Search This Blog

Monday, 1 October 2012

காட்டிக்கொடுக்கின்றது என்னுள்ளிருக்கும் உன் இதயம்...!!!



விழி கொண்டு நோக்கிட முடியா
விதியா இது...?
விழியாவது பேசி ஆற்றுப்படுத்த  முடியா.
விதியா இது...?

உருவம் ஒன்று மட்டும் நிழலாடுகின்றது...!
உன்னை காணும் துடிப்பில் எட்டி எட்டி நோக்கும் என்னை.
உருகும் மனதோடு அங்கும் இங்கும் அந்தரிக்கும்
உன் தவிப்பை காணுகின்ற என் கண்களில் நீரில்லையே,,

இதயம் கனம் தாங்காது வெடித்தாலும்..
இந்த பேதையை தாங்கி கொள்ள அருகில் தானும் - உனக்கு 
இடமளிப்பார்களா ?

உன் மனதை தாங்கி வரும் 
உன் எழுத்துக்கள் நிறைந்த மடலை காண
ஓடோடி வருகின்றேன் மணித்தியால 
ஓட்டங்களை கடக்கும் பேருந்தில் ஏறி..

கருவிலும் இடுப்பிலும் சுமக்கும் மழலைகளின்
சுமையை விட நெஞ்சில் 
சுமக்கும் உன் சுமை அதிகமாய்..
என்னை பற்றிய சுமைகளை 
சுமந்து கொண்டிருக்கும் உன் 
சுமைகளையும் சேர்த்து 
சுமப்பதாலோ ...??

கைமாறி வரும் என் மனது உன்னிடமும், உன் மனது என்னிடமும்
கை சேர்வதற்கிடையில்....
அல்லாடி போய் விடுவேன்
அந்தரத்தில்....

காட்சி கொடுக்கும் முகத்தினை விட 
காட்டாத உன் அகம் தெட்டதெளிவாக தெரிகின்றது..
காட்டும் சைகையில்  புரிகின்ற  உன் வேதனையையும் 
காட்டிக்கொள்ளாமல் தவிக்கும் உன் தவிப்பையும்..
காட்டிக்கொடுக்கின்றது என்னுள்ளிருக்கும்  உன் இதயம்...!!! 

அர்த்தமற்ற பிரிவுகளும் சிறைகளும் 
அடிக்கடி எம்மை
அரவணைப்பதற்கு நாம் இழைத்த 
அநீதி தான் என்னவோ??
அகதி என்பதை - எமக்கு 
அந்தஸ்தாக 
அளித்தது யார்??
யார் இழைத்த 
அநீதி இது..???

 அரசி

Sunday, 17 April 2011

நிலவாய் என் வாழ்வில் உதித்த நிலவனே...!!!



இருளோடு ஒளிந்து

இரும்பு நெஞ்சமது துவண்டு

இடுக்கண் இமயமாய் பெருகி வர..

இதமாய் ஒரு நன்மொழி பேசி,,

இதயத்தை வருடி - மெல்ல

இன்பம் நல்கிய இனியவனே..!!!



நினைப்பை

நிஜமாக்கி - பால்

நிலவாய் என் வாழ்வில் உதித்த

நிலவனே...!!!



பத்தாண்டு உறவாய்

பக்குவமாய் என்னை - உன்

இதயமதில் இருத்திக்கொண்ட

இதயவனே..!!!



உண்மைகள் பல

உணர்த்தப்பட்டும் எனை

உயிராய் தாங்கும் - என்

உயிர் கொண்ட தெய்வமே..!!!



காதல் கணவனே..!!!

காலங்கள் கடந்தாலும்,,

என் நெஞ்சமதில் உன்னை இருத்தி,,

என்றென்றும் பூஜிப்பேன்

என் இறையாக......

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....!!!! 


அரசி 

Tuesday, 15 June 2010

சிரித்து பரந்து நிமிர்ந்த எம் வானம்,, சிறுகித்தலை குனிகின்றது இன்று..

தமிழீழத்தேசமதின் உயிர் நாடி - எங்கள்

தங்க நகரம் கிளிநொச்சி

தரங்கெட்ட சிங்களவனின் கையில்...



முற்று முழுதாய் புத்தனின் தேசமாய்

மூழ்கிக்கொண்டிருக்கின்றது எம் கலாச்சார நகரம்



சிங்களவனின் சீர்கேட்ட செயலால்

சினம் கொண்டு எழ வேண்டாமோ..?



சிரிப்பைத்தொலைத்து விட்ட இனம்

சிந்தனையையும் தொலைத்து விட்டதன்றோ..?



சிவப்பு மஞ்சள் கொடியின் பறப்பில்

சிரித்து பரந்து நிமிர்ந்த எம் வானம்

சிறுகித்தலை குனிகின்றது இன்று..

சிங்களக் கலாச்சார கொடிகளின் ஆக்கிரமிப்பால்



வெசாக் கூடுகள் அலங்கரிக்கின்றன

வெந்து போன எம் தேசமதை...



கன்னிகளின் கற்பு

காடையரால் களவாடப்படுவதும்,

கண்ணுக்கெட்டிய இடமெல்லாம் மனிதப் புதைகுழிகளும்

கபாலமும் எலும்புக்கூடுகளுமாய்..

மயானங்கள் கூட தோற்று விடும் தேசமாக - மெல்ல

மரணித்து போகின்றது எம் தேசம்...



கண்முன்னே மண் காணாமல் போவதை

கண்டும் கேட்டும் இருந்து - இரத்தக்

கண்ணீர் வடிப்பதை தவிர

வேறென்ன முடியும் எம்மால்..?



சிங்கம் சிம்மாசனத்திலே கொடுங்கோலோச்ச

சிறு நரிக் கூட்டங்கள் மானங்கெட்டு சாமரை வீச..

இதயம் ஏங்குகின்றது...!!


Tuesday, 20 April 2010

பிரிய மனமில்லை.... பிரியமான தாய் மண்ணை...!!!


வீழ்ந்து கிடக்கின்றேன்....
வீரம் விளைந்த மண்ணில் - யாரும்
வீழ்த்தி விடவில்லை என்னை..!!
விரும்பித்தான் கிடக்கின்றேன்....

உச்சியை பிளந்த சூரியனும்
ஊர் தாண்டி விட்டான்....!
ஊமல் வண்டியின் சமிக்ஞையும்
ஊர் எல்லையில்.....!

நுங்கிய நுங்குகள் அருகே பரந்திருக்க..
நுனி நாக்கினால் சுவை அறியும் ஆட்டுக்குட்டிகளும்,,
நுரைக்க நுரைக்க அசை போடும் பசுக்களும் துணையாக..
நுதல் மேல் அலையாய் முடி அசைந்தாட...
அரவமின்றி அசையாமல் நான்....!!!
அமைதியான மண்ணின் மூச்சுக்காற்றால்
அந்தோ எழுகின்றது..! வீழ்ந்து போன என் வீரமும்,,
அடங்கி போயிருந்த எம் தேசியமும்...!!

