Search This Blog

Monday, 8 March 2010

மகளிர் தினமும்...!! பெருகி வரும் பெண் சிசுக்கொலையும்...!!!








நூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8ம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. மகளிரை போற்றி மகளிர் உரிமையை வலியுறுத்த வருடா வருடம் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் இந்த உலகத்தில் பிறப்பதற்கே கருவில்போராடிக்கொண்டிருக்கின்றன.



2008 இல் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றன. அதாவது தினமும் 2,500 பெண் குழந்தைகள் சாகடிக்கப்படுகின்றன. இன்றைய கால கட்டத்தில் வெளிச்சத்தை பார்ப்பதற்கு முன்பே கருகிப்போகும் பெண் சிசுக்களின் கொலை மலிந்து விட்டது.

மகளிர் தினத்திற்காக வாழ்த்து தெரிவித்து ஒன்று கூடல்கள் நடாத்தினால் மட்டும் போதுமா? உலகத்தை பார்க்காமலேயே எத்தனை பெண் சிசுக்கள் கருவில் கொல்லப்படுவதையும், அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை தடுத்து நிறுத்த வேண்டாமோ??...


பெண் சிசுக்கொலை




இந்தியாவின் நாமக்கல்லில் பரவலாக இந்த பெண் சிசுக்கொலை இருக்கிறது. பொதுவாகவே தமிழ் நாட்டில் ஆண்வழி சமூகம்தான் பண்பாட்டளவில் ஆட்சியில் உள்ளது. இந்த வகை சமூகங்களில் சொத்து ஆண்கள் வழியே கை மாறுகிறது - சட்டம் என்ன சொன்னால் என்ன ? கட்டைப் பஞ்சாயத்துதானே கிராமங்களில் கூடுதலான வலு உள்ளதாக இருக்கிறது. ஆண்வழி சமூகங்களில் பெண்ணுக்குத் திருமணச் செலவு அதிகம் என்பதோடு பெண் திருமணத்துக்குப் பிறகு தனது கணவனின் வீட்டுக்குப் போகக் கடமைப்பட்டவள் என்ற கருத்தும் வலுப்பெற்றுக் காணப்படுகின்றது.

இதனால் பெண் குழந்தை என்று சொன்னாலே அது எதிர்காலக் கடனுக்குக் காரணம், ஒரு சுமை என்று இயல்பாகவே கருதும் மனப்போக்கு நிலவுகின்றது. இது தவறு என்று தெரிந்த படித்த நடுவயதுக்காரர்கள் இப்போது அங்கும் இங்கும் உள்ளார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நடுவில், இறுதியில் என்று மூன்று கட்டமாகப் பார்த்தால், முதல் இரு கட்டங்களில் பெண்ணைச் சுமை என்று கருதிய போக்கு அதிகமாக இருந்திருக்கும். இறுதியில், அதாவது 1980களுக்குப் பிறகு இப்போக்கு குறைந்திருக்கும்தான். ஆனாலும் சமீபத்திய ஆய்வுகள் கூடப் பெண் ஒரு சுமை என்று கருதும் மனப் போக்கு இன்னமும் பெருவாரி நபர்களிடம், அதுவும் பெண் சிசுக் கொலை செய்யும் சாதிகள்/சமூகங்களில் நிலவுகிறது என்று தெரிவிக்கின்றன..

