Search This Blog

Wednesday, 19 February 2014

காலங்கடந்து மகுடம் சூடிய உண்மை...!!!


கனவிலும் நனவிலும்
கழன்று விழாத தூக்குக்கயிறு
காலம் கடந்து
காணாமல் போனது....!!!

இழந்து போன காலம்
இனி வராது தான்...!
தொலைந்து போன தருணங்களும்
தொலைத்து விட்ட உயிர்களும்
திரும்பிட போவதில்லை தான்...!


கட்டியணைக்க காத்திருக்கும்
கருவில் சுமந்து கண்ணீரில்
கரைந்து நிற்கும் தெய்வங்களை
கலைந்து நிற்கும் உடன் பிறப்புக்களை
கண்ணுக்குள் விம்பமாய் விழுத்திட துடிக்கும்
அந்த அரிய பொன்னான தருணம்
அழித்து விட்ட கடந்த காலத்தினை
அள்ளிக்கொடுக்கும் கைகளில்....

அம்மாவின் மடி சாய்ந்து
அழுது புரண்டு அங்கிருக்கும் தாய்  மண்
அள்ளித்தின்று உருண்டாலே போதுமே...!


உடன் பிறவா சகோதரியின்
உயிர் கருக்கலில்
உயிர்த்து வந்த வாழ்வு...!

உண்மைக்கு ஆயுள் அதிகம்..!
உயிரை தொலைத்து பிணமானவர்கள்
உயிர்த்து மீண்டார்கள்...!

உயிரற்று மூர்ச்சை ஆகிக்கிடந்த
உடலமாய் துள்ளி எழுந்த உண்மை..!
காலங்கடந்து மகுடம் சூடிக்கொண்டது...!

அன்னைகளின் விழி நீரின் ஆழத்தில்
அமிழ்ந்து போன மரணம்....!
வற்றிப்போனாலும் கால்களை
சுற்றி வராத வரம் வேண்டும்...!









Monday, 17 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 8)


2011  இன் முற்பகுதியில் தாய்லாந்தின் குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மதுரன், அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாத சூழ்நிலையில் நாடு திரும்புவதாக அங்கிருந்து வெளியேறி மலேசியா சென்று மீண்டும் தாய்லாந்தில் வெளியேறிய போது , ஏற்கனவே மூன்றாம் நாட்டுக்கான நேர்முகத்தேர்வினை பூர்த்தி செய்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் மதுரனின் வழக்கினை நிலுவையில் வைத்திருந்தது. 

அந்தக்காலப்பகுதியில் மீண்டும் கனேடிய காவல் துறையினர் மோப்பம் பிடித்து மதுரனின் இருப்பிடம் அறிந்த, ஒரு எட்டப்பனுக்கு பணம் கொடுத்து நேரடியாகவே வந்து சந்தித்துக்கொண்டனர். அதாவது சிறையில் இட்டுக்கொள்ள முயற்சிக்காமல் வாரம் தோறும் பாங்கொக்கில் உள்ள ஒரு குறிப்பிட்ட நட்சத்திர விடுதியின் வரவேற்பு கூடத்தில் மதுரனையும் நிலாவினையும் சந்தித்து மூளைச்சலவை செய்தனர். 

அதாவது கனடாவில் குரியுரிமை மற்றும் வீடு வாகன வசதி பணம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கின்றோம் தற்போது ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ள கும்பலினை காட்டிக்கொடுக்குமாறும் அதற்கான வழிமுறையாக தாமே பணமும் நபர்களையும் ஒழுங்கமைத்து தருகின்றோம் என்றும் ஆட்கடத்தல் முகவர்களிடம் தொடர்பு கொண்டு வியாபாரம் பேசி நடித்து அவர்களைக்காட்டிக்  கொடுக்குமாறும்  கிட்டத்தட்ட இரு மணி நேரம் இடம்பெறும் அந்த சந்திப்பின் போது தம்மை கனேடிய தூதரக அதிகாரிகள் போன்று காட்டிக்கொண்ட அவர்கள் நாட்கள் செல்ல செல்ல தமது கடலை மதுரனிடத்திலும் நிலாவிடமும் வேகாது என்று அறிந்து மிரட்ட ஆரம்பித்தனர்.

அதாவது தமது அடையாள அட்டையினை காண்பித்து தம்மை சர்வதேச கனேடிய காவல் துறை அதிகாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்ட அவர்கள் "உங்கள் இருவரையும் கடற்சூரியன் வழக்கில் தொடர்பு படுத்தி சிறையில் தள்ளுவோம். அதன் பின் உங்கள் குழந்தை அனாதரவாகி விடும்.  எனவே எமக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் மகன் சர்வதேச பள்ளியில் கல்வி கற்கலாம். கனடாவில் ஆடம்பரமாக வாழலாம் "  என்று தமது தொலைபேசியினை வைத்து கனடாவில் உள்ள மேலிடத்திற்கு தொடர்பு எடுத்து மதுரன் நிலாவின் உரையாடலை பதிவு செய்தவாறு பேசிக்கொள்வார்கள். 

அன்றைய கால கட்டத்தில் தான் மதுரனும் நிலாவும் நன்கு புரிந்து கொண்டார்கள். இவ்வாறு தான் இங்குள்ள விலை போன தமிழர்கள் தம்மைக் காட்டிக்கொடுத்தார்கள் என்பதனை. அன்று மதுரனோ நிலாவோ  யாரையும் காட்டிக் கொடுத்திருந்தால் கனடாவில் அவர்களுக்கு  வசதியான வாழ்க்கை அமைந்திருக்குமோ  இல்லையோ நிச்சயம் இன்றைய மதுரனின் சிறை வாழ்வு தடுக்கப்பட்டிருக்கும். மதுரனைப்போல் அல்லாது நேரடியாக பணம் பெற்று ஆட்கடத்தல்  முகவர்களாக செயற்பட்ட எத்தனையோ தமிழர்கள் இன்று பாங்காக்கில் கடவுச்சீட்டு இல்லாமலே சுதந்திரமாக நடமாடித்திரியும் இரகசியம் என்னவென்பது இப்போது உணர்ந்து கொள்ள முடியும். 

2011 இன் ஐப்பசியில் இருந்து தை வரை , கிட்டத்தட்ட மூன்று மாத காலமாய் மதுரனுக்கும் நிலாவிற்கும் பின்னால் அலைந்து கொண்ட அந்த ஒரு பெண் மற்றும் ஆண் கனேடிய காவல் துறை அதிகாரிகள் 2012 தை மாதத்தின் பின் தொடர்பே இல்லாமல் போய்விட்டனர். 

மதுரன் நிலா இருவருக்கும் காட்டிக் கொடுப்பு என்பது தெரியாது என்பதனை விட யார் ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றார்கள் என்பதே அறியாத போது எவ்வாறு விபரம் கொடுக்க முடியும். அவர்கள் முக்கியமாக தேடுவது மிகப்பெரிய ஒரு நபர் ஒருவரையே. அவரின் பெயரைத் தவிர அவரின் விபரங்கள் அறியாத இவர்களால் தகவல் எவ்வாறு கொடுக்க முடியும். எந்தவிதமான தகவல்களும் மதுரனும் நிலாவும் வழங்காமையே மேலும் மேலும் கனேடிய அதிகாரிகளுக்கு அவர்கள் மேல் சந்தேகம் வலுக்க பிரதான காரணமாகியது. 

