Search This Blog

Thursday, 11 March 2010

யார் குற்றவாளி..???

ஒரு வாரமாக இணையம் அல்லோல கல்லோலப்படுகின்றது. சாமியாரை குறி வைத்து முகப்புத்தகம்(Face Book) கிழிந்து தொங்குகின்றது.வலைப்பூக்களில் அகப்பட்ட இந்த விடயங்கள் மென்று விழுங்கப்படுகின்றன.பார்த்தும் பார்க்காத மாதிரியும் கேட்டும் கேட்காத மாதிரியும் அமைதியாக இருந்து பார்த்தேன் முடியவில்லை. அந்த காணொளி பதிவை விட முகநூலிலும் வலைபூக்களிலும் பதியப்படும்,பகிரப்படும் பதிவுகளும் பின்னூட்டங்களுமேஎன்னை பெரிதும் பாதித்தன. இணையங்களில் பரவியுள்ள பலதரப்பட்ட பதிவுகளிற்கும்,கருத்துக்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!!!


சுவாமி என்று வந்தவர் இன்பத்தில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை போதிக்கவில்லையே...அவர் எப்படி இருந்தாலும் என்ன செய்தாலும்..இவ்வளவு காலமும் அவரின் பிரசங்கங்களை கேட்டு கை தட்டிய , அவருக்கு பின்னால் அணி திரண்ட கூட்டம் இன்று ஊடகங்களின் வியாபாரப்புத்தி விளங்காது உடனடியாக வன்முறையில் ஈடுபடுவதும்...அறிக்கை விடுவதும் என்று ஏன் மீண்டும் மீண்டும் புத்தி பேதலித்து போகின்றார்கள் என்று விளங்கவில்லை....!

அது சரி பல காலமாக நல்ல விடயங்கள் என்று இதே சாமியார் கூறிய விடயங்களை கேட்டு ஒழுகினார்களா?? அப்படி ஒழுகிய உத்தமர்களா இந்த வன்முறையாளர்கள்??? புரியவில்லை இந்த மக்களின் மனப்போக்கு?? சாமியார் செய்த லீலை என்கின்றார்கள் அதனால் உங்களுக்கு என்ன தீங்கு ஆயிற்று...??? அதற்காக நான் சாமியாருக்கு வக்காலத்து வாங்கவில்லை.நான் சாமியாரின் சீடரோ அல்லது அபிமானியோ அல்ல. இத்தனைக்கும் இந்த சாமியார் பற்றி எனக்கு எதுவும் தெரியாது...எதோ ஒரு சஞ்சிகையில் இவர் எழுதும் தொடரில் இவரின் படத்தை பார்த்த ஞாபகம்...! அந்த தொடரைக்கூட வாசித்து பார்த்ததில்லை.இதை ஏன் கூறுகின்றேன் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.


என்னை பொறுத்த வரை சாமியாரோ அந்த நடிகையோ செய்ததாக சித்தரிக்கப்படும் இந்த காணொளியை பார்க்கும் போது...குற்றவாளியாக முதலில் தெரிவது படம் பிடித்த ஆசாமி தான்..அடுத்து அதை அம்பலமாக்கி ஒளிபரப்பிய ஊடகம்.செய்தி வெளியிடும் சஞ்சிகைகள். தம் வியாபார போட்டிக்கு அவலாக கிடைத்த இந்த விடயத்தை நன்றாகவே மென்று விழுங்கி ஏப்பம் விடுகின்றன தமிழ் நாட்டு ஊடகங்கள்..!
தமிழ் நாட்டில் எத்தனை எத்தனை ஊழல்களும் குற்றங்களும் தினம் தினம் அரங்கேறித் தொலைகின்றன.. அவற்றை தேடித் தேடி படம் பிடித்து அம்பல மாக்க யாருக்கும் துணிச்சல் இல்லை.. இதெல்லாம் ஒரு பெரிய விடயம் என்று திட்டமிட்டு காட்சிகளை பதிவாக்கி யாரோ அனுப்ப அதை ஒரு ஊடக நிறுவனம் உலகம் பூராவும் ஒளி பரப்புகின்றது. இதை நம்பி மக்களும் வன்முறையில்... முட்டாள் தனமாக உள்ளது. ஒரு வேளை இந்த காணொளி பொய்யானது என்று நாளை இன்னுமொரு ஊடகம் செய்தி வெளியிடும் பட்சத்தில் என்ன நடக்கும்?? இதே போல சன் தொலைக்காட்சிக்கும் கல்லெறி விழும். இதே மக்கள் அந்த நிறுவனத்தை தீயிட்டும் கொளுத்துவார்கள்..சே என்ன மடத்தனம் ஆ..ஊ என்றால் கல்லெறியும் தீயிடலும் தான் தெரியுமா?? நிதானமாக யோசித்து முடிவெடுக்க தெரியாதா??

