2010 ஆவணி 13 இல் கனடாவினை அடைந்த "கடற்சூரியன்"(MV SUNSEA) என்ற கப்பலில் சென்ற 492 தமிழ் ஏதிலிகளில் 380 ஆண்களும் 62 பெண்களும் 49 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பலர் கனேடியக்காவல் துறையினரின் விசாரிப்புக்களின் பின்பு வெவ்வேறாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட எல்லோரும் விடுவிக்கப்பட்டாலும் சிலர் இன்று வரை சிறையில் வாடுகின்றனர்.
ஆரம்பத்தில் கப்பலின் மாலுமியும் மற்றும் பைந்தமிழ் என்னும் எரிபொருள் பொறியியலாளரும் கனேடியப்படைகளால் வன்கூவர் பிரதான சிறையில் இடப்பட அவரது மனைவி கர்ப்பிணியான இனியா அகதிகள் சிறையில் உதவியின்றி தனியே தவித்தாள். கூடவே சென்றிருந்த தெரிந்தவர்கள் உறவினர்கள் யாவரும் கைவிட்டு அவள் தவிப்பதைக் கண்ணுற்றும் குருடர்களாயினர். நிறை மாதக்கர்ப்பிணி என்ற மனிதாபிமானமே அற்று மிக மோசமாக நடாத்தப்பட்ட இனியாவின் அந்த நிலைக்கு கப்பலில் அவளின் கூடவே பயணம் செய்த ஒருவர் அவளை ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என வழங்கிய ஒரு பொய்யான தகவலே காரணமாகும்.
"நாட்டிற்குள் அனுமதிக்க முடியாத மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு நபர் " என்ற வழக்கினை அந்த நிறைமாதக்கர்ப்பிணி மேல் பதிவு செய்த கனேடிய எல்லைப்பாதுகாப்பு பிரிவினர் (CBSA) , இக்குற்றச்சாட்டினை மறுத்த இனியாவினை மீண்டும் மூன்று மாத காலம் தடுப்புக்காவலில் வைத்தனர்.அதாவது அந்த கால அவகாசத்திற்குள் தகுந்த ஆதாரத்துடன் இனியாவினை விடுதலைப்புலி உறுப்பினர் என நிருபிக்கின்றோம் எனக் கூறி விடுதலை செய்யப்பட்ட அவளினை மீண்டும் நீதிமன்ற ஆணை மூலம் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருந்தார்கள்.
சிறை வைக்கப்பட்டிருந்த அந்த நெருக்கடியான சூழலில் தாய்நாட்டில் உள்ள உறவுகளுடன் தொடர்பு கொள்ளத்தன்னும் பணமின்றித்தவித்த இனியாவினை ஏதோ தீவிரவாதியினை நோக்குவதைப்போன்று அங்கிருந்த ஏனைய தமிழ்ப்பெண்கள் நோக்கினர்.காவல்துறை அங்கு பார்வையிட வரும் தருணங்களில் அவளை விட்டு விலகி இருப்பதும் தம்மை தெரிந்ததாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிப்பதுமாக அங்கிருந்த ஈன மனம் படைத்தவர்கள் நடந்து கொண்டார்கள். ஒரு சிறு உதவி கூட அவளுக்கு அவர்கள் செய்ய எத்தனிப்பதுமில்லை. கையில் பணமின்றி தவித்த இனியா. அந்தச்சிறையில் இருந்த அந்தப் பெண்களின் தலையில் பேன் பார்த்து அதன் மூலமாக கிடைக்கும் ஒன்று இரண்டு கனேடிய டொலர்களை வைத்து ஈழத்தில் உள்ள தனது உறவுகளுடன் தொடர்பு கொண்டு தனது வழக்கிற்கு தேவையான ஆவணங்களைப்பெற்றுக்கொள்ளவும் கனடாவில் வழக்கறிஞருக்கான பணத்தினை ஒழுங்கு செய்யவும் முயற்சி செய்தாள்.
