Search This Blog

Friday, 27 December 2013

கொந்தளிப்பு...!!!

கடற்சூரியன் (MV SUNSEA) உருவாக்கிய கொந்தளிப்பு...!!!
******************************************

அந்த இருட்டிய அறைக்குள் எதுவுமே புலப்படவில்லை. இருட்டியது அறை மட்டுமல்ல மதுரனின் கண்களும் தான். உப்பிய வயிறும் குழி விழுந்த நெஞ்சுமாய் மெல்ல தன் எலும்பாய் போன உடலை இழுத்து இழுத்து வந்து கம்பிகளுக்கிடையே கையிச்சொருகி கையசைத்தான்.

 " சேர்........... சேர்................"

என்ற குரல் அவனுக்குள்ளேயே அடங்கி போனது..சத்தம் வெளியே வரவில்லை. கை எட்டி எட்டி அசைக்கவே முடியாத வலுவற்ற வனாய் கம்பிகளை இறுகப்பற்றியவாறு சோர்ந்து போனான். இரு மாதங்களுக்கு மேலாக உணவின்றி காய்ந்து போன குடல் இப்போது நீரைக்கூட திருப்பி அனுப்பி வைக்கின்றது வாந்தியாக. 

மரத்து போனது மனம் மட்டுமன்றி இரைப்பையும் தான். எந்தவித சிகிச்சையும் இன்றி நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அவன் மரணித்துக்கொண்டிருக்கின்றான். நெஞ்சுக்குழிக்குள் ஏதோ உருண்டு பிரண்டு வருவது போன்று ஒரு உணர்வு. வாந்தி எடுத்தாலும் உருளுவது நிற்கின்றதே இல்லை. பசியால் பிசைகின்ற வயிறு, உணவை தன்னிடத்தில் தங்க அனுமதிக்காத கொடுமையினை இவன் பல நாட்களாய் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான். தேசம் விட்டு தேசம் நலம் நாடி வந்து நலமின்றி தினம் நலிந்து கொண்டிருக்கின்றான்.

சாதரணமாக பெண்களே ஐம்பது கிலோவிற்கு குறைவாக இருப்பது இக்காலத்தில் அரிது. ஆனால் ஒரு முப்பத்து மூன்று வயது ஆண்மகன் முப்பது கிலோவிற்குள் அடங்கியிருப்பதை எவராலும் நிச்சயம் நம்ப முடியாது. மொத்த என்புகளின் நிறையே அந்த முப்பதும் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

செவி வழியே தினமும் இறங்கி கதறும் அவனது ஈனக்குரல் கேட்க சக்தியற்று உருக்குலைந்து போகும் அவனின் அன்பு  மனைவி நிலாவால் எழுத்துக்களைத்தான் அவனுக்காகக்கொடுக்க முடியும். பரிவாக அருகில் இருந்து ஆறுதல் உரைக்கவோ அன்றி நீர் , ஆகாரம் கொடுக்கவோ முடியாத கொடுமை நிலையில் ஒரே நாட்டில் இருந்து துன்புறுகின்றாள். பத்து கிலோ மீற்றர் தூரத்தில் அடைபட்டு அல்லல் படும் அவனை எட்டிப்பார்த்து அவன் நிலை அறிய முடியாத பாவியாக நடு நிசிகளில் கண்ணீரில் தோயும் விசைப்பலகையில் கை நனைக்கின்றாள். தன் உயிரானவனுக்காக குரல் கொடுக்கும் படி மனித உரிமைகள் , ஐக்கிய நாடுகள் என்று அமைப்புக்களுக்கு வரைகின்ற மடல்களும் கண்ணீரோடு திரும்பி கை விரித்து நிற்கின்றன.

ஈழத்தை விட்டு  நீங்கிச்சென்றாலும் மனித உரிமை ஆணைக்குழுவும்,  ஐக்கிய நாடுகளும் நம்மவரை விட்ட குறை தொட்ட குறையாய் தொடருகின்ற இல்லையில்லை  அவற்றை நாடி நம்மவர் தொடருகின்ற தொடர்கதை எப்போது தான் முடிவுறுமோ.?

உயிரிலே கலந்தவன் ,  சுவாசமானவன் சுவாசிக்கச்சக்தியற்று உயிருக்காய் போராடும் கணத்தில் இணையம் புகுந்திருந்து பதிவு எழுதும் ஒரு துரதிஷ்டசாலி மனைவியாக நிலா. தன் பதியானவனின் தற்போதைய மோசமான நிலையினைப்பகிர்ந்து அவனது விடுதலைக்கு வழிவகுக்க தன்னால் முடிந்தவாறு வலிகளைப்புறந்தள்ளி வைத்து எழுத்துக்களில் நியாயம் கேட்கின்றாள். தொலைந்து கொண்டிருக்கும் மதுரனின் முகவரியினை முகப்புத்தகத்தில் முழு மூச்சாய் தேடிக்களைத்து ஓய்ந்து விட்டாள்.

எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் அவன் முகத்தை உடனடியாக பார்த்திட முடியாத தேசத்தில் சிக்கித்தவிக்கின்ற அவள் தன் நெஞ்சத்தில் அவனின் வலிகளையும் சுமந்து கொண்டு அவனது இரு பச்சிளம் பாலகர்களையும் ஏந்தியவாறு தாய்லாந்தின் தார் வீதியெல்லாம் தடம் பதித்து அலைகின்றாள். எந்த நேரத்திலும் அவள் பாதம் அச்செடுக்க முடிந்த நிலையில் ரேகை படிந்த வீதிகளாய் காட்சி அளிக்கின்றன.

 கொலைக்களம் என்ற இலங்கையில் கூட பணத்தை இலஞ்சம் கொடுத்து இலஞ்சம் என்ற முகமூடிக்குள் சிறைப்பட்டவர்களை  ஒளித்து வைத்து கடத்திச் சிறை மீட்கலாம். அல்லது  அவ்வப்போது சென்று பார்த்திடலாம். ஆனால்  பணம் மட்டுமன்றி அரசியல் பிரமுகரும் பரிந்துரை செய்ய முடியாத தேசமாய்  தாய்லாந்து தேசம் உணர்வற்றுக்கிடக்கின்றது.

விட்டு விட்டு ஒலிக்கின்ற அவன் குரல், நிலாவின் உயிரின் ஆணிவேரைப்பிடுங்கி எறிந்து மீண்டும் நட்டுச்செல்கின்றது. கதறுகின்ற குரல் கேட்கச்சக்தியற்று சாய்ந்து போகின்றாள். என்ன தான் செய்ய இயலும்? அவர்களுக்கு  உதவிடக் கூடும்  என்ற சந்தேகத்தின் பேரில் கடவுளும் பல காலமாய்  அங்கு தடுப்புக்காவலில் தான். நான்காண்டாய் நாயாய் பேயாய் அலைந்து அடிபட்ட வாழ்வது கண்ணீரில் முகம் கழுவி நிற்கின்ற கடைசி அத்தியாயத்தில் மூச்சு வாங்கியபடி ஓய்ந்து நிற்கின்றது.

