Search This Blog

Friday 5 March 2010

அன்றும் இன்றும் ...!!!


அழகிய குருவிகளின் கீச் கீச் ஒலியுடன்,,
அசைந்தாடி வரும் ஆதவனின் வரவுக்காய்...
காத்திருக்கும் சேவல் கூட்டத்தின் கொக்கரக்கோ...வும்
இதமான இசையாய் மெல்ல
இதயத்தை வருட...


கலப்பையுடன் கிளம்பும் கார்த்திகேசனோடு...
கரும்புழுதி கிளப்பிடும் பசுக்களின் அணிவகுப்பும் 
இணைந்திட - கார்
இருளும் மெல்ல காணாமல் போகும்
பூமித்தாயவளை விட்டு...!

மணம் வீசும் விளாட்டு மாமரத்தின்
இளம்பூக்கள் சொரியும்...
இளவேனிற்காலமதில்....
பூக்களின் வாசனையின் மயக்கத்தில்,
புரண்டு படுக்கும் என்னை
பலாத்காரமாய் பள்ளி எழுப்பும்.. 
பிள்ளையார் கோயில் மணியோசை..!!

சோம்பல் முறித்து துயில் எழும் போது..
சோலைக்கதிரவனின் சின்னக்கதிர்
பட்டுத்தெறிக்கும் என் வதனத்தில்...!!

தென்னங்கீற்றில் தவழ்ந்து வந்த..
தென்றல் காவி வரும் நறுங் கடியால்..
விழி மூடி பயணிக்கும் என் கால்கள்
முல்லைப்பந்தலை நோக்கி...!!!
வெள்ளை வேளேரென்ற மணலில்...
சொரிந்த மலர்களின் அழகை....
சொல்ல வார்த்தை இல்லை...
இலைகளை மூடி மறைத்து மலர்ந்த முல்லைகள்...
இதழ் பிரித்து புன்னகைத்து கண் சிமிட்டும்..!!

ஈரத்துணி போர்த்த இள மங்கை போல
பனித்துளியில் நனைந்த பூஞ்செடிகள்..
என்னைக்கண்டு நாணித்தலை குனியும்...
எழிலில் அசந்து நிற்க...
சின்ன சின்ன அணில் குஞ்சுகளின்
சிறு குரல்கள் சுய நினைவிற்குள்
மெல்லத்திருப்பும் என்னை..

நடை பயிலும் அணில்களின் கதைக்கு
எதிர்க்கதை பேசும் புலுனிகளின் காலடிகள்
என் வீட்டு முற்றத்தை கோலமாய் அலங்கரிக்கும்...!!!


இன்று...
காஞ்சாங்கோரையும் காவிளாயுமாய்...
காடாகிப்போன என் வீட்டு முற்றம்...
கண்ணீர் வடிக்கின்றது – என்னை நோக்கி

முல்லையின் வாசனை காணாமல் போய்
முற்றத்தில் ஓடி விளையாடிய அணில்களும்
கண்ணுக்கெட்டாத தூரத்தில்....

தலைகளைத்தொலைத்து விட்டு நின்ற
தென்னைகளும் ஒப்பாரி வைக்கின்றன...
தம் நிலை எண்ணி....!!
தள்ளாடி நடந்த என் கால்களில்
தட்டுப்பட்டது கல் ஒன்று...
குனிந்து நோக்கினேன்..!!
குதூகலமாய் நாம் வாழ்ந்த இல்லத்தின்
அத்திவாரத்தின் ஒரு பகுதி....!!

கண்ணீர் பெருக்கெடுக்கவில்லை...!!
கவலை தொண்டையை அடைக்கவில்லை...!!
கல்லும் மண்ணும் கொண்ட கட்டிடத்தை எண்ணி..
கவலை கொள்வானேன்...???
மண்ணோடு மண்ணாகி விட்ட
எத்தனை எத்தனை எம்மின...
உறவுகள் கல்லிற்கு இணையாவாரோ...???


 ”அரசி நிலவன் ”





Wednesday 3 March 2010

அண்ணா... அகிலமெங்கும் தேடுகின்றேன் காணவில்லை...உன்னை..