குற்றுயிராய் போயிருந்து,, அன்னை மண்ணை
குதூகலமாய் முத்தமிட்டு,, புத்துணர்வுடன்
உயிர்ப்பாகின்றேன்..!! - இழந்து விட்ட
உறவுகளின் அன்புத்தொடுகையை...
உணர்ந்து பெற்றுக்கொள்கின்றேன்...!!
உரமாகி போன மண்ணிலிருந்து...!!!



பிரிய மனமில்லை....
பிரியமான தாய் மண்ணை...!!
இறுக்கி அணைக்கின்றாள் - எனை
இதமான அரவணைப்போடு...!!
இளம் நிலவின் பால் ஒளியில்
இளமையாய் தெரிகின்றாள் என் அன்னை....!!
இந்த இன்பம் நின்று நிலைக்குமோ..??
இனிமையாய் ஒரு இரவைக்கூட..
இங்கே நான் குதூகலமாய் கழிக்க முடியுமோ?? – அந்தோ
இராணுவம் தொலைவில்.....!!!

அரசி

Thursday, 15 April 2010

அரச மரம் யாருக்கு சொந்தம்...???


அரச மர பிள்ளையார் இடம்பெயர்ந்து, இப்போது புத்தர் மீள் குடியேற்றப்பட்டு விட்டார்.
எங்கெல்லாம் அரச மரம் கிளை பரப்புகின்றதோ,அங்கெல்லாம் சுற்று மதில் எழுப்பப்பட்டு ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டு விடும்.
 அது பேரூந்து நிலையமாக இருந்தாலும் சரி, சன நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்தாலும் சரி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இருந்தாலும் சரி அது புத்த பெருமானுக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்தாகும். இது உண்மையில் பக்தியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு செயலா?? அல்லது ஏட்டிக்கு போட்டியா?? என்று புத்தியுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.சிங்கள தேசத்தில் மட்டுமன்றி, தமிழர் தாயகப்பகுதிகளிலும் இது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், புராதன காலந்தொட்டு இருந்து வருகின்ற இந்துக்களின் ஆலயங்களும், கொஞ்சம் கொஞ்சமாக விகாரைகளாக மாற்றம் பெற்று வருவதும் மிக்க வேதனைக்குரிய விடயமாகும்.


ஈழத்தின் மேற்கிலுள்ள கதிர்காமம் இந்துக்களின் மிகத்தொன்மையான வரலாற்றைக்கொண்ட மிகப்பழமையான ஆலயமாகும். இங்கு ஆரம்பத்திலிருந்தே சிங்கள இனவாதத்தன்மை தலை தூக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் அது அதிகரித்து, இன்று முக்கால்வாசிக்கு மேல் பெளத்த மத வழிபாட்டுத்தலமாக மாற்றம் பெற்று விட்டது. கதிர்காமக்கந்தனின் சந்நிதியில் அடர்ந்து வளர்ந்தோங்கியுள்ள அரச மரமும், பித்தளை பூணாலான மதில்களும், கதிர்காமத்தை அறிந்திராத பலருக்கு, வெட்ட வெளிச்சமாய் பறை சாற்றும் இது ஒரு பெளத்த வழிபாட்டு இடம் என்று. அது கூடப்பரவாயில்லை, முன்னுக்கு அமைந்துள்ள கந்தனின் வழிபாட்டு அறைக்குள் இந்துக்கள் நாம் செல்ல முடியாத நிலைமை.கையில் பூக்களோடும், அர்ச்சனைத்தட்டங்களோடும் பெளத்தர்களே வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கே அங்கு முன்னுரிமை. பக்கத்தில் அமைந்திருக்கும் பிள்ளையாரை மட்டும் தரிசித்து விட்டு, மடப்பக்கமாயுள்ள பழனியாண்டவரையும் தரிசித்து விட்டு, நாம் மூச்சுப்பேச்சின்றி வரவேண்டியது தான்.

அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தமிழ்க்கடவுள் முருகனுக்கு கூட நாளை இருக்க இடமில்லை.. கந்தனின் கதிர்காமம் காலப்போக்கில் புத்தனின் முழு வாசஷ்தலமாகிவிடும்.


மிகப்பெரிய கொடுமை என்னவெனில், முற்பக்கமாயுள்ள அலங்கார வளைவிலுள்ள ஓம் என்ற வடிவமும் அகற்றப்பட்டு விட்டமையாகும். இப்போது அதில் வேல் மட்டுமே உள்ளது. அதுவும் வெகு விரைவில் காணாமல் போகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

 

அத்துடன், கதிர மலையில் உள்ள சிவன் ஆலயத்தினை மறைக்குமுகமாக பெரிய விகாரை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஏற்கனவே, இரு அரச மரங்கள் இருந்ததும், அவற்றை சுற்றி வளைவுகளும் சுற்று மதில்களும் கட்டப்பட்டு புத்தர் குடியமர்த்தப்பட்டது தெரிந்ததே. இன்னும் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளில் கதிர்காமம் முற்று முழுதாக புத்தரின் வாசஸ்தலமாகி விடும் என்பதில் ஐயமில்லை.


செல்லக்கதிர்காமத்திலிருந்து, பின்புறமாய் அமைந்துள்ள வள்ளி மலைக்கு செல்லும் வழியில் கூட ஒரு விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.எங்கெல்லாம் அரச மரம் உள்ளதோ அங்கெல்லாம் புத்தர் என்றிருந்து, தற்போது இந்து கடவுளர் எங்கிருக்கின்றனரோ அங்கும் புத்தர் முளைத்து விடும் காலமாகி விட்டது. ஒருவேளை இந்து கடவுளர்களை கண்காணிக்க இலங்கை குற்றப்புலனாய்வு துறையினரின் ஏற்பாடு தான் இதுவோ, என்றும் எண்ணத்தோன்றுகின்றது.

தமிழர் தாயகத்தில் அரச மரங்களைக்கண்ணுற்றாலே ஒரு ஆத்திரம் இயல்பாகவே எழுகின்றது. வெட்டி சாய்க்கலாமா என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. கிளிநொச்சியில்  மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையும் சுற்று மதிலையும் விழிகள் நோக்கும் போது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியதாய் ஒரு உணர்வு எழுகின்றது. ஆங்காங்கே சிறிய சிறியதும் பெரியதுமாய் புத்தர் சிலைகள் யாழ்ப்பாணம் வரை நீண்டு செல்கின்றன. சாவகச்சேரி நுணாவில் பகுதில் கூட பிள்ளையார் வீற்றிருக்கும் அரச மரத்தை புத்தர் ஆக்கிரமித்து அமர்ந்திருக்கும் கொடுமையை யாரிடம் கூற நாம்..??