அந்தக்கனேடியச்சிறையில் ஒரு தனி நபருக்கே போதுமான உணவே கிடைக்காத போது ஒரு நிறைமாதக்கர்ப்பிணிக்கு போதுமானதாக இருக்க முடியுமா? கையில் பணம் இன்றி ஏனையோர் உண்ணும் உணவுகளைப் பார்த்து ஏங்கி , சிறிது நேரம் நிற்கவே சக்தியற்று பல மணி நேரம் நின்று கொண்டு தமிழ் பெண்களுக்கு தலையில் பேன் பார்த்து பணம் பெற வேண்டிய கால கட்டம் அவளுக்கு ஏன் ஏற்பட்டது? ஒரு கர்ப்பிணியினை நிற்க வைத்து வேலை வாங்கி பணம் கொடுக்கும் அளவிற்கு தமிழினத்தின் மனிதாபிமானம் தேய்ந்து போனதை எண்ணி வெட்கி தலை குனியும் நிலை அதிகரித்து செல்கின்றதே அன்றி குறைந்து விடவில்லை.
தாய்லாந்தில் நிர்க்கதியாகிய பல உறவுகளையும் போரால் பாதிக்கப்பட்ட எத்தனையோ உறவுகளையும் தன்னிடத்தில் அடைக்கலம் கொடுத்து பசியாற்றிய இனியா தனது குழந்தை பிறக்கும் தருணத்தில் பசியோடு தவித்த கொடுமையினை தனக்குள்ளே புதைத்து வைத்தாலும் அது இன்று வேர் விட்டு கிளை பரப்பி நிற்கின்றது.
அன்றைய நாளில் அதாவது குழந்தை பிறக்கும் தருணத்தில் தன்னும் அதனை அவளது கணவனுக்கு தெரியப்படுத்த அனுமதிக்க முடியாத இறுக்கமான நிலையில் அவள் சிறை வைக்கப்பட்டு இருந்தாள். குழந்தை பிறந்தும் உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட அவள் உண்ணவோ உறங்கவோ முடியாமல் அவதிப்பட்டாள். ஏதேச்சையாக தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட அவளது கணவன் பைந்தமிழுக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிவிக்கும் நிலையில் கனேடிய சட்டம் இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா? இலங்கை அரசு ஓரளவு மேல் என்றே எண்ணத்தோன்றுகின்றது.
வாய்மையே வெல்லும் என்பது இனியாவின் விடயத்தில் உறுதியானது.
ஆம்...! கடும் பிரயத்தனங்கள் மேற்கொண்ட கனேடியப்படைகளால் குறிப்பிட்ட அந்தக்காலப்பகுதிக்குள் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே இனியா மீதான அந்தப்பொய்யான வழக்கு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில் சிறையில் இனியா இருந்த காலப்பகுதியில் கனடா ரோறன்ரோ(Toronto) நகரில் இருந்த தமிழ் வழக்கறிஞர் ஒருவர் இனியாவை விடுதலை செய்கின்றேன் என்று உறுதிமொழி வழங்கி ஈழத்தில் உள்ள அவளது குடும்பத்தவர்களிடம் தொடர்பு கொண்டு கிட்டத்தட்ட இரண்டாயிரம் கனேடிய டொலர்களை பெற்றுக்கொண்டு எந்தவிதமான வாதங்களையோ நியாயங்களையோ நீதிமன்றத்தில் முன்வைக்காது ஏமாற்றியும் இருக்கின்றார். விடுதலை பெற்றிடலாம் என்று தினம் நம்பி நம்பி அந்தச்சிறையின் ஓரத்தில் வடித்த இனியாவின் கண்ணீரின் அளவினை அந்தச்சிறைக்கம்பிகள் மட்டுமே அளந்து வைத்திருக்கும்.
கனவுகளோடு கனடா சென்ற அந்த இளம் தம்பதிகளின் முதற்குழந்தை பிறந்து மூன்றாண்டுகள் நிறைவு பெறுகின்ற இந்த வேளையில் , தந்தையின் தொடுகை என்னவென்றே உணராத அந்தப்பச்சிளம் பாலகி தான் காண்கின்ற ஆண்கள் எல்லோரையும் அப்பா அப்பா என்று அழைத்து ஏங்கும் கொடுமையினை யார் அறிவார்கள்? வெறுமனே அவளின் குரலினை கேட்டு தினம் தனக்குள் விம்மி அழும் தந்தையும் சிறுமியின் பாசத்தின் ஏக்கத்தினைக்கண்ணுற்று கண்ணீர் வடிக்கும் அன்னையும் மூன்றாண்டுகளாக முகவரி தொலைத்த தபால்களாக எந்தவித நம்பிக்கையும் இன்றி பிரிந்து கிடக்கின்றார்கள். பரிகசிப்புக்களும் ஏளனங்களும் ஒதுக்கல்களும் நன்கே பழகி புண்பட்டுப் போன உள்ளங்களுக்கு உதவிட யாருளர்?
