Search This Blog

Monday 13 October 2014

கொள்கை....!!!

முற்றாகவே உயிர் ஊசலாடிய காலணிக்கு
முரண்பட்டு உயிரூட்டிக் கொண்டு இருந்தான்

முழங்கையுடன் விடுகை பெற்ற இடது கை
முழு வீச்சோடு செயற்படும் வலது கை
முண்டு கொடுத்த இடது கையின் துணையில்
முழு உயிர் பெற்றது குற்றுயிரான காலணி

சன்னம் பட்ட உடலை போல இவன்
காலடியில் நாலைந்து காலணிகள்
அநாதரவாய் கிடந்தன....!

காலடி என்று என்னத்தை சொல்ல
கால்கள் விடைபெற்று சென்று விட்டன
இடுப்பிற்கு கீழே உருவமற்ற கால்கள்
இழந்தவன் சுறு சுறுப்பாய் இழப்பை
ஈடு செய்தபடி இயங்கி கொண்டே இருந்தான்...

வீதியின் மருங்கில் ஒரு ஓரமாய்
வீற்றிருந்தவனுக்கு எதிரே அம்மா தாயே
இருவர் கைகளில் பேணிகள் சில்லறைகளில்
நிரம்பி வழிந்தது....

நன்கு கைகள் நான்கு கால்கள்
நலமோடு தான் இயங்கி கொண்டிருந்தன.

இல்லாத கால்களை காட்சிப்பொருளாக்கி
இரந்து வாங்கிட முடியும் சில்லறைகளை
இயங்க முடியாதவன் உழைப்பில் வீச்சாக
இயங்கி கொண்டு இருக்கின்றான்....!
         
உழைத்து வாழ வேண்டும் என்ற
உயர்ந்த கொள்கை கொண்டவன்
உயர்  கொள்கை ஒன்றிற்காக அதன்
இறுதி அத்தியாயத்தில் அங்கங்களை
இழந்து போன தியாக வீரன்...!

இறுதி வரை களமாடி இரத்தம் சிந்தி
இன்னல்களை வாங்கி நின்றவனுக்கு
இழந்த அங்கங்கள் விடுதலை பெற்று கொடுத்தது
ஒளி இழந்த வாழ்வின் விடியலுக்காக
ஒற்றை கரம் தாங்கி உழைக்கின்றான்

வீரப்பயணத்தில் கரம் பற்றிய கருவிகள்
வீழ்ந்து போன துக்கம் நெஞ்சின் ஓரமாய் உறங்க
செருப்பாணியும் நூலும் தொட்டு சலனமற்று
செதுக்குகின்றான் வாழ்க்கை என்னும் பயணத்தை
செம்மையான உழைப்பு என்னும் கொள்கை கொண்டு .

கொள்கைகள் பேசி தேசியம் பேசி பிதற்றி
கொள்ளையடிக்கும் கூட்டத்தினரை வென்று
கொள்கை கொண்டு வாழ்ந்து காட்டும்
கொடையாளர்கள் இன்னும் எம்மில் உண்டு





Wednesday 1 October 2014

இரவு.....!

நினைவுகள் உலாப்போகும்
நிலாவின் ஒளிர்வில் இன்னும்
நிலைத்து நிற்கும் இரவுகள்....!

கடந்தவை நடந்தவை
நின்றவை நிற்பவை
சுழன்றடித்து சூறாவளியாய்
சுமையாகும் இரவுகள்....!

கனவும் இரவும் பிரிக்க முடியாதவை
கண்டவர்கள் உரைக்க கேட்டேன்...!
கனவோ நனவோ பொக்கிசமாய்
கண்ணுக்கு தெரியாத நட்பு இவள்...!

கண்ணுறக்கம் இல்லாத இரவுகளில்
கனவுகள் வருகை தருவதில்லை...!
கண்ணீரோடு கனத்த இதயம்
கரைகின்றது.....!

உடைந்த நெஞ்சத்தை தாலாட்டி
உறவான உன்னத நட்பு இவள்...!

இவளோடு  தினம் நான்  பேசி ஆறுதலடைவேன்
இதயத்தை மெல்ல அரவணைக்கின்ற
இனியவள் இவள்..!

இந்த உலகமே அயர்ந்தாலும்
இணைப்பாய் நாம் இருவரும்
இனிப்பாய் பேசிக்கொண்டே இருப்போம்....!
இந்த உலகம் விழிக்கும் போது
இதயம் கனக்க கண்ணீரோடு பிரிந்து செல்வாள்..!
இனிமையான எந்தன் தோழி....!

இரவுக்கு நான் தோழி  எனக்கு
இரவு தோழி...!
  

Thursday 18 September 2014

பயணம்....!!!



பாதி வரை நடந்து வந்தும் ஓய்வில்லை...
வாழ்வினை கடந்து முடிய  இயலவில்லை....

ஓய்வில்லை ஓட்டத்திற்கு
ஓயவில்லை  பயணம்....!

திசைமாறிய  பயணம் ஒன்றால்
திக்குத்தெரியாமல் போன வாழ்க்கை....!

நழுவ விட்ட பயணம் ஒன்றால்
நடு வழியில் பிரிந்து நிற்கும் உறவுகள்....!

பயணங்கள் முடிவதில்லை - எமக்கு
பயணமே தொடங்கவில்லை இன்னும்....

தொடங்காத பயணத்தில் சிக்கி நெரிபட்டு
மூச்சு திணறி மூர்ச்சையாகி போயாச்சு....!

வாழ்க்கை என்னும் பயணத்தில் பயணிக்கவென்றே
வரிசையாகி நிற்கின்றோம்...

காலங்கள் பயணிக்கின்றன
வரிசைகள் நகரவில்லை....!

கால்கள் பயணித்த தூரம் அளந்தால்
காலம் யாவும் எங்கள் காலடியில் தான்

உள்ளம் பயணிக்கும் பயணம் ஒன்றே....!
உண்மை என்பேன்  மனதை வென்றே....!

உருக்குலைந்து போன நெஞ்சத்தின்
உக்கி மண்ணாய் போன நம்பிக்கையில்
உலகம் பயணிக்கின்றது பரிகசித்தபடி...

உருண்டு செல்லும் உலகின் பயணத்தில்
உருளாமல் நகராமல் எனது பயணம் மட்டும்
உடும்புப்பிடியாய் பற்றி நிற்கும் கோலம் என்ன....?
உணர்வற்றுப்போய் அசையாமல் காலம் நிற்பதென்ன...?

கடந்து விரையும் காலத்தின் பயணத்திலும்
அடித்து செல்லும் அலையின் பயணத்திலும்
முடித்து செல்லும் வாழ்வின் பயணத்திலும்
துடித்து விரையும் மரணத்தின் பயணத்திலும்....

படித்து கொண்டேன் கேட்டு அறிந்து கொண்டேன்
பயணங்கள் முடிவதில்லை மட்டுமல்ல
பயணங்கள் தொடங்கிடாமலும்
பயணங்கள் முடிவதில்லையும் என


வறுமை....!!!


படர்ந்து கிடக்கும் வானத்தை அண்ணாந்தாள்
பரவிக்கிடந்த மேகக்கூட்டங்கள் எங்கே?
இவள் நிலை எண்ணி எங்கோ ஒளிந்தனவோ...?