எனவே, பெண்ணே ஒரு கடன் என்ற பார்வையும், ஆண் வரவு என்ற பார்வையும் இச் சமூகங்களில் பரவலாக, குடும்பம் குடும்பமாகப் பின்பற்றப் படுகிறது. இப் பிரச்சினையைத் தீர்க்க அச் சமூகங்கள் கண்டு பிடிக்கும் ஓர் அவசர வழி, பெண் குழந்தையைக் கொல்வது. பிறந்த பின் ஒரு குழந்தையைக் கொல்வது ஒரு முறை என்றாலும் இது இன்னமும் கிராமங்களில்தான் அதிகம் உண்டு. நகர மக்கள், குறிப்பாகப் படித்தவர் இதையே சற்று நாசுக்காகச் செய்கிறார்கள். கடந்த இரு பத்து ஆண்டுகளில் கர்ப்பத்தில் சிசு இருக்கும் போதே அது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய நவீன மருத்துவத்தில் வழி இருப்பதால் அதைப் பயன்படுத்திப் பெண் சிசுவைக் கண்டறிந்து அது கர்ப்பத்தில் இருக்கும் போதே கலைத்து விடுகிறார்கள். மூன்றாவது வழியும் உண்டு. இது மற்ற இரு வழிகளையும் விட சற்று மேலானது போலத் தெரியும், ஆனால் மற்ற இரண்டையும் விடக் குரூரமானது இது - பிறந்த பெண் குழந்தையைப் பராமரிப்பதில் மெத்தனமும், பாராமுகமும், அலட்சியமும் காட்டுவது இவ்வழி. அன்றாட உணவு, உடல் உபாதைகளுக்கு மருத்துவம் செய்தல், சரியான போஷாக்கு அளித்தல், அன்பும் அரவணைப்பும், காலத்துக்குத் தக்கபடி அறிவு வளர்ச்சிக்கு வகை செய்தல் என்ற கடமைகளைச் செய்யாததோடு அக் குழந்தையை எந் நேரமும் கரித்துக் கொட்டுதல், அதன் மீது வன்முறை செலுத்துதல், மேலும் அதன் சுய நம்பிக்கையைத் தொடர்ந்து குறைத்தல் என்று பலவழிகளில் பலவீனமாக்குவது இவ்வழி. இதனால் இக் குழந்தைகள் முதல் ஐந்தாண்டுகளுக்குள் நோய்வயப்பட்டு இறந்து போகின்றன. ஆக, பலவழிகளில் பெண் சிசுக்கள் ஆண் சிசுக்களை விட அதிகம் இறந்து போகின்றன.

இதன் விளைவு பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட இந்தப் பகுதிகளில் மிகவும் குறைந்து காணப்படுகிறது.


பெண்களின் பற்றாக்குறையும் அதனால் ஏற்படும் விளைவுகளும்

பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் ஏராளமான இளைஞர்கள் பெண் துணை இல்லாமலேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி 100 பெண்களும் 120 ஆண்களும் இந்தப் பகுதியில் இருக்கிறார்கள். இந்த 120 பேரில் 20 ஆண்களுக்குப் பெண்துணை கிடைக்கும் வாய்ப்பே இல்லை. அப்படியே திருமணமாகும் காலம் வரும்போது பலருக்கும் 30க்கும் மேல் வயதாகி விடுகிறது.

இதனால் இங்கு ஏராளமான நபர்கள் தொடர்ந்து உடல் பசி தீர்த்துக் கொள்ள அலைவதால், விபச்சாரத் தொழில் பெருகி, தமிழ் நாடு மேலும் தென்னிந்தியாவில் பல பகுதிகளில் இருந்து பெண்கள் இங்கு கொணரப் படுகிறார்கள். அவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்தலும் அதிகரிக்கையில் பாலுறவு நோய்களும் இப் பகுதியில் அதிகரிக்கிறது. சமீபத்து ஆண்டுகளில் உலகை ஆட்டிப் படைக்கும் எய்ட்ஸ் நோய் வியாபாரப் பாலுறவு வழியே எளிதாகவே பரவுகிறது. இதுவரை கட்டுப்பாடான வாழ்வு வாழ்ந்த சமூகங்களில், குடும்பங்களில் அதிகம் பரவ வாய்ப்பில்லாத பாலுறவு நோய்களும், எய்ட்ஸ் போன்ற கொலைகார நோய்களும் இப்போது விரைவாகவே இந்தப் பகுதியில் பரவி விட்டன.

