தங்கத்தலைவனின் அருமையும் பெருமையும் யாருக்கு தெரிகின்றதோ இல்லையோ நிச்சயம் புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். அதுவும் "அகதி" என்னும் பெயரை மட்டும் தாங்கி வாழ்கின்றவர்களை விட அந்தப்பதத்தின் அத்தாட்சியாக வலிகளை தாங்கி ஒவ்வொரு கணமும் வெந்து சாகின்ற எங்களைப் போன்ற ஏதிலிகளுக்கு முகவரி மட்டும் அல்ல அடையாளத்தை அள்ளிக்கொடுத்த எம் குலவிளக்கின் வெளிச்சம் குன்றின் மேல் தீபமாய் இறுதி வரை ஒளி வீசிக்கொண்டே தான் இருக்கும்.
ஓரடி நிலம் தன்னும் தமிழனுக்கு சொந்தமாய் இல்லை. ஆனால் இந்த அந்நிய தேசம் எங்கும் அலைந்து திரிகின்ற நாதியற்ற இனமாய் இருந்தாலும், அந்நியன் எம்மை எட்டி விழுத்தி போய் விட முடியுமோ? தமிழன் என்றும், இவர்களுக்கு என்று ஒரு தன்னிகரில்லா தலைவன் இருக்கின்றான் என்றும் உலகம் எங்கும் பறை சாற்றி சென்ற பெருந்தகை அவர்! இருக்கின்றாரோ இல்லையோ அவர் நாமம் உலகம் வாழும் வரை வாழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
தமிழர்கள் நாம் அவரை கொண்டாடுவதில் நியாயம் இருக்கின்றது. அவரது புகைப்படத்தை விதம் விதமாய் மெருகேற்றி அலைபேசியிலும் கணினியிலும் சேமித்து அழகு பார்த்து பூரிப்படைவதும் பெரிய விடயம் அல்லவே. ஏனென்றால் அவர் எம் உறவானவர் , தெய்வம், தாய் என்று அடுக்கி கொண்டே செல்லலாம்.
ஆனால், முன் பின் தெரியாதா ஒரு வேற்று இனத்தவன், வேற்று மொழிக்காரன் இலங்கை என்றாலே எங்கே இருக்கும் என்று அறியாத பெரும்பான்மை மக்கள் வாழும் தாய்லாந்து தேசத்தில் ஒருவர் எமது குலவிளக்கின் புகைப்படங்களை வைத்து அழகு பார்த்து அவர் பெருமை பேசி தமிழன் வரலாறும் வீரமும் பேசுவது என்னை பொறுத்த வரை பெருமையான விடயம் மட்டுமல்ல பெரிய விடயமும் கூட.
ஒரு மேற்கத்தைய நாட்டில் எம்மவர்களின் பிரச்சார நடவடிக்கைகள் மாவீரர் தின நினைவு தினங்கள் மூலமாக எமது வரலாற்றை வேற்றினத்தவர்கள் அறிந்திட முடியும். இவை ஏதுமற்ற தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் ஒளிந்து வாழ்கின்ற ஒரு தேசத்தில், தன்னிச்சையாக ஒரு நாட்டின் யுத்தத்தினை செய்திகளின் பிரகாரம் அறிந்து அங்கு வாழ்ந்த சிறுபான்மை இனத்தின் மேல் ஒரு அன்பும் அந்த இனத்தின் தலைவன் மீது ஒரு மரியாதை மற்றும் பக்தி ஏற்படுகின்றது என்றால் அது எம் தேசத்தின் மாண்பு மிகு தலைவரின் மாபெரும் வெற்றியே. கடந்து வந்த போராட்ட வாழ்வும், போரும், வரலாறும் எம் தமிழினத்தின் பரம்பரையால் எந்தளவிற்கு பாதுகாக்கப்பட்டு கடந்து செல்லுமோ அதைப்போன்றே வேற்று இன மக்களினால் நிச்சயம் அந்த வரலாறும் வீரமும் அவர்களின் சந்ததிக்கும் கடத்தப்படும்.