சுட்டெரிக்கும் சூரியனின் வெம்மை தாங்கிடாமல் 
முன்னிரவின்  பால் நிலவில் குளிக்க காத்திருந்தாள்...! 

பசியும் களைப்பும் பறந்தோடிடும்
பகலாகி போகும் அந்த குடிசையும் 

பரந்த வானம்  இங்கே வெறுமை கொண்டு   
பட்டினி போடுகின்றது அவள் வறுமை போன்று 

வறுமையால் சுருங்கிய உண்டி 
வெறுமையால் தவித்து பழக்கமாயிற்று....! 

நீர் நிரம்பிய வயிறு
நீண்டு செல்லும் இரவின் பயணத்தில்
நின்று தாங்கிடுமோ?

பால்நிலவின் ஒளியை பருகிட காத்திருந்தாள் 
பார் மூடிய இருளிளில் வானம் விழி முட்டி 
ஓவென்று அழுது கொண்டே இருக்கின்றது
ஓலமிட்ட மேகங்கள்  
ஒன்றோடொன்று கட்டியணைத்து
ஒப்பாரி வைக்கின்றது...! 

பட்டினி கிடக்கும் அவளின் 
பரிதவிப்பை எண்ணி அழுது வடிக்கின்றன...!

பாவி இவள் என்று பாவம் பார்த்து கதறுகின்றன.
பாவி மழையே உன் கண்ணீரில் குடிசை மிதக்கும் 
பரிதாபம் அறியாமல் யாருக்காய் அழுது தீர்க்கின்றாய் 
பதறி எழுந்து நீரில் விறைக்கும் வெறுமை கொண்டவளை 
பாழாய்ப்போன இயற்கையும் வறுமைதனை உணர்த்துகின்ற கொடுமை....!

வானத்தின் கண்ணீரோடு அங்கே அவள் கண்ணீரும் சேர்ந்து  
நீர்மட்டம் உயரந்தது  
வெறுமையும் கருமையும் கொண்ட இரவின் நீட்சி 
வறுமையின் சாட்சிகளாகி வானம் வரைக்கும் 
உரத்து கூ றியது....!

ஏனோ உலகம் இன்னும் உணரவில்லை
அமைதியாக தூங்குகின்றது....!
சிறுமை குணம் கொண்டதால் 
வறுமை பெற்று வரும் இன்றைய உலகம்...!

அருமை விளங்கிடாத  
எருமை  மானிடம் சிந்தி சிதறும் பருக்கையின்  
பெருமை உணரந்திடும் இந்த 
வெறுமை கொண்ட உண்டிகள் மட்டுமே...!



  

Monday 8 September 2014

மனமாற்றம்


உனக்கும் எனக்குமான இடைவெளி ஆயிரம் மைல்கற்களை தாண்டி நிற்கின்றது.....!
உள்ளங்கள் அணுக்களின் பிணைப்பை வென்ற இணைப்பில் இணைந்திருகின்றது....!

உணர்ந்து கொண்டும் ஏன் அடம்பிடிக்கின்றாய்...!
உயிர் வதை பெற்றிட ஒற்றைக்காலில் நிற்கின்றாய்..!

நம்பிக்கைகள் உன்னை நட்டாற்றில் கை விட்டு 
சென்றுவிட்டதாக கலங்கித் தவிக்கின்றாய்...!

உன்னை மூடியிருந்த கறை மெல்ல மெல்ல நீங்கிப்போவதும்,
உன் மேல் கொண்ட தவறான புரிதல்கள்,
உன்னைப்பற்றிய வதந்திகள் பறந்தடித்து ஓடுவதும் 
உந்தன் விடியலுக்கான அறிகுறி என்பதை 
நீ அறியாமல் இருப்பதேனோ??

உருக்குலைந்த உந்தன் உருவத்திற்குள் ஒரு 
உன்னதமான உள்ளம் உண்டென்பதை 
உலகம் மெல்ல மெல்ல அறிந்து கொண்டு வருகின்றது என்பதை அறியாயோ....!

உனக்கே உனக்காய் உயிர் கொண்ட உறவுகளாய் நாம் இருக்க
உயிர் பறிக்கும் களம் நாடி செல்ல ஏன் துடிக்கின்றாய் உயிரே??

உயிரும் உடலுமாய் போனவனே 
உன்னை தடுப்பதில் காட்டும் வேகத்தின் காரணம் அறியாயோ???
முண்டியடித்து உயிர்ப்பலி ஆகிடத் துடிப்பது நியாயமோ??

போராட்டங்களும் எதிர்நீச்சலும் பொருளற்று போக விடாதே...!
காத்திருப்புக்களும் கண்ணீரும் கலைந்து போக விடாதே...!

முழுவதுமாய் தோற்று விடுவேன்....!
முடித்து செல்லாதே இடைநடுவில்.......

பாதை தவறி நாம் பயணிக்கவில்லை....
பாதைகள் தடுக்கப்பட்டு
பயணம் இடைநிறுத்தப்பட்டு
பரிதவித்து நின்று போராடுகின்றோம்...!

நேர்மைக்கும் சட்டத்திற்கும் கிடைத்த சன்மானங்கள்
எங்கள் விழிகளில் கண்ணீராய் வலிகளில் உதிரங்களாய்
நிறைந்து போய் கிடக்கின்றது....!

அவமானங்களும் தூற்றல்களும் புறந்தள்ளுகைகளும்
மலிந்து கிடக்கின்றது மனங்களில் ரணங்களாக....

மறந்து சென்றிடாதே
மனதை வென்று இங்கே பொறுத்திரு....
மனிதம் அற்றுப்போன உலகில்
மனதை வெறுத்துக்காத்திரு...

கடந்த கால கறை துடைக்க விரைந்து வரும்
எதிர்காலம் பறை சாற்றும் விரைவில் உன் புகழை...

எழுந்து நில்...!
எமன் உன் காலடியில் வலை விரிக்கின்றான்....
விழுந்து விடாதே அவன் வலையில்....

மனமாற்றம் நீ பெற்றிட வேண்டும் என்று 
மனமுருகி மன்றாடுகின்றேன் ....




Wednesday 20 August 2014

மழலை மொழி..!


இடிந்து போன எந்தன் இதயத்தை
இசையொன்று  தட்டிச்சென்றது..!

இமயம் தாண்டிய இடர்களை வென்றது..!
இதமாய் இன்பம் அள்ளித்தந்தது..!

இந்தியம் அடக்கிய ஞானம் தந்தது..!
இரட்டிக்கும் உணர்வுகளை அள்ளிக்கொடுத்தது..!

இடலை கடந்து என்னை இயக்கும்
இசையாய் உள்ளத்தை வென்றது...!

வசை மொழிகள் யாவும்
இசை மொழிகள் ஆகியது - மழலைகள்
அசை போடும் சின்ன மொழியால்
திசை தெரியா வனத்தில் தவித்தவள்
பசை போல ஒட்டிக்கொண்டேன் வாழ்வோடு...

மொழிகள் பேதங்கள் கடந்து
ஆழிகள் தாண்டிய தேசம் யாவும்
விழிகள் மலைக்க வைக்கும் மழலை மொழி...!

கட்டிப்போட்ட இசையாய்
சுட்டிகள் பேசும் மொழியிது..!

