Search This Blog

Tuesday, 9 April 2013

அப்பனை அறிந்திட நச்சரிப்பேன் என்ற உள்நோக்கமா??


கை கால் உதைத்து மகிழ்ந்தேன் - அன்னை 
கை தொடுகைக்காக காத்திருந்தேன்..! 
கை தொட்டாள்  என் கழுத்தை நெரிக்க
கை  கழுவி  என்னை  ஒற்றையில்  
கை விட்டு போனாள்  வாய்க்காலில்...! 
கை நழுவியது கனவான என் நனவு,,,,!!!
  
அன்னையின் உடற்சூட்டின் கத கதப்பில் 
அரவணைப்போடு அயர  வேண்டிய நான்
அகால வேளையில் விறைக்க விறைக்க  
அனாதையாய் உணர்வற்று கிடக்கின்றேன்...!!!



முலைப்பாலை உறிஞ்ச வேண்டிய நான்
முக்குளித்து மூச்சை உறிஞ்சுகின்றேன் 
முன் பின்  அறியா  சாக்கடையில்...!!!
முந்நூறு நாட்கள் சுமந்தவள்  என்னை 
முதல் நாளே நசுக்கி எறிய தெரியாதவளா - இல்லை 
முழுதாய் வடிவம் கொடுத்து கொல்ல
முடிவு செய்து காத்திருந்தாளா?? 

கால நேரத்துக்கு  ஊன் கொடுத்தும்
காலால் உனை  உதைத்த எனை வையாதும்
காண்பித்தாய் உன் அன்பினை என் முகம் காணாது...
காட்டி விட்டாய் முகம் கண்டு உன் கோர முகத்தினை..

அன்னையே....!
அருமந்த பிஞ்சு என் மேல் என்ன வன்மம் உனக்கு???
அடைக்கலம் கொடுத்து உயிர்ப்பித்தாய் நீயே...!!!
அடித்து நெரித்து கொன்றும்  போட்டாய் நீயே....!!!
அவ்வப்போது எட்டி உதைத்ததிற்கான பழிவாங்கலாஅல்லது 
அப்பனை அறிந்திட நச்சரிப்பேன் என்ற உள்நோக்கமா??

அம்மா என்பதற்கு மறுபக்கமா நீ..??
அன்னையர்களுக்கு ஒரு அசிங்கமா நீ..??
அடிக்கடி உயிர்ப்பையினை நிரப்பி 
அருமை உயிர்களை துடி துடிக்க 
அநியாயமாய் கொன்றிடாதே...!!!
அகற்றிவிடு உன் கர்ப்பப்பையினை 
அது உனக்கு வேண்டாத ஒன்று...!!! 

உன்னைப்போல் உள்ளம் கொண்டோர் உள்ள 
உலகில் என்னை  உயிரோடு விட்டாலும்
உயிரற்று போவேன் உள்ளத்தால் ஒரு நாள் 
உனக்கு நன்றிகள் கோடி இந்த கொடிய 
உலகத்திடம் இருந்து எனை காப்பாற்றியதற்கு....


அன்புடன் 
அம்மா என்று  அழைக்க வேண்டியவளின் கையால் 
அடிபட்டு மரணம் வாங்கி செல்லும் சின்னஞ்சிறு சிசு ஒன்று