Search This Blog

Monday 30 September 2013

எப்பொழுதும் பிணைப்பாய்,,, முப்பொழுதும் இருப்பாய்...!! (எப்பொழுதும்)


அன்பு குற்றுயிரிலும்....,
தென்பு உயிரற்றும் 
உணர்வற்ற வெற்று மெய்..! 
வாழ்வே முற்று பெற்ற நிலையாக
தாழ்வே எதிலும் பெற்ற சாதனை...!!!

சத்தியமாய் உண்மை....
பைத்தியமாய் உள்ளே...!

எப்பொழுதும் பிணைப்பாய்
முப்பொழுதும் இருப்பாய்...!!

கண்களோடு உறவாடி 
கரைத்திடும் கனமான 
கடுந்துயர்களை -என்
கள்ளக்கண்ணீர்....!!! 
   
நோக்குவோரின் கண்களுக்கு 
தொக்கு நின்று அள்ளிச்சொரிவாய் 
மும்மாரியாய் நிரினை- என் 
முரண்டு பிடிக்கும் நெஞ்சம் ஈரமாகும்...!
புரண்டு உருளும் மெய்யினை தாலாட்டிடுவாய்..!


உறக்கம் என்னும் திரைக்கு பின் உன்னோடு
உறவாட வரவேற்பேன் போகத்துடன் தினமும்...

விழிகள்  பிரசவித்து கன்னங்களில் தவழ்ந்து 
விஞ்சிடும் மயில் இறகின் வருடலாய் நீ தழுவும் 
தொடுகை யால் வலி மிகுந்த நெஞ்சச்சிறை நீங்கி 
விடுகையாவேன் முற்றிலுமாய்....!!!

எப்பொழுதும் என்னருகே 
தப்பாது ஓட்டிய கண்ணீரே 
எங்கே நீ....????

உலகத்தமிழ் வானொலி என்னோடு 
உறவாடும் பொறாமையால் உன்னோடு 
கொண்ட பிணைப்பை அறுத்து போனாயோ...???

தாண்ட முடியா துன்பங்களையும், 
தோண்டிப்புதைத்தாலும் மீண்டும் எழுந்திடும் வலிகளையும்
வரிகளாக்கி இதயம் பண்பாகிடும் "கவிதையும் கானத்தினையும்" 

வலி இதயம் பம்பரமாய் சுழன்று நிலை மறந்திடும் "பம்பரத்தினையும்" 
தமிழ்ச்சொற்களில் அபிநயம் பிடித்து புதிர்  எடுத்து அறிவோடு விளையாடும் "சொல்லாடலையும்"  
சிரிப்பு என்ற ஒன்றை நினைவு படுத்தி துன்பத்தை வெடித்து 
தகர்த்து எறிந்திடும் "சண்டே சரவெடியினையும்"  
வானலைகளில் பிடித்து கொடுத்து 
காதோரம் காதல் பேசும் உலகத்தமிழ் இணைய வானொலி...! 
எப்பொழுதும் பிணைப்பாய் 
முப்பொழுதும் இருப்பாய்...!

சலிக்காது விழித்து இருப்பேன் எப்பொழுதும் உன்னோடு...
வலிக்காது செழித்து இதயம் எப்பொழுதும் இருப்பதற்காய்.....!!!


அரசி நிலவன்




லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எப்பொழுதும்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Thursday 26 September 2013

ஏழ்மை...!!!

உடைமைகள் இழந்தோம்
உலகம் தராசினை நீட்டியது...! 
உதிரங்கள் கொடுத்தோம்
உயரத்தான் இருந்தது தராசு...!
உயிர்களையும் ஈந்தோம்...!
உலகத்தின் படிகளுக்கு சமனாகவில்லை..!!!
உலகத்தராசின் சமனுக்கு ஈடாய் வழங்கிட 
ஏதுமில்லா ஏழைகள்....!! 


நிலங்கள் சுரண்டப்டுகின்றன....!
நீர் உறிஞ்சப்படுகின்றது...!
கடல் அன்னையும் தூரமாய்...
கட்டுமரங்களின் அதிகரிப்பால்....!
வறுமையின் நிமித்தமே 
வந்தேறியவர்கள் அவர்கள் ...! 
கசங்கிய துணி தான்...
கல்லும் முள்ளும் கொண்ட பாதம் தான் 
அன்றாடம் உழைப்புத்தான் - ஆனாலும் 
அச்சப்பட்டு நடுங்கியதில்லை..!
  
வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று அவர்களை 
வரையறுத்து வைத்தாலும்....
வட கிழக்கில் வாழ்வோரை  விட 
வறுமையற்று இல்லையே...!

வந்தேறிய குடிகளை 
வந்த வழி திருப்பிட திராணியற்ற பண்டாரவன்னியன் 
வம்சத்து  ஏழைகள் ......!
வழி வழியாய் தொடர்கின்ற வரலாறே...


அசர வைக்கும் அரண் மனை இல்லம் 
அழகிய ஆடம்பர மகிழுந்து 
அவ்வப்போது அயல் நாட்டுக்கு சுற்றுலா
அனு தினமும் இறைவனுக்கு காணிக்கை
அள்ளி அள்ளி கொடுத்தாலும் வற்றிடா செல்வம்...!!
அட்சய பாத்திரம் இருந்தால் ஏழை இல்லையா??
அந்தரத்தில் தன் உயிர் ஊசல் ஆடும் 
அநாதை தமிழர்களின் ஏழ்மை யாருக்கும் தெரிவதில்லை...!!