தொலைபேசியில் சிணுங்கி மெல்ல மெல்ல வலிகளால் ஓய்ந்து உயிரற்றுப்போகின்ற  அவனின் அழுகுரலும் கதறலும் இங்கே எழுகின்றது வரிகளாக............

இரவுகளின் மடியில்
இறுதி ஊர்வலம்...!!

கண்ணீரில் முகம் கழுவிப்போகும்
கடைசி அத்தியாயம்...!!!

பிசைகின்ற வயிறு
பிடித்துப்போகின்றது...
பிணியாகிப்போகும் உள்ளம்
பிய்ந்து போய் கிடக்கின்றது...!

மரத்துப் போன பாதங்கள்
முள்ளும் கல்லும் கொண்டு
உரமாய் கிடக்கின்றன - இறுதிப்
பயணத்தினை எதிர் பார்த்து

அந்த நாலு பேரை கை ஏந்தாது
அந்தம் வரை பயணிக்க முடியாதோ??
அந்தோ தெரிகின்றது மயானம்...!

நான் என்ன விதி விலக்கா??
பிணம் எழுந்து நடக்குமோ??
நடந்து சென்று படுத்து கொள்ளி
நட்டு வைக்குமோ தனக்கே....?
என்ன பைத்தியக்காரத்தனம்...?

எழும்பும் தோலுமாய் உடல்
எறும்பு மொய்த்திடாமல்
எழுந்து உட்காருகின்றது...!

அசைந்து போகும் நிலை
அடுத்த நிமிடங்களில்
நிறுத்தப்படலாம்....!!

எனக்கு நானே ஒப்பாரி வைக்கின்றேன்...!
எந்த நேரத்திலும் விடைபெறுவேன் அல்லவோ?

ஒரே ஒரு வருத்தம் மட்டுமே...
பாவம்...!
என்னை கல்லிலும் முள்ளிலும் மழையிலும்
வெயிலும் பார்த்து பார்த்து தாங்கிய உடல்....!

தீயில் துயில் கொள்ள போகின்றது - எதையும்
தீண்டாமல் எனைக்காத்த உடலை - தீ
தீண்டி தன் பசிக்கு இரையாக்குவதை
தடுக்க முடியாத கையாலாகதவனாய் நான்...!
தரணி நீங்கிப்போகின்றேன்....!!!

மன்னித்து விடு உடலே என் பொருளே..!

எழுத முடியாத பல வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கித்தவிக்கின்றன. உருக்குலைந்து போவது அவன் மட்டுமல்ல. இரும்புப்பிடியாய் நான்காண்டாய் நிலா  பற்றி வைத்திருந்த அசையாத நம்பிக்கையுமே. .!

அவன் செய்த குற்றம் என்ன..?

தமிழனாய் ஈழத்தில் பிறந்தது மட்டுமே. ஐ நாவின் அகதியில் ஒருவனாய் ஐந்தாண்டு காலமாய் தாய்லாந்து தேசத்து குடிவரவு தடுப்பு மையத்தில் அல்லலுறும் நூற்றுக்கணக்கான அகதிகளில் ஒருவனாய் அனுபவித்த கொடுமைகள் போதாதென்று கடந்த மூன்று மாதங்களாய் உடல் உருக்குலைந்து போகும் நிலையில் தவிக்கும் இவனை சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல அனுமதிக்காத இறுக்கமான சட்டங்களை கொண்ட தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் இறுக்கமான மனிதாபிமானம் அற்ற மனங்களையும் தம்மகத்தே கொண்டிருப்பது தான்  இன்னும் வேதனையும் வருத்தமுமாகும்.

 ஐ.நாவினால் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டும் குடிவரவு தடுப்பு மையத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவன தாதி சிகிச்சைக்கு அனுமதி அளிக்காமல் மதுரனைப்  பைத்தியம் என்று வதந்தி கிளப்பி அதிகாரிகளோடு சேர்ந்து இயங்கிக்  கொண்டிருக்கின்றாள். எல்லாவற்றுக்கும் பின்புலமாக கனேடிய காவல் துறை அதிகாரிகள் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். ஆமாம், வெறும் எண்ணங்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கும் வடிவம் கொடுத்து செயலாற்றும் கனேடிய அரசின் செயல்களுக்கு, தாய்லாந்து பக்க பலமாய் நிற்பதும் அதற்காகப்  பல இலட்சம் ஊதியம் பெறுவதும் யாருக்கும் தெரியாத உண்மை ஆகும்.

ஒருவன் உயிருக்குப்  போராடும் நிலையில் அவனை உடல் உள ரீதியாக உளைச்சல் பட வைத்து வேடிக்கை பார்க்கின்ற மேல் நாட்டு யுக்தியினை தற்போது ஆசிய நாடுகளும் பின்பற்றத்  தொடங்கியுள்ளமை வருந்தத் தக்க விடயமாகும்.

ஒரு உயிர் துடிப்பதை நின்று வேடிக்கை பார்த்து சிரிக்கின்ற அந்த தாதியை அடித்துக்கொன்று புதைக்க மனம் எண்ணுகின்றது. அதற்கு கூட அங்கு நாம் செல்ல முடியாதே. எதற்காக நாம் ஈழத்தில் பிறந்தோம் எதற்காக நாம் தமிழனாய் பிறந்தோம்..? வாழ்வில் முதன் முறையாக வேதனைப் படுகின்றேன். தமிழன் என்று சொல்...! தலை நிமிர்ந்து நில்..! என்றார்கள். நாம் தலை குனிந்து உள்ளம் குமுறிக்குமுறி அழுதோம். அழுகின்றோம். அழுவோமா? 
எதிர்காலம் மங்கலாய் தூரத்தில் அசைவது மட்டும் தெரிகின்றது...............!

மதுரனின் குரல் அடிக்கடி எனக்குள்  அவனாக இருந்து பிரசவிக்கின்றது அவன் எண்ணங்களை கவிதைகளாக....

உறைவிடமாகிப்போன சிறையிடத்தில்
உற்றவள் உயிரை சுமந்து நற்றவம் புரிகின்றேன்...!
ஆலம் விழுதுகள் போன்று கடக்கின்ற
நொடிப்பொழுதுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன....!

வதனங்கள் வடிவிழந்ததாய் காட்சி- நீர்
வற்றிப்போன தொண்டைக்குழிக்குள் சிக்கி
வார்த்தைகள் தடுத்து வைக்கப்படுகின்றன - நா
வறண்டு போய் கூச்சல் போடுகின்றேன்...
வந்து வந்து போகின்றது காற்று மட்டுமே...

கனவுகளில் கூட
கண்மணிகளை கண்பார்த்திடலாம்
கரம் தொட்டு அணைக்கலாம் என்றால்
கண்ணயர முடியவில்லை...!!
கனவாகி போகின்றன நினைப்புக்களும்...!

மனம் இங்கு தினம் தினம்
மடிந்து கொண்டிருப்பதனை விட
மரணத்தை தொட்டு விளையாடிடலாம்...!
மரணம் தன்னும் என்னை அணைக்க
மறுக்கின்றதே....!!!