தொலை தூரங்களிலிருந்து இங்கு வந்துள்ள எய்ட்ஸ் நோய் விபச்சாரிகளின் வழியே திருமணமாகாத ஆண்களுக்கு மட்டுமன்றி மற்ற உள்ளூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பரவுகிறது. அண்டைக் கிராமங்களில் மண வாழ்வுக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ள இளைஞர்கள் நகரத்தில் விலைக்குக் கிட்டும் பாலுறவுக்காக நகரம் வந்து நோயைச் சம்பாதித்துக் கொண்டு, மருத்துவ வசதியோ, மருத்துவ அறிவோ அதிகம் இல்லாத கிராமங்களுக்கு அந் நோய்களை எடுத்துச் செல்கிறார்கள். பாலுறவு நோய்களில் பல நோய்கள் மருத்துவம் பார்க்காமல் இருந்தால் உடலுக்குள் தற்காலிகமாக மறைந்து கொண்டு பரவிக் கொண்டு இருக்கும். பின்னர் திடாரென்று கட்டுப்படுத்தவோ அல்லது சிகிச்சையால் தீர்க்கவோ முடியாத வகையில் குபீரெனப் பற்றி எரியும். உயிருக்கே ஆபத்தாக மாறும். ஆக நகரம் கிராமத்தைச் சீரழிப்பது என்ற வழக்கமான பதறலுக்கு இன்னொரு பரிமாணம் இப்போது கிட்டுகிறது. ஆனால் மூல காரணம் இந்த தடவை நகரம் அல்ல. சொத்து ஆசைக்கும், ஆணாதிக்கத்துக்கும் இடம் கொடுத்துப் பெண்களை மதிக்காத ஒரு பண்பாடு, தன் அழிவுக்குத் தானே வித்திடுகிறது.

பெண்கள் மிகவும் குறைவாக இருப்பதால், பெண்களைப் பெற்றவர்களுக்கு ஓரளவு முன்னை விட திருமணச் சந்தையில் கவுரவம் கூடுகிறது. வந்து பெண் கேட்பவர் பலர் இருப்பதால் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் தகுதி வாய்ந்த ஆட்களுக்கே திருமணம் செய்து கொடுக்கின்றனர் அல்லது தமக்கு விருப்பமான தகுதி உள்ள ஆண்கள் கிட்டும் வரை காத்திருக்கவும் அவர்களால் முடிகிறது. பெண்களுக்குக் கிராக்கி கூடுகிறது. விளைவு, ஓரளவு வசதி உள்ள இளைஞர் கூடக் காலம் தாழ்த்தித்தான் மணம் செய்ய முடிகிறது. ஏராளமான இளைஞர்கள் திருமணம் செய்யாமலேயே நடு வயதைத் தாண்டி விடுகிறார்கள். ஏழை இளைஞருக்கு மணமுடிக்கும் வாய்ப்பே இல்லாமலும் போகிறது.




ஆக... பெண் சிசுக்கொலை என்ற கொடுமை ஒன்றை நிகழ்த்துவதன் மூலம் பாரதூரமான பெரிய விளைவுகளை எதிர்நோக்குவதை கண் கூடாக பார்க்க முடிகின்றது அல்லவா?? விளைவுகளின் மூல காரணத்தை பலர் அறிந்து கொள்ளாமலேயே பாதிக்கப்படுகின்றார்கள். விபரீதத்தை அரங்கேற்றுபவர்கள் அறிந்தால் என்ன அறியாமல் விட்டால் என்ன தம் சுய இலாபத்திற்காக சிசுக்கொலை புரியும் கொலைஞர்களாகவே இருக்கின்றனர்.

எப்போது தீர்வு கிடைக்கும்...கொலையாகும் பெண் சிசுக்களுக்கு???


-அரசி-

தரவு மூலம் : http://www.thinnai.com






No comments:

Post a Comment