வெட்டிய இதயம் ஒன்று சேரும்
தட்டிப்பெசும் மழலை மொழியில்

பட்டி தொட்டி எங்கும் இலவசமாய்
முட்டி மோதாமல் கிடைத்திடும் மொழி

வட்டி இன்றி குட்டிகள் தரும் சொத்து இது
எட்டி நின்று வேடிக்கை பார்க்க வைக்கும் -கோடி
கொட்டிகொடுத்தாலும் ஈடாகாது....!

எபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease)

எபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா குருதி ஒழுக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று எபோலா தீ நுண்மத்தின்நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும். கடுமையானகுருதி இழப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.

1976ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் சையர்நாட்டின் எபோலா ஆற்றங்கரையில் இத்தீநுண்மம் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு எபோலா தீநுண்மம் என்ற பெயர் ஏறபட்டது. சையர், கோட் டிவார்சூடான் ஆகிய நாடுகளில் இத்தீநுண்மம் பற்றுவதற்கான தீவாய்ப்புள்ளது. உலக சுகாதார அமைப்பு இத்தீநுண்மத்தை தீவாய்ப்புக் குழு 4இல் இட்டுள்ளது.

இத்தீநுண்ம நோய் வாய்ப்பட்ட நோயாளியின் நீர்மங்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக தீ நுண்மம் உட்செல்கிறது. இது காற்றின் மூலமாகப் பரவுவதில்லை. எபோலா நோயுற்றவர்கள் ஏராளமாக குருதி இழப்பர். அவர்களது வயிற்றுப் போக்கிலும் வாந்தியிலும் குருதி இருக்கும். கடுமையான நோயுற்றவர்களின் மூக்குகாதுகள் மற்றும் ஆண்/பெண்குறிகளிடமிருந்து குருதி ஒழுகும். இந்த நீர்மங்கள் மற்றவர்கள் நோய் பற்றிக்கொள்ள காரணமாக அமைகின்றன.

ஒருவருக்கு எபோலா பற்றும்போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். காய்ச்சல், உடல் தளர்ச்சி, தலைவலி, வயிற்றுவலி, மூட்டுவலி மற்றும் தொண்டைவலி ஆகியன முதல் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளால்மலேரியா அல்லது குடற்காய்ச்சல் நோயென தவறாக எண்ணப்படுவதுண்டு. பின்னர் நோய் தீவிரமாகி குருதி இழக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அதிர்ச்சி, குறைந்த குருதி அழுத்தம், விரைவான நாடித்துடிப்பு (இதயத் துடிப்பு), மற்றும் உறுப்புகளுக்கு குறைந்த குருதி வழங்கல் ஆகியன அறிகுறிகளாகும். இவற்றால் உறுப்புக்கள் செயலிழக்கத் துவங்குகின்றன. இதனை உறுப்பு செயலிழப்பு என்கின்றனர். மேலும் நோயாளியின் உடலை இறுக்கமாக்குவதால் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாக உள்ளது.

இந்த நோய் தீ நுண்மத்தால் உண்டாவதால் மருந்துகள் இல்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் பலர் உயிர் பிழைக்கின்றனர். எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர்ம இழப்பைச் சரிகட்ட அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும். மருத்துவமனையில் சிரைவழி நீர்மங்கள், குருதி ஆகியனவற்றைக் கொடுப்பதுடன் குருதி அழுத்தம், சுற்றோட்டத் தொகுதி சீர்மை ஆகியவற்றிற்கான மருந்துகளும் அளிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் பலர் எபோலா வாய்ப்பட்டால் அதனை தடுக்க மருத்துவர்களும் அரசும் விரைந்து செயல்படுகின்றனர். நோயுற்ற மக்களை தனிமைப்படுத்தி மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கின்றனர். நோயாளிகள் வெளியேற்றும் நீர்மங்கள் நோய் பரவாதவாறு கழிக்கப்படுகின்றன.
தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெகுவாக பரவி வருகின்றது. கினியாவில் தொடங்கிய இந்த நோய் லைபீரியா, சியாராலேபான், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கும் வேகமாக பரவி மக்களின் உயிரை பறித்து வருகிறது.
இக்கொடிய வைரஸ் காய்ச்சலுக்கு 1,229 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைபீரியாவில் எபோலா நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு வெஸ்ட் பாயிண்ட் என்ற பகுதியில் நோய் கடுமையாக பாதித்துள்ளது. எனவே அங்குள்ள மருத்துவமனைகளில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் பரிசோதிக்கப்படாத மருந்துகளை பயன்படுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து லைபீரியாவில் எபோலா தாக்கிய 3 டாக்டர்களுக்கு பரிசோதிக்கப்படாத மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் அவர்கள் குணம் அடைந்துள்ளதாக தலைபீரிய கவல் தொடர்பு மந்திரி லீவிஸ் பிரவுன் தெரிவித்துள்ளார்.

நன்றி : விக்கிபீடியா


Monday 18 August 2014

போலி...!



பிறந்து வந்த வாழ்வில்
பிரிந்து போன உறவுகள் பல..

அன்பு நிறைந்த உயிரோ?
உயிர் நிறைந்த இதயமோ...?

உவமையால் வடிக்க முடியாத
உயிர்கள் பல பிரிந்தும் நான்
உயிர் வாழ்கின்றேன் போலியாக..

எந்தன் வாழ்வில் சாதிக்க முடியாதவைகளை
எந்தன் வரிகளில் சாதிக்கின்றேன் போலியாக...

நம்பிக்கை என்பதை எனக்குள்
நட்டு வைக்க வரிகள் போராடுகின்றன...!

நலிவுற்றுப் போகும் உள்ளத்து
நம்பிக்கை போலியாக வடிவம்
பெற்று நிற்கின்றது வரிகளில் மட்டுமே...!

எந்தன் விருப்பங்கள் போல் வாழ்வில்லை
எந்தன் வரிகளை விருப்பத்தின் படி
எழுதித்தள்ளுகின்றேன்...!

தடுக்க யாரும் இல்லை...!
தலை எழுத்தை கிறுக்கியவன் வந்தும்
தடுக்க முடியாது...!

விதி என்று சொல்லி
சதி செய்து எட்டி உதைக்க முடியாது
வரிகளில் வாழும் எந்தன்
வளமான போலி வாழ்வினை....

எந்தன் நேர்மறை எண்ணங்களை
எதிர்மறை செயற்பாடுகள் ஆள்வதில்
வென்று விடுகின்றன...!

நம்பிக்கை வீணாய் போகின்றது
நடுவானில் அமைதியாக சஞ்சரிக்க துடிக்கின்றேன்...!

 

மரணித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டு
மரணிக்கின்றேன் தினமும்

மயானம் வரை செல்லும் உடல் தீயில் பொசுங்கியும்
மறுநாள் கண்முன்னே தான் இருக்கின்றது..!
மறுபடியும் கனவில் தான் செத்தேனோ?
மரணச்சடங்கு கூட போலியாகிப்போனது எனக்கு..




வீணாய்ப்போனது....!

வாழ்வின் எல்லையில்.....
ஒற்றைக்கால் நுனியில் - நின்று
ஒப்பாரி வைக்கின்றேன்...!