தனித்து நான் சென்றதில்லை
தனி வழியே...
கரிசனையோடும்,,
கவனத்தோடும்,,
கை பிடித்து ஒன்றாய்...
வலம் வரும்...
பாசப் பறவைகள் எம்மை
பார்த்து மகிழாதோர் யாருமில்லை..!!

துவிச்சக்கர வண்டி தனில்
தெத்தி தெத்தி பயிற்சி பெற்று,,
வீராப்பாய் தங்கை என்னை உட்கார வைத்து
வீதி வழியே சவாரி செய்யும்
வீரச்சகோதரனே....!!!

வீரச்சகோதரன் என்றதாலோ
வீர சொர்க்கம் ஏகினானோ..??

எதிர்த்து பேசி,,
எதிரியை காறி உமிழ்ந்து - ஊர்
எல்லையிலே காவியமான
என்னுயிர் சோதரனே..!!

உன் தீரப்பேச்சாற்றல் கவர்ந்து
உன் சிரசினை கவர்ந்தானோ..?
இரக்கமற்ற கயவன்...!
இல்லாத ஆயுதத்தை திணித்து
கபடமாய் கொன்றொழித்தானோ..??

தனி வழியே நானின்றி..
தனிமையில் நீ ஏகியதாலோ...
பாசப்பிணைப்பை உடைத்து,,
பாவிகள் உன்னை அழித்தனரோ...??



அண்ணா...!!!
அகிலமெங்கும் தேடுகின்றேன்..!!
காணவில்லை...உன்னை...
காற்றோடு கரைந்து சென்றிட்ட..
உன் மூச்சுக்காற்றினை.. சுவாசத்திலும்
நுகர்ந்து கொள்ள முயற்சித்து
தோற்றுப்போகின்றேன்...!

நிழற்படங்கள் நினைவிலும் 
காணொளிகள் கண்ணீரிலும் கரைந்து 
காணாமல் போகின்ற காலம் அல்லவோ??
காணும் போது ஒரு துடிப்பு 
காட்சியில் ஒரு பதறல் வேதனை கருத்துக்களுடன்
காலாவதியாகி போகும் காலச்சக்கரம்...!!!

பரிதாபங்கள் சிந்தப்பட்டு 
வசைமாரிகள் தெளிக்கப்பட்டு
வரலாறு மாற்றப்பட்டு 
வம்சங்களின் மரபணுக்களும் 
வகையில்லாமல் ஒன்றாகிப்போன காலம்....!!!

கல்லறைகளும் விறாண்டப்பட்டு 
விசிறப்பட்டு வீதிகளில்...கார்த்திகையில் 
தீபங்களுக்கும் விளக்கமறியல்...!
கண்ணீரை பூஸா தடுத்து வைக்குமா??
  
கலைந்த உண்மைகளை 
கற்பனையில் தேடி  
கனவில் கண்டு பிடித்து 
கனன்ற இதயங்களை ஆற்றுப்படுத்தும் 
கலி காலமதில்....

கண் பார்க்கும் இடமெங்கும் - நான்
காணும் உன் அகவையுடையோர்
அண்ணன்களாய் காட்சி தர...
அழைக்கின்றேன் உரிமையோடு...
அண்ணா...அண்ணா...என
நெஞ்சமதில் உன் நினைவுகளைச்சுமந்து....

-அரசி-

Sunday 28 February 2010

எம் தேசம்...!!!


ஊர்திகளின் ஓய்வற்ற அணிவகுப்பால்
ஊமையாய் கண்ணீர் விட்டு,,
வாடி வதங்கி போய் விட்ட நெடுஞ்சாலை...!!

நெருக்கடியும்,,நெரிசலுமாய்
நெளிகின்றது எம் தேசம்...!!
செப்பனிடப்படாத வீதிகள்..
செத்து பிழைக்கின்றன..!

புது புது இன வரவுகளால்,,
புத்துயிர் பெற்று விட்ட வீதியோர
புல்பூண்டுகள்...!!

பதரோடு, மிதிவெடியும்
பதுங்கி கிடக்கும் என்று,,,எம்மவர்
கைவிட்டு காடாகி போன
வீதியோரமெங்கும்...
கல் வைத்து தீ மூட்டி,,,
கதிரை போட்டமர்ந்து,,,
கை நனைக்கும் வேற்றின மக்கள் தொகை..
குடியிருக்கும் தமிழனை விட அதிகமாய்...!!