அன்று தொட்டு இன்று வரை 
அதிகார பரவலாக்கல் பிச்சைத்தட்டில் 
அங்கு மிங்கும் விழும் சில்லறைகளை
அண்ணாந்து நோக்கி ஏம்பலிக்கும்
அக்னி நெஞ்ச தமிழர்களின் ஏழ்மை நிலை...
அகிலம் அறிந்திட வாய்ப்பில்லை....!!!


அரசி நிலவன் 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஏழ்மை" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

  

தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!!!


தமிழின் காதலால் கலம்பகம் கேட்டு
தன்னையே சாம்பலாக்கிய நந்திவர்மனை ஒத்து
தமிழீழத்தின் மேல் உயிர் கொண்டு பட்டினித்
தணலில் வெந்து கருகி பன்னிரு நாளாய்
தன்னுயிரை வருத்தி சிரித்து சென்றவன்..!

ஊரெழுவில் உதித்த உதய சூரியன்...!
ஊட்டம் நிராகரித்து நீர் துறந்து
ஊனை உருக்கி உயிரையும் ஈர்ந்தான்
ஊமையாகிய இந்திய வல்லாதிக்கத்தால்..!!!


நல்லூரில் பார்த்தீபன்
நாவறண்டு நாடி துவண்டான்...!
பல்லூரிலிருந்தும் திரண்ட
பாசக்கார உறவுகளின்
கண்ணீர்களை பறித்து...

தமிழீழத்தின் தாகத்திற்கு
தன் நீரினை பருக்கியவன்...!
தன்னிகரில்லா உயிரினை
தியாகத்தில் எரிய வைத்தவன்...!

வஞ்சகம்  இழைத்த அயல் தேசத்தால்
நெஞ்சகம் துவண்டு போன உறவுகளின்
சந்ததிகளும் கண்ணீரோடு நினைவேந்தும்
பந்தத்தோடு பிரிந்து சென்றவன் திலீபன்...!!


தமிழ் மனங்களை சுட்டெரித்த செஞ்சூரியன்...!!
தமிழினத்தை இருள் நீங்கி விழிக்க வைத்த அகல் தீபம்..!!
தலைவரே  கண்ணீர் சிந்திய கண்ணியத்தியாக வீரன்...!!

இந்திய வல்லாதிக்க தேசத்தை - நாணி
சிரம் தாழ வைத்த தியாகச்செம்மல்....!!

மக்கள் புரட்சி வெடிக்க வேண்டுமென்றாய்.!
மனம் குளிர வானத்திலிருந்து பார்ப்பேன்
மலரும் சுதந்திர தமிழீழமதை என்றாய்...!!!


காலங்கள் கடந்து தான் போகின்றன.....!
காத்திருப்பும் நீண்டு தான் போகின்றது...!
தமிழீழமோ தனியரசோ ஆண்டாலும்
தரணியில் உன் நாமம் அழியாது அண்ணா...!!!
தமிழர்கள் இங்கு வாழும் வரை.............................



அரசி நிலவன்


  

Wednesday 25 September 2013

ஐம்பொன்....!!!



ஐம்பொன்னின் நாணத்தால்
காத்து கருப்பு அண்டாதாம்..!
விலை கொடுத்து மழலை காலில்
சிலம்பு ஒன்று அணிவித்தாள்
தாய்லாந்து அயல் சிநேகிதி...!
தாய்நாட்டில் மட்டுமில்லை
தாய்லாந்திலும் காத்து கருப்போ....?

தொண்டைக்குள் சிக்கி கொண்டது
தொலைந்து போனவைகள்...!
நினைவில் நிற்பவை....!
கனவாகி போனவை....!
உயிரை உலுக்கி எடுப்பவை...!


எந்த காத்து கருப்பு குடித்து போன
எண்ணிலடங்கா உதிரம் - ஈழ
மண்ணில் சகதியாகி போனது....?

ஐந்தடிக்கொரு ஐம்பொன் சிலைகள்
அடங்கா மண்ணில் இருந்தன அன்று..!
இன்றும் இருக்கத்தான் செய்கின்றன....
கண்ணில் தென்படாத காத்து கருப்பு
மண்ணில் மனிதர்களை
எட்டிச்சோ தொட்டிச்சோ.?
நான் அறியேன்.....



கண்ணுக்கு புலப்பட்ட
சன்னங்களும் எறிகணையும்
ஐம்பொன் சிலைகளையே  நன்கு
எட்டி தொட்டு பதம்பார்த்தன அன்று..!


இன்றும் பச்சை நிற காத்து ஏ கே 47 உடன்
காவல் காக்கின்றது ஐம்பொன் சிலைகளை...
காக்கி கறுப்பும் கூட துணையாக...


ஐம்பொன்னை தள்ளி வைத்து
களிமண் அரசாளுகின்றது...!
இடம் அபகரிப்பதை மிரட்ட
இயலாத ஐம்பொன் சிலைகள்
இல்லாத காத்து கறுப்பை விரட்டுமா??

