முல்லைத்தீவில் இன்பத்துடன்
முழுச்சமர்களிலும் உயிர் தப்பி
வாழ்ந்து வந்த அழகிய குடும்பம்....!!!
வானத்து அரக்கர்களின் குண்டு வீச்சிலும்
வாழ்வினை தொலைக்காது உயிர் மீண்டவர்கள்
அன்பான கணவன் ஆசைக்கு ஒரு செல்ல மகள்
அடி தடிக்கு ஒரு ஆண் மகன் என
அஞ்சு வருடத்துக்கு முந்தி
அரவணைப்போடு வாழ்ந்தவள்....!!!
ஒளிந்து ஒளிந்து மண்ணினை நுகர்ந்து
அண்ணாந்து அண்ணாந்து - கல் தடக்கி
அடி பட்டு விழுந்து உயிரை
கையில் பிடித்து ஓடித்திரிந்தது
கைகளில் என் உயிர்களின் சதைகளை
அள்ளி எடுத்திடவா...???
கருவினில் நான் சுமந்தவள்
கருவினை சுமக்க தயாராகி நின்றதை
கண்ணுற்று பூரித்து நின்ற தருணம்,,
காதைப்பிழந்த ஒலியோடு புகை மூட்டம்
கண்களை மறைத்து செல்ல ஈரம் தோய்ந்து
மெய் சிலிர்த்து நின்ற எனை புகை விட்டு விலகியது
கைகளில் ஏதோ நிறைந்த உணர்வை
கண்கொண்டு பார்த்திட எத்தனித்திட ....
ஐயகோ......
செந்நிற மேனியாய்..,,
சதையும் தோலுமாய்..,,
நிற்கின்றேன்.....!
வலிக்கவில்லை உடலம்
வந்து வெடித்து சிதறியது எறிகணையா???
சதைப்பிண்டமா???
குழம்பி நின்ற எனக்கு
கொடூரமான பதில் கிடைத்தது....
சிரித்த முகத்தோடு கொஞ்சம் தள்ளி
சின்னவன் கடைக்குட்டி நிரந்தரமாய் படுத்தபடி....
செல்ல மகளை காணவில்லை....
போன மாத பிறந்த நாளுக்கு ஆசையாய்
போட்டு விட்ட காப்புடன் கை மட்டும் என் காலடியில்.....
2009 வைகாசி 17
2013 வைகாசி 17
அப்போ நீ மட்டும் ஏன் இன்னும் உயிருடன்....???
கேள்விகள் பல எழுகின்றன......
இரத்தமும் சதையும் என்னை நனைத்து
இருள் சூழ திக்கற்று நின்ற என்னை நோக்கி
கைகளால் தவழ்ந்து வந்த கணவனுக்காக நானும்
எனக்காக கணவனும்
இறுதி வரை,,,,,,,நடைப்பிணங்களாய்......
அரசி
No comments:
Post a Comment