மண்ணுலகம் நீங்கி அந்தரிக்கின்றேன்
மரணிக்காமலேயே...
மடி சாய்ந்து உறங்க தேடும் என்னவளின் முகம்
மறந்து போகின்றது  அடிக்கடி...
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...?
நிலை தெரிகின்றது ஆனாலும்
நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது..
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...!

தாகம் எடுக்கவில்லை
பசி வாட்டவில்லை
பட்டினியாய் கிடக்கின்றேனா?
பல காலம் ஆயிற்றோ...?
நினைவுகள் இருக்கின்றன...ஆனால்
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...?
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...??

உலகம் நீங்கியவனாக அவன் சித்தம் கலங்கி நித்தம் வாடிக்கிடக்கின்றான். அருகில் இருப்பவனை நோக்கினாலும் அவன் மிரட்டுவது போன்றும் கொல்ல வருவதும் போன்றதுமான பிரமை. தொலைபேசி எடுத்தால் எந்த நேரமும் அழுகுரலே. இப்போதெல்லாம் அழுவதற்கு கூட சக்தியற்று விட்டான். தொலைபேசியின் ஒலி அமைப்பினை அதிகரித்தாலும் அவன் குரல் அனுங்கியபடி குற்றுயிராய் கடந்து செல்கின்றது. 

மஞ்சள் பூத்துகிடக்கும் உடலில் பிண வாடை வீசுவதாக அடிக்கடி உரைக்கும் அவனின் உடலுக்கு என்ன நலக்குறைவு என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மாத முயற்சியின் பின் சாதாரண ஒரு வைத்தியர் அதாவது இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனை செய்பவர் அவனைப்பரிசோதிக்க சென்றார்.  இதற்காக  மதுரனின் மனைவி தன்னிரு பச்சிளம் குழந்தைகளுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஒரு வாரமாக அலைந்து திரிந்து தொடர்பு எடுத்து அவரை அங்கு அனுப்ப பெரிதும் சிரமப்பட்டிருந்தாள்.  

அந்த வைத்தியரின் அறிக்கையின் பிரகாரம் மதுரனுக்கு இரத்த அழுத்தம் மிகக்குறைவான நிலையில் இருப்பதாகவும் உடலில் உள்ள இனிப்பின் (குளுக்கோஸின்) அளவும் மிகக்குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இரு வாரங்களாகியும் இன்னும் அவன் எடுத்துச்செல்லப்படவில்லை. அத்துடன் அந்த வைத்தியரால் தற்காலிகமாக எழுதிக்கொடுக்கப்பட்ட விற்றமின் மாத்திரைகள் மற்றும் உடல் வலுவிற்கான மாத்திரைகள் (குளுக்கோசு) என்பன அவனுக்கு அந்தத் தாதியினால் வழங்கப்படவில்லை. அதனை வழங்குமாறு கேட்டுக்கொண்ட மதுரனைப் பார்த்து பரிகசித்து சென்ற தாதி இன்று வரை அவனைச்சென்று பார்வையிடவில்லை. 

என்ன காரணம் ? என்றே புரியாத ஒரு குழப்பத்தில் மதுரன் மட்டுமன்றி நானும் குழம்பியுள்ளேன். தன்னார்வ தொண்டு நிறுவனம் என்பது அகதிகள் மற்றும் உதவி அற்றுத் தவிப்போருக்கு வலிந்து சென்று உதவி செய்வதற்கான அமைப்பாகும். ஆனால் இங்கு அவசர சிகிச்சை தேவைப்படும் ஒருவனை பரிகசிக்கும் அளவிற்கு அதில் பணி புரிகின்ற தாதிக்கு என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை. தாதி என்றால் அவருக்கு இளவயது அல்ல. மதுரனுக்கு தாய் வயதில் ஒத்த அவர் , பல தடவை மதுரனின் மனைவி நிலா  அங்கு சென்ற போது விரட்டிக் கலைத்த துண்டு. அவனைப்பார்வையிட அனுமதிக்காத போதும் சாப்பிடவென்று அவனுக்காக செய்த உணவுகளை அவரிடம் கொடுத்து மதுரனிடம் ஒப்படைக்குமாறு கெஞ்சிய நிலாவினை ஏறெடுத்தும் பார்க்காமல்   அந்த உணவுகளை திருப்பி அனுப்பிய கல் நெஞ்சக்காரி.

ஒரு சில தமிழர்களோடு நல்லுறவு பேணித் தன்னை ஒரு சேவையாளி என்று காட்டிக்கொள்ளும் அந்த தாதி கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக அந்த குடியேற்ற தடுப்பு மையத்தில் பணி புரிகின்றார் .

அவனோடு மட்டுமன்றி அங்குள்ள ஈழத்தமிழர்களோடும் அவள் வெறுப்பையே கொட்டி வருகின்றார். 2013 தைத்திருநாளுக்கு அவரின் அனுமதியோடு இலங்கை ரூபாய் இருபத்தைந்தாயிரம் செலவில் தயாரித்து எடுத்துச்செல்லப்பட்ட எழுபத்தைந்துக்கு மேற்பட்ட பொங்கல் பிரசாத பொதிகளை   உள்ளே அகதிகளுக்கு வழங்காது  அவற்றினை  அவர்கள் கண் முன்னாலேயே குப்பைத்தொட்டியில் போட்டு வீணடித்த அந்த தாதியினை இந்த நிகழ்வில் இருந்து  என்ன மன நிலையில் உள்ளவள் என்பதனை நன்கறிந்து  கொள்ள முடியும்.
 
நிச்சயம் இவற்றுக்கு பின்னால் கனேடிய அரசின் சதி உண்டு என்பதனை மதி உள்ளவர்கள் நிச்சயம் விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் உயிர் வரை வந்து அறுக்கின்ற நிலைக்கு மதுரன் பெரிதாக குற்றம் இழைத்து விடவில்லை.

அவன் இழைத்த குற்றம் என்ன? கனேடிய அரசின் நோக்கம் என்ன.? என்ன காரணத்திற்காக மதுரன் உள உடல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றான்? இவற்றுக்கு முதல் மூல காரண கர்த்தாக்கள் யார்? இவற்றுக்கான விடையோடு அடுத்த பாகம் விரைவில் தொடரும்...........


அரசி நிலவன்
தாய்லாந்திலிருந்து 
கை பற்றி ஏதோ சொல்ல விழைந்து உதடுகள்
மூடிப்போன நீ கை காட்டி சைகையில் சொல்லி
போயிருக்கலாமே....?

கண் மூடி கல்லறை தூங்கும் உன் இதயத்தின்
பண் கேட்டும் புரியவில்லை எனக்கு - நீ
சொல்ல வந்து உனக்குள் புதைத்து சென்ற
சங்கதி என்னவென்று...

அறுவடை வயலில் சிந்திச்சிதறிய
நெல் மணிகளை பொறுக்கி
வயிறு நிரப்பிடும் குருவிகள் போன்று 
நீ விதைத்து சென்ற காதல் 
பயிரின் மூப்பால் தாமே உதிர்ந்த 
நினைவுகளினைத்தேடி தேடிப்பொறுக்கி
மனம் நிரப்பிக் கொள்ளுகின்றேன்...