இதே போன்று தான் தமிழ் தேசம் எங்கும் முதலில் புத்தர் சிலை முளைக்கும் பின் ஒரு அரச மரம் கிளை பரப்பும்,, பாஞ்சாலைகள் எழுப்பப்படும்... பின் அவை பகிரங்கமாக சிங்கள தேசம் என அறிவிக்கப்படும்... இதை தடுப்பதற்கு எம்மினத்திற்குள் ஒற்றுமை இல்லை..!
சிங்களவன் எங்கிருந்தோ வந்து குடியேறி,, தன் மதத்தை பரப்பி,, தன் இனத்தை வளம் படுத்திக்கொண்டிருக்க,,,,நாமிங்கே சொந்த இலாபத்திற்காக சொந்த மண்ணை அந்நியனுக்கு தாரை வார்த்து கொடுக்கின்றோம்...!!
அமைச்சர்கள் பதவிக்காக ஆதரவு கொடுப்பதும்,, அரசியல் வாதிகள் சுய இலாபத்திற்காய் தேர்தலில் குதிப்பதும், பெரிய மனிதர்கள் புகழுக்காக ஒத்துழைப்பு வழங்குவதும்,, என்று நீண்டு செல்கின்றது எமது இனத்திற்கெதிரான துரோகத்தனங்கள்...!!

இதை சிந்திப்பதற்கு எம் தமிழனுக்கு புத்தி இல்லையா...??
இல்லை இல்லை நிறையவே இருக்கின்றது...!
ஆனால் ஒற்றுமை இல்லை...!
எப்போது ஒன்று படுகின்றமோ...,,
அன்று தான் எமக்கு விடிவு...!!!

விதண்டாவாதம் பேசித்திரியும் தமிழ் அரசியல் வாதிகளுக்கோ அல்லது தமிழ் அமைச்சர்களுக்கோ இவை கண்ணுக்கு தெரிவதில்லையோ..??? எல்லாமே தெரியும். தெரிந்தும் சுய இலாபத்திற்காய் துண்டு விரிக்கின்ற அன்றில் கண்டும் காணததுமாய் இருந்து கொண்டு, தேவை இல்லாத விடயங்களுக்கு அறிக்கை விடுவது தான் வேலையோ...??? அன்றில் கட்சி தாவுவது அல்லது நாட்டை விட்டு ஓடுவது...??? அரசியல் வாதிகளை மட்டும் ஏன் குறை கூற வேண்டும்?? அது தான் எம்மக்களுக்கே அக்கறை இல்லையே...! யார் எக்கேடு கெட்டாலும் தாம் வாழ்ந்தால் போதும் என்ற பரந்த உள்ளம் கொண்டவர்கள் அல்லவோ எம்மக்கள்..!! புத்தன் அருள் பாலித்தார் என்று காலப்போக்கில் புத்தனுக்கும் தேர்த்திருவிழா செய்வார்கள்...!! ஏனென்றால் கண்டியை ஆண்ட சைவத்தமிழ் மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் வழி வந்த சைவர்கள் அல்லவோ...??

தமிழா...!! உன் இனமே உனக்கு எதிரி...!!!
தட்டிக் கேட்க யார் வருவார்கள்....????


அரசி


  

Wednesday, 14 April 2010

புது வருடத்தை மனதார வரவேற்கும் புதுப்பருவம்...!!!


புத்தாடை அணிய வேண்டி ஆசையுடன்
புது வருடத்தை எதிர்பார்த்த பள்ளிப்பருவம்...!!!

கைவிசேஷம் பெற்றுக்கொள்ள அங்கலாய்த்த
கல்லூரிப்பருவம்...!!!

பட்டாசுகளை கொளுத்தி, பழசுகளின் முணு முணுப்பால்
பரவசமாய் மகிழ்ந்திருந்த விடலைப்பருவம்..!!

வருடப்பிறப்பு சிறப்பு நிகழ்ச்சிகளை எதிர்பார்த்து
வருடப்பிறப்பை வரவேற்ற இருபதுகளின் தொடக்கம்..!!

யாழில் கைத்தொலைபெசிகள் அறிமுகமாகி...
யாவருக்கும் குறுஞ்செய்தி சேவை மூலம்
வாழ்த்து அனுப்பிட துடித்த கன்னிப்பருவம்...!!!

உலகத்தை மறந்து,,
உயிர் ஒன்றின் வாழ்த்துக்காக
துடித்த காதல் கொண்ட பருவம்..!!

வருடம் பிறப்பதும் முடிந்ததும் தெரியாமல்
சூனியமாய் கடந்து சென்ற வலி கொண்ட பருவம்..!!

என்ன நடக்குமோ?? ஏது நடக்குமோ...??
என்று இழந்து விட்ட பாதி உயிர்களின் சோகத்தால்
எதிர்பார்க்காமல் பிறந்த கடந்த விரோதி வருடத்தை
எதிரியாய் நோக்கிய அழுகைப்பருவம்..!!!

புத்தாடை, கைவிசேஷம்,பட்டாசு,சிறப்பு நிகழ்ச்சிகள்
குறுஞ்செய்தி செவைகள்,வாழ்த்துக்கள், வலிகள்,துன்பங்கள்,அழுகைகள்
கொண்ட வருடப்பிறப்பு பருவங்களை கடந்து...
புது மாற்றத்திற்காய்...
புது எதிர்பார்ப்போடு..
புது வருடத்திலாவது  நல்லது நடக்குமா??
புது எதிர்பார்ப்போடு...
புதுவருட பிறப்பின் கிரக மாற்றத்திற்காய்..
புது வருடத்தை மனதார வரவேற்கும் புதுப்பருவம்...!!!



என்னினிய உறவுகளுக்கு இனிய சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!!
அன்புடன்
அரசி

Tuesday, 13 April 2010

தாயகத்தில் தமிழனின் மனநிலை.....!!!

தலைப்பை பார்த்து விட்டு தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று எண்ணி அவர்களை தமிழன்”  என்ற இனத்தில் உள்ளடக்காமல் இத்தொடரை தொடர அன்புடன் வேண்டுகின்றேன்.

தாயாய் இருந்த தந்தை என்றொருவன் காணாமல் போனாலோ அன்றி காற்றோடு கரைந்து அதாவது மரணித்து போய் விட்டாலோ,, அந்த பெரு வெற்றிடத்தை நிரப்ப யாராலும் இயலாது.. காலத்தின் கோலத்தால் மாற்றாந்தந்தை என்ற உறவின் மூலம் கூட இழந்த தந்தையின் பாசமோ பரிவோ கிடைப்பது என்பது அரிதே. அப்படி கிடைப்பினும் அது குறுகிய காலத்திற்கே. இன்று தமிழர்களும் அந்நிலையிலேயே. 

தமிழீழம் என்றொரு உயிர் இன்று மென்று விழுங்கப்பட்டு அந்தரத்தில் ஊசலாடியபடி கண்ணீர் சிந்துகின்றது. தாயகத்தில் அரசியலுக்காக ஒரு சாரால் முற்றாகவே மறுக்கப்பட்ட தமிழீழம். இனி மெல்ல மெல்ல மறக்கப்பட்டு போய் விடக்கூடும்.