ஏற்கனவே கனேடிய காவல் துறையின் சந்தேக நபரான மதுரனை பணத்திற்காக மற்றவர்கள் காட்டி கொடுத்தது போன்று வேறு யாரையாவது கை நீட்டிக்காட்ட மதுரனுக்கோ நிலாவிற்கோ அதிக நேரம் எடுக்காது. எல்லோரும் நேர்மை பற்றி அளவளாவலாம். ஒரு சிலராலேயே அதன் வழியில் ஒழுகிட முடியும். 

உதாரணமாக இலங்கையின் கருணா என்பவர் புலிகள் அமைப்பில் பல காலம் ஒரு தளபதியாக இருந்தவர். அதே நேரம் இறுதி யுத்தத்தில் சரணடைந்த எத்தனையோ போராளிகளில் இன்னும் சிலர் இருக்கும் இடமே தெரியவில்லை உயிரோடு இருக்கின்றார்களோ என்று கூடத்  தெரியாது. 

அந்தப் போராளிகளை விட கருணா என்பவர் அதிக காலம் போராட்டத்தில் இருந்து பல குற்றச்சாட்டுகளோடு தொடர்பு பட்டும்  இலங்கை அரசிற்கு இன்று வரை உயர்ந்த விசுவாசியாக இருப்பதற்கும், சாதாரண போராளிகள் சிறையிலும் அல்லது இல்லாமலும் போனதற்கும்  என்ன காரணம். சுயநல நோக்கிற்கான காட்டிக்கொடுப்பு ஒன்றே. அந்த காட்டிக்கொடுப்பு ஒன்றினை நிகழ்த்தினால் நாட்டில் ஆட்சி  கிடைக்கும். இல்லாவிடில் இறந்து போனாலும் மனச்சாட்சி ஒன்றில் மட்டும்  நாம் ஆட்சி புரியும் பேறு கிடைக்கும். இங்கு இரண்டாவது ஆட்சி நடத்தும் மதுரனும் நிலாவும் எந்த ஆட்சி உலகில் மாறினாலும் அவர்களே அவர்களின் மனச்சாட்சிக்கு மகுடம் சூட்டிய ஆட்சியாளர்கள்.


அந்த கனேடிய அதிகாரிகள் தை மாதத்தின் பின் தாம் கனடாவுக்கு மாற்றல் ஆகி செல்வதாகவும் ஏதும் தகவல் தெரிந்தால் மின்னஞ்சலுக்கு தகவல் கொடுக்குமாறும் தெரிவித்து இறுதியாக விடைபெறும் போது வைத்தியசாலையில் வைத்து மதுரனிடம் கைப்பற்றிய மடிக்கணினி  மற்றும் தொலைபேசிகளை திருப்பி ஒப்படைத்து விட்டு சென்றார்கள். 

அதன் பின் பணியில் இணைந்த வேறு அதிகாரிகள் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தனர். அதாவது தாய்லாந்து வந்தடைந்து தமிழர்களை சந்தித்து மறுபடி விலை பேச இருக்கவே இருந்த மதுரனின் தலை உருள மதுரனின் வீட்டிற்கே சென்று தாய்லாந்து குடிவரவுத்துறை கைது செய்து சென்றது. எந்த வித பிரச்சினையும் இல்லை. தகவல் தெரிந்தால் கொடுக்கவும் என்று சென்ற பழைய கனேடிய அதிகாரிகளிடம் இருப்பிட முகவரியில் இருந்து தொலைபேசி வரை கொடுத்து வைத்த மதுரன் குற்றம் செய்பவனாக இருந்திருந்தால் அவர்கள் சென்றதும் நாட்டினை விட்டுத்  தப்பியல்லவா சென்றிருக்க வேண்டும்.

அதற்கிடையில் ஐ நா மதுரனுக்கான வழக்கினை மீண்டும் செயற்படுத்தி மூன்றாம் நாட்டிற்கு அவர்களது வழக்கினைக் கொடுக்கும் தறுவாயில் இருக்கும் போது கனேடியச்சதியால் அது இன்னும் கால தாமதமாக்கப்பட்டது. 

அதாவது இலங்கையில் பல போராளிகளை காட்டிக்கொடுத்து தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி பணத்திற்காக  மூன்று பெண்களின் வாழ்வினை சீரழித்து விட்டு தாய்லாந்திற்கு தப்பி ஓடி வந்த ஒரு துரோகி(ஏற்கனவே தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி) தாய்லாந்தில் அகதிக்கான கோரிக்கை விடுத்து ஐ நாவால் அகதியாக அங்கீகரிக்கப்படாமல் இருந்த சமயம், கனேடிய காவல் துறை அவனை கொள்வனவு செய்து மதுரனுக்கு எதிராக ஐ நாவில் முறைப்பாட்டினை பதிவு செய்ய வைத்தது.

அதாவது அவனிடம் இருந்து மதுரன் பணம் பெற்று ஏமாற்றிகொண்டதாக பதிவு செய்யப்பட்ட அந்த முறைப்பாடு மதுரனின் ஐ நா வழக்கினை மூடும் நிலைக்கு நெருங்கியது. காரணம் சாதாரண நபர்களின் முறைப்பாட்டினை ஏற்காத ஐ நா ஏற்கனவே அகதி கோரிக்கை விடுத்த ஐ நாவில்  பதிவு  செய்து கொண்ட ஒருவரால் முறைப்பாடு செய்யுமிடத்து அது உடனடியாக நடவடிக்கை எடுத்தே தீரும்.

நிலாவினையும் மதுரனையும் உடனடியாக அழைத்து ஒரு நாளிலேயே விசாரித்த ஐ நா அவர்களின் வழக்கினை தள்ளுபடி செய்யும் இறுதிக்கட்ட நேரத்தில் உண்மையினை உணர்ந்து கொண்டது.

பெண்களின் வாழ்வினை சீரழித்த காரணத்தால் அதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்திய நிலா மீது முன் விரோதம் கொண்ட அந்த நபர் தனது ஐ நா வின் அகதி ஏற்பு வழக்கினையே அடகு வைத்து கனேடியர்களிடம் பணம் பெற்று இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார். விளைவு ஐ நா அவரது வழக்கினை நிராகரித்து தள்ளுபடி செய்து கொண்டது.

இது அந்த நபருக்கான தோல்வி அல்ல. கனேடிய அதிகாரிகளுக்கு நிலா மற்றும் மதுரனால் அள்ளிப்பூசப்பட்ட கரியே. அந்தப்படுதொல்வியினை பொறுத்துக் கொள்ள முடியாத கனேடிய காவல் துறையினர் வேறு வழியின்றி தாய்லாந்து குடிவரவு துறையினருக்கு அழுத்தம் கொடுத்து குடிவரவு சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் மதுரனை மீண்டும் கைது செய்ய வைத்தது. 

2012 ஆனி 29  அன்று காலை மதுரனின் இருப்பிடம் புகுந்த குடிவரவுத்துரையினர் அங்கிருந்த கணினி தொலைபேசிகளை எடுத்துச்சென்றனர். கணினியில் தேசியத்தலைவரின் அரிய புகைப்படங்களை சேமித்து வந்திருந்த நிலாவிடம் கனேடிய அதிகாரிகள் " LTTE இற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு ? உனது கணவர் அதன் உறுப்பினரா? ஏன் இந்த புகைப்படங்கள் வைத்திருக்கின்றீர்கள்? என்ற பல வினாக்களை தொடுத்தனர். காரணம் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லையே . எனவே புலி என்று குற்றச்சாட்டு கொடுத்து சிறையிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கலாம். 