உயிர்கள் இரண்டின்
உன்னதம் தெரிந்து
உடைந்து நிற்கின்றேன்...!

பணம் என்ற காகிதத்தின் மாயம்
குணம் அற்ற உறவுகளின் சாயம்
வெளுத்து நாளாயிற்று...!

உணர முடியாத பலவற்றை உணர வைத்த
உலகத்திற்கும் காலத்திற்கும் நன்றிகள் கோடி...!

நலிந்து போகாத எந்தன்
நம்பிக்கையின் கை பற்றி
நடக்கின்றேன் என் இலட்சியம் நோக்கி....

நடைப்பிணமான இவள்
நடை முடிவுறும் நேரம்
பிணமானால்....???

பிரிவு தாங்காது
பிஞ்சுகள் கதறினால்
ஐயகோ....!!!!

ஆதலால்....

பிரித்து எடுத்து செல்லுகின்றேன்
பிஞ்சுகளையும் என் கூடவே....
பிணத்துடன் பிணமாக அவர்களும் இருக்கட்டும்....!


   

Thursday 7 August 2014

கலைந்து போன கூட்டில் இருந்து - நிலை
குலைந்து போன குஞ்சுகள் போல கத்தும்
எங்கள் குரல் கேக்குதா...!

நிமிர்ந்து நின்றோம் உயர்ந்து வந்தோம்...
சரிந்து விட்டோம் குற்றுயிராய் கிடக்கின்றோம்...!

வரலாற்றை தட்டிப்புரட்டினால்
வடுக்களும் வஞ்சகங்களும்
வரிசை கட்டி நிற்கின்றன....!

வசை மொழிகள் இங்கே மலிந்து கிடக்க
வாழ்த்துக்கள் மருந்திற்கும் தட்டுப்பாடாய்...

புன்னகைக்க யாருமில்லை - இதயத்தை
புண்ணாக்கி பந்தாட கூட்டமாய்
காத்திருப்போர் அதிகம் தான்

சற்றும் எதிர்பார்க்கவில்லை
சடுதியான இந்த துன்பம்
சல சலப்பின்றி நீட்சியாய்
அரை தசாப்த காலத்தை தொட்டு நிற்கின்றது
அசை மீட்கின்ற கடந்த கால கணங்கள்
பந்தாடி செல்கின்ற உள்ளத்துக்கு  நன்றாகவே
உணர்த்துகின்றது காலத்தின் வெற்றியான
பந்தாட்டத்திற்கு உகந்த பந்து எங்கள் வாழ்வு என்றே...!

Wednesday 6 August 2014

உறக்கம்...!

உருமாறிய காலம்
உருக்குலைந்த தேசம்
உண்மை நெடுநாளாய் ஆழ்ந்த
உறக்கத்தில்.....

உறக்கமின்றித் தவிக்கும் விழிகள்
உண்மை என்னவென்று
உரைத்திட யாருளரோ???
உலகமே அங்கலாய்ப்பில்.....

உணர்வு கட்டுக்கடங்காமல்
உச்சி முதல் உள்ளங்கால்வரை
உலகம் எங்கும் பொங்கி எழுகின்றது...!

உலகத்தமிழ் உணர்வாளர்கள் தேசியம்
உரிமை என்றெல்லாம் போராட்டம்...!
உறங்கும் உண்மை அசராது தொடர்ந்து
உறங்கிக்கொண்டே இருக்கின்றது....!

உறக்கம் கலைக்க முயலும்
உணர்வாளர்களுக்கு உண்மை
உறங்கும் இடம் பொருள்
உரைத்திட யாருமில்லை....!

உண்மையின் உறக்கத்தால்
உலகம் நம்பும் நவீன வேசங்கள்
உருத்தெரியாமல் ஆகிட

உறங்கும் உண்மை சுயமாய்
உடைத்து எழுந்து வருமா - அன்றி
உலகத்தை வெறுத்து நிரந்தரமாய்
உறக்கத்தில் ஆழ்ந்து மண்ணோடு
உருக்குலைந்து மக்கிப்போகுமா??

உலகத்தமிழ் மக்கள் கொண்ட நம்பிக்கை
உருக்குலைந்தாலும் உறங்கும் உண்மை
உருவெடுத்து உலகம் எங்கும் உரக்க
உரைக்கவிருக்கும் செய்தியால்
உடைந்திடும் உள்ளங்கள் அதிகம் தான்....!
உள்ளங்கள் உடையும் என்பதற்காய்
உண்மை நெடுநாள் உறங்கிடப்போவதில்லை....!

உடைத்து நெஞ்சம் வெடித்துப் போகும்
உண்மை விரைவில் செவியில் சேரட்டும்....!
உலகம் எங்கும் உறக்கம் கலையட்டும்...!
உண்மை இனியாவது உலகை ஆளட்டும்..!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "உறக்கம்" என்ற தலைப்பில் இன்று (06.08.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


பிஞ்சு...!

அஞ்சிய தருணங்களையும் மலையாய்
விஞ்சிய துன்பங்களையும் அள்ளிப்போட்ட
பஞ்சுக்குவியலாய் காற்றிலே பறக்க வைத்து....

கொஞ்சிப்பேசி நெஞ்சம் நிறைந்து நிற்கும் பிஞ்சுகள்....!
கெஞ்சி நாடி தடவி சிமிட்டி சிரிக்கும் இளம் பிஞ்சுகள்...!

கஞ்சம் கொண்ட உள்ளமாய் இரண்டாய் அளந்து கொண்டதேனோ...?
வஞ்சம் இன்றி வகை தொகையாய் இல்லம் நிரப்பி கொள்ள
நெஞ்சம் அங்கலாய்ப்பது காலங்கடந்த அறிவன்றோ..?
பஞ்சம் ஆகிய நிம்மதி வாழ்வில் தஞ்சம் கொண்டவனின் பிரிவை
நெஞ்சம் நினைத்திட அனுமதிக்காத பிஞ்சுகளின் வதனங்கள்..!

கவலை நீக்கிகளாக
கருணையின் பிறப்பிடங்களாக
களிப்பின் ஊற்றுக்களாக
கண்ணான முத்துக்களாக
கனிவுடன் என்னுள் வித்தாகி
கரும்பினை ஒத்து வாழ்வில் இனிக்கும்
கனியின்  பிஞ்சுகள்

விடாது தொடர்ந்த இடர் கண்டு நஞ்சான நெஞ்சம்
படாது படர்ந்த வலிகள் பிஞ்சுகளால் கொஞ்சம்
தொடாது போவதும் அவர்களின் கள்ளச்சிரிப்பால் தானோ...

Thursday 31 July 2014

நிம்மதி...!



சொட்டு சொட்டாய் கண்ணீர்...!
நட்டு வைத்த செடியினை ஒத்து
பட்டு விடாமல் தழைத்து ஓங்கிய துன்பம்..!
கொட்டு கொட்டென்று மாரி மழையாய்
கொட்டிய குண்டு மழை...!
தட்டுப்பாடாய் போய்
ஒட்டு மொத்தமாய் காணாமல்
விட்டுப்போன நிம்மதி...!