தமிழீழம் என்ற தோலை போர்த்தி சிங்கத்தின் வாலை பிடித்த நரிக்கூட்டத்தார், அரசியல் சாணக்கியம் என்று தமிழீழக்கோரிக்கையை நிராகரித்து வெற்றி பெற்ற கூட்டமைப்பு , நாடு கடந்த தமிழீழ அரசு என்று புலத்தில் ஒரு சாரார் என்று பலவித பிரிவினைகளுக்கு மத்தியில் இன்று தமிழர்கள் ஒரு பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித்தவித்து கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் மக்களின் மனநிலை என்ன நிலையில் உள்ளது என்பதனை சற்று அறிய முடிகின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றதை வைத்து தாயகத்தமிழ் மக்களும் தமிழீழ கோரிக்கையை மறந்து விட்டார்கள் என்று எண்ணிக்கொள்ள இயலாது. கூட்டமைப்பினரின் வெற்றிக்கு முதன்மை காரணம் தமிழீழ தேசியத்தலைவரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கட்சி என்பதும், அவரால் அங்கீகரிக்கப்பட்டு இறுதித்தேர்தலில் ஆதரவு கொடுக்கப்பட்டமையும் ஆகும். அத்துடன் ஒரு பழம் பெரும் தமிழ் கட்சி, அதாவது தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கபட்ட  தமிழரசு கட்சி என்ற பெயரையும் கொண்டமையும் ஆகும். அதை விட யாழ்ப்பாணத்தில் அவர்களின் வெற்றிக்கு “உதயன் ”  மற்றும் சுடர் ஒளிஊடகங்களினூடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் மக்களை சென்றடைந்தமையும் ஒரு முக்கிய காரணமாகும். அதாவது பல கட்டுரைகள் ஊடாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமிழீழ கோரிக்கையை நிராகைத்தமை தொடர்பில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் தமிழீழக்கோரிக்கையை கைவிட்டாலும் விடுதலைப்போராட்டத்தை, புலிகளை சார்ந்து அக்கட்சி மேற்கொண்ட ஊடக பிரச்சாரங்கள் என்பனவாகும்.  

அத்துடன் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட மறு சாரார் மீது மக்கள் கொண்ட வெறுப்பும் அவர்களின் நடவடிக்கைகளும் முதன்மை காரணங்களன்றி தமிழீழக்கோரிக்கை அல்ல. கூட்டமைப்பில் இருந்து விலக்கப்பட்டமை, அத்துடன் அரசின் கைக்கூலிகளாக வாக்கை பிரிக்கும் எண்ணத்தில் அவர்கள் போட்டியிடுகின்றார்கள் என்ற ஒரு கருத்தும் மக்கள் மத்தியில் நிலவியமையும் ஆகும்.  

என்னை பொறுத்த வரையில் இந்த தேர்தல் முடிவுகளின் படி தமிழ் மக்களின் மனநிலை என்பது தற்போது அவர்கள் யாரையும் நம்பவில்லை என்பதே. 18 வீதமானவர்களே வாக்களித்துள்ளார்கள்.இதில் மிகுதி 82 வீதமானவர்களில் புலத்தில், வெளி மாவட்டங்களில் வதிவோரை தவிர்த்து ஏறத்தாழ 50 வீதமானவர்களுக்கு யாழில் போட்டியிட்ட எந்த கட்சி மீதும் நம்பிக்கை இல்லை என்பதை விட இவர்கள் பாராளுமன்றம் சென்று என்ன செய்ய போகின்றார்கள்? 

இலங்கை பாராளுமன்றம் தமிழ் உறுப்பினர்களின் பேச்சினை செவி மடுக்குமா? என்பவையே முதல் வினாக்களாக இருந்திருக்கும்? யாழில் வாக்களித்த 18% மானவர்களில் 43.85% மானவர்களே கூட்டமைப்பிற்கு வாக்களித்துள்ளனர். அரசிற்கு வாக்களித்துள்ள 32.07% மானவர்களை தமிழர்கள் என்று எப்படி அழைக்க முடியும்?? வேலை வாய்ப்பு, பண உதவி, நிவாரணம் என்ற சலுகைகளுக்காக தமிழின மானத்தை விற்று வெற்றிலைக்கு(ஈ.பி.டி.பி) வாக்களித்த இந்த மக்களுக்கு ஏது மானம் மரியாதை??

தமிழர்களின் சுயநிர்ணயம்,உரிமை என்பனவற்றை பெற்றுத்தர அரசியல் பேசுபவர்களாலோ அல்லது இலங்கையின் பாராளுமன்றம் செல்ல இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராலோ முடியும் என்பதை நம்பி இருக்க முடியாது. தமிழ்த்தெசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களால் மிஞ்சி மிஞ்சி போனால் தம் உயிரை மட்டுமே தமிழர்களுக்காக கொடுக்க முடியும். இனவாத அரசின் கோட்டையில் சென்று உரக்க குரல் கொடுக்க துணிபவன் தன்னுயிரை தான் இழக்க முடியும் என்பது கடந்த கால பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகள் மூலம் நாம் பெற்றுக்கொண்ட அனுபவ உண்மைகளாகும்.
  


எமது உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ள இயலாது என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. இதை அனைத்து தமிழர்களும் எப்போது உணர்ந்து கொள்கின்றார்களோ அப்போது தான் உறங்கிக்கொண்டிருக்கும் போராட்டம் கண் விழிக்கும்! அது வரை தமிழனை அவன் இனத்தவனே ஏமாற்றுவதையும், அந்நியன் ஏறி மிதிப்பதையும் யாரால் தடுக்க முடியும்?? 
எமது பிரச்சினைகளை தீர்த்து, எம் அபிலாசைகளை வென்றெடுக்க இந்த அரசியல் வாதிகளால் எதுவும் செய்ய முடியாது என்பதனையே யாழின் தேர்தல் வாக்களிப்பு வீதம் புலத்தி நிற்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களின் அசமந்த போக்கே இந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

எது எப்படி இருப்பினும் அரசியல் மூலம் எமக்கான தீர்வு ஒன்று கிடைக்குமாயின் மகிழ்ச்சியே. ஆனால் அது கிடைக்கும் என்பதற்கு எவ்வித அறிகுறியோ சாத்தியமோ இல்லை என்பது தான் கண்கூடு. எனினும் பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை... 

அரசி

Tuesday, 23 March 2010

யார் எக்கேடு கெட்டால் என்ன..???


முந்தி நாம் குடியிருந்த நிலத்தில்
முள் வேலி ஆக்கிரமித்தால் எமெக்கென்ன..?

உயர் பாதுகாப்பு வலயம் இருந்தால் என்ன..?
உயர் விலை ஏற்றம் ஏறிக்கொண்டே தான் போனால் நமக்கென்ன..?? 

அரசடி பிள்ளையார் இடம்பெயர்ந்து
அதில் புத்த பிரான் குந்தி தியானித்தால் நமக்கென்ன..??

விருட்சங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்தால் என்ன...?
வீர பூமி தலை கவிழ்ந்து கண்ணீர் விட்டால் எமெக்கென்ன..??

இடைத்தங்கலில்  இடிபடும் உறவுகள் மீளக்குடியமர்ந்தால் என்ன..?
இதுவரை குடியமர்ந்தவர்கள் எக்கேடு  கெட்டால்  தான் நமக்கென்ன..??

