Search This Blog

Wednesday, 23 April 2014

முகநூல் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு அதிகாரமிக்க தமிழர் ஆணையம்...!!!

சமூக இணையத்தளமான முகப்புத்தகத்தில் காதல் என்றும் அரட்டை என்றும் பொல்லாப்புக்கள் என்றும் வீண் வாதங்களை அரங்கேற்றி வெட்டித்தனம் பண்ணுகின்ற ஒரு சாரார்.

அரசியல் பேசி தம்மை பெரியவர்கள் ஆக்கி தமக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி விருப்புக்களும் கருத்துக்களையும் இலட்சியம் என்றெண்ணி காலம் ஓட்டும் ஒரு சாரார்.

போராட்டம் , புரட்சி, இன , விடுதலை என்று தேசியம் பேசி முகப்புத்தகத்தில் வென்றெடுக்கப்படும் தேசமும் எதிர்ப்புப்போராட்டங்கள் பகிர்வுகள் என்று தேசிய வாதிகளாக சித்தரிக்கும் ஒரு சாரார். என்று முகப்புத்தகம் எல்லோர் முகத்திலும் இழுபட்டு கிழிந்து தொங்குகின்றது.

இவ்வாறு எழுத்திலும் இணையத்தளத்திலும் மட்டும் வீராப்பும் பேச்சும் என்று காலங்கடத்தும் எத்தனை பேருக்கு இலங்கையிலும் உலகம் எங்கும் தவித்து வாழும் தமிழ் உறவுகளின் நினைவு இருக்கின்றது. மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பதிவிட்டு விருப்பங்களை அள்ளி வேண்டிக்கொண்டு அடுத்த நாளே மறந்து போவதோடு அவர்களின் கடமை முடிந்து விடுகின்றது. பதிவிட்ட பதிவால் அங்கு வாடுகின்ற உறவுகள் அவலம் தீர்க்கபடுவதுமில்லை. அந்த உறவுகளுக்கு அந்தப்பதிவு பற்றி  தெரிந்திருக்கவும் நியாயமில்லை.

இன்று இதுதான் அதிகமாக முகப்புத்தகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. உலகில் எங்கெங்கு எத்தனை சிறைகளில் எம்மவர்கள் வாடுகின்றார்கள் என்பதே அநேகருக்கு தெரிந்திருக்கவே நியாயமில்லை. 

இவற்றுக்கெல்லாம் மத்தியில் முகப்புத்தகத்தில் நம்பிக்கையோடு ஒரு முயற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது நிறைவேறி செயற்பட்டுக்கொண்டும் இருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

ஆம்..!
ஒரு சிறு கையடக்கத்தொலைபேசியில் திறந்து கொண்ட முகப்புத்தக கணக்கு ஊடாக உலகம் எங்கும் பரந்து வாழுகின்ற உதவும் உள்ளங்களை திரட்டி , சிறுக சிறுக பணம் சேர்த்து, இலங்கையில் மிக அவசர நிலையில் உள்ள வாழ்வாதரங்களை இழந்து தவிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் உதவி ஏற்படுத்திக்கொடுத்து , அவர்களை தமது சொந்த உழைப்பில் நிலை நிறுத்திக் கொள்ளவும் , சிறைகளில் வாடும் உறவுகளின் விடுதலைக்காகப் போராடவும் என்று உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள்  ஆணையம்.

வலிகளை நினைத்து கண்ணீர் வடிக்காமல் அவற்றினை வரிகளால் விளக்கி வலிகளை அறிந்தவனே அடுத்தவர் வலிகளையும் அறிந்திட முடியும் என்ற உண்மையினை உணர்த்தி வருடக்கணக்காக சிறையில் தவிக்கும் ஒரு நல்ல உள்ளம் விதைத்த விதையே இந்த ஆணையம்.

எங்கோ ஒரு தேசத்தில் கோட் சூட் அணிந்து கொண்டோ அல்லது வேட்டியும் சால்வையும் கட்டிக்கொண்டு ஒலிவாங்கி பிடித்து மதிய போசனம் விருந்துகள் என்று ஆடம்பரம் செய்யும் அமைப்பு என்று யாரும் எண்ணி விடாதீர்கள். இந்த ஆணையத்தினை உருவாக்கியவரை இதில் உள்ள உறுப்பினர்கள் நேரில் கண்டதில்லை. அவரை மட்டுமல்ல இங்குள்ள உறுப்பினர்கள் யாவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதுமில்லை. 