இவர் எமது தேசியத்தலைவர். இவரை நாங்கள் நேசிக்கின்றோம். இவரது படங்கள் வைத்திருந்தால் புலி உறுப்பினர் என்று அர்த்தமல்ல. அப்படி இருந்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும்? தாய்லாந்து அதிகாரிகளே அதைப்பற்றி கேட்கவில்லையே நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று உரைத்த நிலாவிடம் ஏதும் பேசாத கனேடிய காவல் துறை அந்த கணினியினையும் தொலைபெசியினையும் திருப்பி ஒப்படைத்து சென்றது.


குடிவரவு தடுப்பு மையத்தின் சாதாரண இலங்கையர்கள் உள்ள அறை 3 இல் தடுத்து வைக்கப்பட்ட மதுரனின் உண்மை நிலை விளங்கிக்கொண்ட ஐ நா அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் துரித கதியில் மீண்டும் மூன்றாம் நாட்டிற்கான நேர்முகத்தேரிவினை நடாத்தி ஐக்கிய அமெரிக்காவிற்கு அவனது வழக்கு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுரன் கைதாகும் போது கர்ப்பிணியாக இருந்த நிலா கையில் குழந்தையோடு தவிப்பதை கண்ணுற்ற ஐ நா வானது தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊடாக வலிந்து சென்று மதுரனை பணப்பிணையில் விடுதலை செய்தது. முற்று முழுதாக மதுரன் மீது கொண்ட நன்னடத்தை காரணமாக அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தமது பணத்தினை செலுத்தியது. 

மூன்றாம் நாட்டிற்கு பரிந்துரைக்கப்படுபவர்களே பிணையில் வெளியேற முடியும். அத்துடன் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் கையெழுத்தும் இட்டு செல்ல தடுப்பு மையம் சென்று வர வேண்டும். இரண்டாவது தடவையாக கையெழுத்திட சென்ற மதுரன் வீடு திரும்பவில்லை. அங்கும் கனேடிய காவல் துறை தனது சதி வலையினை விரித்து அந்த பிணையினை இல்லாமல் ஆக்கியது.

மதுரனை வெளித்தொடர்புகள் இன்றி தனியாக அடைத்து வைத்ததோடு அவனை அவனது மனைவி பிள்ளை தன்னும் சென்று பார்க்க முடியாதவாறு அவனுக்கான பார்வையிடலும் தடுக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக தடுத்து வைத்திருந்தனர். தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் சென்று விசாரித்த நிலாவிடம் அவர்கள் " கனேடிய காவல் துறையின் விசாரணை இருப்பதால் யாரும் சந்திக்க முடியாது " என்று கூறினர். ஆனால் இன்று வரை அதாவது இரு ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் விசாரணையே இடம்பெறவில்லை. விசாரணையா அல்லது பழிவாங்கலா?

ஆத்திரம் அடைந்த நிலா கனேடிய காவல்துறையினரின் தொலைபேசிக்கு அழைத்து அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததும் உடனேயே சம்மதித்து சந்தித்த அவர்களிடம் என்ன விசாரணை எதற்காக மதுரனை தடுத்து வைத்திருக்கின்றீர்கள் என வினவியதும் தமக்கு தெரியாது தாய்லாந்து குடிவரவுத்துறையினரிடம் விசாரியுங்கள் என்று குத்துக்கரணம் அடித்த அவர்களிடம் நிலா " எனது கணவரோடு தொடர்பு கொள்ள அனுமதிக்காவிடில் மனித உரிமைகள் அமைப்பிற்கு முறைப்பாடு செய்து விட்டு இலங்கை சென்று தற்கொலை செய்வோம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் சாவிற்கும் கனேடிய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் " என்று உரைத்து விட்டு எழுந்ததும் , அவர்கள் " எமக்கு சில சந்தேகங்கள் உள்ளன அதை தீர்க்க வேண்டும் " என்று இன்னொரு நாள் அவளை வரவழைத்து வினவிய வினாக்கள்  நிலாவிற்கு சிரிப்போடு இந்த நிலையில் கனேடிய காவல் துறை உள்ளதா என்ற ஏளனமும் ஏற்பட்டு கொள்ள காரணமாய் அமைந்தன.

ஆம்...கணினியில் இருந்த சில நிலாவின் கவிதைகள் மற்றும் கட்டுரைகளைப்பற்றி ஆழமாக விசாரித்த அவர்கள் அவளின் முகப்புத்தக மற்றும் வலைப்பூ முகவரிகளைப்பெற்றுக்கொண்டு இன்று வரை அவற்றினை தொடர்கின்றனர்.

அத்துடன் பிறக்க இருக்கும் குழந்தைக்காக எண் சோதிடப்படி தமிழ்ப்பெயர்கள் எழுதி சேமித்து வைத்திருந்த ஆவணத்தினை பிரதி எடுத்து வைத்திருந்து அவை யாருடைய பெயர்கள் என்று பல வினாக்கள் தொடுத்த அவர்களுக்கு அதனை விளக்கி சொல்வதற்கிடையில் நிலாவிற்கு  போதும் போதும் என்றாகி விட்டது. ஆங்கில எழுத்தின் "L"  வரிசையில் ஒரு பத்து பெயர்கள் அருகில் அந்த எழுத்துக்களுக்கான எண்களின் கூட்டுத் தொகையோடு இருப்பதனை அவர்கள் அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தகவல் கொடுக்கும் தமிழர்களுக்கு தெரிந்திருக்கும் அன்றோ?

ஆக ஆதாரம் ஒன்றினை உருவாக்க பிரயத்தனப்பட்ட கனேடிய படை ஆபிரிக்காவில் மதுரனுக்கு சொந்தமாக நிலம் அதாவது நைஜீரியா நாட்டில் காணி கொள்வனவு செய்து இருக்கின்றீர்களா? என்று வினவியதும் நிலாவிற்கு சிரிப்பே அடக்க முடியவில்லை. அவள் சிரிப்பதனை பார்த்து இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட அந்த அதிகாரி மதுரன் அங்கு போயிருக்கின்றாரா? என்றும் வினவினார்.

சம்பந்தமே இல்லாத நாட்டிற்கும் மதுரனுக்கும் தொடர்பு படுத்திய அவர்களிடம் "ஒவ்வொரு மாதமும் எமது வாழக்கை சக்கரத்தினை நகர்த்துவதே ஒரு பெரிய திண்டாட்டம். தாய்லாந்தில் பணிபுரியவோ அன்றாட சீவனத்திற்கு உழைக்கவோ முடியாது. தெரிந்தவர்களின் உதவியில் வாழ்க்கை நகரும் போது நிலம் கொள்வனவு செய்யும் நிலை எமக்கில்லை. அவ்வாறு இருந்தாலும் நாம் இலங்கையில் தான் கொள்வனவு செய்வோம். இப்படி அந்நிய தேசத்தில் வாங்க வேண்டிய தேவைதான் என்ன? என்ன காரணமாய் இதைக்கேட்கின்றீர்கள் தெரிந்து கொள்ள முடியுமா என்ற நிலாவின் கேள்விக்கு அவர்கள் கணினிப்பிரதி ஒன்றினைக்கொடுத்தார்கள்.

அதாவது அந்த கணினியில் இருந்து நைஜீரியா நாட்டில் நிலம் வாங்க இணையத்தில் தேடல் செய்து கொண்டதற்கான ஆதாரமாய் ஒரு பிரதி. உடனே அவள் "மதுரன் கணினியில் முகப்புத்தகம் மற்றும் தமிழ் செய்திகளை பார்வையிடுவதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. இது எத்தனையாம் ஆண்டு தேடல் செய்யப்பட்டது என்று தெளிவாக கூற முடியுமா" என்றதும், அதன் பின் அந்த பிரதியை மேலும் கீழும் பார்த்து விட்டு 2009 என்றார்கள்.