கல்வி.. இறக்கம்  கண்டால் தான் என்ன..?
கலாச்சாரம் தலை  விரித்து ஆடி  சீரழிந்தால் நமக்கென்ன..??

ஊழல் உல்லாசமாய் உலவினால் என்ன..?
ஊருக்குள்ளே  வேற்று மக்களின் வியாபாரத்தலையீடு
ஊஞ்சல் ஆடினால் தான் எமெக்கென்ன..??
ஊளையிடும் நரிக்கூட்டம் எம்மினத்தை முழுங்கித்தின்றால் தான் என்ன..??

நாளொரு சுவரொட்டி கொண்டு நகரை
நாறடிக்கும் அரசியல் வாதிகள  எமக்கு...
யார் எக்கேடு  கெட்டால் என்ன..??
யாழ்ப்பாணத்தில் இப்போது  நாம்  தான்   ராஜா..
யார் எம்மை கேட்க முடியும்.....???..??
யாரால் எம்மை அடக்க முடியும் ....???..??


அரசி

Saturday, 13 March 2010

அதிகமாய் அடங்கி போக... அடிமைகள் இல்லை நாம்..!!!



   நாலாம் மாடியில்
   நான்கு திங்களாய்
   நா வறண்டு கிடக்கின்றோம்..!!
   நாயினை ஒத்து.... இல்லை
   நாய் கூட சுதந்திரமாய்..!


   நாதியற்று(சொந்தங்களின்றி)
   நாமில்லை..!
   நாதியற்ற(கேட்பாரற்ற) இனமென்பதாலோ..??
   நான்கு சுவருக்குள் நாம்..!!
   நாட்டினை ஆளும் இனம்
   நாலா புறமும் சேவையில்..!
   நாளை விடியுமா - நீண்ட
   நாளாக இதே ஏக்கம்..??


   அடைத்து வைத்து
   அழகு பார்க்கின்றார்கள்..!!
   மோத விட்டு எம் வீரத்தை பார்க்க..
   மோதி வெற்றி வாகை சூட..
   வீறு இல்லை இந்த
   வீணர்களுக்கு...!
   நிர்வாணத்தை எத்தனை நாட்களுக்கு
   நின்று நின்று ரசிப்பாய்..??


   பொங்கி வரும் உதிரம்...
   பொத்தி இறுக்கும் எம் கரங்களால்,,
   பொறுமையாய் அடங்கி போகின்றது..!!
   கொப்பளிக்கும் கோபம்... 
   அதரங்களை(உதடுகளை) துண்டிக்கும் - எம்
   கொலை வெறிப்பற்களின் நற நறப்பால்
   கொஞ்சம் தூரமாய் பயணிக்கின்றது..!!


   அரக்கர்களே..!!
   அதிகமாய் 
   அடங்கி போக...
   அடிமைகள் இல்லை நாம்..!
   அடங்க மாட்டோம்... 
   அதிக தினங்களுக்கு..!
   அதனால்..
   அப்புறமாகி போய் விடுவீர்..!
   அரவமின்றி(நிசப்தமாய்)...நீவிர்..!!!


   - அரசி -

Thursday, 11 March 2010

யார் குற்றவாளி..???

ஒரு வாரமாக இணையம் அல்லோல கல்லோலப்படுகின்றது. சாமியாரை குறி வைத்து முகப்புத்தகம்(Face Book) கிழிந்து தொங்குகின்றது.வலைப்பூக்களில் அகப்பட்ட இந்த விடயங்கள் மென்று விழுங்கப்படுகின்றன.பார்த்தும் பார்க்காத மாதிரியும் கேட்டும் கேட்காத மாதிரியும் அமைதியாக இருந்து பார்த்தேன் முடியவில்லை. அந்த காணொளி பதிவை விட முகநூலிலும் வலைபூக்களிலும் பதியப்படும்,பகிரப்படும் பதிவுகளும் பின்னூட்டங்களுமேஎன்னை பெரிதும் பாதித்தன. இணையங்களில் பரவியுள்ள பலதரப்பட்ட பதிவுகளிற்கும்,கருத்துக்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!!


சுவாமி என்று வந்தவர் இன்பத்தில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை போதிக்கவில்லையே...அவர் எப்படி இருந்தாலும் என்ன செய்தாலும்..இவ்வளவு காலமும் அவரின் பிரசங்கங்களை கேட்டு கை தட்டிய , அவருக்கு பின்னால் அணி திரண்ட கூட்டம் இன்று ஊடகங்களின் வியாபாரப்புத்தி விளங்காது உடனடியாக வன்முறையில் ஈடுபடுவதும்...அறிக்கை விடுவதும் என்று ஏன் மீண்டும் மீண்டும் புத்தி பேதலித்து போகின்றார்கள் என்று விளங்கவில்லை....!

அது சரி பல காலமாக நல்ல விடயங்கள் என்று இதே சாமியார் கூறிய விடயங்களை கேட்டு ஒழுகினார்களா?? அப்படி ஒழுகிய உத்தமர்களா இந்த வன்முறையாளர்கள்??? புரியவில்லை இந்த மக்களின் மனப்போக்கு?? சாமியார் செய்த லீலை என்கின்றார்கள் அதனால் உங்களுக்கு என்ன தீங்கு ஆயிற்று...??? அதற்காக நான் சாமியாருக்கு வக்காலத்து வாங்கவில்லை.நான் சாமியாரின் சீடரோ அல்லது அபிமானியோ அல்ல. இத்தனைக்கும் இந்த சாமியார் பற்றி எனக்கு எதுவும் தெரியாது...எதோ ஒரு சஞ்சிகையில் இவர் எழுதும் தொடரில் இவரின் படத்தை பார்த்த ஞாபகம்...! அந்த தொடரைக்கூட வாசித்து பார்த்ததில்லை.இதை ஏன் கூறுகின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.


என்னை பொறுத்த வரை சாமியாரோ அந்த நடிகையோ செய்ததாக சித்தரிக்கப்படும் இந்த காணொளியை பார்க்கும் போது...குற்றவாளியாக முதலில் தெரிவது படம் பிடித்த ஆசாமி தான்..அடுத்து அதை அம்பலமாக்கி ஒளிபரப்பிய ஊடகம்.செய்தி வெளியிடும் சஞ்சிகைகள். தம் வியாபார போட்டிக்கு அவலாக கிடைத்த இந்த விடயத்தை நன்றாகவே மென்று விழுங்கி ஏப்பம் விடுகின்றன தமிழ் நாட்டு ஊடகங்கள்..!
தமிழ் நாட்டில் எத்தனை எத்தனை ஊழல்களும் குற்றங்களும் தினம் தினம் அரங்கேறித் தொலைகின்றன.. அவற்றை தேடித் தேடி படம் பிடித்து அம்பல மாக்க யாருக்கும் துணிச்சல் இல்லை.. இதெல்லாம் ஒரு பெரிய விடயம் என்று திட்டமிட்டு காட்சிகளை பதிவாக்கி யாரோ அனுப்ப அதை ஒரு ஊடக நிறுவனம் உலகம் பூராவும் ஒளி பரப்புகின்றது. இதை நம்பி மக்களும் வன்முறையில்... முட்டாள் தனமாக உள்ளது. ஒரு வேளை இந்த காணொளி பொய்யானது என்று நாளை இன்னுமொரு ஊடகம் செய்தி வெளியிடும் பட்சத்தில் என்ன நடக்கும்?? இதே போல சன் தொலைக்காட்சிக்கும் கல்லெறி விழும். இதே மக்கள் அந்த நிறுவனத்தை தீயிட்டும் கொளுத்துவார்கள்..சே என்ன மடத்தனம் ஆ..ஊ என்றால் கல்லெறியும் தீயிடலும் தான் தெரியுமா?? நிதானமாக யோசித்து முடிவெடுக்க தெரியாதா??