மாற்றுடை கூட இல்லாத அடிப்படை வசதிகள் ஏதுமற்ற முகம் துடைக்கும் துணி நார் நாராய் பிய்ந்து தொங்கும் நிலையில் உள்ள அதாவது பணம் இல்லாமல் அல்ல. பணம் இருந்தும் உதவிட எத்தனையோ உள்ளங்கள் இருந்தும் உதவிட முடியாத ஒரு தேசத்தில் கொடுஞ்சிறையில் ஒரு கையடக்கப்பேசியின் ஊடாக முகப்புத்தக முகங்கள் ஊடாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் என்றால் அது உருவாகிய இடத்தினைக் கண்ணுற்றால் பேரதிர்ச்சி உங்களை நிச்சயம் தாக்கும். ஆம்..! இதுதான் இந்த ஆணையத்தின் விதையினை இட்ட விருட்சம் உள்ள இடமாகும். இந்த இடத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக தவித்துக்கொண்டு இலங்கைக்கு நாடு கடத்த இருந்த உறவுகளில் ஒன்றாகவும், சொந்த மகளை தமிழகத்திலும் பிரிந்து இன்னுமொரு மகளை கண்ணுக்கு முன்னால் நோய் தாக்கும் கொடிய நிலையிலும் அதாவது சிறுநீர்த்தொற்று காரணமாக நாள் ஒன்றிற்கு பல தடவை உணர்வற்று சிறுநீர் கழிக்கும் பச்சிளம் பாலகியின் அவல நிலைக்கு மருத்துவ வசதி வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருந்து வருந்தியும் கொண்டு தன் வேதனையிலும் வலியிலும் உலகில் அவதிப்படும் உறவுகளின் துன்பத்தினையும் வலியினையும் பற்றி சிந்திக்க முடிகின்ற அந்த உள்ளம் சிறையில் இருந்து கொண்டு அனுதாபம் தேடி உதவிகள்  பெற்றுக்கொண்டு உறவுகளை நினைக்காமல் இருந்திருக்க முடியும்.  

ஆனால் இவ்வளவு கடினப்பட்டு அங்கிருந்து கொண்டு மற்றவர்களையும் ஒன்று  திரட்டிக்கொண்டு உலகம் எங்கும் அவலப்படும் எம்மின உறவுகளுக்காக  அவர்களுக்கு உதவுவதற்காக  என்று தொடங்கப்பட்ட இந்த ஆணையம் ஆனது முகப்புத்தகத்தினை இழிவோடு நோக்கும் பலருக்கு ஒரு சவுக்கடியாகும். வீணான வாதங்கள் ,சீரழிப்புக்கள், தற்கொலைகள் என்று குற்றம் சுமத்தப்படுகின்ற முகப்புத்தக சமூக வலைத்தளத்திற்கு, சமுதாய விழிப்புணர்வாக ஒரு சமுகத்தொண்டாக முகப்புத்தகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் ஒரு நல்ல பெயரினை பெற்றுக்கொடுத்தது  மட்டுமன்றி முகப்புத்தகத்தினை தமது சின்னம் மூலமாக கெளரவித்துமுள்ளனர். அதாவது  தமது சின்னத்தினை  முகப்புத்தக சின்னமான f என்ற இரு எழுத்துக்களுக்குள் உதவிக்கரம் நீட்டும் கைகளையும் உறவுகளை கை தூக்கி உதவுகின்ற கைகளையும் அடக்கி முகப்புத்தகத்தில் உருவாக்கி ஒன்றிணைந்தது போன்று வடிவமைத்ததுடன்  முகப்புத்தக வர்ணமான இள நீல வர்ணத்தினையும் அவர்களின் வர்ணமாக்கி மேன்மைப்படுத்தியுள்ளமை மிக்க சிறப்பாகும்.   வெறுமனே வெட்டிப்பேச்சுக்கள் பேசிக்கொண்டிருக்காமல் செயலை கையில் எடுத்து , ஆணையம் உருவாகிய குறுகிய நாட்களுக்கிடையில் உறவுகள் மூலமாக சேர்ந்த பணத்தினை இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அடுத்தவர்களின் கையினை ஏந்தி வாழும் பலரில், மிகவும் அவசர உதவி தேவைப்பட்ட முல்லைத்தீவினைச்சேர்ந்த திரு சத்தியமூர்த்தி என்ற சகோதரனுக்கு இலங்கை ரூபாய்கள் ஒரு லட்சத்து ஒன்பதினாயிரம் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளமை ஆணையம் என்பதனை ஆரம்பித்தலுடன் மட்டும்  நின்று விடாமல் செயலில் இறங்கியமைக்கு சான்றாகும்.