சுவரொட்டிகளின் ஆதிக்கம் பெற்ற வீதியோர மதிற்
சுவராய் உன் நினைவுகளால் கிறுக்கப்பட்ட இதயம்
சுத்தமாக்கிட எத்தனிக்கவில்லை மனம்...!
பத்திரமாய் கிறுக்கல்களை பொத்தி வைத்திருக்கின்றது..!






மன்னிப்பு...!!!

இரவுகளின் மடியில்
இறுதி ஊர்வலம்...!!

கண்ணீரில் முகம் கழுவிப்போகும்
கடைசி அத்தியாயம்...!!!

கால்கள் பின்னி
முடங்கியது நடையோடு
வாழ்வுமே...!!!

வலிகள் வலிக்கவில்லை...
வலித்து வடுவாகிப்போகின்றன
வசை மொழிகள்...!!!

சோற்றிற்கு கை ஏந்தி
சோரம் போய் விட
சொம்பேறியல்ல...

பிசைகின்ற வயிறு
பிடித்துப்போகின்றது...
பிணியாகிப்போகும் உள்ளம்
பிய்ந்து போய் கிடக்கின்றது...!

மரத்துப் போன பாதங்கள்
முள்ளும் கல்லும் கொண்டு
உரமாய் கிடக்கின்றன - இறுதிப்
பயணத்தினை எதிர் பார்த்து

அந்த நாலு பேரை கை ஏந்தாது
அந்தம் வரை பயணிக்க முடியாதோ??
அந்தோ தெரிகின்றது மயானம்...!

நான் என்ன விதி விலக்கா??
பிணம் எழுந்து நடக்குமோ??
நடந்து சென்று படுத்து கொள்ளி
நட்டு வைக்குமோ தனக்கே....?
என்ன பைத்தியக்காரத்தனம்...?

எழும்பும் தோலுமாய் உடல்
எறும்பு மொய்த்திடாமல்
எழுந்து உட்காருகின்றது...!

அசைந்து போகும் நிலை
அடுத்த நிமிடங்களில்
நிறுத்தப்படலாம்....!!

காலில் விழுந்து மண்டியிட்டு
காத்திருந்து யாசித்து உயிர் நீடித்து
ஊசல் ஆடுவதிலும் பசித்திருந்து
வெறுத்திருந்து நீங்கிடலாம்....!!!

எனக்கு நானே ஒப்பாரி வைக்கின்றேன்...!
எந்த நேரத்திலும் விடைபெறுவேன் அல்லவோ?

ஒரே ஒரு வருத்தம் மட்டுமே...
பாவம்...!
என்னை கல்லிலும் முள்ளிலும் மழையிலும்
வெயிலும் பார்த்து பார்த்து தாங்கிய உடல்....!

தீயில் துயில் கொள்ள போகின்றது - எதையும்
தீண்டாமல் எனைக்காத்த உடலை - தீ
தீண்டி தன் பசிக்கு இரையாக்குவதை
தடுக்க முடியாத கையாலாகதவனாய் நான்...!
தரணி நீங்கிப்போகின்றேன்....!!!

மன்னித்து விடு உடலே என் பொருளே..!


அரசி நிலவன்


Thursday, 26 December 2013

தர்மம்..!!!


தலை காக்கும் தர்மம் 
விலை போகும் காலமடா...!
நிலை கெட்டு வாழும் மனிதம் அதை 
உலை வைத்து சோறாக்கி தின்கின்றது..!!!

அலை அடிக்காமல் என்ன செய்யும் ?
அனல் காற்று வீசாமல் பேசாமல் போகுமோ?
எரிமலையும் குமுறுகின்றது..! 
கடல் மட்டம் உயர்கின்றது...!


நிலை குலைந்து இயற்கையும் சீறுமன்றோ??
ஆழியின் வயிற்றில் அணு ஆராய்ச்சி புரிகின்றாய்..! 
வயிற்றைக்குமட்டி பேரலையாய் வாந்தி எடுக்கும் 
அதனைத்திட்டிச்சாபமும் இடுகின்றாய்...? 
என்ன தர்மமோ??? என்ன நீதியோ??

வதைத்து உதைத்து எறிவாய்..! 
உயிரோடு தீயிட்டு எரிப்பாய்..!
கருவிலே கழுத்தை நெரித்து 
கருவறுப்பாய்..!
நெருப்பாய் வாழ்ந்த மங்கைகளின் 
கற்பினை அழிப்பாய்..!
உறுப்பை வெட்டி சிரிப்பாய் 
சிரிப்பாய்...!
புகைப்படம் எடுத்து ரசிப்பாய்..!
எழுந்து நிமிர்ந்து எதிர்த்து கேட்டால் பெயர்  
கொடுப்பாய் "பயங்கரவாதி " என..
என்ன தர்மமோ??

எறிந்து எரித்து கருவறுத்து அழித்து 
சிரித்து ரசித்து எக்காளமிட்ட போது 
எங்கிருந்தனவோ உலக நாடுகள்...?

வரிந்து கட்டிக்கொண்டு வந்து 
வரிசை வரிசையாய் நின்றன..!

தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடி ஒளிந்து 
விஷம் கக்கும் வாயுக்களை ஏவி விட்டு 
கொத்து கொத்தாய் கொன்று குவித்து 
கொடி நாட்டி கோஷமிட்ட நாடுகள்...!

இன்று...
ஆதாரம் , காணொளி எச்சரிக்கை 
காலக்கெடு பினாத்துகின்றன..!
என்ன தர்மமோ...?  என்ன நீதியோ ..? 
கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?

கூட்டுப் படுகொலையாளிகள்  
கூட்டம் போட்டு கூடிச்சதி புரிந்து 
ஆட்டம் போட்டு கொன்று குவித்த பின் 
வாட்டம் கொள்வதைப்போன்று 
பாசாங்கு புரிந்து கால அவகாசம் 
கொடுத்து நடித்து செல்வது என்ன 
தர்மமோ..??

வருகையும் அறிக்கையும் நடாத்தி 
என்ன கணக்கெடுப்பு...??

பகிர்ந்தளிக்கத்தான் போகின்றார்களா??
இனவாதம் அனுமதிக்குமா??
வாதங்களாய் மாறி மாறித்தொடரத்தான்
போகின்றது...!
சுழற்சி முறையாக தந்தை செல்வா காலம் 
மீண்டும் நிகழ் காலமாய் நிகழ்கின்றது...!

வாதங்களும் ஆணைகளும் பேரினவாதத்தினை 
அசைக்க முடியாமல் தோற்றுத்தான் போகும்...!!!
உணருங்கள் மறுபடியும் தொலைத்ததை எண்ணி..

தர்மம் ஒரு நாள் வெல்லும் என்பது வெறும் 
பேச்சோடு மட்டுமே உயிர் வாழ்கின்றது....
நம்பிக்கை தான் நித்தமும் மரணிக்கின்றது....!