தென் கிழக்காசிய நாடுகளில் எம் இன மக்களின் பரம்பல் காணப்பட்டாலும் "அகதி" என்ற ஒரு கேவலமான பார்வையில் அவர்கள் நோக்கப்படுவதும் அவர்கள் ஒரு சட்ட விரோத குடியேறிகளாக குற்றம் சாட்டப்படுவதுமே பிரதான விடயமாகும். அதுவும் தாய்லாந்தை பொறுத்த வரையில் அகதி என்பவர்களை தம் தேசத்தின் அழுக்கான மக்களை போன்று பார்க்கின்ற மக்களே இங்கு அதிகம். வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து அகதி என்ற பெயரில் இங்கு இலட்சக்கணக்கில் மக்கள் குடியேறி இந்த நாட்டின் அரசுக்கு ஒரு சவாலாக இருப்பதே இங்கு அகதிகள் வெறுக்கப்படுவதற்கான காரணம். அகதி என்பவன் இங்கு அங்கீகரிக்கப்படாதவன் ஆவான். எம்மை அடையாளப்படுத்த நாம் ஐ நாவின் அகதிப்பத்திரத்தை எடுத்து நீட்டி அவமானப்படுவதைக்காட்டிலும் வெறுமனே செல்லலாம். பிரதானமாக குடிவரவுத்துறைக்கு அந்த பத்திரம் காண்பிக்கப்பட்டால் நிச்சயம் தடுப்பு மையம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமே ஏற்படும். அந்தளவிற்கு அகதி என்றால் இங்கு வெறுப்பு கொட்டிக்கிடக்கின்றது.
இந்த சூழ்நிலை கொண்ட தேசத்தில் கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளாக கடந்து வந்த பயணத்தில் ஒருபோதும் சந்திக்காத எதிர்பார்க்காத விடயம் ஒன்று அன்று இடம்பெற்றது
ஆம்...
இந்த தேசத்தின் நகர்ப்புறத்தில் இருந்து அதிக தூரத்தில் உள்ள காஞ்சனாபுரி என்னும் இடத்தில் உள்ள பெருமளவான தமிழர்கள் சமாதியான மரண ரயில் பாதை உள்ள அதே காஞ்சனாபுரியில் , இன்றும் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள காஞ்சனாபுரி புறநகரப்பகுதியில் பிஞ்சுகளின் கரம் பற்றி தனிமையில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த பத்து நிமிட நடைப்பயணத்தில் மிகவும் வேதனைப்பட்டுக்கொண்டு வந்தேன். என்னை பற்றியல்ல எனது வலிகளை பற்றி அல்ல.
எங்கோ பிறந்த நான் இல்லை நான் மட்டுமல்ல என்னை போல எத்தனை எத்தனை உறவுகள் உறவுகளை இழந்து உடமைகளை இழந்து சொந்த மண்ணை விட்டு நீங்கி எமக்கு தொடர்பே இல்லாத இந்த வேற்று மொழி தேசத்தின் ஒரு புறம்போக்கு வீதியில் அலைந்து திரிகின்றோம். எம்மை இங்கு அடையாளப்படுத்திட முடியுமோ? இலங்கை என்றாலே பலருக்கு விளங்குவதில்லை இதில் நாங்கள் தமிழர் என்றால் விளங்கிடுமா? ஏன் இப்படியான ஒரு தேசத்தில் அலைகின்றோம் என்று உள்ளிருந்த சொந்த வலிகளுடன் இனத்தின் மீதான வலியும் சேர்ந்து நெஞ்சடைத்துப் போனது.
ஆரவாரமற்ற நெடுஞ்சாலை ஓரம்
ஆளரவமற்ற அந்தி மாலைப்பொழுது
ஆட்காட்டி விரல்களை இறுகப்பற்றிய பிஞ்சுகள்
ஆங்கோர் தேசத்தின் மொழியறியா புறநகரத்தின்
அகன்று விரிந்த வெளியில் நடைப்பயணம்..!
வேகத்தை முந்தி செல்லும் எண்ணங்கள்
எந்தன் மண்ணின் வாசம் மறந்து போனது
மூச்சிலும் பேச்சிலும் தான் தமிழ் வாழுது
தமிழ் என்று அடையாளப்படுத்திடத்தன்னும்
முடியவில்லை
அகதி என்ற அடையாளம் தான்
அடைகாக்கின்றது சில இடங்களில்...