தொட்டு வைத்த குங்குமத்தின் வாசம்
விட்டு மறையாத தருணத்தில்
சட்டுப்புட்டென எகிறி வந்த சன்னம்
முட்டி மோதி அவனை சாய்த்து விழுத்த...
பட்டுத்தெறித்த குருதியால் உடல் எங்கும்
குங்குமம் அள்ளி வைத்து இறுதியாக....
பயணித்த அவன் பயணம் இன்னும்
முற்றுப்பெறவில்லை...

 இதயம் பிளந்து ஊசல் ஆடிய உயிர் கண்டு
 உதயம் தொலைத்தவள் அவள்...!
நெற்றி தொட்டு பார்த்து அருகில் அவனின் கரம்
பற்றி பேசுவதாய் எந்நேரமும் ஒரு நிகழ்வு
வற்றிப்போன கண்களில் வறண்ட கண்ணீர்
மருந்திற்கும் இல்லாது போன துயரம்...!

தள்ளாடும் வயதில் இந்நிலை கண்ணுற்று
தவித்திருக்கும் அவன் பெற்றோர் தொலைத்தது
தங்கள் அருமை மகனை மட்டுமல்ல

பறந்து வந்த எறிகணைக்கும் துரத்தி வந்த கிபிருக்கும்
பரந்து விரிந்த தேசமெல்லாம் சுற்றித்தப்பி வந்து
இடைத்தங்கல் முகாமிலும் வதைபட்டு தொலைத்தது
இருப்பிடத்தை மட்டுமல்ல..

 

புகைப்படம் ஏந்தி வீதிக்கு வீதி யாசித்து தேடும்
புதல்வர்களும் பெற்றோர்களும் மனைவிகளும்
தொலைத்தது காணாமல்போன அவர்களின் உறவுகளை மட்டுமல்ல

இதயம் இன்னும் நிற்காமல் துடிக்கத்தான் செய்கின்றது
இருளோடு போராடும் முதுமையில் நிகழ் கால
நினைவின்றி கடந்த காலத்தில் உயிரற்ற கணவன்களுடன் வாழும்
நினைவற்றவர்களை நினைத்து வெதும்பும் நிகழ்காலப்பெற்றோர்கள்
தொலைத்து விட்டது "நிம்மதி" என்பதையும் கூடவே...

லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "நிம்மதி" என்ற தலைப்பில் இன்று (31.07.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Wednesday 30 July 2014

ஊதுகுழல்..!

ஆரவாரமாய் வரவேற்கின்ற கோயில் திருவிழா
ஆடை காட்டி பகடு காட்ட வென்றே ஒரு சாரார்
மேடை போட்டு இசைமழை கொட்ட ஒரு சாரார்
சாடை காட்டி காதல் பண்ணவென்றே  இளம் பராயத்தார்
நடை பழகி நகை நட்டு மினுக்க ஒரு சாரார்
மடை திறந்த சனத்திரள் வெள்ளத்தில் அபகரிக்கவேன்றே
படை எடுத்து வரும் ஒரு சாரார்
கொடை ஆகி போன வறுமை வாழ்விற்கு சிறு வெளிப்பாக
கடை போட்டு கச்சான் வித்து கடன் அடைக்க வென்று ஒரு சாரார்
தடை இன்றிய வீதியில் அங்காடிகள் பரப்ப ஒரு சாரார்
படை எடுத்து வந்து அலை மோத என்றே ஒரு சாரார்

கடந்து போன திருவிழாவில் தவறிப்போன ஆசை
கட்டாயம் கச்சான் வித்து வாற காசில இந்த முறை தம்பியின்
கனவு நிறைவேற்றுவேன் என்ற அசையாத நம்பிக்கையில்
கசங்கிய உடையோடு பாசக்கார அண்ணனாய் ஒருவனும்
எதிர்பார்த்த திருவிழா இனிதே வந்தது...
ஏங்கி ஏங்கி தவித்தவன் அள்ளி அள்ளி விற்றான்
தூங்கி வழிந்த விழிகள் மலர்ந்து கொண்டது

ஓடிச்சென்றான் ஆசையுடன் வாங்கினான்
பாடி ஆடி சென்றான் பாங்குடனே தம்பிக்கு
பக்குவமாய் கையில் கொடுத்தான்....
பரிவுடன் அணைத்தான்....

தம்பியின் மகிழ்வுக்கு எல்லையில்லை
தவித்து ஏங்கிய அந்த ஊதுகுழல் கைகளில்
அளித்த அண்ணனுக்கு ஆசையாய் ஒரு முத்தம்
அன்பின் மழையில் நனைந்தான் அண்ணா

ஊதுகுழலில் தம்பியின் மூச்சு இனிமையாய் ஒலித்திட
ஊதுகுழலாய் அண்ணனின் இதயம்  சந்தோஷ சாரலை
ஊதிக்கொண்டே இருந்தது....!






Monday 28 July 2014

மரியாதை...!!!

கல்விக்கும் கற்றவனுக்கும் உரித்தான
கற்பு என்னும் மரியாதை இன்று அறிந்தே
கடத்தல் செய்யப்படுகின்ற உண்மை...

கல்விக்கான மரியாதை இடம்மாறி
கரை மாறி நின்று சிரிக்கின்றது....!

விலையாகி போகும் கணக்கற்ற மரியாதை
விழுத்தி விடுகின்றது கற்றவனை ஆழக்குழியில்....

மாண்பு பெற்ற கல்வி கொண்ட மரியாதை
மாண்டு போனது பணத்தால் இன்றைய உலகில்....

வைத்தியர் ஆகின்றான் விலங்கியல் கற்காதவன்....!
வற்றிப்போன குளத்தில் தொடர்மாடி கட்டுபவனை
பொறியியலாளன் என்கின்றது பணம்...!

பொறிமுறை அறிந்து கற்றவனும் பொறியியலாளன் - பணத்தில்
பொறி வைத்து பட்டம் பெற்றவனும் பொறியியலாளன்.

மரியாதை இங்கே அல்லல் படுகின்றது
மடிந்து போனாலும் பாழாய்ப்போனோர்
மரியாதையினை விடுவதாக இல்லை..!

பெரியோருக்கும் இல்லை முதியோருக்கும் இல்லை
பெண்மைக்கும் இல்லை மென்மைக்கும் இல்லை

அட மனிதத்திற்கே இங்கே மரியாதை இல்லை....!
அழிந்து போவது மரியாதையா அன்றி  மனிதமா..?

கேள்விக்குறியுடன் மரியாதை
கேட்பாரற்று மெளனித்து உறங்குகின்றது....!


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மரியாதை" என்ற தலைப்பில் இன்று (28.07.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/


Friday 27 June 2014

விதைத்து விட்டவள் வினையறுக்கட்டும்...!!


அகவைகள் ஐந்தில்
அடி எடுத்து வைத்த
அழகிய தேவதை இவள்..!!!

வடிவுகள் வழித்தெடுக்கப்பட்டு
வனத்திலே கசக்கி எறியப்பட்டு
உருமாறிக்கிடக்கின்றாள்..!!

குழந்தை என அறிந்திடாமல்
குதறிக்கிழித்த வெறி நாயின்
பற்களின் தடமங்கே - இளம் பிஞ்சின்
பட்டு வண்ணக்கன்னங்களில்
தொட்டு ருசி பார்த்த வடுக்களாய்
புதைந்து கிடக்கின்றது...!!