பூர்விகமாய் காலங்காலமாய்..
குடியிருந்த எம்முறவுகளை...
காணவில்லை...
எம்மண்ணிலே....

சுற்றுலா என்று..
சுற்றி பார்க்க வருபவர்கள்...
அநாதரவான நிலத்திலே...
அத்து மீறி நிரந்தரமாய் 
குந்தி விட்டாலும்...
ஆச்சரியப்படுவதற்கில்லை...!!

ஆக்கிரமிப்பையும்
அடிமைத்தனத்தையும் 
ஆசைப்பட்டு ஏற்றுக்கொண்ட இனம்
அல்லவோ எம்மினம்..!!!
அதனால் - இந்த
அத்துமீறலையும்
அன்போடு ஏற்றுக்கொள்ளட்டும்...!!



- அரசி -

Sunday 14 February 2010

பெப்ரவரி 14….!!!


ஆண்டுகள் பல 
கரைந்தும்...இன்னும்....
ஈரமாய் விழிகள்...!!
விதி வசத்தால்,,
விடுகை பெற்ற
விசித்திர காதல்..!!!

மூளை குழம்பி
மூலை முடுக்கெல்லாம்..- உன்
முகத்தரிசனம்..!!!
மூச்செடுக்கவே விருப்பின்றி
ஒவ்வொரு கணமும் ரணமாய்
விடை பெற்று சென்று விட்டன...!

உலகமே எதிரியானது....!
உண்மை கூட பொய்யானது...!
உதிரம் உறைந்ததாய் ஒரு
உணர்வு...சடுதியாய்
சூழ்ந்த இருளால்
சூனியமாய் நான்...!


ஆனாலும்...
ஆவலோடும்
ஆசையோடும்
என்றென்றும்
எதிர்நோக்குவேன்
பெப்ரவரி 14…!!!

இன்று கூட...........
இரண்டாவது தடவையாகவும்
இன்பமாய் வரவேற்கின்றேன்....!
இந்த மகத்தான் நாளினை...
எங்கே நீ மறந்து கூட – இந்த நாளில்
எனக்கு அழைப்பை ஏற்படுத்த மாட்டாயோ???


உனக்குள் மெல்ல உறங்குகின்ற காதல்...
உயிர் பெற்று விடாதோ இந்த நாளில்..??
உண்மை விழித்திடாதோ இந்த நாளில்...??
உறவுகளுக்கு உணர்த்தி மீளாயோ நீ..??
உறங்குவதாய் பாசாங்கு காட்டும் - உன்
உண்மையற்ற உறக்கம் கலைத்திட மாட்டாயோ..??

சின்ன நப்பாசையோடு....
சிரித்து மகிழும் இளம் காதல்
சிட்டுக்களின் இன்பத்தில்
சிரிக்கின்றேன் நானும்.....



- அரசி -


Saturday 13 February 2010

உயிரோடு கல்லறைக்கு சென்ற உருவமில்லா காதல்...!!!


காற்றிலே... 
கரைந்து சென்றிட்ட
கண்ணீர் காதல்...!!!
கனவாகிப்போன
கானல் நீர் காதல்...!!!

உயிரோடு கல்லறைக்கு சென்ற
உருவமில்லா காதல் என
உலகமே எண்ணிய
உத்தம காதல்...!!

கண்ணுக்குள்ளே இன்னும் பார்வையாய்
கண் சிமிட்டுகின்றதே....!!! 
கல் இதயத்தையும்
கரைத்த அமிலக்காதல்...!!!
கண்டதையும் ரசிக்க வைத்த
கரும்புக்காதல்..!!!

உருவங்களை மட்டுமே பிரித்துச் சென்ற
உறவுகளால்,,,உணரமுடியா 
உயிர் கொண்ட காதல் - என்றுமே
உயிர் துறந்திட போவதில்லை...!!!


- அரசி -

Friday 12 February 2010

காதல்...!!! காதல்...!!! காதல்...!!!





