சிவாஜி கணேசன்...!
******************
என் விருப்பத்திற்குரிய மாபெரும் நடிகர் என்பதை விட ஒரு தலை சிறந்த மனிதர் ஐயா சிவாஜி கணேசன் ஆவார். இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த பல கதா பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து எம் மனங்களில் உருவமாய் தக்க வைத்த பெருமை நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் ஐயாவையே சாரும். அப்பர் சுவாமிகள் , கர்ணன் , வீர பாண்டிய கட்டப்பொம்மன் , அம்பிகாபதி போன்ற வராலாற்று நாயகர்களின் உருவம் என்றும் சிவாஜியின் வடிவில் தான் மனதில் நிழலாடும். தத்ருபமான அசர வைக்கும் நடிப்பால் இல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய பெருந்தகைக்கு இன்று பிறந்தநாள்.
அவரைப்பற்றிய பல தகவல்களை எல்லோரும் அறிந்திருந்தாலும் அறிந்திராத சில விடயங்கள் விகடன் சினிமா இணையத்திலிருந்து.....
எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...
*சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் அரிதாரம் பூசியது பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்.
* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில், 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு.......
*சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷூட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷூட்டிங்குக்குச் சென்றது இல்லை.
*கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்.
*வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே.
* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி.
* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்.
*தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
*சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா - கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது.
*தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துக் கொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்.
*சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்.
* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்.
*விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. வெள்ளியிலான சிறிய பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்.
* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்.
*'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
*படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்.
* சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் 'கூண்டுக்கிளி'
* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்ச்களை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்.
*தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்.
*'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில், 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
*அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசிவரை அது நிறைவேறவே இல்லை.
*பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
*பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்.
*கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்.
நன்றி - விகடன் சினிமா இணையம்