அந்தக்காலப்பகுதியில் மதுரனின் கையில் அந்த கணினி இருந்திருக்கவில்லை. 2011 இல் அவன் முதற்தடவை வைத்தியசாலையில் கைதாகும் போது அவனிடம் இருந்த மடிக்கணினியினை ஏற்கனவே கனேடியப்படை எடுத்துச்சென்ற காரணத்தினால் அதன் பின் தாய்லாந்தில் அந்தக் கணினி அரைப்புதிதாக 2011 இன் பிற்பகுதியில் தான் மதுரனால் கொள்வனவு செய்யப்பட்டது.

அதற்கான பற்றுச்சீட்டு ஆதாரம் நிலாவினால் அடுத்த சந்திப்பில் கொடுக்கப்பட்டதும் எதுவும் பேசாத அந்த அதிகாரியிடம் "எனது கணவரினை நேரில் பார்த்தும் அவரின் குரல் கேட்டும் பல மாதங்கள் ஆகின்றது. அவரை தனிமைப்படுத்தி வைக்காமல் தயவு செய்து ஏனைய தமிழ் தடுப்பு அகதிகளோடு இணைத்து விடுங்கள் இல்லையெனில் என்னையும் உள்ளே அடைத்து விடுங்கள் அல்லது எல்லோரையும் கொன்று விடுங்கள்"  என்று அவள் கண்ணீரோடு கோபமாய் கேட்டாள். தாய்லாந்து அதிகாரிகளுடன் பேசி அதனைச்செய்து விடுவதாகவும் தமது சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு நன்றியினையும்  கூறி விடைபெற்றனர்.

அதற்கு முதலே நிலா " நாங்கள் சட்ட ரீதியாக ஐ நா மூலமாக இன்னொரு நாட்டில் குடியேறுவதற்காக பல இன்னல்கள் மத்தியில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்றோம். நீங்கள் இங்கு வந்து இவ்வாறு துன்பங்கள் கொடுத்தால் நாம் என்ன செய்வது ? அப்போ எம்மை சட்ட விரோதமாய் இன்னொரு நாட்டில் குடியேற நீங்கள் தூண்டுகின்றீர்களா? உங்களது நோக்கம் தான் என்ன? " என்றவளிடம்  அவர்கள் இல்லை என்ற ஒரு சொல்லோடு  மதுரனின் ஐ நா வழக்கு பற்றியும் மூன்றாம் நாடு எது என்றும் கேட்டு அறிந்து கொண்டனர். அதன் பிரதிபலிப்பு இன்றைய மதுரனின் நிலை என்பது தற்போதே நிலாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஓரிரு நாளில் மதுரனின் தடைகள் நீங்கி அவன் தொலைபேசி மூலமாக நிலாவுடன் தொடர்பு கொண்டான். ஐக்கிய அமெரிக்காவின் நேர்காணல் முடிவு சாதகமாகி மருத்துவ பரிசோதனையும் முடிவுற்று விமானப் பயணச்சீட்டிற்காக காத்திருந்த மதுரன் நிலாவிற்கு ஐக்கிய அமெரிக்க மீள்குடியேற்ற சேவை நிறுவனம் அவர்களின் வழக்கு முடக்கப்பட்டதாக  இடி ஒன்றை கொடுத்தது.

அந்த நிலுவையில் இருக்கும் காலப்பகுதி இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் இன்னும் செயற்படுத்த முடியாத நிலையில் இருப்பதன் காரணம் இது வரை  தெரியாமல் ஐ நா இருந்தாலும் நிலாவிற்கும் மதுரனுக்கும் அதன் முக்கிய பின்னணி நிச்சயம் விளங்கும்....!

(தற்போது மிக மோசமான நிலையில் இருக்கும் மதுரனுக்கு  மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவனின் நிலை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் எழுதஆரம்பித்த இந்த தொடர் இணயத்தளங்களில் வலம் வருகின்ற இந்த ஒரு மாத கால இடைவெளியில் மதுரனின் தொடர்பு துண்டிக்கப்படுள்ளது.இன்று வரை அவரிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை. அத்துடன் அவரிற்கான பார்வையும் தடை செய்யப்பட்டுள்ளதோடு அவரை ஒரு நாற்சுவரிற்குள் அடைத்து வைத்திருக்கின்ற கொடுமையினை தட்டிக்கேட்க யாருமே இல்லை.  ஐ நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலயமும் சென்று பார்வையிடாமல் உயிரோடு கொல்கின்ற இந்த அவல நிலையினை யாரிடம் சென்று முறையிடுவது? )

தொடரும்........

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல 
http://arasikavithaikal.blogspot.com/2014/03/mv-sunsea-9.html

Wednesday, 12 February 2014

கற்பனை...!!!


உருளைக்கிழங்கு கறி பிரட்டலும்
உனக்குப் பிடித்த பாகற்காய் பொரியலும்
உளுந்து வடை பாயசமுமாய்
உன்னை உட்கார வைத்து
உன் முகம் பார்த்து நான்
உவகையோடு பரிமாற - நீ பார்க்கும்
உந்தன் ஓரப்பார்வையின் நீளத்திற்காக
ஊர்ந்து ஊர்ந்து மெதுவாக அகப்பை துளாவும்
என்னை தட்டி நீ இல்லாத நிஜத்தினை உணர வைக்கும்
எம் செல்ல மகனின் நினைவே இன்றிய
கற்பனையில் கட்டுண்ட கொடுமை தொடர்கின்றது
கன காலமாக...

கற்பனையில் உன் முகம் பார்த்து
கடதாசியில் உன் உணர்வுகளை அறிந்து
கரைந்த காலங்கள் கடந்து இன்று
கணப்பொழுதுகள் தன்னும் கற்பனையில் தான்
கடந்து செல்கின்றன...!

கற்பனை என்பதனையே உணர முடியாத நிலையில்
கடந்த கால உன் நினைவுகள் நிகழ் காலத்தில்
நிகழுவதாய் நிதர்சனத்தினை தொலைத்து
நின்று நிலை தடுமாடுகின்றேன்....!

முற்றிய நோயின் அறிகுறியோ...!
முழுவதும் உன் நினைவுகள்
முக்காடிட்டு மூலைக்கொன்றாய்
முனகியபடி கிடக்க - நானும்
முன்னுக்கு பின்னாக அவற்றை உயிர்ப்பிக்கும்
முயற்சியில் மூழ்கி நிஜம் மறந்த பைத்தியமாக
முடிவில்லாத கற்பனையில்.....

முகம் பார்த்து முழுதாய் வருடம் ஒன்று
முழுங்கப்பட்டதன் எதிரொலியோ...?

முகவரி தொலைத்த தபால்களாக
முடங்கி கிடக்கும் நீயும் நானும்
முற்று முழுதாய் கற்பனையில்
முகம் பார்த்து தான் இறுதியில்
முடிவுரை பெற வேண்டுமோ??

கடந்து போன கண்ணீரின் அத்தியாயத்தின் பின்
கடக்கின்ற கற்பனை செயல்கள் ஒரு நிலையில்
கரை தாண்டும் போது கடைசி அந்த நிமிடமும்
கண்மணிகளுக்கான கற்பனை உலகை மீண்டும்
கரங்களில் கொடுத்து தொடரத்தான் போகின்றது...!!