இதயக்கூட்டில் ஒரு புது வரவு....!!
இம்சையாய் ஒரு இன்பம்....!!
இரவின் மடியில் தாலாட்டிடும் - ஒரு
இனிமையான மழலை....!!

உயிர் நீங்கி போயினும்....
வேரூன்றி வானளாவி கிளை பரப்பும்
பெரு விருட்சம்..!!!

கடவுளை ஒத்து,,
கல் என்றவனுக்கு சூனியமாயும்
கடவுள் என்றவனுக்கு பேரின்ப பரவசமாயும்
காட்சி கொடுக்கும் தெய்வம்...!!

புனிதமாய் பூசித்து,,
தூய்மையாய் நோக்கி,,
உண்மையாய் வழி நடந்திட்டால்..
அமுதமாய் கையில் சேர்ந்திடும்
அதிசயப்புதையல்...!!!

காலங்கள் கடந்தாலும்
கசங்கிப்போயிடாத அற்புதம்...!!!

கனவோடு,
கண்ணீரையும்,,
காலத்தால் அழியாத..
காற்றோடு கரைந்திடாத...
நினைவுகளையும்,,,
உயிரோடு பிரசவிக்கும் 
தங்கத்தாய்...!!

புது இலக்கணமாய்...
புரட்சி புரிந்திடும்
புதுக்காவியம்...!!!

புல்லரிக்கும் உணர்வோடு – சின்னப்
புன்னகையும் சிணுங்கலும் வாங்கி
புத்துயிர் பெற்று பூமியில்
புதிதாய் பூத்திடும்,,
உயிர்ப்பூ....!!!


- அரசி -

Tuesday 9 February 2010

இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!!

பணத்திற்கும் பகட்டிற்கும்
பல் இளிக்கும் கூட்டம்...!
பந்தா காட்டி பழகுவதும்..
பச்சோந்தி தனமாய் உரு மாற்றுவதும்
முதன்மை குணங்களாம்..!!

இமயமாய் இடுக்கண் வருங்கால்..
இழிமொழி கொண்டு வைய்ந்திடும்
இரு வேடமிட்ட இரத்த உறவுகளாம்
இவர்கள்...!!!
இரத்தத்தினை உறிஞ்சிடும் உறவுகள்
இரத்த உறவுகள் தானோ...

இரு வதனம் கொண்டு
இன்பமாய் மலர்ந்து பேசி,,
இரண்டகம் செய்து குந்தகம் விளைவிக்கும்
இரணியர் கூட்டமன்றோ..??? 

நெஞ்சத்திலே வஞ்சம் சேமித்து -  எமக்கு
பஞ்சம் வரும் போது கொஞ்சம்
இனம் காட்டிடுவர் - தம்
இரும்பு நெஞ்சமதை

இருப்பதை கொடுத்தாலும்...
இல்லாததை இல்லை என்றாலும்,,
இடித்து பேசிடும் பொல்லாத கூட்டம்...!!
இதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!
இப்படி ஒரு உறவு
இருந்தால் என்ன...???
இறந்து தான் போனால் என்ன...???

”அரசி”

Monday 8 February 2010

காதல் வெற்றி...!!!





காதல்...!! இது ஒரு சிறிய வார்த்தை தான் ஆனாலும் இது மிக்க ஆழமானது. இந்த சின்னஞ்சிறிய ஒரு சொல்லிலே ஒரு அகராதியே அடங்கியுள்ளது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூற வேண்டும். யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம். ஆனால் உண்மையான காதலை உணருபவர்கள் இன்று இந்த உலகத்தில் எத்தனை பேர்??

காதல் கொண்டு உயிருக்கு உயிராய் அன்பு வைத்து,, அந்த காதலே நிறை வேறாமல் போன பின் காதலை வெறுப்பதோ...அன்றி தூற்றுவதோ...காதலை புரிந்து கொண்டலாகாது. அதாவது ஒருவர் தாம் கொண்ட காதல் ஆனது ஏதோ ஒரு விதத்தில் திருமணத்தில் முடியாமல் போகும் போது...காதலை வெறுத்து, காதல் மீதே வெறுப்பு கொள்ளுதல் என்பது அவரின் அறியாமையே... காதல் புனிதமானது என்று பலரும் கூறுவர். என்னை பொறுத்த வரை காதல் ஆழமானது.

