந்தேறுவதை கண்டும் 
அவலம் ஒன்று இடம்பெறபோவதை 
அறிந்தும் அங்கிருந்து தலைதெறிக்க 
அவசர அவசரமாய் தப்பி ஓடுவதும் - பின் 
"விசாரணை" "போர்க்குற்றம்" 
"மனித உரிமை மீறல் " என்று
உலக நாடுகள் முன் நற்பெயருக்கு முனைவதும்
உண்மை நிலைகளை கண்டறியும்
"உத்தியோக பூர்வ விஜயம்" என்று
கொலைக்களம் ஏகி இரண்டும் கெட்டான்
அறிக்கைகளை கடமைக்கு சமர்ப்பித்து
அல்லல் படும் உறவுகளின் நம்பிக்கையில்
ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் ஐ. நாவே...!!!

இலங்கையின் இனவாத வெறிக்கு
இரையாக போகின்றவர்கள் என்றும்
இவர்கள் நாளை அங்கு காணாமல் போக
இருப்பவர்கள் என்றும் கத்தி கத்தி
உன் செவிகளுக்குள் விழுந்து விழுந்து
உரத்து சொல்லியாயிற்று....

ஈழத்தமிழர்கள் என்று தானே
ஈற்றில் அகதி என்றாய்....!!!
ஈரைந்து திங்கள் எம் கண்ணீர்
ஈன வாழ்வினை கண்டிருந்தும்
ஈழத்தமிழர் என்று காரணங்காட்டி
ஈவிரக்கமின்றி துரத்துகின்றாயே...!



இன்று நீ எம்மை துரத்தி விட்டு
நாளை அங்கு நல்லபிள்ளைக்கு வருவாய்
எம் பிள்ளைகள் கையில் எம் படங்களுடன்
காணாமல் போனோர் உறவுகளாய் உன் முன்னால்
காரணமே நீ என்று அறியாமல் பத்திரிகைகளும்
கலர் கலராய் படம் பிடிக்கும்...!!!
வரலாறுகள் சொல்லி வரும் கதை இது....
வந்தார்கள் சென்றார்கள் என்று நீங்களும்
உயிரோடு சாகடிக்கப்பட்டும்
உலகத்துக்கு தெரியாமல்
உறவுகளுக்கும் தெரியாமல்
காணாமல் போனவர்களாய் நாமும்....
தொடர்கின்ற கதை இது.....






எம்மை காப்பாற்ற தயக்கம் காட்டும் உன் சபையில்
எமக்கு எதற்கு "அகதி" என்ற அங்கீகாரம்....?
அகதி என்ற பதத்திற்கு உன் அகராதியில் - நீ
அளித்த வரைவிலக்கணம் தான் என்ன ??

எங்களுக்காக என்ன குரல் கொடுத்தீர்கள்??
எங்களுக்காக என்ன தட்டி கேட்டீர்கள்??
உங்கள் சாசனத்தை மாற்றி எழுதுங்கள்...
ஈழத்தமிழனுக்கு ஐ.நா வில் அகதியாக கூட
உரிமை இல்லாதொழிக்கப்படுகின்றது என்று..







நிலவரசி நிலவன் 



துபாயில் இறுதிக்கணங்களில் உயிர் ஊசலாட எந்த நேரமும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கண்ணீரோடு தவிக்கும் பன்னிரு ஈழத்தமிழ் உறவுகளுக்காக அவர் தம் எண்ணங்களை பிரதிபலிப்பாக.....எழுதியது.... 

No comments:

Post a Comment