எழுத்திலும் எழுத சுதந்திரம் இல்லை...
எழுது கோல்களும் சிறை பிடிக்கப்படுகின்றன..!
எழுத்தில் தன்னும் தட்டி கேட்க அனுமதியாதோர் 
எழுந்து நின்று எதிர்த்தால் எரித்தல்லோ போவர்?
என்ன தர்மமோ...?? என்ன நீதியோ..??

ஆடி அடங்கிய பின்னும் தர்மம் வாழுமா??
ஆடி அடங்க காலம் போதாதே..?
வம்சங்கள் தொடரும் அரச ஆட்சியை ஒத்து 
வரிசையாய் குடும்ப ஆட்சி என்று தான் முடியுமோ??
என்ன தர்மமோ என்ன நீதியோ..??
தட்டுப்பாடாய் போன தர்மம் உலகில் 
கொட்டுப்பட்டு கிடக்கின்றது அதர்மமாய்...!!

அரசி நிலவன்


ஆழித்தாயவள் ஆடிய ஊழித்தாண்டவம் ..!!!


அன்றொரு நாள் அதிகாலை
அடங்கியிருந்த கடல்
ஆர்ப்பரித்துக்கொண்டது....!!

அறியாத ஆழிப் பேரலையினை
அண்ணாந்து நோக்கிய அருமந்த உயிர்கள்
அள்ளிக்கொள்ளப்பட்டனர்...!!


ஆழித்தாயவள் ஆடிய
ஊழித்தாண்டவத்தினால் - அரை
நாழி யில் அரை நூறாயிரம் உறவுகள்
நிரை நிரையாய் மாண்டனர்....!!

கரை தாண்டி வந்து இழுத்து உன்
இரை ஆக்கிப்போன தண்ணீரே...!
தரை யில் நாம் சிந்தும் கண்ணீர்
ஆழியின் ஆழத்தினை தாண்டி
வரை யறை இன்றி நிரம்பி வழிகின்றதே..!


கடலே அலையே நீ மறந்திருப்பாய்...!!
உடலே உயிரே நீங்கள் மறைந்திருப்பீர்கள்..!!
சுவடுகளும் சுழிக்குள் உறங்கியிருக்கும்..!!

சுமைகளாய் உங்களின் அந்த  இறுதித்தருணங்கள்
அமைந்த அந்த நாளும் நொடிப்பொழுதும் - எம்மை
ஊமை ஆக்கி நகருகின்றன....!
இமை திறந்து பெருகும் விழிநீர்
இன்னொரு ஆழிப்பேரலையாய்
ஒவ்வொரு ஆண்டும் எமக்குள்
அடித்து ஓய்கின்றது....!!


கரம் கூப்பி தொழுது வாழ
வரம்  கொடுத்த தாயவளின்
மடி சேர்ந்திட்ட அனைத்து உறவுகளையும்
அடி பணிந்து அஞ்சலி செலுத்தி நினைவு கூறுவோம்...!!!


அரசி நிலவன்


Wednesday, 25 December 2013

பார்வை..!!!

பச்சைப் பசேல் என்கின்றார்கள்..!
பளிங்கு போல என்கின்றார்கள்..!
பள பளப்பு என்கின்றார்கள்..!

பஞ்ச வர்ணக்கிளி,  பொன் மயில்
பஞ்சு முயல் , பறக்கும் பட்டாம் பூச்சி
துள்ளும் மான்கள் , துரத்தும் சிங்கம்
வண்ண வானவில், பால் நிலா
கண் சிமிட்டும் விண் மீன்கள்
சுள்ளென சுடும் சூரியன் , மஞ்சள் வெயில்
தங்க கடற்கரை ,மலை அருவி....
இன்னும் இன்னும் எண்ணிலடங்கா
அகிலத்தாயவளின் அழகுக்காட்சிகளை
செவியுணர்ந்து கவி கேட்கின்றேன்..!
விழியுணர்ந்து ரசிக்க விடாது இறைவன்
தவிக்க விட்டு ரசிக்கின்றானே....!

விம்மி அழுத தருணங்கள் பல....
இளமைக்காலத்தில் இழந்து விட்டு
இருட்டில் வசந்தம் தேடிய நினைவுகள்...!

காலம் உருட்டிய வேகத்தில்
கோலம் கொண்ட வாழ்வில்
ஞாலம் தன்னில் அரங்கேறும்
அவலங்களை, அநியாயங்களை
அழிவுகளை ,யுத்தங்களை
கண்ணுற்று கண்ணீர் வடிப்பதிலும்,,

பாதகர்களையும் பாவிகளையும்
பாசமற்ற உறவுகளையும் ஆவி
உருக்குலைக்கும் நயவஞ்சகர்களையும்
உடன் இருந்தும் முகம் நோக்காது
செல்லும் வாய்ப்பாய் கருவில்
செதுக்கி வைத்தான் என்னை இறைவன்..!
அழுது வடிந்த பொழுதுகள் ஏளனமாய்
அராஜகம் நிறைந்து விட்ட
அகிலத்தினை பார்த்து அழுவதை காட்டிலும்
அகம் திறந்து கண் பார்வை அற்று வாழலாம்..!
 
பார்வை இருந்தும் குருடர்களாய் வாழும்
பாவியர்களை விடவும் பார்வை அற்று
பாரில் இருளில் வாழலாம்...!!!
பார்த்து சிரித்தால் தான் சிரிப்பா??
பாசத்துடன் சிரித்தால் அதல்லவோ அழகு...!!

பார்வை எடுத்து என்னை உயர வைத்தவனை
காலம் கடந்து புரிந்து கொண்டேன்....!
கோலம் கொண்ட வாழ்வின் புரிதல்களால்...

இறைவனே நன்றி உன் கருணைக்கு...
இருள் கொடுத்து ஒளி தந்தவனுக்கு நன்றிகள்...!


அரசி நிலவன்

சத்தியம்...!!!

சத்தியம் சவப்பெட்டியில்
சலனமின்றி உறங்குகின்றது...!!

சர்வமும் அடங்கி அடிமையாய் போனது..!
சடுதியாய் உதை பட்டு வதை பட்டு
சத்தியம் பொய் என்னும் மணலால்
அள்ளித் தூவப்பட்டு, மூடிப்  புதைக்கப்பட்டு
உயிருடன் மறைக்கப்பட்டு காலம் கடந்தாயிற்று...!

பேழை உடைத்து மணல் விலக்கி,
கழை போல் உயர்ந்து செந்தணலாய்
பொய்யினை சுட்டு எரித்திடாதோ...?
வாழையடி வாழையாய் வந்த நம்பிக்கை
விட்டு விட்டுப் போகின்றது - செவி
தொட்டுச்செல்லும் நாளொரு அநீதிகளால்...
நட்டு வைத்திருக்கும் நம்பிக்கைத்தருவும்
பட்டுப்போகுமோ அன்றி சத்தியத்தோடு
கை கோர்த்து உறங்கிடுமோ உரமாய்...!