ஒரு வேளை இந்த செயலில் தொடர்புடையாதாக குறிப்பிடப்படும் குறிப்பிட்ட நடிகை சாமியாருக்கு எதிராக புகார் கொடுத்து அதாவது பாலியல் பலாத்காரம் என்ற புகாராக இருந்தாலும் பரவாயில்லை. பார்த்தாலே தெரிகின்றதே... பலாத்காரம் இல்லை என்று...

ஏன் மக்கள் கொதிப்படைய வேண்டும்?? முற்றும் துறந்த முனிவராக தன்னை சாமியார் அடையாளப்படுத்தி விட்டு இப்படி நடந்து கொண்டார் என்றா?? பலவிதமான நிலைகளைத்தாண்டியே முற்றும் துறக்க முடியும்...! அதில் காமமும் ஒன்றாக இருக்கலாம்.. சரி அவர் முற்றும் துறந்தாரா இல்லையா என்பது இல்லை இப்போதுள்ள பிரச்சினை.  இது அவரின் சொந்த பிரச்சினை.. மற்றவனை துன்புறுத்தாமல் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் பரப்பும் பரப்புரைகளை கேட்டவர்கள் தானே இதே மக்கள்..! உங்கள் சொந்த புத்தியால் நடந்து கொள்கின்றவர்களாயின் சாமியாரையும் ஆச்சிரமங்களையும் நாடிச்சென்றிருக்க கூடாது. ஒருவன் நல்லவன் என்றால் தூக்கி தலை மேல் வைத்து கொண்டாடுவதும், அதே சிறு பிரச்சினை என்றால் காலுக்கு கீழே போட்டு மிதித்து துவம்சம் செய்வதும் தமிழ் நாட்டு மக்களின் பழக்க தோஷம்...!

இதில் பெரிய கொடுமை என்ன என்றால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் கடவுள் இல்லை சாமியார் பொய் என்னும் கட்சியினர் இதை ஒரு சாக்காக வைத்து ஏதோ சொல்ல விழைகின்றார்களே தவிர இதில் உள்ள உண்மைத்தனத்தை யாரும் கண்டு கொள்வதாயில்லை. மனிதனுக்கு உணர்வுகள் இருப்பது இயற்கை..அதை யாரும் மறைக்க முடியாது.

மனிதர்களை வழிப்படுத்தி அதாவது கெட்டு போகாமல் வாழ்க்கையினை வாழ்வாங்கு வாழ வழி காட்டும் அசாதரண மனிதர் தான் இந்த சாமியார் என்பது எனது ஊகம். அதற்காக அவர் இன்பமாக இருக்க கூடாது என்று கொதித்தெழுவது அநாகரிகம். அவர் ஒன்றும் கடவுள் அல்லரே. மனிதனை படைத்ததாக நம்பப்படும் கடவுளிற்கே மனித உணர்வுகள் இருப்பதாக நம்பப்பட்டது. பல ஆண்டுகளிற்கு முன்னர் இதை ஏற்றுக்கொண்ட மனித சமூகம் இன்று ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