காதலை பற்றி கருத்து கூறுங்கள் என்று கேட்டால், காதல் இனிமையானது, சுகமானது என்று காதலித்து கரம் பிடித்தவர்கள் கூறுவார்கள்..அதே நேரம் காதல் வலி மிகுந்தது...கண்ணீரைத்தருவது என காதலை தொலைத்து விட்டு தாடியுடன் நடமாடும் பல இளைஞர்கள் கூறுவார்கள்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை கூறின், என்னுடன் வேலை பார்த்த நண்பன் ஒருவன் ஒரு பெண்ணை காதலித்தான்..உயிருக்கு உயிராக காதலித்தான்.அவளே தான் உலகம் என்று சுற்றி சுற்றி வந்தான்.ஆனால் அவளோ இவனின் பணத்திற்கும் பகட்டிற்குமே ஆசைப்பட்டு இவனை சுற்றி சுற்றி வந்தாள்.ஒரு கட்டத்தில் இவனை விட பெரிய இடம் ஒன்று அவளை களவாடிச்சென்றது. பிறகென்ன வழமை போல் நல்லவனான இவன் எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையானான். கல்வி பாதி வழியில்...வேலையில் கவனமின்மை... என தொடர்ந்தது.

இதற்கெல்லாம் மூல காரணம் அந்த பெண் தான் தவிர காதல் அல்ல. காதல் பாவம் ஒரு உயிருள்ள கண்ணுக்கு தெரியாத உணர்வு. அவன் கொண்ட காதல் தப்பல்ல...காதலித்த பெண்ணே தப்பானவள். அதன் பின் அவன் காதலர்களையும் தூற்றுவான். காதலையும் தூற்றுவான். அலுவலகத்திற்கு காதலர் தினத்தன்று பல வாழ்த்து மின்னஞ்சல்கள் வந்த போதெல்லாம் மிக்க கோபம் கொண்டு எல்லொரையும் ஏசினான். எல்லோரும் அவனை பரிதாபமாய் பார்த்த போதும் எனக்கு அவன் மேல் கடுங்கோபமே ஏற்பட்டது.


”உன் கோபத்தை நீ காதலித்த பெண் மேல் காட்டு. காதல் மேல் காட்டாதே..காதல் என்ற பயணத்தில் நீ தேர்ந்தெடுத்த வழி தான் தப்பானதே தவிர பயணம் தவறானதல்ல. இதற்கு மேலும் காதலை வைய்ந்தால் நீ வெறும் சடப்பொருள்...காதலை புரிந்து கொள்ள தெரியாத அறிவற்றவன் என்றே எண்ணுவேன்..” என்றேன். அவன் அமைதியானான். அவனால் வேறு எதுவும் பேச முடியாதே. காரணத்தை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

மகிழ்ச்சியாக இருந்தால் இனிமை என்றும்..துன்பமாக இருந்தால் வலி என்றும் உரைப்பது உலக நியதி...! இதுவே, காதலின் வலியையும் பிரிவையும் ஒருங்கு சேர அனுபவித்து கொண்டு காதல் மிக்க இனிமையானது என்று ஒருவர் கூறினால் என்ன ஆகும்? இது காதல் தோல்வியின் உச்ச கட்டம் அல்லது அவருக்கு பித்து பிடித்து விட்டது என்றே உரைப்பார்கள்.

காதலித்து விட்டோமே என்பதற்காக எதிர்ப்புக்களை மீறி காதலில் வெற்றி கொள்வதாய் நினைத்து திருமணம் முடித்து அதன் பின் பலரின் கண்ணீரை சம்பாதிப்பது அல்ல காதலின் உண்மையான வெற்றி...!

பிரிந்து விட்ட காதலை எண்ணி தினம் கண்ணீர் வடித்து சுற்ற உறவுகளையும் சோகத்தில் ஆழ்த்துவதல்ல காதலின் வெற்றி...!