பெண்மை உணர்வே அறியாத பிஞ்சானது
பெண்மை குறி  கொண்டதால் பஞ்சாகப்
பிய்த்தெறியப்பட்டதோ...?

துளை ஒன்று வேண்டும் என்றால்
மண்ணுக்குள் துளையிடுங்கள்
மரத்தினில் துளையிடுங்கள்
மரணிக்கும் வரை உங்களைச்
சொருகிக்கொள்ளுங்கள்...!!

உணர்ச்சிகள் பிறக்காத சிசுவில்
உணர முடிகின்ற காமத்தினைச்
சடப்பொருளிலும் உணரமுடியும்..!!

ஆண்மைத்தன்மையினை அற்பமாக
பெண்மை யில் வக்கிரம் பாய்ச்சி
மென்மை யினை வன்மை கொண்டு
நோக்கி மலர எத்தனிக்கும் மொட்டைத்
தாக்கி அழித்து கசக்கி போடும் கோழைகளே..!

உக்கிப்போன உங்கள் வீரம் இது தானோ??
மக்கிப்போகும் மண்ணில் உங்கள் குறிகள்
தொக்கி நின்று அரசாளுமோ??
சிக்கித்தவிக்கும் பெண்மையினை ரசித்தவனே..!
விக்கி நிற்கும் பாலகியைச்சிதைப்பதிலும்
நக்கிப்பிழைக்கும் பிழைப்பு மேல்..!

தொட்டு தடவிப்பார்க்க பெண்மை வேண்டின் - உனை
நட்டு வைத்த தாய்மையிடம் தடவிக்கொள்
விஷச்செடி ஒன்றின் வித்தினை மண்ணில்
விதைத்து விட்டவள் வினையறுக்கட்டும்...!!


அரசி நிலவன்


நண்பர்கள் இணையத்தளத்தில் சித்திரை மாத பதிவில் அதிக புள்ளி(576) பெற்று முதலிடத்தில் இருந்திருந்தாலும் ஏற்கனவே முக நூலில் பதிவிடப்பட்ட காரணத்தால் அந்தப்பரிசை இழந்து சிறப்புப்பதிவாக தரமுயர்த்தப்பட்ட கவிதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 29 May 2014

அகம்...!!!


அகம் வாழும் நினைவுகளை  
அசை மீட்டி அசை மீட்டியே 
அலுத்து போகின்றது...!

வெறும் நினைவுகளாய் 
சோபையிழந்து போனவைகள்..! 

உயிரற்று நாற்றம் வீசுபவைகள் 
தோண்டி துருவியெடுத்து 
ஆராய்ச்சி பண்ணும் புதைகுழியின்  
மனித எச்சங்களாய் இவை  பலனற்றவை..! 

இருந்தும் அசை மீட்டி பார்த்து 
இதயம் கனத்து போவதே மிச்சம் 

அகத்தை அழித்து போட 
அறிவியல் இன்னும் வளரவில்லை...!

ஆழிப்பேரலை அடித்து செல்ல முடியாமல் 
அகம் எனக்குள்ளே ஒளிந்து கிடக்கின்றது...!

அடி மனதில் ஓர் எண்ணம்  
அடிக்கடி அங்கலாய்ப்பில்....

நாறிய அகம் உயிர் பெற்றிடும் 
நாளை நற்செய்தி ஒன்று செவியில் விழுந்திடும் என 

அந்தோ 
நாட்கள் மின்னல் வேகத்தில் கடக்கின்றது 
அகம் இங்கே தவித்துக் கிடக்கின்றது - அட 
அலைகள் கூட  தொட மறுக்கின்றது
அமிழ்த்தும் அகத்தின் கனம் தாங்காமல் அவை
அகன்று போகின்றனவோ  கடல் தாண்டி - அன்றி  
அகத்தை தொட்டால் பிரளயம் ஒன்று உருவாகிடும் என்று 
அறிந்து போகின்றனவோ...?


Sunday 18 May 2014

சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்...!!!


உதிரமும் கண்ணீரும் கலந்து சகதியான மண்ணில் சரித்திரம் படைத்துச்சென்ற பேரழிவுகளின் ஐந்து வருடங்கள் விரைவாக உருண்டோடி விட்டது. செந்நீரும் கண்ணீருமாய் நிரம்பி வழிந்த தாயக தேசம் இன்று  உயர் ரக நெடுஞ்சாலைகளும்  புகையிரத கடவைகளுமாய் உருமாறிப் போய் விட்டது. மக்கி மண்ணோடு மண்ணாகிப் போன உறவுகள் மற்றும் ஆங்காங்கோ காணாமல் போனவர்கள் என குறைந்து போன இனத்தின் நினைவினை வாரி வழங்கும் சான்றுகளாக  இன்னும் அங்கே கண்ணீர் வடிக்கும் உறவுகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஒவ்வொரு வருடமும் கோலாகலமாய் மண்டபம் ஒழுங்கமைத்து, விளக்கேற்றி, மாலையிட்டுக் கண்ணீர் சிந்தி இலட்சக்கணக்கில் பணத்தினை வாரி இறைத்து உலகம் பூராவும் அஞ்சலி செலுத்துகின்றோம். இதனை உயிர் துறந்தவர்கள் அறிந்திடப்போவதில்லை. உயிரற்றுப் போனவர்களால் தினம் தினம் வாழ்வினை நகர்த்த முடியாமல் போரின் எச்சங்களாக எஞ்சி அந்த இறுதி நாட்களை கண் முன்னே கொண்டு வரும் உறவுகள் இன்னமும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஆம்...!
இறுதி யுத்தமதில் கண்முன்னே கணவனை இழந்த கைம்பெண்கள், மகனை இழந்த தாய் தந்தையர்கள், தாய் தந்தையினை இழந்த குழந்தைகள், அண்ணாவை அக்காவை என்று குடும்பத்தின் மூலாதார உறுப்பினர்களை இழந்து இன்று தமது அன்றாட சீவனத்திற்கு கூலி வேலை செய்தும், கல்வி கற்க வேண்டிய குழந்தைகளை வேலைகளுக்கு அனுப்பியும் கரடு முரடான முட்கள் நிறைந்த வாழ்க்கைப்பாதையில் பயணிக்கும் எத்தனையோ எத்தனையோ உறவுகள் போரினால் தமது வாழ்வாதரத்தை மட்டுமல்ல தமது அங்கங்களையும் இழந்து தவிப்பது கொடுமையிலும் வேதனை.

அன்றாடத்தேவைகளை நிவர்த்தி செய்திடப் பெரும் பாடுபடும் அவர்களுக்கு செயலிழந்த அங்கங்கள், எறிகணையின் சிதறல்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் துளைத்த உடற்பாகங்கள் கொடுக்கும் அளவில்லாத வேதனைகளும் வலிகளும் அனுபவித்து உணர்ந்தாலன்றி எழுத்தினில் விளக்கிட முடியாது. 
இலட்சம் இலட்சமாக பணத்தைக் கொட்டி மண்டபம் ஒழுங்கமைத்து, உணர்வான பேச்சுக்கள், கவிதைகள் மற்றும் நாடகங்கள் என்று நாம் நிகழ்வுகளை அரங்கேற்றி, விளக்கேற்றி அணைப்பதால் இந்த உறவுகளின் வேதனை ஒருபோதும் துடைக்கப்படுவதில்லை.