உதாரணத்திற்கு கூறின்,முற்றும் துறந்த முனிவர் எனப்பட்ட நாரதருக்கே இச்சங்கடமான நிலை ஒரு முறை தோன்றியது. அதாவது அமிர்தம் எடுத்து வா என விஷ்ணுவால் பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட நாரதர் பூலோகத்தில் ஒரு பெண்ணின் அழகில் மயங்கி 12 ஆண்டுகாலமாய் பூலோகத்திலேயே தங்கி விட்டார். பின் விஷ்ணுவிடம் சென்று மன்னிப்பு கேட்ட நாரதரிடம் விஷ்ணு உரைத்ததாவது... ” உணர்வுகள் உள்ள மனிதனை படைத்த கடவுளர்களுக்கே இந்த உணர்வுகள் இருக்கும் போது முனிவர்களுக்கு இருப்பது ஆச்சரியமன்று. இனி எதிர்காலத்தில் வரப்போகும் முனிவர்களுக்கு முன்னுதாரணமாய் நீ இருப்பாய்”
அதாவது உணர்வுகளைத்துறந்து வாழ முடியாது. எப்படித்தான் கட்டுப்பட்டு வாழ்ந்தாலும் ஒரு தருணத்தில் எங்கோ ஓரிடத்தில் சிக்க வைக்கும் இந்த உணர்வு எல்லோருக்கும் பொதுவானதே. இதற்கு யாரும் விதி விலக்கல்ல. முக்காலமும் அறிந்த நாரதனே உணர்வுகளுக்கு அடிமையாகும் போது மனிதனாக பிறந்த நித்தியானந்தா உணர்வுகளை துறந்து வாழ முடியாதே.. இது தப்பானதல்லவே.. அப்படியாயின் இந்த உலகத்தில் யாரையும் திருமணம் முடிக்காதே என்று கூறி அவர் பரப்புரை செய்திருப்பின் தப்பாகலாம். அந்த காலத்தில் நாரதரையே ஏற்றுக்கொண்ட கடவுளும் உண்டு ஏன் இந்த காலத்திலும் கூட நாரதரை யாரும் வெறுக்கவில்லையே...ஒருவர் கூறும் கருத்து நல்லதாக இருந்தால் மட்டும் போதும். அவர் யார் எப்படிப்பட்டவர் என்பதும், அவரின் சொந்த வாழ்க்கை பற்றியும் எமக்கு தேவை இல்லை. அதில் தலையிடுவது சுத்த அநாகரிகம். காட்டு மிராண்டித்தனம்.. சாமியாரினதும் நடிகையினதும் இந்த உறவு சட்ட விரோதமானதா இல்லையா என்பது வேறு பிரச்சினை.அதை சட்டம் தீர்மானிக்கட்டும். 

அதை விடுத்து முற்று முழுதாக வியாபார நோக்குடன் ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.நீலப்படத்துக்கு கூட இப்படி விளம்பரம் செய்ய மாட்டார்கள். அந்தளவு இழி நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு குமுதம் என்கின்ற இதழ் இலவச ஊடக விபச்சாரத்தினை நடாத்த, நக்கீரன் என்ற ஊடகம் சந்தா முறையில் நீலத்திரைப்படத்தை தன் வாசகர்களுக்கு வெளியிட்டு காட்டுகின்றது.இதனால் பாதிக்கப்படுவது யார்? சாமியாரோ நடிகையோ அல்ல...இளம் சமுதாயமே அத்துடன் தமிழனின் மானம்..!! உலகம் பூராவும் இன்று கப்பலேறி விட்டது தமிழனின் மானம்..!! இதற்கு துணை போன , துணை போகின்ற ஊடகங்களின் செயற்பாட்டை என்னவென்று சொல்வது..?? சமூகத்தில் பொறுப்பான நிலையில் இருந்து செயற்பட வேண்டிய ஊடகங்களே இப்படி வியாபாரத்தை மட்டும் நோக்காக கொண்டு தம் நிலை தவறி நடந்தால் யாரை யார் குற்றம் சொல்வது? பேனாவே இங்கு தவறான வழியில் பயணிக்கின்றது.

பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் உணர்வுகளை அனுபவித்து மனிதனாக வாழ்ந்து பின் ஆன்மிக வழியில் செல்வதை பற்றி யோசிப்போம் அல்லது செல்வோம். காமத்தை ஒதுக்கி வாழச்சொல்லி யாரும் இங்கே பிரச்சாரம் செய்யவில்லை. அப்படி செய்ய யாராலும் முடியாது. உணர்வுகளை கட்டுப்படுத்தி யாரும் வாழ முடியாது. உணர்வுகளுக்கு அடிமையாகி இன்புற்றிருப்பதை குற்றம் என்று கூறுபவனும் அதை வெளிச்சம் போட்டு பிறருக்கு காட்டுபவனுமே முழுக்குற்றவாளி ஆகின்றான்.



குற்றவாளி தானாக பார்த்து திருந்துவானா??????

என்றும் தோழமையுடன்
அரசி

No comments:

Post a Comment