ஐம்பொன் கொண்டு மனிதர்களுக்கு
காவல் செய்யும் அறிவாளிகளே....!
ஈழத்தை உலுக்கும் காத்து கருப்புக்கு என்ன காவல்
விளக்கமாய் தான் உரத்து சொல்லுங்கோவன்...!



அரசி நிலவன்



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஐம்பொன்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/

Tuesday 24 September 2013

மலைக்காற்று...!




மலைகளின் மடியினில்
அலையாய் தவழ்ந்து - வெம்மையை
வலை வீசி அள்ளி  ஊதலில்
சிலையாக்கி நகரும் சீதளக்காற்று..!!!

காதில் தேன் மொழி பேசி சிணுங்கி எங்கோ
காதல் சொல்ல விரைகின்றது விரைவாக..



ஊதற்காற்றின்
ஊடல் விளையாட்டுக்கு அஞ்சி
ஊமையாகி நிற்கின்றன மலையின் தளிர்ச்செடிகள்...!


தவழ்ந்து விளையாடும் குளிர்காற்றோடு
தகதிமி ஆட நெருங்கி வரும் வெண் பஞ்சு
முகில்களை முட்டி மோதும் பர்வத உச்சி
தொட்டுச்செல்லும் மலைக்காற்றால்
சொட்ட சொட்ட நனைகின்றது வெட்கத்தால்...!



பட்டும் படாமலும் தொலைவில்
எட்ட நின்று ஓரப்பார்வை பார்க்கும்
வட்ட வெண்ணிலாவும் நாணி
மேகத்திரையில் ஒளிந்து கொள்கின்றதோ..???



கண் சிமிட்டும் விண் மீன்களின்
பண் பாடும் இசை கேட்டுத்தான்
விண்ணுக்கும் விரைகின்றதோ
மண்ணின் மலைக்காற்று....!


ஊதற்காற்றில் ஊஞ்சல் ஆடும்
ஊதாப்பூக்கள் சொரியும் தேனினை
காதலிக்கு அபகரித்துச்செல்கின்றதோ
கார்காலக்கள்ளக்காற்று....!!

ஊரெல்லாம் பரவும் தேனின் கடியால்
ஊதற்காற்றின் திருட்டு அம்பலமாக - நாணி
ஊமையாய் திரும்புகின்றது மலையின் மடிகளுக்கே...

தளிர் புற்கள் அள்ளிப்பருக  சொரிகின்றது
குளிர் தேனை பச்சை மலை மீது....
தெளித்து புன்னகைக்கும்  குறும்புக்காற்று
ஒளிந்து கொள்கின்றது ஒன்றுமறியாதது போல...


தற்கொலைக்கு முயலும் மலையருவியினை
தடுக்க விரையும் மலைக்காற்று  சினம் கொண்டு
மலையடிவாரத்தை உதைத்து சாந்தமாகி
மறுபடியும் சிலிர்த்து எழுகின்றது மேலே...


மலைக்காற்றை உதறி விட்டு திமிர் கொண்டு
மலையருவி  பாறையோடு கை கோர்த்து
மகிழ்வோடு  செல்கின்றது ....
மலைக்காற்றை முறைத்தவாறே


மாயமாய் சுழன்ற  சுழல்காற்று
மலையின் உச்சியில் வெண் பஞ்சு முகிலோடு
மந்திரப்புன்னகை புரிந்து வெறுப்பேற்றுகின்றது
மலையருவியினை-தன்
மனம் விரும்பியவாறு....!!!


குளிர் காற்றோடு மனம்  திறந்து பேசி மலை உச்சியின் உச்சந்தலை
குளிர்கின்றது ஊதற் காற்றின் ஊதலை போன்றே.....!!!
மலைக்காற்றின் ஊதற்காதலுக்காக இன்னும் தவம் இருக்கின்றன...
மயக்கும் வெண்ணிலாவும் வண்ண விண்  மீன்களும்....!!!




அரசி  நிலவன்

*********************************************************************************



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "மலைக்காற்று" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்...... http://gtbc.fm/


Monday 23 September 2013

பறவையின் குரல்...!!!


பறவையின் குரல்களோடு
பிணைந்திருந்த மனித வாழ்வு
பிரிந்து காலமாயிற்று....!
பிரிந்த தாய் மண்ணோடு
பிரிந்து போனது  அன்றாட
பிணைப்புக்குரலிசைகளுமே...!!


அதிகாலை கொக்கரக்கோவோடு விடியல்..!
அங்கு மிங்கும் கீச் கீச் உடன் வானம்
அரைத்தூக்கம் கலைக்கும் அசைவோடு.....
அழகிய பச்சைக்கிளிகளின் கீ கீ புத்துணர்ச்சி..!

கட்டியம் கூறும் விருந்தினர் வருகையை
காவி வரும் கா கா குரலோடு
காதல் பறவைகளின் இனிய மழலை
காதிற்கு இனிமையான இசைகள்...!

சிட்டுக்குருவியின்
சிருங்கார இசைக்குரலில் மெய்மறந்து,
சின்ன சின்ன மைனாக்கள் பேசும்
வண்ண வண்ண குரலில் பின்தொடர்ந்து,


குயில் பாடும் குரலோடு மயங்கி - பின்
மயிலின் குரலோடு அரண்டு எழுந்து - நடை
பயிலும் புள்ளினங்களின் சின்ன மழலையில்
உலகம் மறந்திடும் நினைவு...!