ஒட்டுமொத்த உலகமே கண் மூடி இருந்த அந்த நாட்களில்  மொத்தமாய் படுகொலையான எங்கள் உதிரத்து உறவுகள் இனி உயிருடன் எழுந்து வந்திடப்போவதில்லை. ஒரே  நாளில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலையானதற்கான  காரண கர்த்தாக்களை தேடி, கொடி  பிடித்து, கோசம் போட்டே நாம் காலத்தைக் கடத்தி வந்த இந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் மெல்ல மெல்ல மரணித்துக்கொண்டிருக்கும் எத்தனையோ உறவுகளின் சமாதிகளை நாம் அறிந்திட வாய்ப்பில்லை. 

அங்கே ஒரு பிடி சோற்றுக்கு மடிப்பிச்சை ஏந்தும் எங்கள் உறவுகள் கவனிப்பாரற்று மடிந்து போவது ஏன் இன்னும் எங்கள் அறிவிற்கு புலப்படவில்லை. உலகம் கண் மூடி மெளனம் காத்த கொடும் செயலை நாமும் இப்போது அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றோம்  அல்லவா?  

எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா...? என்ன செய்து இருக்கின்றோம்? ஒன்று பட்டு நாம் எழுந்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொடுத்தோமா? கண்ணீரை துடைத்து விட கரங்களை கொடுத்தோமா? மடிந்தவர்களை கேட்டு காணாமல் போனவர்களை கேட்டு தமக்குத்தாமே போராடிப் போராடி சலித்து விழுந்து கிடக்கும் அவர்களுக்கு நாம் இங்கே எழுப்பிடும் கோசங்களும் அஞ்சலிகளும் கறிக்குதவாத ஏட்டுச்சுரைக்காய்களே..! 

ஒவ்வொரு வருடமும் மிக்க வலியோடு கடந்து செல்லும் இந்நாட்கள் மிகவும் ஏமாற்றமாகவும் நீங்கிச்செல்வதுண்டு. அந்த 2009  இற்கு பின்னர் தன்னலமற்று யாராவது எம் உறவுகளை கை தூக்கி விட முன் வர மாட்டார்களா? எம் உறவுகளின் கண்ணீர் துடைக்க யாராவது முன் வர மாட்டார்களா? கடந்து போன நான்காண்டுகளும் பதிலற்றுப் பறந்து சென்றிட 
இந்த ஆண்டு தக்க பதிலோடு மெல்லக் காலடி எடுத்து வைக்கின்றது.

வினாக்களுக்கு பதிலளித்து, உறவுகளின் கண்ணீரையும் துயரங்களையும் துடைத்து எறிந்திட முளைத்து வேர் விட்டு கிளை பரப்பி வானளவாய் உயர்ந்து நிற்கின்றது ஒரு ஆல விருட்சம்.

ஆம்...!
இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு  அலைந்து திரிந்து, கடல் தாண்டி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளம் ஒன்று உதவும் உள்ளங்களை முகநூலில் இணைத்து உருவான "உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்" ஒரு மாத கால இடைவெளியில் இறுதிப்போரில் அவயங்களை இழந்த இரு உறவுகளுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்வாதரமான தொழில் வாய்ப்பினை உருவாக்கி கொடுத்ததுடன் இறுதி யுத்தத்தில் தந்தையினை இழந்து, தமிழகத்தில் தவித்த சிறுவனுக்கு சிகிச்சை வழங்கி, இந்தோனேசிய தமிழக துபாய் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து உறவுகளுக்கு அடிப்படை உதவிகளையும் வழங்கியுள்ளது என்றால் நம்ப முடிகின்றதா?


அது மட்டுமன்றி வெளிப்படைத்தன்மையான உதவும் குறிக்கோள் கொண்டமையினால் அதாவது உதவுபவரது மற்றும் உதவி பெறுபவரது விபரங்கள் எல்லோருக்கும் வெளியிடப்படுகின்ற அதாவது மோசடித்தன்மை அற்ற தூய்மை நிறைந்ததனால் அசுர வேகத்தில் உறவுகளின் ஆதரவினைப் பெற்று வளர்ந்து நிற்கின்ற   இந்த ஆணையம் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ் நாட்டில் "உலகத்தரச்சான்றிதழுடன் (ISO)" தமிழக அரசின் முழு ஆதரவுடன் சட்டரீதியாகவும், அதிகார பூர்வமாகவும் பதியப்பட்டு பெளதீக ரீதியில் தனது சேவையினை வெற்றிகரமாக ஆரம்பிக்க இருக்கின்றது. 

முற்று முழுதாக எங்கள் தமிழ் உறவுகளின் கண்ணீரைத்துடைத்து, அவர்களுக்கு மறுவாழ்வளித்து, அவர்களுக்கு புதிய வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொடுத்து தமிழ் உறவுகள் மேல் உண்மையான அக்கறையோடும் பரிவோடும் அவர்களை " அன்பினால் அரவணைக்கும்" உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டின் வைகாசியின் உதிரக்கறை படிந்த இந்த நாட்களை முதன் முதலாய் கடக்கும் இத்தருணம் இறுதிக்களத்தில் குருதி தோய்ந்து, எழுந்து வந்த அதரவற்ற  உறவுகளின் கரங்களை ஆதரவோடு பற்றி, அவர்களின் கரடு முரடான பாதையினை செவ்வனே செப்பனிட்டு அவர்களைப் பயணிக்க வைக்க முயற்சி செய்த ஆத்ம திருப்தியுடன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு அந்தோ அநியாயமாகப் படுகொலை யானவர்களை நினைவு கூர்ந்து கண்ணீரோடு அவர்களுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துகின்றது.

இன்றைய இந்த கறுப்பும் சிவப்புமான நாளில், எமது மக்களின் உதிரம் சிந்தப்பட்டது மட்டுமன்றி தாயகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்ட உறவுகளின் இதயத்திலிருந்து சிந்தப்படும் குருதி என்றும் எமக்கு நினைவில் நிற்க வேண்டியதொன்று. சிந்துகின்ற கண்ணீரும் செந்நீரும் நாம் அரவணைக்கும் கரங்களால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வைகாசி பதினெட்டில் மட்டும் நினைவில் கொள்ளாமல் எப்பொழுதும் எங்கள் உள்ளங்களில், இன்னல் அனுபவிக்கும் இவர்களை நினைவில் நிறுத்தி உதவிடுவோம். கருத்து வேற்றுமை இன்றி இந்த துக்க நாளில் உறுதி பூண்டிடுவோம். ஆதரவுக்கரங்களை ஆணையத்திற்கு கொடுப்போம். ஆதரவற்ற எங்கள் உறவுகளை அன்பினால் அரவணைப்போம்.



மரணித்து மண்ணுக்குள்
 மக்கிப்போன  எம் உறவுகளுக்கும் 

மண்ணுக்காய் மரணித்த  
மாண்பு மிகு எம் தெய்வங்களுக்கும்   

கண்ணீர்  அஞ்சலிகள்....!!!
  

" அன்பினால் அனைவரையும் அரவணைப்போம் "

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் 




Thursday 8 May 2014

வேதனை....!!!