அந்தச்சிறுமி கல்வி கற்கச்செல்லும் கனேடியப்பள்ளியில் உள்ள குழந்தைகள் தமது தந்தைகளுடன் விளையாடுவதையும் அன்பு பொழிவதையும் கண்ணுற்று அவர்களின் பின்னே அப்பா என்று அழைத்து ஓடிச்செல்லும் அச்சிறுமியின் உணர்வுகளைச்சாகடிக்கின்ற கனேடிய அரசு சிறுவர் உரிமைகள் மனித உரிமைகள் பற்றி உலக அரங்கில் வெறும் வெளித்தோற்றத்திற்காகவா குரல் கொடுக்கின்றது?
கப்பலினை ஓட்டிச்சென்ற மாலுமியினை பிணையில் விடுவித்த கனேடிய அரசு, கனடா வருவதற்காக கப்பலில் எரிபொருள் பொறியியலாளராக பணியாற்றிய குற்றத்திற்காக இனியாவின் கணவர் பைந்தமிழினை சிறையில் அடைத்த காவல் துறையினர் ஒரு கையெழுத்திற்காக இன்னமும் அவரது வழக்கினை தொடராமல் அவருக்கு பிணை அனுமதியும் கொடுக்காமல் ஒவ்வொரு தவணைக்கும் மீண்டும் மீண்டும் தவணைகளை பிற்போட்டு காலத்தை இழுத்துக்கொண்டு செல்வது பைந்தமிழினை உளவியல் ரீதியாக தண்டிப்பதற்காகவே. இன்னும் சிறிது காலம் இந்த நிலை நீடிக்குமேயானால் அவர் மட்டுமன்றி இனியா மற்றும் அவர்களின் சிறுமியும் உளவியல் ரீதியில் மிகவும் மோசமான நிலையினை எதிர்நோக்குவார்கள்.
உடலியல் ரீதியான சித்திரவதைகளை தன்னும் தாங்கிக் கொண்டு இருந்திடலாம். ஆனால் திட்டமிட்டே இவ்வாறு தனிமைப்படுத்தி நீண்ட காலத்திற்கு தீர்வின்றி ஒரு குடும்பத்தினை சின்னாபின்னமாக்குவது என்பது எந்த வகையான சித்திரவதை என்பது அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.
ஈழத்தில் இருந்தால் பிரச்சினைகள் என்று தப்பி வந்தவர்கள் அதை விட மோசமான நிலையினை புகலிடம் புகுந்த நாடுகளில் அனுபவிப்பதும் ஈழத்தில் காணாமல் போன அல்லது போரில் இறந்த கணவன்களின் மனைவிகள் படுகின்ற துன்பத்தினை விட அதிகமாய் மொழி தெரியாத நாட்டில் சிக்கித்தவித்து குழந்தைகளுடன் வாழ்க்கையினை நகர்த்திச்செல்வதும் எந்தளவிற்கு சவாலானது என்பது இனியா மற்றும் நிலாவைப்போன்ற ஒவ்வொரு ஈழ அகதிப்பெண்களினதும் அன்றாட வாழ்வு விளக்கிச்செல்லும்.
அத்துடன் பைந்தமிழிற்கு வழக்கறிஞர் என்று அமர்த்திக்கொள்ள பணவசதி இன்றி கனேடிய அரச வழக்கறிஞர் ஒருவரே இவ்வளவு காலமும் செயற்பட்டு வருகின்றார். அவர் இதுவரை வாதாடும் நிலை ஒருநாள் தன்னும் இடம்பெறவில்லை. காரணம் இன்னமும் வழக்கே இடம்பெறவில்லை. நான்காண்டுகள் எட்டப்படும் நிலை இருக்கின்ற இந்த வேளை எதற்காக வழக்கினை தள்ளி வைத்தே காலம் தள்ளுகின்றார்கள். தற்போது அந்த வழக்கறிஞர் தொலைபேசி அழைப்பிற்கு கூட பதில் அளிப்பதில்லை. இலங்கையில் வழக்குகளே இல்லாமல் இருக்கும் அரசியல் கைதிகளின் நிலையே இங்கும் காணப்படுகின்றது. இதை யார் தட்டிக்கேட்பது?
இலங்கையில் தான் அந்த அரசிற்கு எதிராக குரல் கொடுக்க முடியாத உலக தமிழ் அமைப்புக்கள் கனடாவில் மற்றும் தாய்லாந்தில் அந்தந்த அரசுகளின் முரட்டுப்பிடிக்குள் சிக்கித்தவிக்கும் உறவுகளை மீட்க முயற்சி செய்ய முடியும்.
வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதி நாலு பேர் வாசித்து பெருமூச்செறிய இந்ததொடரினை எழுதவில்லை. சிக்கித்தவிக்கும் உறவுகளுக்காக குரல் கொடுக்க தமிழ் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் முன் வர வேண்டும் என்ற நோக்கில் இறுதிக்கட்ட முயற்சியாக எழுதப்படுகின்றது.
சென்ற தொடரில் குறிப்பிட்ட இலங்கைக்கு நாடு கடத்த இருக்கும் அருமைத்துரை தர்மரத்தினம் என்பவரும் பைந்தமிழுடன் சிறை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்ற தொடரில் குறிப்பிட்ட இலங்கைக்கு நாடு கடத்த இருக்கும் அருமைத்துரை தர்மரத்தினம் என்பவரும் பைந்தமிழுடன் சிறை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் என்ற போர்வை போர்த்திக்கொண்டு கனடாவில் தேர்தலில் வென்ற ராதிகா அம்மணிக்கு எத்தனையோ கண்ணீர் மடல்கள் இனியாவினால் தனது கணவரின் நிலைக்கு உதவி புரியுமாறு வரையப்பட்டும் ஒரு பதில் தன்னும் அம்மணி இனியாவிற்கு உரைக்கவில்லை. கனேடிய அரசிடம் பரிந்துரை செய்ய துப்பில்லை என்றாலும் ஒரு பெண் என்று ஆறுதல் அளிக்கவும் உள்ளம் இல்லாதவர் வெறும் பெயருக்கும் புகழுக்கும் அரசியல் வாதியாக இருப்பதிலும் இல்லாமல் இருக்கலாம்.
ஒரே இனம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கனடாவில் கால் பதித்த அத்தனை தமிழர்களும் ஒரே குரலில் அகதிகள் என்பதை உரத்துச்சொல்லி எவரையும் காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று அத்தனை பேருமே அங்கு அகதி அந்தஸ்து பெற்று இருந்திருப்பர். கனேடிய காவல் துறையினரால் மறுத்து எதுவும் செய்து விட இயலாமல் இருந்திருக்கும். ஆனால் இன்று கிட்டத்தட்ட 100-120 வரையானோரை தவிர ஏனையோருக்கு அகதி அந்தஸ்தும் கொடுக்கப்படாமல் வழக்குகள் நிராகரிக்கப்பட்டும் வழக்குகள் ஏற்கப்படாமலும் இருக்கின்றது. கிட்டத்தட்ட 360 இற்கு மேற்பட்டோரின் நிலை நிலையில்லாத ஒரு தன்மையில் இருப்பதற்கு எமது இனத்தின் அடிப்படைக்குணமே காரணம்.
ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுபடாமல் ஒரு சிறிய அகதி ஏற்பினை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திணறும் போது தனி நாடும் சுய உரிமையும் அவ்வளவு இலகுவில் கைகளில் சேர்ந்திடுமா? குறிப்பிட்ட ஒரு தொகையினர் அதுவும் ஒரு மாத காலமாய் ஒன்றாகப்பயணித்தவர்கள் தமது சுயநலன்களுக்காக அடுத்தவர்களை கை நீட்டியவர்கள் இருக்கின்ற எமது இனம் இருக்கும் வரை இப்படி நாடு விட்டு நாடு அலைந்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேற்று இனத்தால் ஏற்படுவதற்கு முன் எம்மினத்தால் தான் நிச்சயம் ஏற்படும்.
ஒட்டுமொத்த மக்களும் ஒன்றுபடாமல் ஒரு சிறிய அகதி ஏற்பினை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் திணறும் போது தனி நாடும் சுய உரிமையும் அவ்வளவு இலகுவில் கைகளில் சேர்ந்திடுமா? குறிப்பிட்ட ஒரு தொகையினர் அதுவும் ஒரு மாத காலமாய் ஒன்றாகப்பயணித்தவர்கள் தமது சுயநலன்களுக்காக அடுத்தவர்களை கை நீட்டியவர்கள் இருக்கின்ற எமது இனம் இருக்கும் வரை இப்படி நாடு விட்டு நாடு அலைந்து கொண்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வேற்று இனத்தால் ஏற்படுவதற்கு முன் எம்மினத்தால் தான் நிச்சயம் ஏற்படும்.
தொடரும்......
அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து
அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து
No comments:
Post a Comment