அரசி நிலவன் 

Monday, 10 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 7)


2010 ஆவணி 13 இல் கனடாவினை அடைந்த "கடற்சூரியன்"(MV SUNSEA) என்ற கப்பலில் சென்ற 492 தமிழ் ஏதிலிகளில் 380 ஆண்களும்  62 பெண்களும்  49 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பலர் கனேடியக்காவல் துறையினரின் விசாரிப்புக்களின் பின்பு வெவ்வேறாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட எல்லோரும் விடுவிக்கப்பட்டாலும் சிலர் இன்று வரை சிறையில் வாடுகின்றனர்.

ஆரம்பத்தில் கப்பலின் மாலுமியும்  மற்றும்  பைந்தமிழ் என்னும் எரிபொருள் பொறியியலாளரும் கனேடியப்படைகளால் வன்கூவர் பிரதான சிறையில் இடப்பட  அவரது மனைவி  கர்ப்பிணியான இனியா அகதிகள் சிறையில் உதவியின்றி தனியே தவித்தாள். கூடவே சென்றிருந்த தெரிந்தவர்கள் உறவினர்கள் யாவரும் கைவிட்டு அவள் தவிப்பதைக் கண்ணுற்றும் குருடர்களாயினர். நிறை மாதக்கர்ப்பிணி என்ற மனிதாபிமானமே அற்று மிக மோசமாக நடாத்தப்பட்ட இனியாவின் அந்த நிலைக்கு கப்பலில் அவளின் கூடவே பயணம் செய்த ஒருவர் அவளை ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என வழங்கிய ஒரு  பொய்யான தகவலே காரணமாகும்.

"நாட்டிற்குள் அனுமதிக்க முடியாத  மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு நபர் " என்ற வழக்கினை அந்த நிறைமாதக்கர்ப்பிணி மேல் பதிவு செய்த கனேடிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினர் (CBSA) , இக்குற்றச்சாட்டினை மறுத்த இனியாவினை  மீண்டும் மூன்று மாத காலம் தடுப்புக்காவலில் வைத்தனர்.அதாவது அந்த கால அவகாசத்திற்குள் தகுந்த ஆதாரத்துடன் இனியாவினை விடுதலைப்புலி உறுப்பினர் என நிருபிக்கின்றோம் எனக் கூறி விடுதலை செய்யப்பட்ட அவளினை மீண்டும் நீதிமன்ற ஆணை மூலம் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருந்தார்கள்.

சிறை வைக்கப்பட்டிருந்த அந்த நெருக்கடியான சூழலில் தாய்நாட்டில் உள்ள உறவுகளுடன் தொடர்பு கொள்ளத்தன்னும் பணமின்றித்தவித்த இனியாவினை ஏதோ தீவிரவாதியினை நோக்குவதைப்போன்று அங்கிருந்த ஏனைய தமிழ்ப்பெண்கள் நோக்கினர்.காவல்துறை அங்கு பார்வையிட வரும் தருணங்களில் அவளை விட்டு விலகி இருப்பதும் தம்மை தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதுமாக அங்கிருந்த ஈன மனம் படைத்தவர்கள் நடந்து கொண்டார்கள். ஒரு சிறு உதவி கூட அவளுக்கு அவர்கள் செய்ய எத்தனிப்பதுமில்லை. கையில் பணமின்றி தவித்த இனியா. அந்தச்சிறையில் இருந்த அந்தப் பெண்களின் தலையில் பேன் பார்த்து அதன் மூலமாக கிடைக்கும் ஒன்று இரண்டு கனேடிய டொலர்களை வைத்து ஈழத்தில் உள்ள தனது உறவுகளுடன் தொடர்பு கொண்டு தனது வழக்கிற்கு தேவையான ஆவணங்களைப்பெற்றுக்கொள்ளவும் கனடாவில் வழக்கறிஞருக்கான பணத்தினை ஒழுங்கு செய்யவும் முயற்சி செய்தாள்.

அந்தக்கனேடியச்சிறையில் ஒரு தனி நபருக்கே போதுமான உணவே கிடைக்காத போது  ஒரு நிறைமாதக்கர்ப்பிணிக்கு போதுமானதாக இருக்க முடியுமா? கையில் பணம் இன்றி ஏனையோர் உண்ணும் உணவுகளைப் பார்த்து ஏங்கி , சிறிது நேரம் நிற்கவே  சக்தியற்று பல மணி நேரம் நின்று கொண்டு தமிழ் பெண்களுக்கு தலையில் பேன் பார்த்து பணம் பெற வேண்டிய கால கட்டம் அவளுக்கு ஏன் ஏற்பட்டது? ஒரு கர்ப்பிணியினை நிற்க வைத்து வேலை வாங்கி பணம் கொடுக்கும் அளவிற்கு தமிழினத்தின் மனிதாபிமானம் தேய்ந்து போனதை எண்ணி வெட்கி தலை குனியும் நிலை அதிகரித்து செல்கின்றதே அன்றி குறைந்து விடவில்லை.


தாய்லாந்தில் நிர்க்கதியாகிய பல உறவுகளையும் போரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ உறவுகளையும் தன்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து பசியாற்றிய இனியா தனது குழந்தை பிறக்கும் தருணத்தில் பசியோடு தவித்த கொடுமையினை தனக்குள்ளே புதைத்து வைத்தாலும் அது இன்று வேர் விட்டு கிளை பரப்பி நிற்கின்றது.

அன்றைய நாளில் அதாவது குழந்தை பிறக்கும் தருணத்தில் தன்னும்  அதனை அவளது கணவனுக்கு தெரியப்படுத்த அனுமதிக்க முடியாத இறுக்கமான நிலையில் அவள்  சிறை வைக்கப்பட்டு இருந்தாள். குழந்தை பிறந்தும் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட அவள் உண்ணவோ உறங்கவோ முடியாமல் அவதிப்பட்டாள். ஏதேச்சையாக தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட அவளது கணவன் பைந்தமிழுக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிவிக்கும் நிலையில் கனேடிய சட்டம் இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா? இலங்கை அரசு ஓரளவு மேல் என்றே எண்ணத்தோன்றுகின்றது.


வாய்மையே வெல்லும் என்பது இனியாவின் விடயத்தில் உறுதியானது. 
ஆம்...! கடும் பிரயத்தனங்கள் மேற்கொண்ட கனேடியப்படைகளால் குறிப்பிட்ட அந்தக்காலப்பகுதிக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே இனியா மீதான அந்தப்பொய்யான வழக்கு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் சிறையில் இனியா இருந்த காலப்பகுதியில் கனடா ரோறன்ரோ(Toronto) நகரில் இருந்த தமிழ் வழக்கறிஞர் ஒருவர் இனியாவை விடுதலை செய்கின்றேன் என்று உறுதிமொழி வழங்கி ஈழத்தில் உள்ள அவளது குடும்பத்தவர்களிடம் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட இரண்டாயிரம் கனேடிய டொலர்களை பெற்றுக்கொண்டு எந்தவிதமான வாதங்களையோ நியாயங்களையோ நீதிமன்றத்தில் முன்வைக்காது ஏமாற்றியும் இருக்கின்றார். விடுதலை பெற்றிடலாம் என்று தினம் நம்பி நம்பி அந்தச்சிறையின் ஓரத்தில் வடித்த இனியாவின் கண்ணீரின் அளவினை அந்தச்சிறைக்கம்பிகள் மட்டுமே அளந்து வைத்திருக்கும்.