அன்றில் பறவையின் அகவலும்
தேன் குருவியின்(ஹம்மிங் பேர்ட்) தேனிசைக்குரலும்
கொண்டைக்குருவியின் கொள்ளை கொள்ளும் இசையும்
நினைவுகளாகி தொலைந்து நாட்களாயிற்று....!

இயற்கையின் அணைப்பில் இறுகிக்கிடந்த
இனிமையான வாழ்வு - இன்று
இயந்திரத்திற்குள் சுருங்கிய
இருண்ட உலகத்தில் இயற்கையின்
இனிமை காணாமல் போய் விட்டது....!!!


இன்னும் சேவல்களும் குருவிகளும் கிளிகளும்
இருக்கத்தான் செய்கின்றன.....!!!
முகப்புத்தகத்தில் முகம் புதைத்து
அகப்புத்தகத்தில் நிம்மதி தொலைத்து
அலையும் மானிடனின் பரிதாபத்தை
நிலைத்து நின்று கூவுகின்றன சேவல்களும்
சிரித்து கதைபேசும் பச்சைக்கிளிகளும் - இராகம்
இசைக்கின்றன குயில்களும் புள்ளினங்களும்
இரசிக்கத்தான் பாவம் மனிதனுக்கு நேரமில்லை....!


அரசி நிலவன் - தாய்லாந்து


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பறவையின் குரல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/

Saturday 21 September 2013

வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன் வன்மை காதலால்...!!!


வலுவான இதயத்தை 
வலிய வம்புக்கிழுத்து,,
வலிந்த வன்னி வயன 
வல் அம்புகளால் துளைத்து,,
வலிக்க வைப்பதனால்.... 
வல்லவன் நீ எதில் 
வலங்கொள்கின்றாயோ...??

வழியற்று யான் உன்னை 
வழிக்கொள்ளவில்லை..!
வழுக்கினேன் உன் காதலில்..!
வழிபார்த்தேன் பற்பல உன்னிடம்...!
வழிபட்டேன் வழிபடுகடவுளாக...!

வழுக்களை வாரி இறைத்து,,
வசைமாரி பொழிந்து,,
வன்சொல் உதிர்த்து,,
வன்மம் தீர்க்கின்றாய்...!


வஞ்சித்து வசீகரித்தாய்..!
வஞ்சனாயினும்,,,,
வழுவாய் முடியாமல் தவிக்கின்றேன்
வன்மை காதலால்...!!!



அரசி நிலவன் 

Thursday 19 September 2013

விந்தை அன்பு புரிந்த தந்தையுமானவளே....!! (ஆறுதல்)


அன்பிற்கு  மட்டுமன்றி
ஆறுதலுக்கும் முகவரி
அன்னையே...!

தந்தையின் பிரிவில்
சிந்தை கலங்கி நின்றோம்..!
எந்தையும் தாயுமாகி
விந்தை அன்பு புரிந்த
தந்தையுமானவளே....!!



கந்தையில்லா துணிகளும்
சந்தையில் வகை வகையாய்
விளையாட்டு பொம்மைகளும்
அள்ளி வந்து குவிப்பாய்....!
அழகழகாய் கல கலக்கும் எமை
அகம் குளிர்ந்து அரவணைத்து
அன்பாய் உச்சி முகர்ந்து
ஆறுதல் கொடுத்து
ஆறுதல் அடைவாய்...!


ஆறுதல் பட உனக்குத்தான்
ஆருமில்லை அந்த தருணங்களில்...
ஆளாகாமல் நின்ற அரும்புகள் எமை
ஆட்படுத்தி அழகு பார்த்தாய்....!
ஆறுதல் ஆறுதலாகக்கூட உன்னை
ஆற்றவில்லை - மாறாய்  என்னை
ஆறுதல் படுத்திக்கொண்டும்
ஆறுதலாகவும் ஆற்றுப்படுத்தும்
ஆலயம் அம்மா நீ....!!!


பெண்மையாய்  என்னை
மென்மையாய் படைத்து
திண்மையாய் வாழப்பழக்கி
இன்மையிலும் புன்னகைத்திட
தொன்மை தொட்டு உணர்த்தி
உண்மையாய் என்றும் விளங்கிட
தன்மையாய் உரைத்தவள்- என்னுயிர்
பன்மையாகும் போதும்
பரவசம் அடைகின்றாள்
அருகிருந்தே ஆறுதலாக....என்
ஆறுதலுக்காக தன்
ஆற்றாமைகளை
ஆற்றத்திணறி
ஆற்றுப்படுத்துகின்றாள் எனை
ஆறுதல் என்ற உருவமாகி...


வாய் திறந்து தான்  பேசிட வேண்டுமா??
அருவமான ஆறுதலை அன்னையின்
உருவத்தில் கண் நோக்குகின்றேன்..!

அகராதி போதாது
அன்னையுன்னை விழிக்க...
ஒற்றைப் பதம் கொண்டு
ஒருமித்து உரைக்கின்றேன்..!!


ஆறுதலின் மின்னஞ்சல்..!
ஆறுதலின் கணிப்பொறி..!
ஆறுதலின் வரைவிலக்கணம்..!
ஆறுதலின் அகராதி..!
ஆறுதலாக அன்பை கொட்டும்
ஆரவாரமற்ற அன்னை நீயே...!!!