கட்டுப்பட்டு வாழும் மனிதர்களைக்காணோம்..!
தட்டுத்தடுமாறி சத்தியம் வாழ்ந்தாலும்
வெட்டுப்பட்டு குழிக்குள் வலுக்கட்டாயமாய்
தள்ளி விழுத்தி அடக்கம் செய்யப்படும் கொடுமை..
துள்ளி எழுந்து முடக்கிட வலுவற்று விட்டதோ?
கொள்ளி வைக்கும் கூட்டம் அதிகமாய் போனால்
சத்தியத்தின் வலு வெறும் கொலு மட்டுமே...!

மனிதம் என்னடா பெரிய மனிதம்
அரை நூறில் அவசரமாய் விரையும்
நரை விழும் வரை யறை  கொண்டோர்
கரை இல்லா சத்தியத்திற்கு புரை யாவரோ??
தரையில் நிரை நிரை யாய் அதர்மம் வளர்த்து
திரை இட்டு வாழும் துரைமாரால் சத்தியத்தினை
நிரந்தரமாய் புதைக்க முடியுமோ??

சயனிக்கும் சத்தியம் ஒரு நாள் விழிக்கும்...!
சரணாகதி அடையும் அநீதிகளால்
சர்வமும் மீட்சி அடையும்...!
சந்து பொந்துகள் எங்கும் சத்தியம்
சரளமாய் அரசாளும்...!!!

சவப்பெட்டியில் உறங்கும் சத்தியமே....!
சத்தியமாய் நீ சாகவில்லை...
சனனிப்பாய் மெருகோடு...!!!


அரசி நிலவன்





Sunday, 22 December 2013

யான் எங்கிருக்கின்றேன்...??


உறைவிடமாகிப்போன சிறையிடத்தில்
உற்றவள் உயிரை சுமந்து நற்றவம் புரிகின்றேன்...!
ஆலம் விழுதுகள் போன்று கடக்கின்ற
நொடிப்பொழுதுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன....!

வதனங்கள் வடிவிழந்ததாய் காட்சி- நீர்
வற்றிப்போன தொண்டைக்குழிக்குள் சிக்கி
வார்த்தைகள் தடுத்து வைக்கப்படுகின்றன - நா
வறண்டு போய் கூச்சல் போடுகின்றேன்...
வந்து வந்து போகின்றது காற்று மட்டுமே...

கனவுகளில் கூட
கண்மணிகளை கண்பார்த்திடலாம்
கரம் தொட்டு அணைக்கலாம் என்றால்
கண்ணயர முடியவில்லை...!!
கனவாகி போகின்றன நினைப்புக்களும்...!

மனம் இங்கு தினம் தினம்
மடிந்து கொண்டிருப்பதனை விட
மரணத்தை தொட்டு விளையாடிடலாம்...!
மரணம் தன்னும் என்னை அணைக்க
மறுக்கின்றதே....!!!

மண்ணுலகம் நீங்கி அந்தரிக்கின்றேன்
மரணிக்காமலேயே...
மடி சாய்ந்து உறங்க தேடும் என்னவளின் முகம்
மறந்து போகின்றது  அடிக்கடி...
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...?
நிலை தெரிகின்றது ஆனாலும்
நிலை மாறிக்கொண்டே இருக்கின்றது..
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...!

தாகம் எடுக்கவில்லை
பசி வாட்டவில்லை
பட்டினியாய் கிடக்கின்றேனா?
பல காலம் ஆயிற்றோ...?
நினைவுகள் இருக்கின்றன...ஆனால்
நினைத்து பார்க்க நினைவுகள்
நினைவின்றி போகின்றதே...?
யார் யாரோ வருகின்றார்கள்...
யான் எங்கிருக்கின்றேன்...??

அரசி நிலவன் 

Saturday, 21 December 2013

அன்பு...!!!

அமரனான அப்பா
அன்பளித்த 
அன்பு பரிசாகிய 
அவள் கழுத்தை 
அலங்கரித்த..
அழகு சங்கிலி 
அடகுக்கடையில் 
அமரும் போது....
அருவெருப்பாய் என் கையாலாகத்தனம் 
அடிக்கடி என்னை நெருட 
அவளை நோக்கி கண்கலங்கி
அங்குமிங்கும் வெறித்து நோக்கும் - என்
அகன்ற விழியின் நீர் துடைத்து
அப்பாவியாய் சிரித்து
அன்பாய் என்னை தட்டி கொடுத்தாள்...!!!




அரசி நிலவன் 

வலிமை...!!!


மென்மை உள்ளம்
வன்மை பெற்றது - உண்மை
தன்மை அற்றுப்போன
உயிர் காதலால்....

அடி மேல் அடியாக..,
கருங்கல் மேல் உளியாய்
வலிகளின் தொடர் செதுக்கல்களால்
வலிமை பெற்று வன்மையானது
வாழ்க்கை மட்டுமல்ல மெல்லிதயமும் தான்...

கண்ணீரால் கரைக்க முடியாது...!
கனவுகள் ஆள முடியாது...!
கன்றிப்போன கல்லிதயம்...!

கடந்து வந்த
வலி மிகு பயணத்தின்
வலிமை அனுபவம் கொடுத்த
வலிமை இதயம் தாங்கிய - என்
காதலும் வலிமையாய்....

காற்றும் மாசு படுத்திட முடியாது
காலம் பிரித்தாலும்....
காலத்தால் அழியாமல்
காதல் வலிமையாய் என்றும்...
காத்திருப்புக்களோடு.....
என்றென்றும் வலிமையாய்
காதல் வலிமையுடன்....

மெய்யால் வலிமை பெற்ற ஆண்மைக்கு
மனதால் வலிமை பெற்ற பெண்மை
வலிமை தான் என்றென்றும்....!

அரசி நிலவன்




தந்திரம்...!!!


தந்திரப்பார்வை கொண்டு நோக்கி .
மந்திரப்புன்னகை ஒன்றால் மயக்கி
எந்திரம் போல் என்னை இயக்க வைத்தவளே....!!!

சந்திர வதனம் அள்ளி வீசும் - பால்
ஒளியினை அபகரித்து என் இருளை
பகலாக்கி போகும் தந்திரம் அறிவாயோ??
சுந்தரத்தமிழ் கொஞ்சும் பைங்கிளியே....!!


சின்ன பூக்களின் தேன் உறிஞ்சிபோகும் - பட்டு
கன்னத்து குழியழகி உன்னை சினக்காது
வண்ண தேனீக்களும் உலா வரும் தந்திரம்
எண்ண எண்ண சித்தம் கலங்குகின்றதே...!

அள்ளிச்சொரியும் பனி மழையிலும் உனைக்காண
துள்ளி ஓடி வந்து கல்லாய் விறைத்து போகும் நான்
கிள்ளித்தெளித்துப்போகும் உன் பார்வையால்
உருகிப்போகும் மந்திரத்தந்திரம் என்னவோ??

இதயத்தினை துளையிட்டு  பிணைச்சல் போட்டு
சிதையாய் இழுத்துபோகும்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவளே...!!!
உதயம் கொடுத்து என்னை மீண்டும்
உயிர்ப்பித்து உலவ விடும் தந்திரம் யாதோ???