போரில் இரு கால்களையும் இழந்து தனது மனைவி பிள்ளைகளுடன் அன்றாட சீவனத்திற்கு அல்லல் பட்ட இந்த உறவிற்கு அவர் விரும்பிய தொழில் அமைத்துக்கொடுப்பதற்காக இந்த முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரது முயற்சியினை கண்காணித்து அவரை ஊக்குவிக்கும் முகமாக அடுத்த கட்ட உதவியும் அவரது தொழில் விஸ்தரிப்பிர்காக வழங்கப்படும்.
கடமைக்கு உதவி என்னும் பெயரில் பத்தாயிரம், இருபதினாயிரம் என்று சிறு தொகைப்பணத்தினை வழங்கி அவர்களை சோம்பேறியாக்கி மிகக்குறுகிய நாட்களில் அந்த பணம் செலவாகி போன பின்பு மீண்டும் கையேந்தும் நிலையினை அவர்களுக்கு கொடுக்காமல், இவ்வாறு ஒரு தொழில் முயற்சியினை அமைத்து கொடுத்து தமது சொந்த தேவைகளினை தாமே நிறைவேற்றிக்கொள்ளவும் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் ஒரு தன்னம்பிக்கையினை பாதிக்கப்பட்ட இவர்களைப்போன்ற உறவுகளுக்கு வழங்க வழி  வகுக்கும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள்  ஆணையத்தின் இச்செயற்பாடு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

அத்துடன் இந்த ஆணையத்தில் இலட்சக்கணக்கில் பணம் புரளவில்லை.  அதற்கு சொத்து என்று சொல்லிக்கொள்ள உதவுகின்ற தன்னம்பிக்கையுள்ள உள்ளங்களை தவிர வேறுதுவும் இல்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குகின்றோம் என்று அடுத்தவர்களிடம் பண உதவி பெற்று அதனை தம்மகத்தே அமுக்கி வைத்திருக்கும் அமைப்புக்களை போல் அல்லாமல். உதவி செய்ய முன்வருபவர்களை ஆணையத்தின் உறுப்பினராக பதிவு செய்து அதன் பின் ஆணையத்தின் சட்ட திட்டங்கள் நோக்கங்களை விளக்கி உதவிகளை உள்வாங்கி கொள்ளும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் இச்செயற்பாடு பாராட்டத்தக்க ஒன்றாகும்.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் சிறு துளி பெரு வெள்ளம் என்ற கருப்பொருளின் படி முடிந்தளவு அது ஆயிரம் ரூபாய் என்றாலும் அந்த உதவி ஏற்கப்பட்டு அந்தப் பண உதவி போய் சேருகின்ற  நபருக்கும் உதவியவரின் பெயரும் தெரிவிக்கப்படும் நிலை இங்கு பிரதானமான ஒரு செயற்பாடு ஆகும். இது பெயர் புகழுக்காக அல்ல. இங்கு ஊழல் , பொய், தவறுகள் இடம்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் எல்லோருக்கும் யாவும் தெரிய வேண்டும் என்பதற்காகவுமே. 

மிகச்சிறந்த முறையில் உறுப்பினர்கள் எல்லோரது கருத்துக்களும் செவி மடுக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு மிக நேர்த்தியான முறையில் செயற்பாடுகள் இங்கே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஒரு வட்ட மேசையில் உட்கார்ந்து இருந்து இவை தீர்மானிக்கப்படுவதில்லை. ஒட்டு மொத்த உறுப்பினர்களும் ஒரே ஒரு முகப்புத்தக குழு உரையாடலில் கலந்துரையாடி செயற்பட்டு வரும்  இந்த ஆணையத்தின் வெளிக்கள செயற்பாடுகள் மட்டும் இலங்கையில் உள்ள உறுப்பினர்களால் நிறைவேற்றப்படுகின்றன. 

உதவி கேட்பவர் உண்மையில் உதவி வேண்டப்படுபவரா? அவரது பின்புலம் , மற்றும் உதவித்தொகை பெற்றுக்கொண்ட பின் அவரது தொழில் நடவடிக்கைகள் என்று யாவுமே மிகச்சரியாக கண்காணிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும்.