  


அரசி நிலவன்
 



லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "ஆறுதல்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/


Tuesday 17 September 2013

"எனக்காய்...!"

காற்றோடு  காது வைத்து காத்திருக்கின்றேன்...!
காற்றில் தவழ்ந்து வரும் உன் குரலோசை
காதுகளில் ஒலிக்க கேட்பதற்காய்....


ஒற்றைக்கவிதை ஒன்றில் - என்
உயிரினைக் கயிறு கட்டி இழுத்து விட்டாய்...!
நான் நீயாகி நீ நானாகி
நாமாகி நாள் கடந்தும்
நாடித்துடிப்பாக என் நினைவுகள்
நாளும் துடிக்கின்றது உன்னில்...!
நான் இங்கே நீ அங்கே
நாட்கள் நம்  நினைவுகளின்றி
நகருவதில்லை நமக்கு....!

பசித்திருந்தாலும்,,
பல இடர்கள் எனை அணைத்தாலும்
பஞ்சம் என்னை நெருங்கி வந்தாலும்,
பஞ்சாய் பறந்து ஓடிடும்.....!
நெஞ்சம் திறந்து பேசும் உன்
வஞ்சமில்லா பேச்சுக்களால்..!



கஞ்சத்தனம் இல்லாமல் - உன்
நெஞ்சத்திலே மாமனை கட்டி
வஞ்சி என்னை சொர்க்கத்தை
விஞ்சி நிற்கும் இன்பத்தில்
சஞ்சரிக்க வைக்கும் உன்
கொஞ்சிப்பேசும் இதமான அன்பு
மிஞ்சிடும் என் வலிகளை.....!

அஞ்சி நடுங்கி அடைபட்டிருந்தாலும்
கெஞ்சி தொலைபேசி பெற்று
கொஞ்சிடும் உன் பேச்சுக்கள்
எனக்காய் உளி கொண்டு
செதுக்கி நீ கொடுப்பவை...!


செய்வதறியாது கண்ணீரில்
கரைகின்றாய் - காற்றிலே
கலந்து வரும் உன் கண்ணீரின் உப்பில்
கறி சமைத்துக்கொள்கின்றேன் நான்....!

கண்ணாளனே.....!
கனவுகள் கொடுத்து அனுப்புகின்றாய்  இரவுகளிடம்
கடிதங்கள் சொல்லாத சங்கதிகளை
கனவுகள் உணர்த்தி விட்டு காணாமல் போகின்றன..
கணப்பொழுதுகளில்....!


கம்பி வாழ்வினை கடினப்பட்டு வாழ்ந்து கொண்டு
கண்ணீர் சிந்துகின்றாய் எனக்காக.....!
கடைசி வரை இவ்வாறே இருந்திட போவதில்லை...!
கண்கள் சேர்ந்திடும் காலம் வெகு தொலைவில் இல்லை...!

அருகருகே நாம் இருந்த போதும் காதலை
அறிந்து கொண்டதில்லை முழுதாக..!
அர்த்தமில்லா இந்த பிரிவு கூட எனக்காய் போலும்..!

காதலனே கடவுள் மேல் நான் கொண்ட
காதலின் ஆழத்தினால் வழங்கப்பட்ட
காதல் பரிசு "எனக்காய் நீ...!"  


அரசி நிலவன்


லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "எனக்காய்" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/

Monday 16 September 2013

பிளவு...!

மொழியால் வேறுபட்டு உன் மொழியா என் மொழியா என்றாகி
தம்மொழிக்கே முன்னுரிமையும் கொடுத்து 
தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழர்களையும் பின்தள்ளிய 
தரங்கெட்ட இனவாதச்சிங்களம் கஞ்சத்தனம் காட்டியது
தமிழர்களின் உரிமையைக்கொடுத்திட
தகுந்த நல்ல தாராளம் காட்டியது
தமிழர்களின் உயிர்களைப்பறித்திட


சிங்களம், தமிழ் என்று பிளவு படுத்தியவர்கள்
சிங்களத்தீவில் பிளவினை நன்றாக விசாலமாக்குகின்றார்கள்
சீனாவை அந்த பிளவிற்குள் சொருகி- பெரிய
சீனா கடினப்பட்டு ஒருவாறு புகுந்து விட்டது....!!!
சின்னப்பிளவு பெரிதாகி தளர்வதால் எப்போது
சின்ன வாயில் கிடைக்கும் புகுந்திடலாம் என
சுற்றி நிற்கின்றனவாம் சில வல்லரசு நாடுகள்
அணில் ஏற விட்ட நாய்கள் போன்று....



சிங்கத்தின் நகம் பட்ட முயல் குட்டிகளாய்
சினம் தாங்காது அங்குமிங்கும் அலைகின்றன
தமிழின உறவுகள்....


பூசாவில் இதயம் துடிக்கின்றது
பூநகரியில் பிரிந்திருக்கும் மனைவிக்காக...
பம்பை மடு தடுப்பில் தவிக்கும் கணவனை நினைத்து
பளையில் ஒரு பெண்மை தேநீர் கலக்கின்றாள்
பயணிகளுக்காக......
அடங்கா மண்ணில் அதிகாரமாய் வாழ்ந்தோர்
அடக்கி ஒடுக்கப்படுவதும்.
அங்கும் இங்குமாய் பிளவு பட்டுக்கிடப்பதும்
அரக்க குணம் படைத்த இனவாத சிங்களனின்
அர்த்தமில்லா பேரினவாதப்பிளவால்...!!!