ஒரு வேளை இந்த செயலில் தொடர்புடையாதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட நடிகை சாமியாருக்கு எதிராக புகார் கொடுத்து அதாவது பாலியல் பலாத்காரம் என்ற புகாராக இருந்தாலும் பரவாயில்லை. பார்த்தாலே தெரிகின்றதே... பலாத்காரம் இல்லை என்று...

ஏன் மக்கள் கொதிப்படைய வேண்டும்?? முற்றும் துறந்த முனிவராக தன்னை சாமியார் அடையாளப்படுத்தி விட்டு இப்படி நடந்து கொண்டார் என்றா?? பலவிதமான நிலைகளைத்தாண்டியே முற்றும் துறக்க முடியும்...! அதில் காமமும் ஒன்றாக இருக்கலாம்.. சரி அவர் முற்றும் துறந்தாரா இல்லையா என்பது இல்லை இப்போதுள்ள பிரச்சினை.  இது அவரின் சொந்த பிரச்சினை.. மற்றவனை துன்புறுத்தாமல் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் பரப்பும் பரப்புரைகளை கேட்டவர்கள் தானே இதே மக்கள்..! உங்கள் சொந்த புத்தியால் நடந்து கொள்கின்றவர்களாயின் சாமியாரையும் ஆச்சிரமங்களையும் நாடிச்சென்றிருக்க கூடாது. ஒருவன் நல்லவன் என்றால் தூக்கி தலை மேல் வைத்து கொண்டாடுவதும், அதே சிறு பிரச்சினை என்றால் காலுக்கு கீழே போட்டு மிதித்து துவம்சம் செய்வதும் தமிழ் நாட்டு மக்களின் பழக்க தோஷம்...!

இதில் பெரிய கொடுமை என்ன என்றால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் கடவுள் இல்லை சாமியார் பொய் என்னும் கட்சியினர் இதை ஒரு சாக்காக வைத்து ஏதோ சொல்ல விழைகின்றார்களே தவிர இதில் உள்ள உண்மைத்தனத்தை யாரும் கண்டு கொள்வதாயில்லை. மனிதனுக்கு உணர்வுகள் இருப்பது இயற்கை..அதை யாரும் மறைக்க முடியாது.

மனிதர்களை வழிப்படுத்தி அதாவது கெட்டு போகாமல் வாழ்க்கையினை வாழ்வாங்கு வாழ வழி காட்டும் அசாதரண மனிதர் தான் இந்த சாமியார் என்பது எனது ஊகம். அதற்காக அவர் இன்பமாக இருக்க கூடாது என்று கொதித்தெழுவது அநாகரிகம். அவர் ஒன்றும் கடவுள் அல்லரே. மனிதனை படைத்ததாக நம்பப்படும் கடவுளிற்கே மனித உணர்வுகள் இருப்பதாக நம்பப்பட்டது. பல ஆண்டுகளிற்கு முன்னர் இதை ஏற்றுக்கொண்ட மனித சமூகம் இன்று ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

உதாரணத்திற்கு கூறின்,முற்றும் துறந்த முனிவர் எனப்பட்ட நாரதருக்கே இச்சங்கடமான நிலை ஒரு முறை தோன்றியது. அதாவது அமிர்தம் எடுத்து வா என விஷ்ணுவால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட நாரதர் பூலோகத்தில் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி 12 ஆண்டுகாலமாய் பூலோகத்திலேயே தங்கி விட்டார். பின் விஷ்ணுவிடம் சென்று மன்னிப்பு கேட்ட நாரதரிடம் விஷ்ணு உரைத்ததாவது... ” உணர்வுகள் உள்ள மனிதனை படைத்த கடவுளர்களுக்கே இந்த உணர்வுகள் இருக்கும் போது முனிவர்களுக்கு இருப்பது ஆச்சரியமன்று. இனி எதிர்காலத்தில் வரப்போகும் முனிவர்களுக்கு முன்னுதாரணமாய் நீ இருப்பாய்”
அதாவது உணர்வுகளைத்துறந்து வாழ முடியாது. எப்படித்தான் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும் ஒரு தருணத்தில் எங்கோ ஓரிடத்தில் சிக்க வைக்கும் இந்த உணர்வு எல்லோருக்கும் பொதுவானதே. இதற்கு யாரும் விதி விலக்கல்ல. முக்காலமும் அறிந்த நாரதனே உணர்வுகளுக்கு அடிமையாகும் போது மனிதனாக பிறந்த நித்தியானந்தா உணர்வுகளை துறந்து வாழ முடியாதே.. இது தப்பானதல்லவே.. அப்படியாயின் இந்த உலகத்தில் யாரையும் திருமணம் முடிக்காதே என்று கூறி அவர் பரப்புரை செய்திருப்பின் தப்பாகலாம். அந்த காலத்தில் நாரதரையே ஏற்றுக்கொண்ட கடவுளும் உண்டு ஏன் இந்த காலத்திலும் கூட நாரதரை யாரும் வெறுக்கவில்லையே...ஒருவர் கூறும் கருத்து நல்லதாக இருந்தால் மட்டும் போதும். அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதும், அவரின் சொந்த வாழ்க்கை பற்றியும் எமக்கு தேவை இல்லை. அதில் தலையிடுவது சுத்த அநாகரிகம். காட்டு மிராண்டித்தனம்.. சாமியாரினதும் நடிகையினதும் இந்த உறவு சட்ட விரோதமானதா இல்லையா என்பது வேறு பிரச்சினை.அதை சட்டம் தீர்மானிக்கட்டும். 