உண்மையான காதல் வெற்றி என்பது, எந்த வலியிலும், பிரிவிலும், எத்தனை ஆண்டு கடந்தாலும் உடலின் ஒவ்வொரு உதிரத்தின் அணுவிலும் அதே காதல் ஊறியிருப்பது தான். நிராகரித்து சென்று விட்ட காதலனோ காதலியோ எங்கிருந்தாலும் நிச்சயம் அவர்களை இதயத்தில் இருத்தி மானசீகமாய் காதலித்து, அவர்கள் வெறுத்தாலும் அவர் தம் முகத்தினை எண்ணி பூரிக்கும் காதல் தான் உண்மையான காதல் வெற்றி..!!!

இங்கு இருவரும் அருகருகே இல்லாவிடினும் உயிரோடு இரண்டறக்கலந்து விட்ட காதல் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்...! இந்த காதல் வெற்றியை தமதாக்கி கொண்டவர்கள் இன்று எத்தனை பேர்??
உலகத்துக்கு தெரியாத உன்னதமான வெற்றி இது...!!

உலகம் இதை தூற்றும்...! மிக இலகுவாக Love Failure அதுதான் இப்படி என்று இகழ்ந்து விட்டு போவதுண்டு. இந்த அவச்சொல்லுக்கு அஞ்சி பல பெண்கள் குடும்பத்திற்காகவும் சமூகத்திற்காகவும் திருமணத்தை புரிந்து கொண்டு பின் முதல் காதலை மறக்க முடியாமல் த்த்தளிப்பதும், காலப்போக்கில் மறந்தும் போவதுண்டு. ஆண்களோ அல்லது பெண்களோ ஒரு சிலரே திருமணத்தை வெறுத்து தனிமையில் வாழ்வதுண்டு. அவர்களின் மனம் காதலில் வெற்றி கொண்டதாய் தான் என்றுமே இருக்கும். உலகம் எப்படி அவர்களை நோக்கினும் அவர்கள் காதலின் வெற்றியை தமதாக்கிக்கொண்ட காதல் சாம்ராச்சியத்தின் முடி சூடா மன்னர்கள்...!!!

உண்மையில் என் தனிப்பட்ட கருத்துப் படி காதல் ஒரு சமுத்திரம். அதை எல்லோரும் வேடிக்கை பார்க்கலாம், மெல்ல கால் நனைக்கலாம். கொஞ்சம் துணிவிருந்தால் அதன் மேல் பயணமும் செய்யலாம். ஆனால் எல்லோராலும் ஆழக்கடல் போய் முத்துக்குளிக்க முடியாது. அது ஒரு சிலராலேயே அது முடியும்.

இன்று காதல் என்ற பெயரில் பல ஏமாற்று வேலைகளும், கலாச்சார சீர்கெடுகளும் நடைபெறும் அதே வேளை உண்மை காதலும் உயிர் வாழ்கின்றது என்பதில் சிறு நிம்மதியே. இருந்தாலும் அதிகமான காதல் வெறும் புஷ் வாணங்களாகி விடுவதால் இன்றைய கால கட்டத்தில் உண்மைக்காதலுக்கு கூட மதிப்பு இல்லாமல் போய் அவற்றை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை உருவாகி உள்ளமை வேதனைக்குரிய கசப்பான உண்மையாகும். 




பின்னூட்டங்களுக்கு.....
http://www.facebook.com/notes/arasi-kavithaikal/katal-vei/290369018403

Tuesday 2 February 2010

தமிழனின் ஒற்றுமை...!!!

ஒருமுறை இலங்கையின் சிறைச்சாலை ஒன்றிற்கு ஒரு வெளிநாட்டவர் ஒருவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.அவர் அங்குள்ள கைதிகளை பார்வையிடுதற்காக வந்திருந்தார். அவர் சிறைச்சாலையை சுற்றி பார்த்தவாறு வந்து கொண்டிருக்கும் போது,ஓரிடத்தில் பல முறையில், பல கைதிகள் இருப்பதை அவதானித்தார்.

அதாவது அவ்விடத்தில்,ஒரு பதுங்கு குழியினுள் சில கைதிகள் அடைக்கப்பட்டு, சுற்றி வர முட்கம்பிகளால் வேலி இடப்பட்டு, மேற்பாகத்திற்கும் முட்கம்பிகளால் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது...