அலை கடல் மீதிலே
ஆங்கோர் மீன்பிடிப் படகை நம்பி
அருமை உயிர்களை பணயம் வைத்து
அடிக்கடி விபத்தாகியும் அச்சமின்றி
அந்தரத்தில் பயணித்து கரை சேராமல்
அந்த சமுத்திரத்தின் கோரப்பசிக்கு தம்மை
அள்ளிக்கொடுப்பதும் - இலங்கை என்ற
அரக்க நாட்டின் கோர முகத்தைப்பார்த்து
அரக்கப்பரக்க ஓடி வருவதாலேயே - ஒருவேளை
அந்த இலங்கை சொல்லித்தான் சமுத்திரம்
அலைகளால் அடித்து விரட்டுகின்றதோ??
அங்கேயும் இனவாதப்பிளவா தமிழன் என்று...!

இலங்கை என்றொரு தேசத்தில்
இன்று வரை எத்தனை எத்தனை உறவுகள்
தந்தை, அண்ணன் , கணவன் மாரை
அந்நிய தேசத்துக்கு அகதியாக
நாடு கடத்தி விட்டு தனித்திருந்து
நாளும் பொழுதும் ஏக்கத்தில் கடக்கின்றார்கள்..

இலங்கை என்ற தேசத்தின் பிளவு
இன்னும் பிரிக்கப்படுமா பிரிவினைகளால் - இல்லை
எதிர்காலமதில் தன்னும் ஒன்றாகுமா- அட
கனவு தன்னும் காண முடியவில்லை...!
கனவில் கூட கொட்டச்சிரிப்புடன் சிங்களம் தான்
கர்சிக்கின்றது,,,,,
இசைவாக்கமே அடந்திட்டோம் - நாம்
இந்த இனவாதப்பிளவால்....



அரசி நிலவன்






லண்டன் GTBC.FM இன் கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்காக "பிளவு" என்ற தலைப்பில் இன்று வழங்கிய கவிதை இது.


கவிதையும் கானமும் நிகழ்ச்சி லண்டன் நேரம் பிற்பகல் 3 மணிக்கும் மறு ஒலிபரப்பு பிற்பகல் 9.30 மணிக்கும்......http://gtbc.fm/



Sunday 15 September 2013

தமிழ் நாட்டில் உள்ளோர் நரியின் ஊளையிடலை தொடர்ந்தும் நாட்டிற்குள் அனுமதிக்க போகின்றார்களா??

உலக வல்லரசுகளே மூக்கில் விரல் வைத்து அசரக் கூடிய மிகத்திறமையான ஒரு நிர்வாகக் கட்டுமானத்தை கட்டியாண்ட, மக்களைப் பாதுகாத்து  போராளிகளை  வழி  நடாத்தி குறுகிய காலத்தில் பிரமாண்டமான அரசமைப்பை நிறுவி நீதியை நிலை நாட்டி ஒரு கட்டுக்கோப்பான   நிர்வாகத்தில் கொடி கட்டிப்பறந்த தமிழீழ விடுதலைப்புலிகளைப் பற்றி ஒரு குறை குற்றம் கூறக்   கூட வாய் திறக்கவே சிந்திக்க வேண்டும். ஆனால் எவ்வளவு ஒரு துணிச்சல்??? ஒரு சிங்களவன் தன்னும் இந்த நினைப்பை உண்மையாக்க துணிந்ததில்லை. நாம் எல்லோரும் காறி உமிழ்கின்ற எச்சில்களில்  இந்த அற்ப புழு  மூச்சுத்திணறி தத்தளிக்க வேண்டும்.

வல்லரசாகிடப்போகும் இந்தியா என்னும் அண்டப் புளுகை அள்ளி விட்டுக்கொண்டு அரைகுறை அரசாங்கம் நடாத்தும் அம்மணிமாரின் அரச வரையறைக்குட்பட்ட இந்திய வல்லாதிக்க தேசத்தில் நிர்வாக சேவைகள் அதிகாரியாக பணி புரிந்தவராம் இந்த சிவகாமி. இவர்களைப்போன்றவர்களின் நிர்வாகத்தில் தான் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கயவர்களால் குதறப்படுவதும் பதின்ம வயது பாலகிகளின்  கருக்கள்  நரிகளால் குதறப்படுவதும் வழமையான நிகழ்வுகள் ஆகி தொடர்கின்ற தொடர்கதைகளாக மாற்றம் பெற்று விட்டனவே. அதாவது சிவகாமிக்கு நன்கு பழக்கமான நிகழ்வுகள் அவை. அவரின் நிர்வாக சேவையில் அவர் கற்றுக் கிழித்து அதிகாரம் செலுத்தி வந்த நாட்டில் நடக்கும் ஒரு சிறிய அட்டுழியத்தைத் தட்டி கேட்க துப்பிலாத சிவகாமி கடல் தாண்டி உள்ள ஈழத்துக்கு போய் விட்டாராம் பெண்களின் உரிமை பற்றி பேச. இல்லை இல்லை  விடுதலைப்புலிகளின் பெண் புலிகளை வசை பாட.