அரவணைக்கும் ஐ.நா கடவுளையும்
விஞ்சுகின்றது....!
அஞ்சி ஒடுங்கி நுழைகின்ற மருத்துவமனை வளாகம்
அங்கே கண்கள் தேடுவது கொண்டவனை அல்ல...
எங்கே குடிவரவுத்துறை பணியில் நிற்கின்றதோ...?
இலங்கை படைக்கு கூட அஞ்சியதில்லை இவ்வாறு...
இதயம் இரட்டிப்பாக செயலாற்றுவது தெரிகின்றது...!
கடந்து சென்ற நோயாளிகள் படுக்கைகள் நினைவில்லை
கரை புரண்டு ஓடுகின்ற வெள்ளம் போல அசுர வேகம்
கடலில் சங்கமித்து கண்ணீரோடு நின்றது....!
கரம் பிடித்து கண்கள் பேசும் போது
கதவு திறந்த அதிகாரி கண்டு சலனமற்று நின்றேன்.
எல்லையில்லா எல்லையில் நிற்கும் போது
எந்த எல்லையும் என்னை வரையறுக்க போவதில்லை...!
நுழைந்தவர் புன்னகைத்தார். புன்னகை என்னிடம் மருந்திற்கும் இருந்திருக்கவில்லை. யார் நீங்கள் எப்போ வந்தீர்கள் என்ற அடிப்படை விசாரணை தாண்டி தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார். உரையாடல் தொடர்ந்தது..
அகதி என்று அறிந்திருந்தும், இலங்கையா? வினவிய
அதிகாரியிடம் தலையசைத்து பதில் கொடுத்தேன்.
எனக்கும் தெரியும் அங்கே யுத்தம் நடைபெற்றது
நீங்கள் தமிழர்களா???
உண்மையில் ஆச்சரியம் தான்.....
இந்த தேசத்தில் இப்படி ஒரு கேள்வி???
அதற்கும் தலையசைத்தேன்....!
முகபாவனையில் அனுதாபம் தெரிவித்தார்....!
என்ன நினைத்தாரோ தனது இருப்பிடத்தில் இருந்த
மடிக்கணினி எடுத்து வந்தார்
முள்ளி வாய்க்கால் இறுதி யுத்த வடுக்கள் கொண்ட புகைப்படங்களை
இதயம் கனக்கும் நேரத்தில் எடுத்து காண்பித்து கொண்டே இருந்தார். இறுதியாய் ஒரு புகைப்படம் "பிரசிடென்ட்" என்று கூறி
பெரிதாக்கி வைத்தார்....!
இவர்களிடம் பிரசிடென்ட் என்று மகிந்தவை தானே எதிர்பார்க்க முடியும்..
அரைகுறையாய் நிமிர்ந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி...
தேசியத்தலைவர் மற்றும் குடும்பத்தினர் உள்ள புகைப்படம்...!
கிரேட் ப்ரெசிடென்ட் என்றார். பேச்சு எனக்கு வரவில்லை கண்ணீரை தவிர...
இழந்து நிற்கின்ற எமது மரியாதை, நாம் தாங்கி நிற்கின்ற அகதி என்ற அடையாளத்தில்
இந்த அங்கீகாரமான ஒரு அடையாளம் கண்ணீராய் வெளிப்பட்டுப் பிரதிபலிப்பினை காட்டியது.
உடல் அசைவற்று கிடந்த உயிரானவன் கண்களும் கண்ணீரில் நிரம்பி இருக்க பேச்சிழந்து நின்றோம்.
இருந்தாலும் உணர்வுகளை அடக்கி நின்ற எம்மிடம் மீண்டும் அந்த அதிகாரி பாலச்சந்திரனை காண்பித்து தன் கவலைகளை சைகையினால் வெளிப்படுத்தினார். இன்னும் பல சனல் நான்கின் போர்க்குற்ற ஆதாரங்களை காண்பித்து எம்மினத்தின் துயருக்காக தன் ஆதங்கங்களை வெளியிட்டார்.