ஆரம்பிக்கப்பட்ட பன்னிரு நாட்களுக்குள் இலங்கை ,இந்தியா ,மலேசியா , தாய்லாந்து ,சிங்கப்பூர் ,இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளிலும் சவூதி , கட்டார், துபாய், குவைத் , ஓமான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலும்  , பிரான்ஸ் சுவிஸ் நோர்வே பின்லாந்து ஜேர்மனி, பிரித்தானியா ,பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும்  , வட ஆபிரிக்கா , கனடா  மற்றும் அமெரிக்காவிலும் என இருபது நாடுகளில் இருந்து இந்த ஆணையத்திற்கு  உறுப்பினர்கள் தாமாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

பண உதவி மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழவென்று பயணம் தொடங்கி இந்தியா , இந்தோனேசியா, துபாய் , தாய்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் சிறைகளில் வாடும் எமது தமிழ் உறவுகளின் விடுதலைக்காக அந்தந்த நாடுகளின் அரசுகளோடு பேச்சுவார்த்தை நடாத்தவும் அவர்களின் விடுதலைக்காக போராடவும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளது. 

தமிழ் அமைப்புக்கள் வெறுமனே பெயருக்கு இருக்கின்ற இன்றைய நிலையில் சிறை வாழும் உறவுகளுக்காக அவர்களின் விடுதலைக்காக போராடவும்  பேச்சுவார்த்தை நடாத்தவும் எந்தவொரு பின்புலம் அற்ற இந்த ஆணையம் முன் வந்திருப்பது அவலப்படும் எங்கள் உறவுகளுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் ஆகும். 

சாதி, மத , அரசியல் மற்றும் பக்கச் சார்புகள், இயக்கங்கள் , பதவி , பெயர் , புகழ் போன்ற செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த ஆணையம் செயற்படுகின்றது. அதாவது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவது மட்டுமே இதன் முதன்மை குறிக்கோள் ஆகும். இங்கு தமிழ்த்தேசியம் இனவாதம் போன்ற கருத்துக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை காரணம் காட்டி இந்த ஆணையத்தினை எதிர்காலத்தில் எந்த நாடுகளும் தடை செய்திட முன் வரக் கூடாது என்பதற்காகவும்  தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் ஆனது உலகில் உள்ள தமிழ் மக்கள் வாழும்  நாடுகள் எங்கும் சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு விரைவில் செயற்பட இருக்கின்றமைக்காகவும் இது ஒரு பொது அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் இதில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் உதவுபவர்கள் ஒருவருக்கொருவர் முரன்பட்டுக்கொள்ள ஏதுவாக அரசியலோ மதமோ இனவாதமோ போன்ற செயற்பாடுகள் அமைந்திடக் கூடாது என்பதற்காகவும் சகல தரப்பட்ட உறவுகளையும் இணைப்பதற்காகவும் இந்த ஆணையம் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நிற்கின்றது.

ஆரம்பித்து ஒரு மாதம் பூர்த்தியடையாத நிலையில் ஒரு அலுவலகமோ நிலையான இடமோ இன்றி தனது திட்டங்களை உடனடியாக செயற்படுத்த முனையும் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்திற்கு யாவரும்  கை கொடுக்க வேண்டும்.

ஆணையத்தின் சார்பு ஊடகங்களாக திசைகாட்டி(http://thisaikaddi.com/) தமிழ் (http://tamizl.com/) மற்றும் வெளிச்சவீடு (http://www.velichaveedu.com/) போன்ற இணையத்தளங்கள் செயற்பட்டு ஊடக பங்களிப்பினை கொடுப்பதுடன் தமிழகத்தில் இருந்து வெளி வரும் பல தமிழ் நாளிதழ்களும் ஆதரவு கொடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லோரும் இணைந்து கைகொடுத்து வாழ வழியற்று தவிக்கும் எங்கள் உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். எங்கள் உறவுகளை சொந்தக் கால்களில் நிற்க உதவி புரிந்து அவர்களுக்கு புதுத்தன்னம்பிக்கையினை ஊட்டுவோம். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை நல்குவோம்.

" அன்பினால் அனைவரையும் அரவணைப்போம் " என்ற தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் உயிர்ப்பதத்திற்கமைய நாமும் அன்பினால் எங்கள் உறவுகள் யாவரையும் அரவணைத்து காப்போமாக...!

முகப்புத்தகத்தினை தாய் வீடாகக்கொண்ட தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் முகப்புத்தக தமிழ் விருப்ப பக்க தொடுப்பு   https://www.facebook.com/TPRRC?fref=nf

ஆங்கில விருப்ப பக்கத்தொடுப்பு  https://www.facebook.com/pages/Tamil-People-Rehab-Rights-Commission/380907402048472


" அன்பினால் அனைவரையும் அரவணைப்போம் " 

1 comment:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  ReplyDelete