நான்கு வருடங்களுக்கு முன்பு எம் வீரப்பெண் புலிகள் தெருநாய்களாலும் நரிகளாலும் நயவஞ்சகமாக குதறப்பட்டு, இணையங்களிலும் சனல் 4 இலும் கிழிபட்டு தொங்கும் போது அம்மணி வேற்றுக்கிரகம் சென்றிருந்தாரா.? அல்லது அம்மணியின் இந்த வீர வசனங்களை அவர் புலிகள் ஆட்சியில் இருக்கும் போது கேட்டிருக்கலாமே...??? ஒருவேளை இப்பதான் சகாக்களை வைத்து திட்டம் தீட்டி இப்படி ஒரு யோசனை மூலம் பிரபலம் பெற முடிவு பண்ணியிருக்கின்றார்களோ?

ஒரு பாலியல் பலாத்கார கொடிய நிகழ்வு இடம்பெற்று, இன்று அரையாண்டு முடிகின்ற நிலையில் தான் அதுவும் அரையும் குறையுமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு (அதுவும் மாணவர்களின் போராட்டம் மக்களின் எதிர்ப்பு என்பனவற்றிற்கு அஞ்சி) இருக்கின்றது. இந்த அம்மணியின் சேவைகள் பெற்றுக்கொண்ட ஒரு ஜனநாயக நாட்டில் மனிதாபிமானம் மற்றும் பெண்மைக்கு கிடைக்கின்ற மரியாதையின் இலட்சணம் உலகறிந்த உண்மையாக இருக்கும் போது இந்த அம்மணி தன் மூளையினை கழற்றி அடகுக்கடையில் வைத்து விட்டு விவாதம் பேச வந்ததா?? அல்லது மூளையே இல்லையா ?



இனவாதம் என்ற ஒன்று தலை தூக்கியதால் தால் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டது . ஆனால் இந்தியாவில் அதுவும் தலை நகரில் பெரும்பான்மை பெண்ணே குரல் வளை நசிக்கப்பட்டு கதறக் கதறக் கருவறுத்துக்கொல்லப்பட்டாள். தமிழ் பெண்கள் தமிழ் கயவர்களால் திராவகம் தெளிக்கப்பட்டும் பலாத்காரம் பண்ணப்பட்டும் உருக்குலைக்கப்பட்டதிற்கும் இந்த மாதிரியான பொறுப்பற்ற நிர்வாக சேவைகள் அதிகாரிகளும் அவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களும் தான் முதற்காரணம் என்பது நாம் கூறித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உலக நாடுகளினால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று உறுதி  வழங்கபட்ட இந்திய நாட்டில் இருந்து கொண்டு உலகில் உள்ள எந்த பெண்ணை பற்றியும் பேசத் தகுதி இல்லாத போது பெண்களுக்கு பெருமையையும் மரியாதையையும் அள்ளிக்கொடுத்து பெண்ணடிமைத்தனத்தை தகர்த்தெறிந்த புலிகளை விமர்சிக்க என்ன அருகதையும் தைரியமும் இந்த அற்பம் தன்னகத்தே கொண்டுள்ளது.???




எது எப்பிடியோ உலகில் இன்று மிக மிக முக்கியமானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்பதை அறிந்து வைத்திருக்கும் வரை மகிழ்ச்சியே...! அதாவது கடவுளைப்பற்றி அவதூறு பேசினாலும் இவ்வுலகில் யாரும் இந்தளவு கொதித்து எழ மாட்டார்கள். இந்த உலகில் தமிழினத்தால் மிகவும் நேசிக்கப்படும் நிலையிலும் அவர்களின் நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் உரிய புலிகளைப்பற்றி பேசி பிரபலம் ஆக நினைத்து வந்த இந்த பெண்ணுக்கு யாரும் அறிவுரை சொல்லவில்லை போலும். அல்லது புலிகளைப்பற்றி அந்த தெரு நாய்க்கு ஏதும் தெரியாது போலும். இல்லாவிட்டால் மற்றவர்களைப்போல் அதாவது சிங்களவனைப்போல் பயங்கரவாதி என்றோ அல்லது போர்க்குற்றம் என்றோ பிதற்றி இருக்கும். ஒட்டு மொத்தத்தில் ஈழத்தில் என்ன நடைபெற்றது என்று அறியாத இந்த அற்பம் எப்படி இந்திய நிர்வாக சேவைகள் அதிகாரியாகப்பணி புரிந்தது?
பெண்புலிகள் எதற்கு பயன்படுத்தப்பட்டார்கள் என்று விளக்கம் கொடுத்த இந்தப்பெண்ணும் அவ்வாறு தான் பயன்படுத்தப்பட்டு அதிகாரியானவளா??

