காலங்காலமாய் குடியிருந்த மண்ணில்
காணாமல் போனது வாழ்ந்த எச்சங்கள்..!
முடிந்து போன கொடூர யுத்தம் கொடுத்த வடுக்களை
முழுதாய் புதைத்து மீண்ட மண்ணில்
மீண்டும் குடியிருக்க அடுத்தவர்களிடம்
அனுமதி வேண்டி தவமாய் தவமிருப்பு...!
அறிந்து கொள்ளுங்கள் எமக்கான உரிமைதனை ...!!
மிரட்டல்கள் உருட்டல்கள் விரட்டல்கள்
மீறினால் கடத்தல்கள் என்றாகிப்போன
தேசத்தில் எமக்கான உரிமைகள் யாவும்
தேடுவாரற்று எங்கோ ஓர் மூலையில்...
தீயோடு சங்கமமாகி சரித்திரமானவர்களுக்கு
தீபம் ஏற்றிடவும் உரிமை அற்றுப்போன இனம்..!!
விதைக்கப்பட்டார்கள் மண்ணின் மேலே......
ஆறடி நிலத்திற்கும் அருகதை இல்லாத
ஆட்சியில் உரிமை காலாவதியான ஒரு பண்டம்..!!!
சாட்சிகள் இருந்தும் தண்டனை வழங்கிட முடியாது..!
குற்றம் இழைக்காமல் வழக்கின்றி ஆயுள் தண்டனை..!
உள்ளதை உள்ளபடி எழுதிட்டால் ஊடகம் நொறுக்கப்படும்...!
உயர்த்து குரல் எழுப்பினால் குரல்வளை நசிக்கப்படும்..!
உரிமைகள் புதைக்கப்பட்டு புற்களும் முளைத்து நசுக்கப்பட்டாயிற்று
ஊடகவியலாளர் ஊமையாய் தான் இருக்க வேண்டுமாம்...!
ஊடகக்கற்கைக்கு நாளை தடை விதித்தாலும் வியப்பில்லை..!
ஊரின் உரிமைகளின் பெருமைகள் பற்றி அளந்திட முடியாது..!!!
அடையாள அட்டை இல்லாது போனால்
அடையாளமின்றி தொலைந்து போகும் உரிமை..!
புனர்வாழ்வும் புலனாய்வும்
புதியதல்ல நமக்கு - இன்று
புது வாழ்வு என்னும் பெயரில்
புண் பட்டு போகின்றது உள்ளம்..!
உரிமைகளை கேட்டு அன்று தொடங்கப்பட்டது..!
உரிமைகளோடு சேர்த்து பின் தொலைக்கப்பட்டது..!
உண்ணும் ஒரு பிடி சோறும் கலக்கத்துடன் தான்
உள்ளே இறங்கி செல்கின்றது.....!!
உணர்ந்து கொள்ளுங்கள் எமக்கான உரிமை எதுவென்று..
உல்லாசித்து உறங்கும் புள்ளிகள்
உண்மை அறிந்திருந்தும்
உணர்வற்று இருப்பதும் ஒருவித
உரிமைதானோ ???
அரசி நிலவன்