மந்திரப்புன்னகையாளே..!!
உன் இதய வெளியில் என்ன
எந்திர மருத்துவமா புரிகின்றாய்??
சந்திரனும் நாணிப்போகின்றான்...!
இந்திரனும் இடம்பெயர்ந்திட்டான்..!
எந்திரன் என்னை தந்திரமாய் ஏமாற்றி
மந்திரம் புரிய எண்ணிடாதே...!!
தந்திரமாய் நானும் உன்னை
மந்திரத்தால் மயங்க வைப்பேன்
எந்திரமாய் என் பின்னே சுழல வைப்பேன்....!


அரசி நிலவன்





Friday, 20 December 2013

காலம்...!


கடற்சூரியனின்
கரைத்தொடுகையால் 
கலைந்த கனவுகள்
கடைசி வரைக்கும் 
கூடு திரும்பவில்லை....

கண்ணீரில் முகம் கழுவி 
கழிக்கப்படும் பொழுதுகள் 
கடைசி அத்தியாயமாய் 
கடக்கும் நிகழ் காலத்தருணங்கள்..!   

கண் துடைப்பாய் மீள் குடியேற்றம்..!
காட்டிக்கொடுப்புக்களுக்கு குறைவில்லை...!

காலம் உருண்டு செல்லும் வேகத்திற்கு 
காத்திருக்க தயக்கமில்லை....!

கானகத்தில் கூட  தனித்திருக்கலாம்...
காய்ந்து சருகாய் போன உள்ளத்தோடு 
காலம் உருளத்தான் தயங்கி நிற்கின்றது...!

காவலன் கால அளவின்றி  தனித்திருக்க 
காத்திருக்க முடியுமோ...?
கால வரையறையின்றி....

காலம் இங்கு எனக்கு மட்டும் துரோகியாய்....
காத்திருப்புக்களை தவணை முறையில் 
கழித்து விடிவினை சிறிதாய் வழங்கிடாதோ....?? 



அரசி நிலவன் 




Thursday, 19 December 2013

முதுமை...!!!


இன்னோரன்ன தேவைகள் யாவும்
இருந்த இடத்திற்கு தேடி வருகின்றன..
இருந்து அளாவளாவத்தான்
இரத்த உறவுகள் என்று
இல்லை யாரும் பக்கத்தில்...

இல்லாளின் பிரிவில்
இருள் சூழ்ந்து போன அத்தியாயம்
இன்று வரை அஸ்தமனத்தில் தான்....!

இருப்பிடத்தில் - உயிருடன்
இருக்கும் வரை தன்னும்
இருக்க விடாமல் இங்கு
இட்டுச்சென்ற மகன்மார்....!

இடுப்பு வலியிலும் வேதனையிலும்
இஞ்சாருங்கோ ஆம்பிளைப்பிள்ளை
இன்பமாய் சிரித்து , பொத்தி வளர்த்த
இல்லாள் இன்று இருந்திருந்தால்
இரத்தக்கண்ணீர் வடித்திருப்பாள்....!

இருட்டிக்கொண்டு வரும் கண்கள்...
இருந்தாலும் பலன்
இல்லையே...!

இடுப்பில் தூக்கி முதுகில் ஏத்தி வளர்த்த
இளையவனின் பேரன்
இன்னும் கண்ணுக்குள்.....!
இங்கிருந்து மனக்கண்ணில் பார்த்து
இதயத்தில் தூக்கி விளையாடுகின்றேன்...!


இரத்தங்கள் என் இரத்தங்கள்
இடைவெளி அதிகமாகி எங்கோ
இடை நடுவில் விட்டு போய்விட்டனவே...!

இடையிடையே வந்து போகும் மூச்சு
இருந்தால் போல் போனாலும், எட்டிப்பார்க்க
இல்லம் வந்து கூட்டிப்போகவும்
இடம் தராதோ உள்ளம்....?

இருக்க தான் இடம் தரவில்லை...
இதயத்திலும் இல்லையா...?
இதயம் குறுகிப்போனதால்....
இடப்பற்றாக்குறை என்பது
இதயத்திலும் ஏற்பட்டிருக்கலாம்....!!!


இருந்தாலும் விசாலமான
இல்லத்தில் தான் நான்
இருக்கின்றேன்.....!!!
இங்கே இரத்த உறவுகளுக்கு மட்டும் தான்
பற்றாக்குறை....
இதயங்களுக்கு அல்ல....!



அரசி நிலவன்



Wednesday, 18 December 2013

எதிர்ப்பு...!

எண்ணிரண்டு ஆண்டாய்
எண்ணிலடங்கா துயரங்கள்...!!
எப்போதும் எதிராய் சதிராடும்

கதிராடும் விடியல்களில்
கனக்கின்ற உள்ளம் தொடங்கி
கரையும் கண்ணீரின் இரவுகள் வரை
கரடு முரடாய் எதிர்ப்புக்கள்...!!!

இயற்கையின் அரவணைப்பு
இறுதி வரை எதிர்ப்பின் பிணைப்போடு
இணைந்து தான் அணைக்கின்றது...!

இயலாமை என்னும் எதிர்ப்பினை
இயன்றவரை எதிர்கொண்டு
இழுத்துச்செல்லும் பயணம்
இடையிடையே மனிதம் என்னும்
குழிகளில் விழுந்து எழும் போதே
குப்புற விழுகின்றது இதயமும்....!!!


அரசி நிலவன் 

கலை...!!!


விலை உலகில் நிர்ணயம் பெற்று விட்ட
கலைக்கடலில் தத்தளிக்கும் சிறு எறும்பிவன்..!
இலையாகி கை கொடுக்க யாருமின்றி - தன்னாலே
சிலையாகி போனவன் - தன் வீட்டு
உலை கொதிப்பதற்காய் கலைகளை
மலையாய் குவித்து ஓரம் தள்ளி
தலை மேல் சுமை தாங்கி பயணிக்கும் மெழுகுவர்த்தி...!
நிலை இல்லாத உலகில் நிரந்தரம் பெற்று விட
மூலை முடுக்கெங்கும் அவன் இசை பரவிட
அலை போல் அலைக்கழிந்து முயல்கின்றான்...!

கலை இங்கு கருவாகி அடங்கி கிடக்கின்றது
உயிர்த்துடிப்போடு மட்டும்...!

அவ்வப்போது சரி பார்க்கப்படும் துடிப்பாய்
அவன் வாயில் மட்டும் இசைக்கப்படும் மெட்டு...!

பிரசவிக்க முடியாமல் வலியோடு திண்டாடும்
தாயினை ஒத்து உள்ளம் குமுறும் கலைஞன்...!

பாடல் வெளியீடுஒன்றிற்காய் ஒவ்வொரு நாளும்
ஒதுக்கி வந்த சேமிப்பும் அன்னையின் அவசர
வைத்தியத்திற்காக புறப்பட்டு போயிற்று......!
மீண்டும் ஒதுக்கி வருகின்றான் துவளாமல்...

கலைஞன் ஒருவன் கை சேர வேண்டும்..!
கடவுளே....!
அவனுக்கு செலவு ஏதும் வைத்திடாதே....!

