பூப்பூவாய் மத்தாப்பு கொட்டிய - மின்
பூக்கள் சொரிந்த நதிக்கரையோரத்தில்
வந்து அலை மோதிய வேற்றின மக்களோடு
வருக வருக என வரவேற்று நின்றேன் - நெஞ்சமதில்
நிறைந்து நின்ற எதிர்பார்ப்புக்களோடு..
வெடித்துப்பறந்த அழகு வாண வேடிக்கைகள்
துடிக்க வைத்தன இதயத்தினைப்பல்மடங்காய்..
மூன்றாண்டாய் அதே நதிக்கரையில்....
வந்து வந்து போகும் உன்னைப்போல்
பல விருந்தினர்களை வரவேற்று நொந்து விட்டேன்..!
ஆர்ப்பாட்டமின்றி மலர்ந்த உன்னை வாட்டம் கலந்து
வரவேற்றதனாலேயோ ஆட்டம் காட்டிச்செல்கின்றாய்..!
வாசல் வந்த நீ விரைந்து கொடுத்தாய் நெஞ்சில் சுமையினை...
சலனத்தினையும் தவிப்பையும் வாரிக்கொடுத்தாய்...!!
சத்தியமாக உரைக்கின்றேன் உன்னைப்போல் ஒரு விருந்தாளியினை
சந்தித்துக்கொண்டதில்லை இன்று வரை...
மெத்த நன்றிகள் உன் வரவிற்கு...!
ஏமாற்றங்களின் அட்சய பாத்திரம் நீ...!!!
எழுதிக்கொடுத்து விட்டு கிழித்துப்பறித்து விட்டாய்..!
காலத்தினையே மாற்றி எழுதிக்கோலமிட்ட சதிகாரன் நீ...!!!
காலால் எட்டி உதைத்தும் எழுந்து நின்றேன் குழி வெட்டி
தடக்கி விழ வைத்து வேடிக்கை பார்த்து சிரித்து நின்றவன் நீ...!!!
தள்ளாடி தள்ளாடி நான் உயிர் வாழ்ந்தேன்- நீ
என்றோ ஒருநாள் தொலைந்து போவாய் என்ற
அதீத நம்பிக்கையில்...
அந்த நாளும் வந்து விட்டது
அதோ மத்தாப்புக்களும் ஆயத்தமாகி விட்டன..
பிரியாவிடை பெற்று சென்று விடு
பிறந்து விடாதே மறுபடியும் இங்கு..
அள்ளிக்கொடுத்த துன்பங்களுக்கும் நன்றிகள்..!
துள்ளிச்சென்ற இழப்புக்களுக்கும் நன்றிகள்..!
கிள்ளிக்கொண்ட வலிகளுக்கும் நன்றிகள்..!
எள்ளி நகையாடிய ஏமாற்றங்களுக்கும் நன்றிகள்..!
பள்ளி கொண்ட முயற்சிகளுக்கும் நன்றிகள்..!
கொள்ளி வைத்துச்சென்ற எதிர்பார்ப்புக்களுக்கும் நன்றிகள்..!
கள்ளியாய் மனதை குத்தி வலித்த பிரிவுகளுக்கும் நன்றிகள்..!
பறித்தெடுத்த செந்நீரும் கண்ணீரும் போதுமா...??
புறப்பட்டுச்செல்கின்றமைக்கு உனக்கு
பலகோடி நன்றிகள்...!!!
தடுப்பதை தடுத்து இன்றோடு சென்று விடு..!
எடுப்பதை எடுத்து முடிவாகச்சென்று விடு...!
மறந்தும் திரும்பி வந்து விடாதே..!
கண்ணீரின் ஆண்டாக விடைபெற்று செல்லும் 2013
கரம் கூப்பி தொழுது நன்றிகள் கூறி
வழி அனுப்பி வைக்கின்றேன் சென்றிடு...!!!
நல்லது என்று நீ கொடுக்கவில்லை ஒன்றும்
விருந்து களிப்புற்று விரையும் உனக்கு
விரும்பிக் கொடுக்கின்றேன் என் வலிகளைப்பரிசாக
விரைந்து சென்றிடு விடியும் முன்னரே
விரைந்து நீ சென்றிடு ...!!!
அரசி நிலவன்