அதை விடுத்து முற்று முழுதாக வியாபார நோக்குடன் ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.நீலப்படத்துக்கு கூட இப்படி விளம்பரம் செய்ய மாட்டார்கள். அந்தளவு இழி நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு குமுதம் என்கின்ற இதழ் இலவச ஊடக விபச்சாரத்தினை நடாத்த, நக்கீரன் என்ற ஊடகம் சந்தா முறையில் நீலத்திரைப்படத்தை தன் வாசகர்களுக்கு வெளியிட்டு காட்டுகின்றது.இதனால் பாதிக்கப்படுவது யார்? சாமியாரோ நடிகையோ அல்ல...இளம் சமுதாயமே அத்துடன் தமிழனின் மானம்..!! உலகம் பூராவும் இன்று கப்பலேறி விட்டது தமிழனின் மானம்..!! இதற்கு துணை போன , துணை போகின்ற ஊடகங்களின் செயற்பாட்டை என்னவென்று சொல்வது..?? சமூகத்தில் பொறுப்பான நிலையில் இருந்து செயற்பட வேண்டிய ஊடகங்களே இப்படி வியாபாரத்தை மட்டும் நோக்காக கொண்டு தம் நிலை தவறி நடந்தால் யாரை யார் குற்றம் சொல்வது? பேனாவே இங்கு தவறான வழியில் பயணிக்கின்றது.

பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் உணர்வுகளை அனுபவித்து மனிதனாக வாழ்ந்து பின் ஆன்மிக வழியில் செல்வதை பற்றி யோசிப்போம் அல்லது செல்வோம். காமத்தை ஒதுக்கி வாழச்சொல்லி யாரும் இங்கே பிரச்சாரம் செய்யவில்லை. அப்படி செய்ய யாராலும் முடியாது. உணர்வுகளை கட்டுப்படுத்தி யாரும் வாழ முடியாது. உணர்வுகளுக்கு அடிமையாகி இன்புற்றிருப்பதை குற்றம் என்று கூறுபவனும் அதை வெளிச்சம் போட்டு பிறருக்கு காட்டுபவனுமே முழுக்குற்றவாளி ஆகின்றான்.



குற்றவாளி தானாக பார்த்து திருந்துவானா??????

என்றும் தோழமையுடன்
அரசி

Tuesday, 9 March 2010

காதலனுக்கு கல்யாணமாம்...!!!


வருகின்ற பங்குனி(தமிழுக்கு)...
வரப்போகின்றானாம் வெளிநாட்டிலிருந்து....
அஞ்ஞான வாசம் முடித்து வரும்
அணங்கு அவனுக்கு...
அம்மா அப்பா விரும்பிய பெண்ணோடு..
திருமணமாம்...!!!

தேடிப்போய் 
தொந்தரவு இளைத்து,,
விரும்புகின்றேன் என்று
விரும்ப வைத்து,,
காதல் மொழி பேசி,,
காலங்கள் மூண்றாண்டுகள்
கரைந்த போது,,
காதலி கண்ணுக்கு எட்டியவளாய்
காட்சி கொடுக்க.....,
பொய்யுரைத்து சென்றான்...
விரும்பவில்லை என்று.....!!

காத்திருந்த பெண்மை.........
காரிருளில் தவித்தாள்...
காலங்கள் விரைவாகியும்..
காதல் அழியவில்லை...!!!

காதலனுக்கு கல்யாணமாம்...!!
காற்றில் மிதந்து வந்த செய்தி
காதிலே மோதியும்.....
சலனமற்றவளாய் ஒரு
புன்னகையை உதிர்த்தாள்...!!!


- அரசி -

Monday, 8 March 2010

மகளிர் தினமும்...!! பெருகி வரும் பெண் சிசுக்கொலையும்...!!!








நூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8ம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. மகளிரை போற்றி மகளிர் உரிமையை வலியுறுத்த வருடா வருடம் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் இந்த உலகத்தில் பிறப்பதற்கே கருவில்போராடிக்கொண்டிருக்கின்றன.



2008 இல் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. அதாவது தினமும் 2,500 பெண் குழந்தைகள் சாகடிக்கப்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில் வெளிச்சத்தை பார்ப்பதற்கு முன்பே கருகிப்போகும் பெண் சிசுக்களின் கொலை மலிந்து விட்டது.

மகளிர் தினத்திற்காக வாழ்த்து தெரிவித்து ஒன்று கூடல்கள் நடாத்தினால் மட்டும் போதுமா? உலகத்தை பார்க்காமலேயே எத்தனை பெண் சிசுக்கள் கருவில் கொல்லப்படுவதையும், அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை தடுத்து நிறுத்த வேண்டாமோ??...


பெண் சிசுக்கொலை




இந்தியாவின் நாமக்கல்லில் பரவலாக இந்த பெண் சிசுக்கொலை இருக்கிறது. பொதுவாகவே தமிழ் நாட்டில் ஆண்வழி சமூகம்தான் பண்பாட்டளவில் ஆட்சியில் உள்ளது. இந்த வகை சமூகங்களில் சொத்து ஆண்கள் வழியே கை மாறுகிறது - சட்டம் என்ன சொன்னால் என்ன ? கட்டைப் பஞ்சாயத்துதானே கிராமங்களில் கூடுதலான வலு உள்ளதாக இருக்கிறது. ஆண்வழி சமூகங்களில் பெண்ணுக்குத் திருமணச் செலவு அதிகம் என்பதோடு பெண் திருமணத்துக்குப் பிறகு தனது கணவனின் வீட்டுக்குப் போகக் கடமைப்பட்டவள் என்ற கருத்தும் வலுப்பெற்றுக் காணப்படுகின்றது.

இதனால் பெண் குழந்தை என்று சொன்னாலே அது எதிர்காலக் கடனுக்குக் காரணம், ஒரு சுமை என்று இயல்பாகவே கருதும் மனப்போக்கு நிலவுகின்றது. இது தவறு என்று தெரிந்த படித்த நடுவயதுக்காரர்கள் இப்போது அங்கும் இங்கும் உள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நடுவில், இறுதியில் என்று மூன்று கட்டமாகப் பார்த்தால், முதல் இரு கட்டங்களில் பெண்ணைச் சுமை என்று கருதிய போக்கு அதிகமாக இருந்திருக்கும். இறுதியில், அதாவது 1980களுக்குப் பிறகு இப்போக்கு குறைந்திருக்கும்தான். ஆனாலும் சமீபத்திய ஆய்வுகள் கூடப் பெண் ஒரு சுமை என்று கருதும் மனப் போக்கு இன்னமும் பெருவாரி நபர்களிடம், அதுவும் பெண் சிசுக் கொலை செய்யும் சாதிகள்/சமூகங்களில் நிலவுகிறது என்று தெரிவிக்கின்றன..