இப்படி ஒரு இனம் அழிக்கப்பட்டது. இன்னும் எஞ்சி இருக்கின்றது. சுதந்திரத்திற்காக போராடுகின்றது. என்றெல்லாம் இந்த அதிகாரி போன்ற வேற்றின மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக இருந்த அந்த உன்னத தெய்வத்தின் புகைப்படங்கள் தொடர்பே இல்லாத ஒரு "தாய்" இன "பெளத்த" மத குடிவரவு அதிகாரியின் மடிக்கணினியில் இருப்பது உண்மையில் ஒரு அதிர்ச்சி தான். அது வெறும் மடிக்கணினியில் மட்டுமல்ல அந்த அதிகாரியின் உள்ளத்திலும் நிரம்பி இருக்கின்றது என்பதை அவரது பேச்சில் இருந்தே அறிந்து கொண்டேன்.
எந்த ஒரு தலைவனால் தன்னையும் தன் இலட்சியங்களையும் தன் இன மக்களை தவிர்த்து வேற்றின மக்களாலும் நேசிக்கப்பட முடியுமோ அவன் ஒரு மாபெரும் தலைவன் ஆகி விடுகின்றான். அவன் போராடிய போராட்டம் மெளனித்து நின்றாலும் அது மாபெரும் வெற்றியை அவனுக்கு கொடுத்ததாய் தான் பறை சாற்றி நிற்கும். இவற்றை நான் கூறித்தான் அறிய வேண்டும் என்றில்லை. என் நேரடி அனுபவத்தில் எனக்குள் இதயம் உதிர்த்தவை. வெறும் பதங்கள் அல்ல. உணர்வுகளால் பிரசவிக்கப்பட்ட உயிர் எழுத்துக்களாய் அவரின் நாமத்திற்கு அர்ச்சிக்கப்படுகின்றவை.
நிலைத்து நின்று வாழ்கின்ற உன்னத தலைவனின் நாமம் என்றும் அழிந்திட போவதில்லை. தன்னிகரில்லா தலைவர் இவர், உலகில் இல்லாத கடவுளுக்கு மேலானவர்.
ஒரு சொற்ப நேர இடைவெளியில் "அகதி" அடைமொழிக்குள் அடங்கி இருந்த எம்மை தமிழன் என்று விளித்து அடையாளப்படுத்திய அந்த அதிகாரி மேல் ஒரு மதிப்பு ஏற்பட்டாலும், ஒப்பில்லாத் தலைவனை நினைத்து உள்ளம் பூரித்து பெருமிதமும் மகிழ்வும் அடைந்தேன்.
அந்நிய தேசத்தில்
அரவணைத்துக்கொண்ட
தங்கத்தாய் இவன்..!
அருகில் இல்லை.
உருவில் இல்லை.
நிழலாய் இருந்து
நிழல் கொடுக்கின்ற
ஒப்பற்ற பாதுகாவலன்..!
பார்போற்றும் வேந்தன்
மாண்பு மிகு மாவீரன்
உயிரிலும் மேலான கடவுள்
உன்னதமான தலைவன்
உலகம் எங்கும் உயிர்ப்புடன்
உலவுகின்ற இவன் நாமத்தால்
உயிர் வாழ்வான் ஆண்டாண்டு காலம்...!!
தமிழில் பதங்கள் போதாது உங்கள் புகழ் பாட....
தகுதி உண்டோ எமக்கு உங்கள் நாமம் கூற....
தலை வணங்கி நிற்கின்றோம்
தங்கத்தலைவனான அண்ணா
தரணியில் எம்மை
தலை நிமிர வைத்தவரே....!
அறுபதாம் அகவையில்
அடி வைக்கும் உங்கள் நாமம்
அந்தம் வரை வாழும் என்று
அறுதியிட்டு கூறி
வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றோம்...!!!
இது பலருக்கு அதிர்ச்சியை கொடுக்கலாம் சிலருக்கு ப்பூ இதுதானா என்றும் தோன்றலாம். ஆனால் இது எத்தகைய உணர்வு எத்தைகைய ஒரு பெருமை என்பது இருக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே விளங்குகின்ற அனுபவம்.
அன்றைய தினத்தில் உடனேயே இதனை பகிர வேண்டும் என்று துடித்தாலும் இன்றைய நாளில் அவரின் புகழ் பதிந்தால் சிறப்பு என்று காத்திருந்தேன்.