அதே போன்று பக்கத்தில் ஒரு பதுங்கு குழியினுள் சில கைதிகள் அடைக்கப்பட்டு சுற்றி வர முட்கம்பிகளால் வேலி இடப்பட்டிருந்தது. மேற்பாகம் திறந்து விடப்பட்டிருந்தது..

இன்னும் சில கைதிகள் பதுங்கு குழியில் மட்டும் விடப்பட்டிருந்தார்கள். சுற்றி வர எந்தவித தடுப்பு வேலிகளும் இடப்பட்டிருக்கவில்லை...

ஆச்சரித்துடன் அந்த வெளிநாட்டவர் அருகில் வந்த சிறைச்சாலை அதிகாரியிடம் வினவிய போது, அந்த அதிகாரி கூறிய விளக்கம்...
இந்த மூன்று பகுதி கைதிகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான குற்றங்களை புரிந்திருந்தாலும், நீங்கள் முதலில் பார்த்தவர்கள் வெளிநாட்டவர்கள். அவர்களை பதுங்குகுழியில் மட்டும் அடைத்தால் தப்பிக்க கூடும் என்று கருதி, அவர்களை சுற்றி வேலி அடைத்து மேற்பகுதியையும் அடைத்துள்ளோம்..

இரண்டாவது பகுதியினர் சிங்களவர்கள். இவர்களுக்கு பதுங்குகுழியிலிருந்து மட்டுமே தப்பி செல்ல தெரியும்... மேற்பகுதியினூடாக தப்பித்து செல்ல அறிவும் போதாது, துணிவும் போதாது...!

மூன்றாவது பகுதியினர் தமிழர்கள்...! இவர்களின் அறிவிற்கும், துணிச்சலுக்கும், வீரத்திற்கும் இந்த பதுங்கு குழியோ முட்கம்பி வேலிகளோ ஒரு பொருட்டல்ல.. தகர்த்து எறிந்து விட்டு சென்று விடுவார்கள்...!
 
ஆனால்,,,,,,,,,,, தமிழன் ஒற்றுமை இல்லாதவன்.ஒன்று சேர்ந்து தப்பி செல்ல மாட்டான்.தப்பிக்கும் போது யாராவது ஒருவன் காட்டி கொடுத்தே தீருவான். 
எனவே அவர்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.அவர்களின் ஒற்றுமையின்மையே எமக்கு பெரிய பலம்.அதனால் அவர்களுக்கு அடைப்புகள் இடப்படவில்லை என்றாராம் சிரித்தவாறே..
அந்த வெளிநாட்டவர் ஆச்சரியத்துடன் வெளியேறிச்சென்றார்...!!

சொல்லுரு : அரசி 

அன்புத்தந்தையின் உள்ளத்திலிருந்து....

Saturday 30 January 2010

ஏழையின் ஆசை...!!!



அலங்காரக்கந்தனவனின்..
அழகு வீதி தனில்,,,
அலை அலையாய் மோதி வரும் கூட்டத்தில்
அப்பாவின் கை பற்றியபடி நான்..!!
அரோகரா ஓசையிலும்
அரைகுறையாய்...,
”அம்முக்குட்டி கையை விடாதே..”
அடிக்கடி முணு முணுத்தது..
அப்பாவின் குரல்...!!!

அசைந்தாடிடும்
அலங்காரப்பொம்மைகள்...!
அதிசயமான விளையாட்டு கார்கள்..!
அலங்காரமாய் அங்காடிகள்..!
அங்கலாய்த்தபடி நான்..!!!

அப்பாவின் கரங்களை
அசைத்து...
அப்பாவியாய் நடித்து,,
அள்ளி வீசினேன்..!!
அவரை நோக்கி ஏக்கப்பார்வை ஒன்றை...

என் முயற்சி பலனளிக்க...
அடுத்த நிமிடம்
அங்காடி முன்னால்..

ஆவலோடு பொம்மை ஒன்றை..
ஆட்காட்டி விரல் காட்ட...
ஆயிரம் ரூபாய்கள் என ஒரு பதில்..!!
ஆசையோடு நான் கேட்டதால்...
இல்லாத பணத்தினை
இருக்கின்ற சட்டைப்பையில்..
தந்தையவர்...
தட்டுத்தடுமாறி...தேட...