எனவே, பெண்ணே ஒரு கடன் என்ற பார்வையும், ஆண் வரவு என்ற பார்வையும் இச் சமூகங்களில் பரவலாக, குடும்பம் குடும்பமாகப் பின்பற்றப் படுகிறது. இப் பிரச்சினையைத் தீர்க்க அச் சமூகங்கள் கண்டு பிடிக்கும் ஓர் அவசர வழி, பெண் குழந்தையைக் கொல்வது. பிறந்த பின் ஒரு குழந்தையைக் கொல்வது ஒரு முறை என்றாலும் இது இன்னமும் கிராமங்களில்தான் அதிகம் உண்டு. நகர மக்கள், குறிப்பாகப் படித்தவர் இதையே சற்று நாசுக்காகச் செய்கிறார்கள். கடந்த இரு பத்து ஆண்டுகளில் கர்ப்பத்தில் சிசு இருக்கும் போதே அது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய நவீன மருத்துவத்தில் வழி இருப்பதால் அதைப் பயன்படுத்திப் பெண் சிசுவைக் கண்டறிந்து அது கர்ப்பத்தில் இருக்கும் போதே கலைத்து விடுகிறார்கள். மூன்றாவது வழியும் உண்டு. இது மற்ற இரு வழிகளையும் விட சற்று மேலானது போலத் தெரியும், ஆனால் மற்ற இரண்டையும் விடக் குரூரமானது இது - பிறந்த பெண் குழந்தையைப் பராமரிப்பதில் மெத்தனமும், பாராமுகமும், அலட்சியமும் காட்டுவது இவ்வழி. அன்றாட உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவம் செய்தல், சரியான போஷாக்கு அளித்தல், அன்பும் அரவணைப்பும், காலத்துக்குத் தக்கபடி அறிவு வளர்ச்சிக்கு வகை செய்தல் என்ற கடமைகளைச் செய்யாததோடு அக் குழந்தையை எந் நேரமும் கரித்துக் கொட்டுதல், அதன் மீது வன்முறை செலுத்துதல், மேலும் அதன் சுய நம்பிக்கையைத் தொடர்ந்து குறைத்தல் என்று பலவழிகளில் பலவீனமாக்குவது இவ்வழி. இதனால் இக் குழந்தைகள் முதல் ஐந்தாண்டுகளுக்குள் நோய்வயப்பட்டு இறந்து போகின்றன. ஆக, பலவழிகளில் பெண் சிசுக்கள் ஆண் சிசுக்களை விட அதிகம் இறந்து போகின்றன.

இதன் விளைவு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட இந்தப் பகுதிகளில் மிகவும் குறைந்து காணப்படுகிறது.


பெண்களின் பற்றாக்குறையும் அதனால் ஏற்படும் விளைவுகளும்

பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஏராளமான இளைஞர்கள் பெண் துணை இல்லாமலேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 100 பெண்களும் 120 ஆண்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். இந்த 120 பேரில் 20 ஆண்களுக்குப் பெண்துணை கிடைக்கும் வாய்ப்பே இல்லை. அப்படியே திருமணமாகும் காலம் வரும்போது பலருக்கும் 30க்கும் மேல் வயதாகி விடுகிறது.

இதனால் இங்கு ஏராளமான நபர்கள் தொடர்ந்து உடல் பசி தீர்த்துக் கொள்ள அலைவதால், விபச்சாரத் தொழில் பெருகி, தமிழ் நாடு மேலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பெண்கள் இங்கு கொணரப் படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்தலும் அதிகரிக்கையில் பாலுறவு நோய்களும் இப் பகுதியில் அதிகரிக்கிறது. சமீபத்து ஆண்டுகளில் உலகை ஆட்டிப் படைக்கும் எய்ட்ஸ் நோய் வியாபாரப் பாலுறவு வழியே எளிதாகவே பரவுகிறது. இதுவரை கட்டுப்பாடான வாழ்வு வாழ்ந்த சமூகங்களில், குடும்பங்களில் அதிகம் பரவ வாய்ப்பில்லாத பாலுறவு நோய்களும், எய்ட்ஸ் போன்ற கொலைகார நோய்களும் இப்போது விரைவாகவே இந்தப் பகுதியில் பரவி விட்டன.

தொலை தூரங்களிலிருந்து இங்கு வந்துள்ள எய்ட்ஸ் நோய் விபச்சாரிகளின் வழியே திருமணமாகாத ஆண்களுக்கு மட்டுமன்றி மற்ற உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பரவுகிறது. அண்டைக் கிராமங்களில் மண வாழ்வுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ள இளைஞர்கள் நகரத்தில் விலைக்குக் கிட்டும் பாலுறவுக்காக நகரம் வந்து நோயைச் சம்பாதித்துக் கொண்டு, மருத்துவ வசதியோ, மருத்துவ அறிவோ அதிகம் இல்லாத கிராமங்களுக்கு அந் நோய்களை எடுத்துச் செல்கிறார்கள். பாலுறவு நோய்களில் பல நோய்கள் மருத்துவம் பார்க்காமல் இருந்தால் உடலுக்குள் தற்காலிகமாக மறைந்து கொண்டு பரவிக் கொண்டு இருக்கும். பின்னர் திடாரென்று கட்டுப்படுத்தவோ அல்லது சிகிச்சையால் தீர்க்கவோ முடியாத வகையில் குபீரெனப் பற்றி எரியும். உயிருக்கே ஆபத்தாக மாறும். ஆக நகரம் கிராமத்தைச் சீரழிப்பது என்ற வழக்கமான பதறலுக்கு இன்னொரு பரிமாணம் இப்போது கிட்டுகிறது. ஆனால் மூல காரணம் இந்த தடவை நகரம் அல்ல. சொத்து ஆசைக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடம் கொடுத்துப் பெண்களை மதிக்காத ஒரு பண்பாடு, தன் அழிவுக்குத் தானே வித்திடுகிறது.

பெண்கள் மிகவும் குறைவாக இருப்பதால், பெண்களைப் பெற்றவர்களுக்கு ஓரளவு முன்னை விட திருமணச் சந்தையில் கவுரவம் கூடுகிறது. வந்து பெண் கேட்பவர் பலர் இருப்பதால் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் தகுதி வாய்ந்த ஆட்களுக்கே திருமணம் செய்து கொடுக்கின்றனர் அல்லது தமக்கு விருப்பமான தகுதி உள்ள ஆண்கள் கிட்டும் வரை காத்திருக்கவும் அவர்களால் முடிகிறது. பெண்களுக்குக் கிராக்கி கூடுகிறது. விளைவு, ஓரளவு வசதி உள்ள இளைஞர் கூடக் காலம் தாழ்த்தித்தான் மணம் செய்ய முடிகிறது. ஏராளமான இளைஞர்கள் திருமணம் செய்யாமலேயே நடு வயதைத் தாண்டி விடுகிறார்கள். ஏழை இளைஞருக்கு மணமுடிக்கும் வாய்ப்பே இல்லாமலும் போகிறது.




ஆக... பெண் சிசுக்கொலை என்ற கொடுமை ஒன்றை நிகழ்த்துவதன் மூலம் பாரதூரமான பெரிய விளைவுகளை எதிர்நோக்குவதை கண் கூடாக பார்க்க முடிகின்றது அல்லவா?? விளைவுகளின் மூல காரணத்தை பலர் அறிந்து கொள்ளாமலேயே பாதிக்கப்படுகின்றார்கள். விபரீதத்தை அரங்கேற்றுபவர்கள் அறிந்தால் என்ன அறியாமல் விட்டால் என்ன தம் சுய இலாபத்திற்காக சிசுக்கொலை புரியும் கொலைஞர்களாகவே இருக்கின்றனர்.

எப்போது தீர்வு கிடைக்கும்...கொலையாகும் பெண் சிசுக்களுக்கு???


-அரசி-

தரவு மூலம் : http://www.thinnai.com