பொதுவாக எம் புனிதர்களைப் பற்றியோ அல்லது புனிதப்போர் பற்றியோ அவதூறு பேசுபவர்களைப் பற்றி நான் கருத்தில் கொள்வதில்லை. மலையினைப்பார்த்து நாய் குலைப்பதால் மலை காயப்பட்டு போவதில்லை என்று நன்கறிந்த எனக்கு இன்றும் என் நண்பர்கள் பலர் இதைப்பற்றி எழுத வேண்டாம் அவளை ஒரு பொருட்டாக எடுக்க வேண்டாம் என்று தான் கூறி இருந்தார்கள். ஆனால் இது தெரு நாய் அல்லவே... இதை என்னவென்றே அழைப்பது என்று எனக்குப்புரியவில்லை..ஆம் அசிங்கத்தை அள்ளி புனிதம் மீது தெளிக்கின்ற இந்த அற்பத்தை நாலு வார்த்தையால் சாட்டை அடி அடிக்காமல் விட்டால் நான் தமிழச்சியாய் பிறந்ததிற்கு அர்த்தமே  இல்லை.

சாதி ஒழிப்பை பற்றி இந்தியாவில் போராட்டம் மற்றும்  இயக்கம் நடாத்தி வரும் இந்த அம்மணியால் ஒரு சிறிய ஊரிலாவது சாதி வெறியை ஒழிக்க முடிந்ததா?? உண்மையில் சாதி ஒழிப்பு இயக்கமா இவள் நடாத்தி வருகின்றாள்?? அப்படியாயின் விடுதலைப்புலிகள் பற்றி இவ்வாறு பேசியிருக்க மாட்டாள். ஆம், சாதி என்பது புலிகளின் நிர்வாக ஆட்சியில் காணாமல் போயிருந்த ஒன்று. ஒட்டு மொத்தமாக சாதி என்பது ஈழத்தில் வேரறுக்கப்பட்டு இருந்தது புலிகளால். உண்மையில் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுப்பவளாயிருந்தால் அவள் புலிகளுக்கு தான் முதல் புகழ் மாலை சூடி   இருந்திருப்பாள். சாதி ஒழிப்பு என்கின்ற போர்வையில் இருந்து கொண்டு சாதியை தூபம் போட்டு புகைத்து குளிர் காயும் இந்த அம்மணி தான் உண்மையில் சாதி ஒழிப்பு என்ற நற்பயிருக்கு எதிரான களை. அதனால் தான் போராட்டங்கள் என்று ஊரையும் நாட்டினையும் ஏமாற்றி வயிறு வளர்த்து தொலைக்காட்சி , விவாதம் என்று விளம்பரம் தேடுகின்றாளே தவிர சாதி தன்பாட்டில் கொழுந்து விட்டு எரிவதைக்கண்டும் காணாமலும் இருக்கின்றாள்.


ஒரே ஒரு அறிவிப்பில் சாதி என்பது ஈழத்தில் காணாமல் போனதும் அங்கு அர்த்த இராத்திரியிலும் இளம் பெண்கள் நடமாட முடிந்ததும் புலிகளால் என்பதை கேள்விப்பட்டே இருந்திருக்க மாட்டாள் இந்த அற்பம். இவளின் பேச்சுகளை நினைத்துப்பார்க்கவே அருவெருப்பாகவே இருக்கின்றது. ஈழம் பற்றி பேசவும், புலிகளை பற்றி அவதூறு பேசவும் இந்த அற்பத்திற்கு என்ன அருகதை இருக்கின்றது? யார் அந்த உரிமையை கொடுத்தது?





சொந்த உறவுகளைத்துறந்து மண்ணின் மேல் காதலுற்று ஒரு இலட்சியப்பாதையில் தலைவன் பின்னால் அணிதிரண்டு கல்லிலும் முள்ளிலும் குளிரிலும் நெருப்பிலும் கடலிலும் பயணித்தவர்கள் எம் வீர மறத்தமிழச்சிகள்.  




எம் வெஞ்சினப் புலி வேங்கைகள் இந்த அம்மணி உளறிய அப்பட்டமான பச்சை வார்த்தைகளுக்கு   அப்பாற்பட்டவர்கள் என்பதை உண்மைத்தமிழ் நெஞ்சங்களால் தான் உணர்ந்து கொள்ள முடியும். அந்த இலட்சியப்புருசர்களின் தியாகங்களை உண்மை இதயங்களால் தான்  அறிந்து கொள்ள முடியும்.



தமிழ் நாட்டில் தொட்டதிற்கும் போராட்டம் , தீக்குளிப்பு என்பனவற்றை நிகழ்த்தும்  மக்கள் இந்த நரியின் ஊளையிடலை தொடர்ந்தும் நாட்டிற்குள் அனுமதிக்க போகின்றார்களா?? அல்லது குரல்வளையை நெரித்து எதிர்காலத்தில் இனிமேல் ஊளையிடவே நினைக்காதவாறு செய்வார்களா??
இப்படிப்பல நரிகள் , ஓநாய்களை நாட்டில் ஊளையிட அனுமதித்து விட்டு நாட்டிற்கு வெளியே உள்ள ராஜபக்சவையும் ஐ. நாவையும் தட்டி கேட்கின்றோம் என்றோ அல்லது அழுத்தம் கொடுக்கின்றோம் என்றோ போராட்டம் செய்வதால் என்ன பிரயோசனம்? உங்கள் நாட்டில் உள்ள களைகளுக்கு கிருமி நாசினிகளை தெளிக்க முதலில் முயற்சி செய்யுங்கள்...! அதன் பின் நாற்றுக்களுக்கு எப்படி உரமிடலாம் என்று சிந்தியுங்கள்...!


அரசி நிலவன்