கனவுகளோடு கனடா சென்ற அந்த இளம் தம்பதிகளின் முதற்குழந்தை பிறந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறுகின்ற இந்த வேளையில் , தந்தையின் தொடுகை என்னவென்றே உணராத அந்தப்பச்சிளம் பாலகி தான் காண்கின்ற ஆண்கள் எல்லோரையும் அப்பா அப்பா என்று அழைத்து ஏங்கும் கொடுமையினை  யார் அறிவார்கள்? வெறுமனே அவளின் குரலினை கேட்டு தினம் தனக்குள் விம்மி அழும் தந்தையும் சிறுமியின் பாசத்தின் ஏக்கத்தினைக்கண்ணுற்று கண்ணீர் வடிக்கும் அன்னையும் மூன்றாண்டுகளாக முகவரி தொலைத்த தபால்களாக எந்தவித நம்பிக்கையும் இன்றி பிரிந்து கிடக்கின்றார்கள். பரிகசிப்புக்களும் ஏளனங்களும் ஒதுக்கல்களும் நன்கே பழகி புண்பட்டுப் போன உள்ளங்களுக்கு உதவிட யாருளர்?  

அந்தச்சிறுமி கல்வி கற்கச்செல்லும் கனேடியப்பள்ளியில் உள்ள குழந்தைகள் தமது தந்தைகளுடன் விளையாடுவதையும் அன்பு பொழிவதையும் கண்ணுற்று அவர்களின் பின்னே அப்பா என்று அழைத்து ஓடிச்செல்லும் அச்சிறுமியின் உணர்வுகளைச்சாகடிக்கின்ற கனேடிய அரசு  சிறுவர் உரிமைகள் மனித உரிமைகள் பற்றி உலக அரங்கில் வெறும் வெளித்தோற்றத்திற்காகவா குரல் கொடுக்கின்றது?

கப்பலினை ஓட்டிச்சென்ற மாலுமியினை பிணையில் விடுவித்த கனேடிய அரசு, கனடா வருவதற்காக கப்பலில் எரிபொருள் பொறியியலாளராக பணியாற்றிய குற்றத்திற்காக இனியாவின் கணவர் பைந்தமிழினை சிறையில் அடைத்த காவல் துறையினர் ஒரு கையெழுத்திற்காக இன்னமும் அவரது வழக்கினை தொடராமல் அவருக்கு பிணை அனுமதியும் கொடுக்காமல் ஒவ்வொரு தவணைக்கும் மீண்டும் மீண்டும் தவணைகளை பிற்போட்டு காலத்தை இழுத்துக்கொண்டு செல்வது பைந்தமிழினை உளவியல் ரீதியாக தண்டிப்பதற்காகவே. இன்னும் சிறிது காலம் இந்த நிலை நீடிக்குமேயானால் அவர் மட்டுமன்றி இனியா மற்றும் அவர்களின் சிறுமியும் உளவியல் ரீதியில் மிகவும் மோசமான நிலையினை எதிர்நோக்குவார்கள்.

உடலியல் ரீதியான சித்திரவதைகளை தன்னும் தாங்கிக் கொண்டு இருந்திடலாம். ஆனால் திட்டமிட்டே இவ்வாறு தனிமைப்படுத்தி நீண்ட காலத்திற்கு தீர்வின்றி ஒரு குடும்பத்தினை சின்னாபின்னமாக்குவது என்பது எந்த வகையான சித்திரவதை என்பது அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.

ஈழத்தில் இருந்தால் பிரச்சினைகள் என்று தப்பி வந்தவர்கள் அதை விட மோசமான நிலையினை புகலிடம் புகுந்த நாடுகளில் அனுபவிப்பதும் ஈழத்தில் காணாமல் போன அல்லது போரில் இறந்த கணவன்களின் மனைவிகள் படுகின்ற துன்பத்தினை விட அதிகமாய் மொழி தெரியாத நாட்டில் சிக்கித்தவித்து குழந்தைகளுடன் வாழ்க்கையினை நகர்த்திச்செல்வதும்  எந்தளவிற்கு சவாலானது என்பது இனியா மற்றும் நிலாவைப்போன்ற ஒவ்வொரு ஈழ அகதிப்பெண்களினதும் அன்றாட வாழ்வு விளக்கிச்செல்லும்.

அத்துடன் பைந்தமிழிற்கு வழக்கறிஞர் என்று அமர்த்திக்கொள்ள பணவசதி இன்றி கனேடிய அரச வழக்கறிஞர் ஒருவரே இவ்வளவு காலமும் செயற்பட்டு வருகின்றார். அவர் இதுவரை வாதாடும் நிலை ஒருநாள் தன்னும் இடம்பெறவில்லை. காரணம் இன்னமும் வழக்கே இடம்பெறவில்லை. நான்காண்டுகள் எட்டப்படும் நிலை இருக்கின்ற இந்த வேளை எதற்காக வழக்கினை தள்ளி வைத்தே காலம் தள்ளுகின்றார்கள். தற்போது அந்த வழக்கறிஞர் தொலைபேசி அழைப்பிற்கு கூட பதில் அளிப்பதில்லை. இலங்கையில் வழக்குகளே இல்லாமல் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலையே இங்கும் காணப்படுகின்றது. இதை யார் தட்டிக்கேட்பது?

இலங்கையில்  தான் அந்த அரசிற்கு எதிராக குரல் கொடுக்க முடியாத உலக தமிழ் அமைப்புக்கள் கனடாவில் மற்றும் தாய்லாந்தில் அந்தந்த அரசுகளின் முரட்டுப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் உறவுகளை மீட்க முயற்சி செய்ய முடியும்.

வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதி நாலு பேர் வாசித்து பெருமூச்செறிய இந்ததொடரினை எழுதவில்லை. சிக்கித்தவிக்கும் உறவுகளுக்காக குரல் கொடுக்க தமிழ் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் முன் வர வேண்டும் என்ற நோக்கில் இறுதிக்கட்ட முயற்சியாக எழுதப்படுகின்றது.

சென்ற தொடரில் குறிப்பிட்ட இலங்கைக்கு நாடு கடத்த இருக்கும் அருமைத்துரை தர்மரத்தினம் என்பவரும் பைந்தமிழுடன் சிறை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் என்ற போர்வை போர்த்திக்கொண்டு கனடாவில் தேர்தலில் வென்ற ராதிகா அம்மணிக்கு எத்தனையோ கண்ணீர் மடல்கள் இனியாவினால் தனது கணவரின் நிலைக்கு உதவி புரியுமாறு வரையப்பட்டும் ஒரு பதில் தன்னும் அம்மணி இனியாவிற்கு உரைக்கவில்லை. கனேடிய அரசிடம் பரிந்துரை செய்ய துப்பில்லை என்றாலும் ஒரு பெண் என்று ஆறுதல் அளிக்கவும் உள்ளம் இல்லாதவர் வெறும் பெயருக்கும் புகழுக்கும் அரசியல் வாதியாக இருப்பதிலும் இல்லாமல் இருக்கலாம்.


ஒரே இனம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கனடாவில் கால் பதித்த அத்தனை தமிழர்களும் ஒரே குரலில் அகதிகள் என்பதை உரத்துச்சொல்லி எவரையும் காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று அத்தனை பேருமே அங்கு அகதி அந்தஸ்து பெற்று இருந்திருப்பர். கனேடிய காவல் துறையினரால் மறுத்து எதுவும் செய்து விட இயலாமல் இருந்திருக்கும். ஆனால் இன்று கிட்டத்தட்ட 100-120 வரையானோரை தவிர ஏனையோருக்கு அகதி அந்தஸ்தும் கொடுக்கப்படாமல் வழக்குகள் நிராகரிக்கப்பட்டும் வழக்குகள் ஏற்கப்படாமலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 360 இற்கு மேற்பட்டோரின் நிலை நிலையில்லாத ஒரு தன்மையில் இருப்பதற்கு எமது இனத்தின் அடிப்படைக்குணமே காரணம்.

ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுபடாமல் ஒரு சிறிய அகதி ஏற்பினை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திணறும் போது தனி நாடும் சுய உரிமையும் அவ்வளவு இலகுவில் கைகளில் சேர்ந்திடுமா? குறிப்பிட்ட ஒரு தொகையினர் அதுவும் ஒரு மாத காலமாய் ஒன்றாகப்பயணித்தவர்கள் தமது சுயநலன்களுக்காக அடுத்தவர்களை கை நீட்டியவர்கள் இருக்கின்ற எமது இனம் இருக்கும் வரை இப்படி நாடு விட்டு நாடு அலைந்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேற்று  இனத்தால் ஏற்படுவதற்கு முன் எம்மினத்தால் தான் நிச்சயம் ஏற்படும்.


தொடரும்......

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 




அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-8.html

Thursday, 6 February 2014

கடற்சூரியன் (MV SUNSEA) தரையில் உருவாக்கிய கொந்தளிப்பு...!!! (பாகம் 6)


ஈழத்து உறவுகளை தன் வயிற்றில் அடைக்கலம் கொடுத்த தாய்லாந்தின் கடற்சூரியன் கனடாவின்  பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரை சேர்த்தது. பல இன்னல்களின் மத்தியில் பயணம் செய்து கரையிறங்கியவர்களை வினாக்கள் பல  தொடுத்து கனேடிய எல்லை பாதுகாப்பு துறையினர் (CBSL) துருவித்துருவி ஆராய்ந்தனர். 

உண்மை சொன்னால் தப்பி விடலாம் என்று சிலரும் , உண்மைகளை தமக்கு சாதகமான பொய்களாக்கிய பலருமாக பல்வேறுபட்ட வாக்கு மூலங்கள் பதிவளிக்கப்பட்டன. எத்தனையோ ஆட்கடத்தல் முகவர்களின் விபரங்கள்  எடுத்துரைக்கப்பட்டும் அவர்களை கைது செய்ய முடியாமல் இன்றும் கனேடிய காவல் துறையினர் அலசிக் கொண்டு அலைகின்றனர். காரணம் குற்றம் செய்தவன் தங்கி இருந்து வருகவே என்னை பிடித்துச்செல்கவே  என்று பிரச்சினைக்குரிய நாட்டில் குந்தி இருக்கவா போகின்றான் ? அப்படி குந்தி இருப்பவன் தான் குற்றவாளி என்று நான்கு வருடமாய் ஒருவனை பிடித்து தடுத்து வைத்து  பைத்தியமாக்கும் கனேடிய காவல் துறை என்ற குரங்கின் கையில் அகப்பட்ட மாலையா அகப்பட்டவன்? 

தப்பி ஓடிய பிரதான குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி பணம் பறித்து நிர்க்கதியாக்கி கொண்டே இருக்கின்றார்கள். ஏன் இன்னும் அவர்களை கைது செய்ய துப்பில்லாமல் மதுரனின் மேல் மப்பில் அலைகின்றார்கள்?

கடந்த வருடமும் தாய்லாந்தின் கரையோரப்பகுதியான பத்தையாவில்(Pattaya) கப்பலுக்கு என்று தங்கியிருந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஈழத்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்கள்? அதன் சூத்திரதாரி யார்? ஏன் இன்னும் கைது செய்யவில்லை? இங்கு யார் காட்டிக்கொடுக்கின்றார்களோ அவர்களே இந்த ஏற்பாட்டினையும் நடாத்திக்கொண்டு இரு வேடமிடுகின்றார்கள். தமது தப்புக்களை மூடி மறைக்க ஒருவனின் மீது மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தி அதில் குளிர் காயும் மனிதர்களையும் அவர்களின் வேடத்தினையும் கண்டு கொள்ள தெரியாத சிறுபிள்ளைத்தனமான அறிவு கொண்டவர்கள் தான் கனேடிய காவல் துறையினரா? 

தாய்லாந்தில் உள்ளவர்களை மட்டுமன்றி கடற்சூரியனில் சென்றவர்களும் காட்டிக்கொடுப்புக்களால் இன்னமும் பாதிக்கப்பட்டு  வாடி வதங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து அகதி அந்தஸ்தும் இல்லாமல் வழக்கும் ஏற்கப்படாமல் இருப்பவர்கள் அநேகர். அதில் சென்ற பல போராளிகள் மற்றவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் இன்னமும் அவர்களின் வழக்கே ஏற்கப்படாமல் இருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்துடன் போராளி என நிரூபிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப்பட்ட "அருமைத்துரை தர்மரத்தினம்" என்கின்ற வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் வருகின்ற பெப்ரவரி பதினோராம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருக்கின்றார். இவரை  நீதிமன்றம் நாடுகடத்த உத்தரவிட்ட நிலையில் இலங்கையில் அவர் எதிர்நோக்க விருக்கும் அபாயத்தினை எண்ணி அச்சத்தில் கனேடியச் சிறையில் தவிக்கும் அவரது நாடு கடத்தலை தடுக்கப்  பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எதுவும் பலன் அற்று இறுதிக்கட்ட நிலையில் தவிக்கும் அந்த போராளி செய்த குற்றம் என்ன? ஈழத்துக்காகப்போராடிய ஒரு உத்தம கடற்புலிப்போராளியின் இறுதிக்கட்ட வாழ்வின் போராட்டத்தில் உலகத்தில் இன்னும் தமிழ் அமைப்புக்கள் என்றும் நாடுகள் கடந்த அரசுகள் என்றும் வெறுமனே பெயருக்கு இயங்குகின்ற அமைப்புக்களின் பங்களிப்பு என்ன? கனடாவில் தமிழருக்கான பிரதிநிதியாக பாராளுமன்றம் சென்று வரும் ராதிகா சிற்சபை ஈசன் இந்த நாடு கடத்தலை தடுத்து நிறுத்த முயற்சி எடுத்துண்டா?

அர்ப்பணிப்பும் சுயநலம் இன்றிய ஒரு  தனிமனிதன் ஒருவன் தன் குடும்பத்தினையும் காவு கொடுத்து ஒரு இனத்துக்காகவே மடிகின்றான் என்றால் அவனே தலைவன். அவனின் காலத்தின் பின் தம்மை தலைவர் என்று தமக்கு தாமே முடி சூடுபவர்கள் எவரும் தலைவர்கள் ஆகிவிட முடியாது. ஒரு போராளியினை காப்பாற்ற முடியாதவர்களால் ஒரு இனத்தை காப்பாற்ற முடியுமா?

 மேற்படி அருமைத்துரை தர்மரத்தினம் என்ற போராளியின் நாடுகடத்தலை தவிர்ப்பதற்காக ஏற்கனவே கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையில் படுகொலையான கப்பல் அமைப்பாளர் ஒருவரது மரண ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தும், அதனை நீதிபதியின் கண்களில் இருந்து மறைத்துக்கொண்ட கனடா எல்லைப்பாதுகாப்பு துறையினரின்(CBSL) நோக்கம் என்ன? நிச்சயம் அது கொலைக்கள நாட்டில் படுகொலை செய்யத்தீட்டுகின்ற சதித்திட்டமே.

தனிப்பட்ட ஒரு நபர் அதாவது முன்னொரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடி தற்போது அகதியாக புகலிடம் புகுந்த ஒரு உயிருக்கு அடைக்கலம் கொடுக்க முடியாத அளவுக்கு கனடாவின் சட்டம் உள்ளதா? அன்றி கனடாவின் மனித உரிமைகள் இதற்கு இடமளிக்காதா?