தோணியினை நம்பி ஆழியில் பயணம்..!
தோற்றுப்போன பயணம் நடுக்கடலில் தத்தளிக்க 
நா வறண்டு கத்தி விக்கி கடலில் சிக்கி 
நாதியற்று நின்ற உயிர்களில் இவளும் ஒன்றானாள்...!

என்ன நடக்கின்றது என்பதை அறியாத பிஞ்சு மகள்...!
கடலுக்குள் ஆழம் அதிகம் என்றறிந்த இவள் - எம்மின 
கண்ணீர் அதை விட ஆழம் என்று அறியாதவள்...!

உடன் பிறந்தவளை கதற கதற பிரிந்து வந்தவள்...!
உண்மை பொய்யால் சிறை பிடிக்கப்பட்டதும் 
உலகம் எங்கும் அகதியாகி தமிழினம் அலைவதும் 
உயிர் பிழைப்பு தேடி கடல் கடப்பதும் விளக்கினாலும் 
உணர்ந்திட தெரியாத பச்சை மண் இவள்...!


ஆனாலும் இவள் 
ஆங்கோர் சிறையில் அடைபட்டு வதைபடுகின்றாள்...!
ஆண்டுகள் இரண்டு கடக்க அவசரப்படுகின்றது...!
ஆயிரம் மைல்கள் தாண்டி தவித்திருக்கும் அன்பு மகள்..!

அடிக்கடி நோய்த்தொற்றும் 
அளவு சாப்பாடும் கொண்டு 
அடைத்து வைக்கப்பட்ட இவள் 
அடைந்து வரும் வேதனை எழுத்தில் 
அடக்கிட முடியுமோ??

கல கல மழலை மொழி பேசி 
கவலைகள் மறக்க பண்ணும் தேவதையின் 
துயரங்களை யார் களைவார்கள்..???
அனல் அடிக்கும்  தேசமதில் 
அலுமினிய துகள் பறக்கும் துறைமுக வளாகத்தில்  
அந்த அசுத்த காற்றினை சுவாசிக்கின்றாள் 
ஆண்டுகள் இரண்டாக....

அகதி என்ற காரணம் கொண்டு 
அடைக்கப்பட்ட சின்னஞ்சிறு பாலகியின் 
அளவில்லா வேதனையே உலகில் 
அதிகமான வலி மிகுந்தது...!

எதையும் அறிந்து கொள்ள முடியாத 
அகவை மூன்றை கடந்தவளுக்கு
வேதனை என்பதை மட்டும் உணர 
முடிகிறதென்றால் அது எத்தனை 
கொடுமையான வேதனையோ???

கொடிது கொடிது இளமையில் வறுமை என்றஅவ்வை 
கொடுமையிலும் வேதனை மழலையில் சிறை என்ற 
இவளின் வேதனை கண்டு கவி எழுதுவதை கைவிட்டிருப்பார் 
இதயம் கனத்தால் அழுத்துகின்றது அகம் சிரித்து முகம் மலரும் 
இவள் அல்லல்படும் வேதனை அறிந்து....

மருந்தும் இல்லை உனக்கு விருந்தும் இல்லை
மரத்துப்போன ரொட்டியை அசைக்க பற்களும் 
வலிமை பெறவில்லை 
வழியற்று தவிக்கும் தந்தை முகம் தடவி 
ஆறுதல் உரைக்கும் அன்புக்கடவுள் இவளின்  
ஆற்ற முடியா வலிகளை யார் துடைப்பார் 
ஆறாய் பெருகும் கண்ணீரை தவிர வேறென்ன 
கொடுக்க முடியும் எம்மால்...??

என்ன குற்றம் இழைத்தாள்...?
எதற்காக சிறை வாசம்...?
எத்தனை முறை சிந்தித்தாலும் 
எதுவும் புலப்படவில்லை....!

தமிழ் தாயின் வயிற்றில் கருவானது குற்றமோ??
தமிழ் தேசம் தன்னில் பிறந்தது குற்றமோ..?
தரணி என்னும் நாமம் கொண்டவளுக்கு இந்த
தரணியில் ஒரு இடம் இல்லை உறங்கிட....
தங்கமே தரணி உந்தன் புன்னகை வதனம் கண்டாலும் 
தவிக்கின்றது உள்ளமம்மா...



தரணி எங்கும் உறவுகள் இருந்தும் 
தண்ணீர் அள்ளிட வாளி இல்லை 
தலை துவட்டிட துணி இல்லை...
செல்வந்த நாடு ஒன்றில் 
செல்லரித்து வாழும் இவள் வேதனை 
சென்றிடுமா விரைவில் இவளை நீங்கி...



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "வேதனை" என்ற தலைப்பில் இன்று (08.05.2014 )வழங்கிய கவிதை இது.

கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 (இலங்கை இந்திய நேரம் பிற்பகல் 7.30 மணிக்கு )மணிக்கு... http://gtbc.fm/

  


Tuesday 6 May 2014

கவி....!!!

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
      - பாரதி.




கவிக்கு இலக்கணம் நீயே கவியே...!
கவியே வாழ்க்கையாக கொண்டோனே 
கவிக்கடவுள் மகாகவியே...!

தேசிய கவி , மகாகவி , சீர்திருத்த கவி என்றெல்லாம் 
தேசம் எங்கும் புகழ் பரப்பி சாகா வரம் பெற்ற பாரதியே...!

பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தாய் - தமிழ் 
மண்ணுக்கு பெருமை சேர்த்தாய் மகா கவியே...!

தமிழுக்கு சுவாசம் கொடுத்த பிராண கவியே...!
தரணி எங்கும் தமிழ் தழைக்க எழுத்தாணியாய் 
எழுந்த அக்கினிக்குஞ்சே ....!

தமிழ்மொழியில் அளவற்ற காதல் கொண்டு 
தமிழே மூச்சாய் பேச்சாய் வீச்சாய் கொண்ட  
தமிழின் தன்னிகரற்ற கவியேறு எங்கள் பாரதி 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவ தெங்கும் காணோம்" உயரத்தில் வைத்தான் 
உண்மையினை உரைத்தான் களங்கமில்லா கவிஞாயிறு பாரதி 

பாஞ்சாலி சபதத்தில் அக்கினியாய் எரிந்த கவி...!
பாவங்களை சுட்டிக்காட்டிய சுட்டுக்கவி...!

தீமைகளை தீயாய் சுட்டெரித்தாய்...!
தீண்டத் தகாத சாதிகள் இல்லை என்றாய்...!

வடிக்காத வரிகள் இல்லை...
வஞ்சனைகள் செய்யாத கவி நீ பாரதி...!

உன் புகழ் பாட அருகதை உண்டோ - தமிழின் 
உரிமை யால் கால் அடி எடுத்து வைத்தேன்..

கவி உன்னை புகழ தத்தி நடை பயில்கின்றேன்
கவி உந்தன் எல்லை இல்லா கவிப்புலமை 
கண்டு நான் தடக்கி விழுந்து எழுகின்றேன்...!

கவியே மகாகவியே தமிழின் உயிரே நீயே...!
கவிக்கு இன்று ஒருவர் உண்டோ....
கவிக்கு நிகராய் இனி யாரும் பிறந்திடுவாரோ..? 
கவிச்சிற்பி உனக்கு யாரும் நிகர் உண்டோ?


"தேடிச் சோறு நிதந்தின்று 
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"