அரை குறை இசையில் பணம் கொட்டி
அரை குறை ஆடை காட்டி
இசையில்லா ஓசையினை
விளம்பரப்படுத்தும் உலகில்.....

வளமின்றி தளமின்றி மறைந்திருக்கும்
கலைக்கடல்களின் ஆர்ப்பரிக்கும்
அலை ஓசை கேட்டும்....
நிலை மறந்து இருக்காமல்
இலை மறை காய்களின்
குலைகளை இனங்கண்டு சுவைப்போம்....!
கலைகளை நிலை பெறச்செய்வோம்....!


அரசி நிலவன்

 



Monday, 16 December 2013

அதிபதி...!!!


என் ஜீவனின் பதியிவன்
என் அரியாசனத்தின் அரசனிவன்...!
எனக்குள் ஒருவனாய் உதிரமாய்
என்றும் இவன் என் அதிபதியிவன்...!

துளித்துளியான பனித்துளிகள்
துள்ளி நிலம் நோக்கி விரையும்
துள்ளலாய் மனம் அள்ளி போகும்
துடிப்பான அவன் பார்வைத்துளிகள்...!

எடுப்பாய் மிடுக்காய் உதிரும் முத்துக்களாய்
தித்திப்பாய் சிந்தும் தேனாய்
கனிவாய் இனிப்பாய் வார்த்தைகள்...!


கண்ணீராய் செந்நீராய் உதிர்வாய்...!
நிலவாய் பாதியாய் தேய்கின்றாய்...!
நிலவா..!
எனக்காய் உனக்காய் நிமிர்வாய்
வழியாய் மலராய் பூத்திருப்பேன்..!

சிரிப்பாய் நிறைவாய் சுழல்வாய் - என்
கருவாய் வருவாய் மலர்வாய் பதியே...!
பிள்ளையாய் நண்பனாய் அன்னையாய்
தெய்வமாய் மிளிர்வாய் அதிபதியே..!

அரசி நிலவன்




  

Thursday, 12 December 2013

சஞ்சலம்...!!!



மழையில் நனைந்து பிய்ந்து
மக்கி போகும் கடதாசியாய்
இரவும் பகலும் கண்ணீரில் நனைந்து
இளகிய இதயம் பிய்த்தெறியப்படுகின்றது...!

ஒன்றன்பின் ஒன்றாய் அவசியமாகிப் போன
துன்பங்களின் பிரதிபலிப்பாக தினம் முளைத்து
உள்ளம் துளைத்து முள்ளாய் குத்திடும்...!

செழித்து வளரும் பயிரை உருக்குலைக்கும் புழுவாய்
செம்மை வாழ்வினை கருக்கலைக்கும் இந்த சஞ்சலம்...!

சஞ்சலப்பட்டே
சலித்தும் வலித்தும் போகும்
வாழ்க்கையில்....

விழித்திருந்து கனவு காணும் ஒரு விந்தை..!
விடியல் ஒன்று சஞ்சலம் நீங்கி
விடிந்திடுமோ....??
சஞ்சலத்தோடு ஒரு ஏக்கம்....!
எட்டாக்கனியாய் போன தூக்கம்..!

சஞ்சலத்தால் சுற்றி வளைக்கப்பட்டு
சடுதியாய் தாக்கப்பட்டு பேச்சு மூச்சின்றி
சலனமின்றி கிடக்கும் உயிராய்....

சஞ்சலமே சுதந்திரம் கொடு....!
சரண் அடைந்தும் ஒடிக்கப்பட்ட கரங்கள்...!
சற்று முன் வரை அசைவில்லை.....!


அரசி நிலவன்





லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "சஞ்சலம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.



கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/










Wednesday, 11 December 2013

கலப்படம்...!!!


மென்று விழுங்க முடியாமலும்
துப்பி போக மனமில்லாமலும் 
தவித்து கிடக்கும் உள்ளம்...!!!

நஞ்சு கலந்த பால் என்று அறிந்து 
அஞ்சி எறிந்திடும் உள்ளத்திற்கு 
வேசம் கலந்த பாசம் தெரிந்தும் 
நாசம் புரியும் உறவுகளை விட்டு 
வாசம் செய்ய தெரியாது நின்று
நித்தம் எண்ணித்துடிக்கின்றது....!!!

பொருட்களில் கலப்படம் அறிவோம்...!  
பொல்லாத மனிதங்களின் 
இதயத்திலும் கலப்படம்..! 
இரத்தத்திலும் கலப்படம்..! 
பேசும் பேச்சிலும் கலப்படம்..!
சுவாசிக்கும் மூச்சிலும் கலப்படம்..!   
காட்டும் அன்பிலும் கலப்படம்...!
காண்பிக்கும் பண்பிலும் கலப்படம்...!
மலரும் சிரிப்பிலும் கலப்படம்..!
மல்கும் கண்ணீரிலும் கலப்படம்...!
மொத்தத்தில் மனிதர்களே கலப்படம்...!

நீர் கலந்த பால் போல 
ஆழ் மனசெல்லாம் குரோதம் நிரப்பி 
மேல் கொஞ்சம் பாசம் மெழுகி 
வேசம் புரிந்து நாசம் செய்யும் 
இரு கால் நரிகள் நாட்டில் மட்டுமல்ல  
இன்று வீட்டிலும் அதிகமாய் தான் உலவுகின்றன...!   


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "கலப்படம் " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.



கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Tuesday, 10 December 2013

பொம்மை....!!!


நிறுத்தி வைத்த பொம்மையாகி
நிலையாகி போன வாழ்வு ...!
நித்தம் அசைவின்றி கடக்கும் பொழுதுகள்..!
நிறுத்திய வாழ்வில் நிம்மதியற்று
நின்று சுழலும் பொம்மையாய் நான்...!

மலரும் பொழுது எதற்காக என
மலைக்கின்ற விடியல்கள்...!
மறந்தாலும் நினைவூட்டும் நிகழ்வுகள்
இறந்தாலும்  பின் தொடரும் வலிமையாக...

சிறந்து வாழ்ந்த தருணங்களை நோக்கி மனம்
பறந்து சென்று சடுதியாய் திரும்புகின்றது - உலகமதை
துறந்து செல்ல ஏதோ ஒன்று தடுக்கின்றது...!


சாவி கொடுத்து ஆட வைக்கும் இறைவன்
பாவி படும் துன்பங்களை சலிக்காது பார்த்து
காவி உடையிலும் இரக்கமற்று சிரிக்கின்றான்..!
கூவி நான் இடும் கூக்குரல் கேட்டும்  மீண்டும்
சாவி திருகும் கொடுமைக்காரனாய் இறைவன்
தாவி ஆடும் பொம்மையாய் நான் - மலர்களை
தூவி விழுந்து கிடக்கின்றேன் அவன் காலடியில்....
ஆவியினை சீவி அரிந்து இறுதி துடிப்பு
அடங்கும் வரை ஆட வைக்கிறானாம்...!!!



அரசி நிலவன்
 


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பொம்மை " என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.



கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/