அவர் நாடு கடத்தப்பட்டு அவரின் உயிருக்கு அங்கு உத்தரவாதம் அற்றுப்போனால் கனடா அரசு அவரின்  உயிரை அவரது குடும்பத்தவர்களுக்கு திருப்பிக்கொடுக்க முடியுமா?

இவற்றுக்கு பின்னால் கனேடிய இலங்கை சதி இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கடற்சூரியனில் பயணம் செய்து இத்தொடரின் ஆரம்ப தொடரில் குறிப்பிட்ட பல  காட்டிக்கொடுப்புக்களை நிகழ்த்திய அந்த பிரதான கப்பல் ஏற்பாட்டாளர் கனடாவில் பலரை காட்டிக்கொடுத்து தான் தப்பிக்க முயன்றும் கனேடிய அரசு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. உண்மை நேர்மை என்று ஒழுகாத ஒரு மனிதர் தண்டனைக்கு அடங்க ஒத்துக்கொள்ள மாட்டார் . எனவே அவர் சுய விருப்பில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். 

அவர் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் அல்ல. ஆனால் விடுதலைப்புலிகளுக்காக ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டு பண மோசடிகள் புரிந்தவர். இருந்தாலும் அவருக்கு எதிராக தாய்லாந்து மற்றும் கனடாவில்  ஆயுதக்கடத்தல் வழக்குகள்  நிலுவையில் இருக்கும் போது இலங்கை மட்டும் அவரை செங்கம்பளம் விரித்து வரவேற்குமா? இலங்கையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழமையான " சித்திரவதை வெகுமதிகள் "அங்கு அவருக்கு நிறையவே வழங்கப்பட்டன. இருந்தாலும் இலங்கையில் பணம் பாதாளம் மட்டுமல்ல அண்டம் வரை பாயும் என்பதால் அவர் சிறிது காலத்தில் விடுவிக்கப்பட்டார். 

ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து , கடந்த ஆண்டு அவர் ஒரு விபத்தில் பலியானதாக செய்தி பரப்பப்பட்டது. இந்த விபத்தின் பின்னணியில் நிச்சயமாக இராணுவம் இருப்பதாக அவரின் குடும்பத்தார் சந்தேகிக்கும் அதே வேளை அவரது தலையில் பலமான இரும்புக்கம்பி கொண்டு தாக்கப்பட்டதாலேயே அவருக்கு இறப்பு ஏற்பட்டதாகவும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும் இந்த விபத்தின் பின்னணியில்  இலங்கை இராணுவம் இருக்குமேயானால் அது நிச்சயம் கனேடிய எல்லை பாதுகாப்பு துறையின் கூட்டுச்சதி என்று உறுதியாக நம்ப முடியும். காரணம் இலங்கை இராணுவத்திற்கு அவரை தனிப்பட்ட ரீதியில் கொல்ல வேண்டிய தேவை இல்லை. அவரை விட அதிக கடத்தல்களில் ஈடுபட்டவர்களே அரசோடு சேர்ந்து இயங்கும் போது, அவரைக்கொல்ல வேண்டிய தேவை மிக மிக அரிது. பணத்தினைப் பெற்றுக்கொண்டு விடுதலை செய்தவர்களே அவரைத் தேடிப்பிடித்து கொலை செய்வதிலும் பார்க்க பணத்தினை இன்னும் கறக்கவே எண்ணுவார்கள். 

அத்துடன் கனேடிய அரசு சாதரணமான ஒரு வாக்கு மூல குற்றச்சாட்டுக்கே நான்கு வருடமாக மதுரனை இந்த நாட்டில் உலவ அனுமதிக்காமல் தடுத்து தமது கண்காணிப்பில் வைத்திருக்கும் போது கப்பலோடு நேரடியாக தொடர்பு பட்டு பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட தற்போது அமரரான அந்த கப்பல் ஏற்பாட்டாளரை தமது கண்காணிப்பில் இருந்து எவ்வாறு நீக்கிக் கொள்ளும்? இலங்கை அனுப்பி அங்கு சாகடிக்கவே அது திட்டம் தீட்டி அங்கு அவரை அனுப்பி இருக்கின்றது. அவர் ஒரு காட்டிக்கொடுப்பாளர் பலருக்கு அநியாயம் செய்த ஒருவர் என்றாலும் கனேடிய சதியில் கொலையுண்டவர் என்னும் போது சற்று மனம் வேதனைப்படவே செய்கின்றது. அவருக்கு ஒரு பெண்குழந்தையும் மனைவியும் கனடாவில் இன்னும் அகதி அந்தஸ்து கோரலுக்கான வழக்கு ஏற்கப்படாமல் இருக்கின்றார்கள் . 

காட்டிக்கொடுப்புக்களும், பணத்தால் கொள்வனவு செய்யப்படும் வாழ்வும் நெடு நாட்கள் நீடிக்கப்போவதில்லை. கனேடிய அரசிடம் இருந்தும் இலங்கையிடமும் இருந்தும் தப்பி பணம் கொடுத்து சுதந்திரம் பெற்றுக்கொண்டவர் , காலத்திடம்  விலை பேச தன்னகத்தே நீதி நேர்மையினைக்கொண்டிருக்கவில்லை என்பது அவரது படுகொலையில் இருந்து நாம் அறிய வேண்டிய அப்பட்டமான உண்மையாகும்.

தற்போது சிறையில் வாடும் எல்லோருக்கும் காலம் பகைத்துக்கொள்ளலாம். பணம் தங்காமல் இருக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமான நீதி நேர்மை உண்மைகளை தம் அகத்தே மலை போல் குவித்து வைத்திருக்கும் போது என்றோ ஒரு நாள் காலம் அவற்றை விலை பேசி அவர்களுக்கு சுதந்திரம்  என்னும் நிலையான அமிர்தம் என்னும் கனியினைக் கொடுக்கும். கனேடிய தாய்லாந்து ,இலங்கை அரசுகள் தீட்டும் சதிகள் காலத்தால் தோற்கடிக்கப்படும். அன்று காட்டிக்கொடுப்புக்கள் அர்த்தமற்றுப்  போகும் போது காட்டிக்கொடுத்தவர்கள் நிச்சயமாகக் காலத்தால் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை வளமாக , நலமாக வாழட்டும். 

அப்பேற்பட்ட தேசிய தலைவரையும், ஈழப் போராட்டத்தையுமே கொச்சைப்படுத்தவும் காட்டிக்கொடுக்கவும் பலர் துணிந்து அதில் வெற்றியும் கண்டார்கள். அந்த மாபெரும் இயக்கம் இவற்றுக்கு பலியாகி மெளனித்து உறங்கும் போது அவர்களின் கால் விரலுக்கு சமனான தனி நபர்கள் இவற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியுமா?   

தொடரும்...........

கடற்சூரியனில் பயணித்த ஒரு கர்ப்பிணியின் மகளான கனடாவில் பிறந்த ஒரு பச்சிளம் பாலகி இன்று மூன்று வருடங்கள் கழிந்த நிலையிலும் ஒரே மாகாணத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் இன்னும் விடுதலை செய்யப்படாத தனது தந்தையின் ஸ்பரிசம் இன்றி தினம் தந்தைக்காக ஏங்கித்தவிக்கின்றாள்..? அந்தப்பிஞ்சுக்குழந்தை செய்த தவறு என்ன? விரைவில் அடுத்த தொடரில்......

அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 



அடுத்த பதிவிற்கு செல்ல
http://arasikavithaikal.blogspot.com/2014/02/mv-sunsea-7.html