தலை குனிய வைக்குமோ
தந்தையினை...????
????

”பிடிக்கவில்லை”
உரைத்த என்னை...
கண்ணீரோடும்...,,
கருணையோடும்,,
நோக்கின இரு விழிகள்..!!!
அரவணைத்தன கரங்கள்..!!
காணாமல் போய் விட்டது..!!
பொம்மை மேல் உண்டான ஆசை..!!!

”அரசி”

Friday 29 January 2010

இந்த காதலியின் இதயத்திற்கு நிகராய்... கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!






நர்த்தனம் ஆடிடும் அகல விழிகொண்டு,
நறை ஒழுக பேசிடும் செவ்வாய் மலர்ந்து,
சிறுக சிறுக சேர்த்து வைத்தநாணங்களெல்லாம்
சிந்தி சிதற செப்பினாளே ஒரு காதல் மொழி...

கண்ணில் தெரியும் குறும்புத்தனம்
காணாமல் போய் -அதில்
காதல் உட்கார்ந்து கொண்டது...
துள்ளி திரிந்த சின்ன மங்கை இவளை,,
பூமிக்கு நோகாமல் நடக்க வைத்தது
ஒரு உயிர்க் காதல்...!!!

காற்றோடு மெல்ல பேசினாள்..
காதலனை கண் பார்த்தால்,,,,,
கன்னங்கள் செவ்வானமாகும்..!!
கண்கள் இமைக்கும் கோடி முறை...

குழைந்து குழைந்து மழலை மொழி பேசி
குறும்புத்தனமாய் சின்ன சின்ன
குழப்படிகள் அரங்கேற்றும் சுட்டி
குழந்தையாய் ஒரு இதயமதில் தவழ்ந்தவளின்,,,
குட்டி குறும்புகள் மறைந்து,,
குரூரமாய் அவள் மாற்றம் பெற,,
காரணமாகிவிட்டது அதே உயிர்க்
காதல்.....!!!



காதலனின் கண் பார்க்க...
காதலோடு,,,
காத்திருக்கும்,,,முதிர் கன்னியாய்...
காலத்தோடு போராடும்,, முதியவளாய்...
காணும் இடமெல்லாம்,
காதலனின் அசைவை,
காண்கின்ற பைத்தியக்காரியாய்...
காறி உமிழ்கின்ற கூட்டத்திற்கு அசிங்கமாய்...
காட்சிப்படுத்தி விட்டு, ஏகியவனை நினைத்து,
காலமெல்லாம் கண்ணீர் வடிக்கும்,,,இந்த
காதலியின் இதயத்திற்கு நிகராய்...
கட்ட முடியுமோ ஒரு தாஜ்மஹால்...!!!

"அரசி

எப்போது,, வாழ்வோடு போராடி வாழ்ந்து முடிப்பது...???





பசி நேசமாகியது..
பணம் தூரமாகியது..
உறக்கம் வீதிக்கு வீதி
மாற்றம் கண்டது...!

வறுமையோடு போராடும்,
துரதிஷ்டசாலி நான் - எப்போது
வாழ்வோடு போராடி,
வாழ்ந்து முடிப்பது...?

"கல்வி" என்பதை எழுதி பார்ப்பதற்கும்,
கற்றதில்லை நான்...
கண்டு கேட்டு பார்வையால் அனுபவித்து..,
கண் மூடி கனா காண்பதற்கு கூட
உறக்கம் என்னை அனுமதிக்காது...
உண்டி சுருங்கிய எனக்கு,,,
கொடும் பனியும்,,,
கோடை வெயிலும்
பழகிப்போன தோழர்கள்..!

இளம் பிஞ்சு சிசுக்களையும்..,
கர்ப்பிணித்தாய்மாரையும்,,
இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்து
இனமொன்றை சுத்திகரித்த,
இறைவனே...!!!
இயலாமையோடு தள்ளாடும் - எனக்கு
இயமன் அழைக்கும் நாளை முன்னுக்கு
இட்டு கொடு...!!!

" அரசி "